பாலியல் வழக்கில் சாமியாருக்கு ஆயுள் தண்டனை

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

பாலியல் வழக்கில் சாமியாருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், இக்குற்றத்தில் ஈடுபட்ட சாமியார் ஒருவருக்கு வாழ்நாள் சிறை வழங்கி ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிந்துவாரா பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாமியார் ஆசாராம் பாபு. இவரது ஆசிரமத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் படித்து வந்தார். இந்நிலையில், சாமியார் தன்னை அவரது அறைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 2013-ல் சிறுமி புகார் செய்தார்.

எனவே இவர் மீது சிறுமிகள் பாலியல் பலாத்காரத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறையும் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு வழக்கு தொடங்கியதிலிருந்து அவருக்கு எதிராக சாட்சி கூறியதற்காக 9 பேர் மிரட்டப்பட்டுள்ளனர். மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பதினாறு வயதில் அச்சிறுமி சாமியாரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டார்.

ஆனால் அப்போது குறைந்தது 18 வயது என்று காட்ட பள்ளி முதல்வருக்கு சாமியார் ஆட்கள் மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டது. பிறப்புச் சான்றிதழில் சிறுமியின் பிறந்த தேதியை மாற்றக்கோரி பள்ளி முதல்வர் மிரட்டப்பட்டார். பலாத்கார வழக்கில் ஆயுள்சிறை பெற்ற சாமியார் ஆசாராம் பாபு மீது விரைவில் மற்றொரு இரு பலாத்கார வழக்கிலும் தீர்ப்பை எதிர்கொள்ள இருக்கிறார். கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையில் குஜராத்தில் உள்ள மோதிராம் ஆசிரமத்திலும், கடந்த 2002ஆம் ஆண்டு 2005ஆம் ஆண்டு வரை சூரத்தில் உள்ள ஆசிரமத்திலும் சகோதரிகள் இருவரை தனித்தனியே ஆசாராம் பாபு பலாத்காரம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இரு சகோதரிகளும் கடந்த 2013ஆம் ஆண்டு ஆசாராம் மீது காவல்துறையில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் ஆசாராம் பாபு மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆசாராம் பாபு, அவரின் மனைவி லட்சுமி, அவரின் மகன் சாய், மகள் பாரதி, சீடர்கள் துருபுவன், நிர்மலா, ஜசி, மீரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில், இரு முறை இந்த வழக்கில் ஜாமீனுக்கு ஆசாராம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு உச்ச நீதிமன்றம் இரு முறையும் மறுத்து விட்டது. இந்த வழக்கிலும் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2000ஆம் ஆண்டில், ரூ.700 கோடி நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டின் கீழ் சாமியார் ஆசாராம் பாபு, மகன் சாய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணையும் மத்தியப்பிரதேச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 1972 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள மோதிரா எனும் கிராமத்தில் சிறிய குடில் அமைத்து தனது ஆசிரமத்தை ஆசாராம் பாபு தொடங்கினார்.

அதன்பின் கடந்த 1981- மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு ஆசாராம் பாபுக்கு ஆசிரமம் அமைக்க நிலம் வழங்கியது. 1997ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்கி, இடத்தையும் அளித்தது. அதன்பின் ஆசாராம் பாபு குஜராத் மட்டுமல்லாது ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனது ஆசிரமத்தின் கிளைகளையும், குருகுலங்களையும் தொடங்கினார். குருகுலத்தில் அச்சடிக்கும் எந்திரங்கள், சோப்பு, ஷாம்பு, ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து அதை விற்பனை செய்தார். இதன் மூலம் இவருக்கு லாபம் பெருகியது.

வெளிநாடுகளிலும் இருந்தும் சீடர்கள் வரத் தொடங்கினார்கள், நன்கொடை குவியத் தொடங்கியதால், ஆசாராம் பாபு தனது ஆசிரமத்தின் கிளைகளை வெளிநாடுகளிலும் அமைத்தார். ஆசாராம் பாபுவைத் தேடி வந்து சீடர்கள் மட்டுமல்லாது, விஐபிகளும், அரசியல்வாதிகளும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் சந்திக்கத் தொடங்கினார்கள். குடிசையில் தொடங்கிய இவரின் ஆசிரமத்தின் சொத்து மதிப்பு பத்தாயிரம் ஆயிரம் கோடியாக உயர்ந்தது. கடந்த 2013ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 31ஆம் தேதியில் இருந்து ஆசாராம் பாபு சிறையில் இருந்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு சாதுக்களின் உயர்மட்ட அமைப்பான அகில பாரதிய அகார பரிசத் அமைப்பு, போலிச்சாமியார்கள் பட்டியலில் ஆசாராம்பாபுவின் பெயரையும் சேர்த்து வெளியிட்டு அவரை போலிச்சாமியாராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தம்மைக் கடவுள் என்று சொல்லிக்கொள்கிற அனைவருமே இது போன்ற குற்றப் பின்னணி கொண்டவர்களாக தான் இருப்பார்கள் என்பதே நிதர்சன உண்மை. ஆசாரம் பாபு போல் பலர் ஆன்மீகப் போர்வையில் இருந்து கொண்டு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனையை விட மரண தண்டனையே சரியான தண்டனையாக இருக்கும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனையே வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை அண்மைக்காலமாக இந்தியாவில் மேலோங்கி வருகிறது…

 

Source : unarvu ( 04/05/18 )