பாபர் மசூதி வழக்கு: விரக்தியடைந்த சங்பரிவாரின் முயற்சி

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

பாபர் மசூதி வழக்கு: விரக்தியடைந்த சங்பரிவாரின் முயற்சி

1948ஆம் ஆண்டு வரை உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதியில் தினமும் ஐவேளை தொழுகையும், வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ சிறப்புத் தொழுகையும் நடைபெற்று வந்தது. இந்தப் பள்ளிவாசலை அபகரித்து கோவிலாக மாற்ற சதி செய்த சங்பரிவார அமைப்பினர் அந்த ஆண்டில் ஒரு நாள் நள்ளிரவில் பள்ளிவாசலுக்குள் ராமர் சிலையை கொண்டு வந்து வைத்தனர். இப்படிச் செய்து சர்ச்சையை ஏற்படுத்திய அவர்கள் பள்ளிவாசலை இழுத்து மூட உத்தரவு பெற்றனர்.

பின்னர் ராமர் சிலை உள்ளே இருக்கிறது. எனவே அதனை வழிபட கதவைத் திறந்து விட நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, ராமர் சிலையை வழிபட்டனர். பின்னர் 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி நாடு முழுவதும் இருந்து பயங்கரவாதிகளை திரட்டிக் கொண்டு வந்து, பள்ளிவாசல் கட்டடம் முழுவதையும் தகர்த்து தரை மட்டமாக்கி விட்டனர். பின்னர் அதற்கு மேல் ஒரு தற்காலிக ராமர் கோவிலை ஏற்படுத்தி, இன்று வரை அங்கு ராமர் சிலையை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு பைகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அங்கு நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை சன்னி வக்ஃபு வாரியமும், இன்னொரு பகுதியை ராம்லல்லா அமைப்பும், மூன்றாவது பகுதியை நிர்மோகி அகாரா அமைப்பும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் இந்த அநியாய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நாங்கள் ஒரு நிலப் பிரச்சினையாகத் தான் அணுகுவோம் என உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

பாபர் மசூதி வழக்கை நிலப் பிரச்சினையான அணுகினால் நிலப் பத்திரம், பட்டா, சிட்டா, பத்துக்கு ஒன்று அடங்கல், தீர்வை, நகராட்சியின் தண்ணீர் வரி, மின் இணைப்பு ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்படும். எல்லா நிலப் பிரச்சினைகளும் இந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் தீர்க்கப்படுகின்றன. இந்த வகையில் பாபர் மசூதி நிலப் பிரச்சினையையும் உச்சநீதி மன்றம் அணுகினால் முஸ்லிம்களுக்கு சாதகமாகத் தான் தீர்ப்பளிக்க வேண்டி வரும். ஏனெனில் பாபர் மசூதி சம்பந்தமான வருவாய் துறை ஆவணங்கள் உட்பட எல்லா ஆவணங்களும் முஸ்லிம்களின் பெயரில் தான் உள்ளன.

எனவே தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சமரச பேச்சு வார்த்தை என்ற பெயரில் பாபர் மசூதி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தார். இதற்கு முஸ்லிம்கள் இடம் கொடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த காவிகள் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மூலம் பாபர் மசூதி இடத்தை கைப்பற்ற இப்போது முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த முயற்சியின் விளைவாக அனுமேத்தா என்ற வழக்கறிஞர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் ‘அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தை புராதன நினைவுச் சின்னம், தொல்பொருள் இடங்கள் சட்டத்தின் கீழ் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். அந்த இடத்தில் உள்ள பழமையான கோவில், மசூதி ஆகியவற்றை தனித்தனியாக பாதுகாக்கவும், பராமரிக்கவும், மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதாமிட்டல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் மறுத்து விட்டன.

இது தொடர்பாக மத்திய கலாச்சார துறை அமைச்சகத்திடம் முறையிடுமாறு கூறி, இந்த விவகாரம் குறித்து அடுத்த 3 மாதங்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்கலாம்’ எனத் தெரிவித்தனர். மத்திய தொல் பொருள் ஆய்வுத் துறை என்பது மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு துறையாகும். இந்தத் துறையின் கீழ் பாபர் மசூதி நிலம் வந்து விட்டால் தங்கள் இஷ்டத்திற்கு ராமர் கோவில் கட்டலாம். தகர்க்கப்பட்ட மசூதியை மீண்டும் கட்ட விடாமல் தடுத்து விடலாம் என்ற நோக்கத்தில் தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை முஸ்லிம்கள் புரியாமல் இல்லை.

புராதன சின்னத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்வதற்கு மத்திய தொல் பொருள் ஆய்வுத் துறைக்கு அதிகாரம் இருக்கிறது. அதற்காக பாபர் மசூதி நிலத்தை அந்தத் துறை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் பாபர் மசூதி தேசிய பாரம்பரிய சின்னமல்ல. மேலும் பாபர் மசூதி நிலம் என்பது ஒரு வக்ஃபு நிலம். வக்ஃபு சட்டப்படி வக்ஃபு வாரியத்தின் அனுமதி இல்லாமல் இந்த நிலத்தை மத்திய தொல் பொருள் ஆய்வுத் துறை எடுத்தக் கொள்ள முடியாது. வக்ஃபு சட்டம் என்பது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் எனும் போது வக்ஃபு சட்டத்தை மீறி மத்திய தொல் பொருள் ஆய்வுத் துறை எப்படி நடந்து கொள்ள முடியும்.

ஒரு அரசுத் துறையிடம் ஒருவர் மனு கொடுத்து அந்த மனுவின் மீது சம்பந்தப் பட்ட துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர்நீதி மன்றத்தை அணுக முடியும். அது குறித்த வழக்கை விசாரிக்கும் உயர்நீதி மன்றம் மனு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடும். இது வழக்கமான ஒரு நடைமுறையாகும். எனவே வழக்கறிஞர் அனுமேத்தா பாபர் மசூதி நிலத்தை மத்திய தொல் பொருள் ஆய்வுத் துறை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவித்து, தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய கலாச்சார துறை அமைச்சகத்திடம் மனு கொடுத்தாலும் அந்தத் துறையால் பாபர் மசூதி இடத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்ள முடியாது என்பதே சட்டத்தின் நிலை.

ஒரு வக்ஃபு சொத்தின் மீது வக்ஃபு வாரியத்திற்கு தான் முழு அதிகாரம் இருக்கிறதே தவிர வக்ஃபு சொத்தின் மீது வக்ஃபு வாரியத்திற்கு இருக்கும் அதிகாரத்தை பறிக்கும் அதிகாரம் மத்திய தொல் பொருள் ஆய்வுத் துறைக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே அனுமேத்தாவின் இந்த வழக்கு விரக்தியடைந்த சங்பரிவாரின் ஒரு செயலாக முஸ்லிம்கள் பார்க்கிறார்களே தவிர பாபர் மசூதி நிலம் முஸ்லிம்களை விட்டு போய் விடும் என நினைக்கவில்லை. நிலம் சம்பந்தமான சிவில் வழக்குகளை இதற்கு முன்னால் விசாரித்தது போலவே பாபர் மசூதி நிலம் சம்பந்தமான வழக்கையும் உச்சநீதி மன்றம் விசாரித்து முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கும் என முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் இந்த நம்பிக்கையை உச்சநீதி மன்றமும் தகர்த்து விட்டு தீர்ப்பு வழங்கினால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள முஸ்லிம்கள் இந்தப் பிரச்சினையில் இருந்து விலகி விடுவார்கள். இவர்கள் விலகும் போது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள் வசம் பாபர் மசூதி பிரச்சினை போய் விடும். அது நடப்பது யாருக்குமே நல்லதல்ல என்பது தான் முஸ்லிம்களின் கவலை. இந்தக் கவலை எல்லோருக்கும் ஏற்படும் போது இந்தியாவின் நீதி பிழைக்கும்.

 

Source : unarvu ( 08/06/18 )