10) பால்புகட்டுதல்

நூல்கள்: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

பிறக்கும் குழந்தைகளுக்காகவே அல்லாஹ் ஏற்படுத்திய அற்புதம் தாய்ப்பாலாகும். முறையாக தாய்ப்பால் புகட்டப்பட்டக் குழந்தைகள் பிற்காலத்தில் அதிக நோய் எதிப்புச் சக்தியை பெற்றவர்களாகவும் திடகார்த்தம் உள்ளவர்களாகவும் திகழ்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள் நோஞ்சான்களாகவும் நோய்களின் பிறப்பிடமாகவும் மாறுகிறார்கள்.

இதை புரிந்து கொள்ளாமல் தாய்ப்பால் கொடுத்தால் தன் அழகு கெட்டுவிடும் என்று நினைத்து சில பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில்லை. அழகு என்பது இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது அழியத்தான் போகிறது. குழந்தையின் நலனில் அக்கரையுள்ள தாய்மார்களாக இருந்தால் கண்டிப்பாக தாய்ப்பால் தராமல் இருக்கமாட்டார்கள்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் அவசியம் என்பதால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரண்டு வருடம் முழுமையாக பால்புகட்ட வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திக் கூறுகிறான்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.

 (அல்குர்ஆன்:)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.

 (அல்குர்ஆன்:)

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது “என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்” என்று கூறுகிறான்.

 (அல்குர்ஆன்:)

பால் குடியை மறப்பது இரண்டு ஆண்டுகள் என்று (31 : 14) வசனம் கூறுகிறது. ஆனால் (46 : 15) வசனத்தில் பால் குடி மறப்பதும், கர்ப்பமும் சேர்த்து முப்பது மாதங்கள் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கணக்குப்படி கர்ப்ப காலம் பத்து மாதத்தைக் கழித்தால் பால் குடி மறத்தல் 20 மாதங்கள் தான் ஆகின்றன.

எனவே பால் குடி மறத்தல் 2 வருடங்கள் என்பதும் 20 மாதங்கள் என்பதும் முரணாகவுள்ளதே என்று சிலர் நினைக்கலாம்.

கருவில் சுமார் பத்து மாதம் குழந்தை இருந்தாலும் அது மனிதன் என்ற நிலையையும், தன்மையையும் மூன்று மாதங்கள் கழித்தே அடைகிறது. எனவே மனிதனாகக் கருவறையில் சுமந்தது ஆறு முதல் ஏழு மாதங்களே. எனவே இவ்விரண்டு வசனங்களும் ஒன்றுக் கொன்று முரண்பட்டவை அல்ல.