பல்வேறு இமாம்களின் நூல்கள்

முக்கிய குறிப்புகள்: இமாம்களின் வரலாறு

தபகாத்து இப்னு ஸஅத்

இந்நூலின் ஆசிரியர் பெயர் முஹம்மத் பின் ஸஅத், இவர் பஸராவில் ஹிஜ்ரி 168ல் பிறந்து ஹிஜ்ரி 230ல் இறந்துள்ளார்கள்.

இவர்கள் பல நூல்களைத் தொகுத்துள்ளார்கள். அவற்றில் தபகாத்துல் குப்ரா என்ற நூல் பிரபலியமானதாகும். இந்த நூலே தபகாத்து இப்னு ஸஅத் என்று அழைக்கப்படுகிறது. இது சுமார் எட்டு பாகங்களாக வெளிவந்துள்ளது.

இந்த நூலின் முதல் பகுதி நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு தொடர்புடையது. இரண்டாம் பகுதி நபித்தோழர்கள் வரலாறு தொடர்புடையது. மூன்றாம் பகுதி நபித்தோழர்களுக்குப் பிறகு நூலாசிரியருடைய காலம் வரை வாழ்ந்த முக்கிய நபர்களின் வரலாறு தொடர்புடையது.

இந்நூலில் பல அறிஞர்களின் வரலாறுகள், அவர்களின் இயற்பெயர், பட்டபெயர், புனைப்பெயர், அவருடைய ஆசிரியர்கள், மாணவர்கள், பிறப்பு, இறப்பு, அவர்கள் வாழ்ந்த பகுதிகள், அவர்களின் குணங்கள் போன்ற பல முக்கிய செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த நூல் அறிவிப்பாளரின் தரத்தை எடைபோடும் நூலாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நூலில் நிறைகளும் குறைகளும் உண்டு. நபிகளார் தொடர்பாக வரும் செய்திகளை அறிவிப்பாளர் தரத்தை வைத்தே நாம் முடிவு செய்ய வேண்டும்.

இப்னு ஹிஷாம்

இந்நூல் ஆசிரியர் இயற்பெயர், அப்துல் மாலிக் பின் ஹிஷாம். இவர்கள் பஸராவில் பிறந்து ஹிஜ்ரீ 213 எகிப்தில் இறந்தார்கள். இவர்கள் பல நூல்களைத் தொகுத்துள்ளார்கள். இப்னு இஸ்ஹாக் என்ற அறிஞர் நபிகளார் அவர்களின் வரலாறு தொடர்பான ஒரு நூலைத் தொகுத்திருந்தார்கள். அந்த நூலை இவர்கள் ஒழுங்குபடுத்தினார்கள். அந்த நூலே சீரத்து இப்னு ஹிஷாம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நூலில் ஆதாரப்பூர்வமான செய்திகளும், ஆதாரமற்ற செய்திகளும் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான செய்திகளுக்கு அறிவிப்பாளர் வரிசைகள் இருக்காது. பல செய்திகளுக்கு ஆதாரங்களும் கிடையாது. எனவே இந்த நூலில் இடம்பெற்றிருப்பதை மட்டும் வைத்து ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

அல்பிதாயா வந்நிஹாயா

இந்நூல் ஆசிரியர் பெயர் இஸ்மாயீல் பின் உமர் பின் கஸீர்,. இப்னு கஸீர் என்று இவர் அழைக்கப்படுவார். இவர்கள் சிரியா நாட்டில் ஹிஜ்ரீ 701 பிறந்து ஹிஜ்ரீ 774 திமிஸ்கில் இறந்தார்கள். இவர்கள் மிகச் சிறந்த அறிஞராக அன்றைய காலத்தில் திகழ்ந்தார்கள்.. தப்ஸீர் இப்னு கஸீர் உட்பட பல சிறந்த நூல்களை எழுதியுள்ளார்கள். இவர்கள் எழுதி முக்கிய நூல்களில் அல்பிதாயா வந்நிஹாயா என்ற நூலும் அடக்கம்.

இந்நூல் 14 பாகங்களைக் கொண்டது. இதில் அர்ஷ், வானம், பூமி, முந்தைய நபிமார்கள் வரலாறு, நபி (ஸல்) அவர்கள் வரலாறு. நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு நடந்த குழப்பங்கள், போர்கள் என்று அவர்கள் காலம் வரை நடந்தவற்றைத் தொகுத்துள்ளார்கள். ஏராளமான பயனுள்ள செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளது. நபிகளார்கள் தொடர்பான செய்திகளுக்கு அறிவிப்பாளர் வரிசையும் கூறியுள்ளார்கள். அந்த அறிவிப்பாளர் தரமானவரா என்பதைக் கண்டறிந்து பின்பற்றுவது சிறந்தது.

ஹாபிழ் இப்னு ஹஜர்

ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஹதீஸ் துறையில் மறக்க முடியாத மாபெரும் அறிஞர்; மாமேதை.

ஹதீஸ் எனும் சமுத்திரத்தில் காலமெல்லாம் முத்துக்குளித்து அடுக்கடுக்கான ஆய்வு முத்துக்களை அகிலத்திற்கு அளித்த அரும்பெரும் ஆற்றல் ஞானி.

ஸஹீஹுல் புகாரிக்குப் பல்வேறு அறிஞர்கள் விரிவுரை எழுதியுள்ளார்கள். ஆனால் இவர்கள் எழுதிய ஃபத்ஹுல் பாரி என்ற விரிவுரை தலைசிறந்த விரிவுரையாகும்.

இந்த விரிவுரை அவரது அறிவின் ஆழத்தையும், கடின உழைப்பையும் எடுத்துரைக்கும்.

கணிணி இல்லாத – கையெழுத்து பிரதிகள்  மட்டுமே உள்ள காலத்தில் புகாரியில் இடம்பெறுகின்ற அதே ஹதீஸ் அல்லது அதே கருத்தில் அமைந்த அல்லது கூடுதல் குறைவான கருத்தில் அமைந்த ஹதீஸ் அல்லது நேர்மாற்றமான ஹதீஸ் இன்ன நூலில் இடம் பெற்றுள்ளது என்று அவர் காட்டுகின்ற மேற்கோள், மேனியை சிலிர்க்க வைத்து விடுகின்றது.

அத்தனை ஹதீஸ் நூற்களிலும் அவரது ஆய்வுப் பார்வை பதிந்திருப்பதை இது நமக்கு தெளிவுபடுத்துகின்றது.

ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தரம், அவர்களின் குறை நிறையைப் பற்றிய அலசல் போன்ற கலைகளில் கைதேர்ந்தவர். ஹதீஸ் துறையில் அவர் ஆற்றிய சேவை அளப்பரியது.

ஹதீஸ் வரலாற்று வானில் ஒளி வீசும் நட்சத்திரமாக இருந்த போதிலும் தமிழ்பேசும் மக்களிடம் அவருக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை.

ஹதீஸ் ஆய்வுகளில் அவருக்கு ஓர் உயரிய இடத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவே அவரைப் பற்றிய இந்தக் கூடுதல் விளக்கம் தரப்பட்டுள்ளது.

முழுப்பெயர்:  அஹ்மத் இப்னு அலீ இப்னு முஹம்மத் இப்னு முஹம்மது இப்னு அலீ  அல்கனானீ அல்அஸ்கலானீ

புனைப்பெயர்: ஷஹாபுத்தீன் அபுல்ஃபலலுல், இப்னு ஹஜர் (இந்தப் பெயரால் தான் இவர் பிரபலமாக அறியப்பட்டுள்ளார்)

இயற்பெயர் : அஹ்மத்

தந்தைப்பெயர்: அலீ

பிறந்த ஊர்: எகிப்தில் உள்ள காஹிரா என்ற ஊரில் பிறந்தார். இவரது குலம் அல்கனானீ என்பதாகும்.

பிறப்பு : ஹிஜ்ரி 773ம் ஆண்டு பிறந்தார்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இவர் மிஸ்ரிலிருந்து மக்காவிற்குப் பயணம் மேற்கொண்டு அங்கு ஒரு வருடம் தங்கிப் பயின்றார். பிறகு ஷாம், ஹிஜாஸ், யமன், இவற்றுக்கு இடையில் உள்ள ஊர்களுக்குப் பயணம் சென்றுள்ளார். ஃபலஸ்தீன், அங்குள்ள காஸா இன்னும் இது போன்ற பகுதிகளுக்கும் சென்றுள்ளார். மிஸ்ரைச் சுற்றியுள்ள ஊர்களுக்கும் சென்றுள்ளார்.

இவர்தொகுத்த நூல்கள்:

ஃபத்ஹுல் பாரி  ஃபி ஷர்ஹி ஸஹீஹுல் புகாரி (இது மிகவும் பிரபலமான நூலாகும்)

அல்அஜாயிபு ஃபி பயானில் அஸ்பாப்

நுஸ்ஹதந்நல்ர் ஃபிதவ்லீகீ நுஹ்பதுல் ஃபிக்ர் (ஹதீஸ் கலை விதிகள் பற்றிய சிறு ஏடு)

அல்கவ்லுல் முஸத்தது ஃபி தப்பி அனில் முஸ்னத்

நதாயிஜுல் அஃப்கார் ஃபி தக்ரீஜீ அஹாதீஸுல் அத்கார்

முவாஃபிகாதுல் கபரில் கபர்

அந்நுகதுல்லிராஃப் அலல் அத்ராஃப்

தக்ரீபுத் தஹ்தீப் (அறிவிப்பாளர்களின் குறை நிறை தொடர்பானது)

ஸில்ஸிலதுத்தஹப்

புலூகுல் மராம் (நோக்கங்களை அடைவது)

இவை அல்லாத சுமாôர் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்துள்ளார்.

இவரது ஆசிரியர்கள்:

அப்துர்ரஹ்மான் அல்இராகீ, இஸ் இப்னு ஜமாஆ, ஸகாவீ, அஹ்மத் இப்னு முஹம்மத், அல்ஐகீ, ஷம்சுதீன் கல்கஷன்தீ, அஹ்மத் இப்னு முஹம்மத் அல்கலீலீ, ஜமாலுத்தீன் இப்னு அல்லஹீரா போன்ற பல அறிஞர்களிடம் பல்வேறு கலைகளைக் கற்றுள்ளார்.

இவரது மாணவர்கள்:

இவருக்கு மக்கா,  ஸீராஷீ, ஷாம்,  பக்தாத் போன்ற பகுதிகளில் இருந்து 626க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். அவர்களில் சிலர்:

இப்னு காலி, இப்னு ஃபஹ்த், இப்னு தஃக்ரீ, முஹம்மதுல் காஃபினீ, ஷம்சுதீன் ஸஹாவீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: இவர் எகிப்தில் ஹிஜ்ரி 852ஆம் வருடம் துல்ஹஜ் கடைசியில் மரணித்தார். அப்போது அவருக்கு 79 வயதாகும்.

ஹயாத்துஸ் ஸஹாபா

இந்நூல் ஆசிரியர் பெயர், முஹம்மத் யூசுப், இவர்கள் இந்தியாவில் பிறந்தவர்கள். தப்லீக் ஜமாஅத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர். இவர்கள் ஹிஜ்ரி 1335 ல் பிறந்தார்கள். ஹிஜ்ரி 1384ல் மரணமடைந்தார்கள்.

இவர்கள் இரண்டு முக்கியமான நூல்களை தொகுத்துள்ளார்கள்.

1. அமானில் அப்ஹார். 2. ஹாயாத்துஸ் ஸஹாபா.

ஹாயாத்துஸ் ஸஹாபா என்ற நூலில் நபித்தோழர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை ஆதார நூல்களுடன் பதிவு செய்துள்ளார்கள். புகாரி,முஸ்லிம் உட்பட பல நபிமொழித் தொகுப்பு நூல்களிலிருந்தும் ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளார்கள். பல பலவீனமான செய்திகளையும் பதிவு செய்துள்ளார்கள். நபித்தோழர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அறிந்து கொள்ள இந்த நூல் பேருதவியாக இருக்கும்.