பாவத்தை அழிக்கும் நல்லறங்கள்
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
ஏக இறைவனாகிய அல்லாஹ் இவ்வுலகில் மனிதர்களை படைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் ஏற்படுத்தினான். பின்னர் அவர்களை தவறிழைக்கும்படியாகவும் ஆக்கினான். மேலும் அவர்களை திருத்துவதற்காக நபிமார்களைக் கொண்டு போதனை செய்வதற்காக அனுப்பினான். அவர்களின் பிரச்சாரத்தின் மூலம் பாவமன்னிப்பு கேட்பதற்கு உண்டான வழிமுறைகளையும் சுவனத்திற்கு செல்வதற்கு உண்டான வழிவகைகளையும் ஏற்படுத்தினான்.
நடுநடுங்க வைக்கும் நரக வேதனையை பற்றி நாளெல்லாம் நமது அறிஞர்களின் பயான்களிலிருந்து கேட்டிருந்தாலும் கவனக்குறைவாக வாழ்வதே நமது நிலையாக கொண்டிருக்கிறோம். இவ்வுலக வாழ்வில் அழித்துவிடுமளவு பாவம் செய்த என் அடியார்களே! உங்கள் கடந்த கால பாவங்களை விட்டும் உங்களை மன்னிக்கிறேன் என்று இறைவன் நம்மை நோக்கி அழைப்பு விடுக்கிறான். ஆனாலும் அந்த அழைப்பை அலட்சியம் செய்துவிடுகிறோம். இந்த அலட்சியப் போக்கு தொடர்ந்தால் நாம் மறுமையில் வெற்றி பெறவே முடியாது. எனவே தமது பாவங்களை போக்கும் நல்லறங்களை கண்டறிந்து மறுமை வெற்றிக்கு வழி காண்போம்.
திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் நமது பாவங்களை அழிக்கும அழகிய நல்லறங்களை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள். அந்த நல்லறங்களை செய்து மறுமை வெற்றிக்கு வித்திடுவோம்.
அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியான இரண்டு எளிமையான வாசகங்கள். அவை நன்மை தராசில் கனமானவையாகவும், பாவங்களை அழிப்பவையாகவும் இருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப் படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை) சுப்ஹானல்லாஹில்அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.
நூல் : (புகாரி: 6406)
مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி” (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 6405)
ஒவ்வொரு ஐவேளைத் தொழுகைக்காகவும் உபரியான தொழுகைக்காகவும் நாம் செய்யும் உளூவின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும். எனவே ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.
அறி : உஸ்மான் பின் அஃப்பான் (ரரிலி),
நூல் : (முஸ்லிம்: 413)
கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசலுக்கு சென்றால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பாவம் அழிக்கப்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் “ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான்.
(கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்ளிவாசலில் இருக்கும்போது அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்கசுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல் மூலம்) அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்.. அப்போது வானவர்கள், “இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்றுபிரார்த்திக்கின்றார்கள்.
நூல் : (புகாரி: 477)
ஐவேளைத் தொழுகைக்காக விரைவாக சென்று அதை நிறைவேற்ற காத்திருந்தால் அந்த நேரத்தில் வானவர்கள் நமக்காக பாவமன்னிப்பு தேடுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய)சிறு துடக்கு ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கிறார்கள்.
நூல் : (புகாரி: 445)
இவ்வாறு முறையாக உளூ செய்வதினாலும் தொழுவதினாலும் நமது சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் ஒரு தொழுகையிலிருந்து அடுத்த தொழுகைக்காக காத்திருக்கும் போது வானவர்களே அல்லாஹ்விடம் நமக்காக துஆ செய்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்.
கடமையான ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றிவருவதன் மூலமும் ஜுமுஆத் தொழுகை நிறைவேற்றுவதன் மூலமும் நமது பாவங்கள் மன்னிக்கப்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியவை அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை.
நூல் : (முஸ்லிம்: 394)
எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 38)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 37)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் “லைலத்துல் கத்ர்’ இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது முன் பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 1901)
இஸ்லாத்தின் முக்கிய ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை செய்தால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு பிறந்த பாலகனைப் போன்று ஆகிவிடுவார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தாம்பத்தியஉறவு மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 1521)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 2472)
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் சத்தியம் செய்யும்போது “லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக!’ என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) “லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், “வா சூது விளையாடுவோம்” என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 4860)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தனது (அலுவலரான) வாலிபரிடம், “(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும்” என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்த போது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 3480)
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உங்களில் யார் (இனி தலைதூக்கவி ருக்கும்) ஃபித்னா (சோதனை/குழப்பம்) பற்றி அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறார்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) அவர்கள் சொன்னதை நான் நினைவில் வைத்திருக்கிறேன்” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், “(அதைக்கூறுங்கள்)நீங்கள்தான் “நபி (ஸல்) அவர்களிடம்’ அல்லது “(நபி (ஸல்) அவர்களின்) அக்கூற்றின் மீது’ துணிச்சலுடன் (கேள்வி கேட்டு விளக்கம் பெறக் கூடியவர்களாய்) இருந்தீர்கள்” என்று சொன்னார்கள்.
நான், “ஒரு மனிதன் தன் குடும்பத்தார், தனது சொத்து, தனது பிள்ளைகள் ஆகியோரின் விஷயத்தில் (இறைவழிபாட்டிலிருந்து தனது கவனத்தைப் பறிகொடுக்கும் அளவுக்கு அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலமும்), தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது தொழுகை, நோன்பு, தர்மம், நன்மை (புரியும்படி கட்டளையிட்டு)-தீமை(யிலிருந்து தடுத்தல்) ஆகியன அதற்கான பரிகாரமாக அமையும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னேன்.
நூல் : (புகாரி: 525)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.