பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

முன்னுரை

ஒருவர் செய்கின்ற செயலுக்கு மற்றவர் பொறுப்பாக மாட்டார். அவரவரின் கூலியோ, தண்டனையோ அது செய்தவருக்கே உரித்தானது.

وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى‌

ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 17:15)

இது தான் இறைவனின் நீதி. ஆனால் மனிதர்களிடம் இந்த நீதி பேணப்படுவதில்லை. பாவம் ஒரு புறம், பழி ஒரு புறம் என்ற பழமொழிக்கேற்ப குற்றம் புரிபவன் ஒருவன்; அக்குற்றத்தைச் சுமப்பவன் மற்றொருவன் என்ற நிலை சர்வ சாதாரணமாகி விட்டது.

ஒரு தனிமனிதன் செய்யும் தவறுக்காக அவனைச் சார்ந்தவர்களை ஒட்டு மொத்த சமூகமும் இழிவாகக் கருதுவதைப் பார்க்கிறோம்.

ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவன் மது அருந்துகிறார்; அல்லது கொலை செய்திருக்கிறார்; அல்லது திருடியிருக்கிறார். அவரது இழி செயலுக்காக அவரைக் குறை கூறுவதும், குற்றம் பிடிப்பதும் நியாயமானது தான்.

ஆனால் இதற்காக அவரது பெற்றோர்களுக்கு, மனைவி, மக்களுக்கு, சகோதர, சகோதரிகளுக்கு இந்தப் பாதகச் செயல்களை அடைமொழியாக்கி குடிகாரனின் மகன், குடிகாரனின் மனைவி என்று அவர்களை அடையாளம் காட்டுகிறது இந்தச் சமூகம். இது எவ்விதத்தில் நியாயம்?

மார்க்கத்தின் நிலை

ஒருவர் செய்யும் பாவச் செயலை அவரது குடும்பத்தினர் எப்படிச் சுமக்க முடியும்? ஏற்கனவே அவரது இழிசெயலால் நொந்து, வெந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர் ஊராரின் இந்தப் பழிச் சொல்லால் மென்மேலும் வேதனைக்குள்ளாகின்றனர். இது குறித்து மார்க்கம் என்ன கூறுகின்றது என்று என்றாவது நாம் சிந்தித்துப் பார்த்ததுண்டா?

இந்தத் தவறைச் செய்பவர்களிடத்தில் ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள் என்று கேட்டால் இது உலக விஷயம் தானே? இதில் என்ன பாதகம் ஏற்பட்டுவிடப்போகின்றது என்று கேட்கின்றனர்.

இவ்வாறு கேட்பதே தவறாகும். ஏனெனில் மறுமையில் தண்டனையைப் பெற்றுத் தரக்கூடிய ஒரு விஷயம் எப்படி உலக விஷயமாக இருக்க முடியும்? இஸ்லாம், மார்க்கத்தை உலக விஷயம் மார்க்க விஷயம் என்று இரண்டு வகையாகப் பிரித்துள்ளது. ஆனால் மறுமையில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது மார்க்க விவகாரம் தான்.

இந்தத் தவறைச் செய்யும் இன்னும் சிலர் வேறு வகையான விளக்கத்தைக் கொடுக்கின்றனர். குற்றம் செய்பவரின் குடும்பத்தை இவ்வாறு பழிக்கும் போது, ‘நம் குடும்பத்தினரை, நம் பிள்ளைகளை மற்றவர்கள் தரக்குறைவாய் பேசுவர்’ என்று அஞ்சி அவன் தவறிலிருந்து விலகியிருப்பான் என்று தாங்கள் செய்யும் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படலாம். ஆனால் அதற்காக அவருடைய குடும்பத்தினரை விமர்சிப்பதோ, தப்பான பார்வையில் பார்ப்பதோ தவறு என்றே நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

قَالُوْۤا اِنْ يَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُ‌ ۚ فَاَسَرَّهَا يُوْسُفُ فِىْ نَفْسِهٖ وَلَمْ يُبْدِهَا لَهُمْ‌ ۚ قَالَ اَنْـتُمْ شَرٌّ مَّكَانًا ‌ۚ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ‏

“இவர் திருடியிருந்தால் இதற்கு முன் இவரது சகோதரரும் திருடியிருக்கிறார்’’ என்று அவர்கள் கூறினர். (அந்தச் சகோதரன் தானே என்ற விஷயத்தை) யூஸுஃப், அவர்களிடம் வெளிப்படுத்தாமல் தமது மனதுக்குள் வைத்துக் கொண்டார். “நீங்கள் மிகக் கெட்டவர்கள்; நீங்கள் கூறுவதை அல்லாஹ்வே நன்கு அறிவான்’’ என்றார்.

(அல்குர்ஆன்: 12:77)

இவ்வசனத்தில், இவர் திருடியிருந்தால் இவரது சகோதரரும் திருடியிருப்பார் என்று அந்தச் சகோதரர்கள் கூறுகின்றார்கள். உண்மையில் இவர்கள் குறிப்பிடும் யூசுஃப் திருடுபவராக இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் குற்றம் சாட்டப்பட்ட யூசுஃபின் சகோதரர் கூட திருடவில்லை. எனினும் திருடர் போன்ற ஒரு பிம்பம் அவர் மீது சுமத்தப்பட்டது. அதில் அவர் மாட்டிக்கொண்டார். இந்தத் தவறில் சம்பந்தப்பட்டவனை விட்டு விட்டு சம்மந்தமே இல்லாத யூசுஃபையும் குற்றவாளியாகச் சித்தரித்தனர். இதே அவலநிலை தான் காலம் காலமாக இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறப்பட்ட சம்பவத்திலும் இதேபோன்ற ஒரு நிலை தான் ஏற்பட்டது, அதை அன்னையாரே அறிவிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (பனூ முஸ்தலிக்) போர் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கிய போது இரவு வேளையில் தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.

அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்த போது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். என் தேவையை நான் முடித்துக்கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன்.

அப்போது (என் கழுத்திலிருந்த) ‘ழஃபாரி’ நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டது. ஆகவே நான் எனது மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக்கொண்டிருந்தது, (நான் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது.

எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைத் தூக்கிச் சென்று நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தின் மீது வைத்துக்கட்டிவிட்டனர்.

அந்தக் காலக்கட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கும் அளவுக்கு அவர்களுக்கு சதைபோட்டிருக்கவில்லை. (அப்போதைய) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். ஆகவே, அந்தச் சிவிகையைத் தூக்கியபோது அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக வேறு இருந்தேன்.

எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி நடக்கலாயினர். படை கடந்து சென்ற பிறகு எனது மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தேன். அங்கு (அவர்களில்) அழைப்பவரும் இருக்கவில்லை; பதிலளிப்பவரும் இருக்கவில்லை. நான் (ஏற்கெனவே) தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க என் கண்ணில் உறக்கம் மேலிட்டுவிட நான் தூங்கிவிட்டேன்.

படை சென்றதற்குப் பின்னால் (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பார் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் வந்து சேர்ந்தார்.

அவர் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனித உருவத்தை (என்னை)ப் பார்த்தார். ஆகவே, என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார்.

அவர் என்னை அறிந்து கொண்டு “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்’ (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே எனது மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியேற்கவுமில்லை. பிறகு அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அதன் முன்னங்கால்களை மிதித்துக் கொள்ள, நான் அதில் ஏறிக்கொண்டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை நடத்திச் செல்லலானார்.

இறுதியில் படையினர் நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்ட பின்னர் நாங்கள் அவர்களை வந்தடைந்தோம். இப்போது (எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு செய்ததில் பெரும் பங்கு எடுத்துக்கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவசகர்களின் தலைவன்) ஆவான்.

நூல்: (புகாரி: 4750) 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்ட செய்தியை இந்த ஹதீஸ் கூறுகிறது.

காழ்ப்புணர்ச்சி கொண்ட கயவர்கள் இதைத் தக்க தருணமாக எடுத்துக் கொண்டு அவ்விருவருக்குமிடையே தவறு நடந்திருக்கலாம் என்ற தீப்பொறியை (அவதூறை) பற்ற வைத்து தீப்பந்தங்களாக உருவாக்கினர்.

இதன் உண்மை நிலை என்னவென்பதை அறிவதற்காக நபியவர்கள் தம் மனைவி பற்றிய விசாரணையில் ஈடுபட்டார்கள். ஒரு கட்டத்தில் தம் மற்றொரு மனைவியான ஸைனபிடம் ஆயிஷா (ரலி) பற்றி விசாரித்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ஸைனபுக்கு சக்களத்தியாகவும், அழகில் அவர்களுக்கு இணையாகவும் இருந்த போதிலும் கூட ஸைனப் (ரலி)யின் வாக்குமூலமும் அவர்களின் நற்குணமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. அவர்கள் கூறிய வார்த்தைகள் இதோ:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் விஷயத்தில் ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் விசாரித்திருந்தார்கள். “ஸைனபே! நீ (ஆயிஷா குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! (பழி சுமத்துவதை விட்டும்) என் காதையும் என் கண்ணையும் நான் பாதுகாத்துக் கொள்கிறேன். ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன்’’ என்று கூறினார்கள். ஸைனப் அவர்கள்தாம் நபியவர்களின் துணைவியரில் எனக்கு அழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும் போட்டியாக இருந்தவர். ஆயினும், அல்லாஹ் அவரை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவருடைய சகோதரி ஹம்னா (என்னுடன்) மோதிக் கொள்ளலானார். (என் விஷயத்தில்) அவதூறு பேசி அழிந்துபோனவர்களுடன் அவரும் அழிந்து போனார்.

நூல்: (புகாரி: 4750) 

மேற்கண்ட சம்பவங்களிலிருந்து இன்னும் சில படிப்பினைகள் நமக்குக் கிடைக்கின்றன.

1. தவறு செய்யாதவர் கூட சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவோ, பிறரது காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ குற்றவாளியாகத் தோற்றமளிக்கப்படலாம்.

2. ஒருவர் தவறு செய்தால் அவரைச் சார்ந்தவர்களும் அப்படித்தான் இருப்பர் என்று மக்கள் தீர்மானிக்கின்றனர்.

ஸைனப் (ரலி) அவர்களின் உடன் பிறந்த சகோதரியான ஹம்னா இந்த அவதூறைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவர் செய்த தவறுக்காக ஹம்னாவின் சகோதரியான ஸைனபைக் கெட்டவர் என்று கூறிவிட முடியுமா?

ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரைப் போன்றே மற்றவர்களும் இருப்பார்கள் என்று எண்ணுவது தவறு என்பதற்கு மேற்கண்ட செய்திகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படலாம். ஆனால் தவறே செய்யாத எந்த ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது என்பதில் இஸ்லாம் கண்ணும் கருத்துமாக இருப்பதைப் போன்று வேறு எந்த ஒரு மார்க்கமும் இல்லை. அதனால் தான் கண்ணால் கண்ட சாட்சியங்களைக் கொண்டு வருமாறு அது மக்களுக்கு உத்தரவிடுகின்றது.

காதால் கேட்பதற்கும், கண்ணால் பார்ப்பதற்கும் கற்பனை உருவம் கொடுத்து விடுகின்றனர். மேலும் கேட்டதையெல்லாம் பரப்பியும் விடுகின்றனர். இது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட காரியமாகும்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 49:6)

كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் முன்னுரை ஹதீஸ்-6

ஒருவர் செய்யும் தவறுக்காக மற்றவர்களை விமர்சிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் இதுபோன்ற விஷயத்தில் இன்னும் சில தவறுகளையும் செய்கின்றனர்.

தாய் தந்தை இல்லாதவர்களை அனாதைகள் என்று தரக்குறைவாகப் பேசுவதும், புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களைக் குலம் கோத்திரம் இல்லாதவர்கள் என்றும் அவர்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுவதுமாக இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பேசுவது சம்மந்தப்பட்டவர்களை எவ்வளவு பாதிக்கும் என்பதைச் சற்றும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

நம்மைச் சிறந்தவர்களாகவும், சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்பவர்களாகவும் இருப்பவர்களிடம் நாம் அழகிய முறையில் உறவு கொண்டாடாமல், அவர்களை அரவணைக்காமல் இழிவாகக் கருதுவதும் புண்படுத்துவதும், எவ்வகையில் நியாயம்?

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்‘’ என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும், நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.

நூல்: (புகாரி: 5304) 

فَوَاللهِ لَأَنْ يَهْدِيَ اللهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள்மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நல்வழியளிப்பது, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் உமக்குக் கிடைப்பதைவிடச் சிறந்ததாகும்‘’ என்று அலீ (ரலி) அவர்களிடம் சொன்னார்கள்.

நூல்: (முஸ்லிம்: 4780) 

கண்ணியமும் இழிவும் இறைவனின் நாட்டப்படி அவன் ஏற்படுத்திய விதியின் அடிப்படையில் தான் நடக்கின்றது. எனவே இறைவன் கையில் உள்ள விஷயத்தில் நாம் தலையிட்டு, மற்றவர்களை இழிவுபடுத்துவதை விட்டும்  மற்றவர்களால் இழிநிலையை அடைவதை விட்டும் நாம் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுவோமாக!

قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏

“அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்’’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 3:26)

உம்மு ராஷித், மேலப்பாளையம்.