பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டு சிரிக்கலாமா?

கேள்வி-பதில்: பண்பாடுகள்

பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டு சிரிக்கலாமா?

பள்ளிவாசலில் நகைச்சுவையாக பேசுவதற்கு எந்த தடையும் இல்லை. அவசியம் ஏற்பட்டால் பள்ளிவாசலில் நாம் நகைச் சுவையாக பேசிக் கொள்ளலாம். ஆனால் தொழுகையாளிகளுக்கு இடையூறு இல்லாதவாறு பார்த்துக் கொண்டால் தவறில்லை. நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் பள்ளிவாசலில் சிரித்திருக்கிறார்கள். மேலும் நகைச்சுவை பேச்சுகளையும் பேசியுள்ளார்கள்.

முஸ்லிம்கள் திங்கட்கிழமை ஃபஜ்ர் தொழுதுகொண்டிருந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். (மரணத்தறுவாயிலிருந்த) நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் உள்ள திரையை விலக்கி அணிவகுத்து நிற்கும் மக்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே புன்னகைத்தவாறு திடீரென அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பாமல் பின்புறமாக விலகலானார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட மகிழ்ச்சியினால் மக்களுக்குத் தொழுகையின் கவனம் மாறியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “”நீங்கள் தொழுதுமுடியுங்கள்’ என்று தமது கையால் சைகை செய்துவிட்டு அறைக்குள் நுழைந்து திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினமே அவர்கள் இறந்துவிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : புகாரி (1205)

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.