பலியான ரசிகர்! பதறாத தலைவர்!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

பலியான ரசிகர்! பதறாத தலைவர்!

சினிமா அரசியல் ஆன்மீகம் என அனைத்து துறைகளிலும் பிரபலமானவர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள். ரசிகர்கள் என்றால், தன் தலைவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அது எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் அவருக்குப் பின்னால் கொடி தூக்கி தோள் கொடுப்பவர்களே உண்மையான ரசிகர்கள் என்று அழைக்கப் படுவார்கள். என் தலைவனுக்காக உயிரையே கொடுப்பேன் என்று வாயளவில் சொல்லும் ரசிகர்கள் சிலர் இருந்தாலும் தன் தலைவனுக்காக எது குறித்தும் சிந்திக்காமல் உண்மையிலேயே உயிரைக் கொடுக்கும் முட்டாள் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சில சம்பவங்கள் விபத்தாக அமைந்து அதில் ரசிகர்கள் உயிரை விடும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.

சமீபத்தில் தன் தலைவரின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றச் சென்ற ரசிகர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொங்கலுக்காக கடந்த வாரம் சில சினிமாக்கள் வெளியானது. பொதுவாக தங்களின் தலைவரின் சினிமா வெளியானால் அந்த சினிமாவிற்கு ரசிகர்கள் கட்அவுட் வைப்பதும் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்வதும் தியேட்டர் அமைந்துள்ள பகுதி சாலைகளில் ஆடிப்பாடி மேளம் அடித்து போக்குவரத்தை பாதிக்கச் செய்வதும் வாடிக்கையான ஒரு விடயமாகவே நிகழ்ந்து வருகின்றது. அந்த வகையில் கடந்த வாரம் ரிலீசான விசுவாசம் என்ற சினிமாவிற்கு தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கட் அவுட் வைத்து அதற்கு பாலாபிஷேகம் செய்தார்கள். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் ஒரு திரையரங்கில் அந்த சினிமா ரிலீஸாகி இருந்தது.

அந்த தியேட்டர்க்கு அருகில் அந்த நடிகரின் கட் அவுட்டை 30 அடி உயரத்துக்கு ரசிக கண்மணிகள் வைத்திருந்தார்கள். சினிமா ரிலீஸ் அன்று அந்தக் கட் அவுட்டின் மீது ஏறி சில ரசிகர்கள் அதற்கு மாலை போட்டார்கள். இன்னும் சிலர் பால் பாக்கெட்டை வாங்கி தலைவர் கட் அவுட்டின் மீது பீய்ச்சியடித்தனர். அதேநேரத்தில் இன்னும் சிலர் தன் தலைவருக்கு பாலாபிஷேகம் செய்வதற்கு மேலே ஏறினர். அனைவரும் ஒரு பக்கமாக நின்றதால் அந்தக் கட் அவுட் பாரம் தாங்காமல் முன் பக்கமாக சரிந்து விழுந்தது. அதனால் அதிலிருந்த அனைவரும் கீழே விழுந்தனர். கட் அவுட் கீழே விழுந்ததில் படுகாயமடைந்த ரசிகர் ஒருவர் மரணமடைந்தார். தன் தலைவருக்குப் பால் ஊற்ற சென்ற அந்த ரசிகர் மரணமடைந்தது அவரது குடும்பத்தார் மத்தியில் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

சினிமா மோகத்தால் சீரழியும் இளைஞர்கள் உண்மை வாழ்க்கையை இழந்து தங்களின் கற்பனை தலைவர்களை உண்மையான கதாநாயகனாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சினிமா என்னும் மாய பிம்பத்தை உண்மை என நம்பும் ரசிகர்கள் தான் அநியாயமாக உயிரை இழக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். இறந்து போன ரசிகருக்காக அந்த ரசிகரின் தலைவர் ஒரு இரங்கல் வார்த்தை கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் பரிதாபகரமான செய்தி. தனக்காக ஒரு ரசிகன் இறந்து விட்டானே! அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கின்றதே, உழைக்க வேண்டிய ஒரு இளைஞன் அநியாயமாக மரணமடைந்து விட்டானே என்று அவனது குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ஒரு ஆறுதல் சொல்லலாம், அவனுக்காக நிவாரண உதவிகளைக் கொடுக்கலாம். ஆனால் இது எதையுமே அந்தத் தலைவர் செய்யவில்லை என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்தி. இறந்து போன ரசிகனுக்கு நிவாரண உதவி மக்களிடம் திரட்டிக் கொடுக்க வேண்டியதில்லை, மாறாக ஒரு சினிமாவுக்கு பல கோடிகள் சம்பளம் வாங்கும் அந்தத் தலைவர் தன் ரசிகனுக்காக அதில் சில லட்சத்தை ஒதுக்கி நிவாரணமாக கொடுத்தாலே போதுமானது.

சினிமாவில் நடிக்கும் போது எல்லாமே என் ரசிகனுக்காகத்தான் அவனுக்காக எதையும் செய்வேன் என்று சொல்வார்கள். தன் சொத்து முழுவதையும் ஏழைகளுக்கு எழுதி வைத்து விட்டு கட்டிய துணியோடு வெளியே செல்வது போல சினிமாவில் கதை வைத்து நடிப்பார்கள். ஆனால் அவரைத் தேடி சென்று அவரின் ரசிகர்கள் ஏதாவது உதவி கேட்டால் தலைவர் ஊரில் இல்லை வெளிநாட்டுக்குச் சென்று விட்டார் என்று அவரின் வீட்டு காவலாளி ரெடிமேட் பதிலைச் சொல்வார். பெற்ற தாய் தகப்பனுக்கு பத்து ரூபாய்க்கு பால் வாங்கித்தராத ரசிகன்தான் தன்னுடைய தலைவரின் பொம்மை கட்அவுட்டுக்கு லிட்டர் லிட்டராக பாலை வாங்கி ஊற்றுகின்றான். தன் சொந்தக் காசைப் போட்டு போஸ்டர் அடிக்கின்றான்.

தன் தலைவர் எவ்வளவு அயோக்கியத் தனங்கள் பாலியல் சேட்டைகள் செய்தாலும் அதையெல்லாம் காது கொடுத்துக் கேளாமல் அவர் பத்தரை மாற்றுத் தங்கம் என்று சொல்லி புகழ்ந்து பாராட்டுகின்றான். இவர்களைப் போன்ற ரசிகர்கள் இருக்கும் வரை கூத்தாடி நடிகர்களின் காட்டில் எப்போதும் மழைதான் திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது.

ரசிகனுக்கு கத்திக் குத்து

வேலூர் மாவட்டத்தில் உள்ள அந்த நடிகரின் ரசிகர்களுக்கிடையில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டு கடைசியில் கத்திக்குத்தில் முடிந்திருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அலங்கார் என்ற திரையரங்கில் விசுவாசம் படத்தின் முதல் காட்சி வெளியானது. ரசிகர்கள் சிறப்புக் காட்சியைக் காண வேலூர் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு திரையரங்கில் நுழைந்தனர். அதில் ஒரு ரசிகர் இன்னொரு ரசிகரின் சீட்டில் உட்கார்ந்து விட அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் தாரவபடவேடு பிரசாந்த் மற்றும் ஓல்டு டவுன் ஏரியாவைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி தாக்கிக் கொண்டனர்.

இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்கள் கத்தியால் குத்திக் கொண்டாலும் அவர்களை அப்புறப்படுத்தி விட்டு ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி இனிதாய் முடிந்துள்ளது. கொலையே நடந்தாலும் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் தன் தலைவனுக்காக நல்லது நடந்தால் போதும் என நினைக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை இந்த நடிகர்கள் எதைச் சொன்னாலும் இந்த ரசிகர் சமுதாயம் நம்பும் என்பதற்கு இந்த விசுவாசம் சம்பவங்கள் நல்ல உதாரணம்.

தந்தைக்கு தீ வைத்த மகன்!

விசுவாசம் படம் பார்க்க காசு தராத தந்தையின் தலையில் கல்லைப் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் அந்த நடிகருக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் பீடி சுற்றும் தொழிலாளி. இவரும் அந்த நடிகரின் ரசிகர் என்று கூறப்படுகின்றது. அதன் காரணமாக தன் மகனுக்கும் அஜித்குமார் என பெயர் வைத்துள்ளார். அஜித்குமாரும் அந்த நடிகருக்கு ரசிகரானார். இந்த நிலையில் கடந்த வாரம் வெளியாகிய விசுவாசம் சினிமாவின் ரசிகர் காட்சியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக தன் தந்தை பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார் அஜித்குமார்.

ஆனால் தன்னிடம் பணம் இல்லை என பாண்டியன் சொல்லவே இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் கோபமடைந்த அஜித்குமார் அருகில் கிடந்த கல்லை எடுத்து தன் தந்தையின் தலையில் போட்டார். அதுமட்டுமின்றி வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து பாண்டியன் மீது ஊற்றி தீ வைத்து விட்டு வெளியே ஓடியுள்ளார் அஜித். பாண்டியனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கம் வீட்டார்கள் ஓடி வந்து பாண்டியனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தில் அஜித்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சினிமா பார்ப்பதற்கு பணம் கொடுக்காத தந்தையை மகனே கொலை செய்ய முயற்சித்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாபம் அடைவது யார்?

ஒரு சினிமா வெளியானால் அந்தத் திரைப்படத்திற்கு ரசிகர் ஷோ, என்று முதல் இரண்டு காட்சிகளை ஒதுக்கி விடுவார்கள். ரசிகர்களுக்காக நள்ளிரவு 2 மணிக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்து கொடுக்கும் தியேட்டர் நிர்வாகம். ஏழைகள் அன்றாட காச்சிகள் தினக்கூலிகள் தங்களின் சொற்ப பணத்தைக் கொண்டு முதல் நாள் காட்சியில் ஆயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரைக்கும் விலை கொடுத்து டிக்கெட்டை வாங்கி சினிமாவை பார்த்து அதை வெற்றிகரமாக ஓட வைக்கின்றனர் ஏமாளி ரசிகர்கள். இதுபோன்ற ரசிகர்கள் இத்தனை ஆயிரம் பணம் கொடுப்பதால்தான் சினிமா நடிகர்கள் தங்களின் சம்பளத்தை ஒவ்வொரு படத்திற்கும் பல கோடிகள் அதிகப்படுத்திக் கொண்டே செல்கின்றார்கள்.

சினிமா கூத்தாடிகள் நாலொரு மேனி பொருலொரு வண்ணமுமாக தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டே சென்று கொண்டிருக்க அப்பாவி ரசிகனின் வாழ்க்கை கடைசி வரைக்கும் அதளபாதாளத்தில் தான் கிடக்கின்றது. சினிமா என்ற மாயத்தொழிலால் பலர் கோடிகளில் புரள., ஏழை அப்பாவி ரசிகர்கள் அதில் வீழ்ந்து நாசமாகின்றனர். சினிமாவும் ஒரு சமூகத் தீமை என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு சினிமாவை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்.