பிரச்சனைக்கான குனூத் ஆமீன் கூடுமா?
பிரச்சனைக்கான குனூத் ஆமீன் கூடுமா?
துபையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஒரு வாரமாகக் கடமையான தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவுக்குப் பின் நின்று கொண்டு துஆச் செய்கிறார்கள். இமாம் துஆச் செய்யும் போது பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் சொல்கிறார்கள். இதை நாமும் பின்பற்றலாமா? இது பற்றிக் கேட்ட போது, பாலஸ்தீனத்தில் நடக்கும் சம்பவங்களுக்காக இவ்வாறு செய்வதாகக் கூறுகிறார்கள். விளக்கம் தரவும்.
குடியாத்தம் இர்ஃபான் துபை
குனூத் நாஸிலா
நீங்கள் குறிப்பிடுவது குனூத்துன் நாஸிலா வாகும். சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் இதனை ஓதியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கும் அந்த இணை வைப்பவர்களுக்கும் இடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிக்கீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிக்கீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: (புகாரி: 1002)
இந்த ஹதீஸின் அடிப்படையில், முஸ்லிம் சமுதாயத்திற்குச் சோதனை ஏற்படும் காலத்தில் எதிரிகளுக்கு எதிராகப் பிரார்த்தித்து குனூத் ஓதலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின் போது தமது தலையை உயர்த்தி, “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து” என்று சொல்லி விட்டுப் பிறகு, “இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ்,
“(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்” என்ற (அல்குர்ஆன்: 3:128) வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: (புகாரி: 7346)
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதை அல்லாஹ் 3:128 வசனத்தை அருளி, தடை செய்து விட்டதாகக் கூறப்படுகின்றது. எனவே இதன் அடிப்படையில் எவருக்கும் எதிராகப் பிரார்த்தனை செய்து குனூத் ஓதுவது கூடாது என்று சிலர் வாதிக்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதுவது பற்றித் தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது என்று ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் முஸ்லிம் மற்றும் பல நூல்களில் கூறப்படும் காரணமான, “உஹதுப் போரின் போது அருளப்பட்டது’ என்பது தான் ஏற்புடையதாக உள்ளது.
மேலும் குனூத் பற்றியே இவ்வசனம் அருளப்பட்டது என்ற ஹதீஸ் இப்னு ஷிஹாப் எனும் ஸுஹ்ரி வழியாகவே அறிவிக்கப்படுகின்றது. அவர் நபித்தோழரிடம் கேட்டு அறிவிப்பது போல் புகாரியின் வாசக அமைப்பு இருந்தாலும், முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இதே ஹதீஸின் வாசக அமைப்பு ஸுஹ்ரி அவர்கள் நபித்தோழர்கள் வழியாக இல்லாமல் சுயமாக அறிவிக்கின்றார் என்று தெளிவுபடுத்துகின்றது. “நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட கொலையாளிகளைச் சபித்து குனூத் ஓதினார்கள். மேற்கண்ட வசனம் அருளப்பட்டவுடன் குனூத்தை விட்டு விட்டார்கள் என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது” என்று ஸுஹ்ரி கூறியதாக (முஸ்லிம்: 1196) வது ஹதீஸ் கூறுகின்றது. இவ்வசனம் குனூத் குறித்துத் தான் அருளப்பட்டது என்ற விபரத்திற்கு நபித்தோழர்கள் வழியான சான்று ஏதும் ஸுஹ்ரியிடம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
இதனால் தான் “ஸுஹ்ரியின் கூற்றுடன் ஹதீஸ் கலந்து விட்டது” என்று ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது ஃபத்ஹுல் பாரியில் கூறுகின்றார்கள்.
எனவே நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதாகக் கூறப்படும் செய்தி மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. அதைத் தடை செய்து வசனம் இறங்கியதாகக் கூறப்படும் செய்திகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இல்லை.
இதே ஹதீஸ் (புகாரி: 4560) எண்ணில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸாக இடம் பெற்றுள்ளது. அதில் “நபி (ஸல்) அவர்கள் எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் குனூத் ஓதுவார்கள்” என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளது.
சமுதாயத்திற்குச் சோதனையான கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் கடமையான தொழுகைகளில் குனூத் ஓதியுள்ளார்கள் என்பதால் நாமும் இது போன்ற கட்டங்களில் குனூத் ஓதலாம்.
ஆமீன் கூறலாமா?
நபி (ஸல்) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிப், இஷா, சுப்ஹ் ஆகிய அனைத்து தொழுகைக்குப் பிறகும் தொடர்ந்து ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். இரண்டாவது ரக்அத்தில் ஸமியல்லாஹு லிமன் ஹமிதா என்று அவர்கள் சொல்லும் போது, பனூ சுலைம் கிளையினரைச் சார்ந்த ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய கிளையினருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்வார்கள். அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் ஆமீன் கூறுவர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: (அபூதாவூத்: 1443) (1231), (அஹ்மத்: 2746) (2610)
இந்த ஹதீஸின் அடிப்படையில் இமாம் இந்த குனூத்தை ஓதும் போது பின்பற்றித் தொழுபவர் ஆமீன் கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முன்பு இருந்தாலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஹிலால் பின் ஹப்பாப்“ என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் உறுதிப் படுத்தியிருந்தாலும் இவர் கடைசிக் காலத்தில் மூளை குழம்பிவிட்டார் என்றும் அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 11 பக்கம் 69)
பொதுவாக மூளை குழம்பியவரின் அறிவிப்பை ஏற்பதாக இருந்தால் அவரிடமிருந்து அறிவிக்கும் மாணவர் அவர் மூளை குழம்புவதற்கு முன் கேட்டாரா அல்லது மூளை குழம்பிய பின் கேட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைப்பதை வைத்தே முடிவு செய்யப்படும்.
இந்த அறிவிப்பில் அதை தெளிவுபடுத்தும் சான்றுகள் எதுவும் கிடைக்காததால் இச் செய்தி நிறுத்தி வைக்கப்படும். தெளிவு கிடைக்கும் வரை இதைக் கொண்டு அமல் செய்ய முடியாது.
எனவே சோதனைக் கால குனூத்தின் போது இமாம் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் சொல்வது கூடாது.
இமாமும் பிராரத்தனை செய்ய வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இதர செய்திகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும்.