பர்தா எனும் திரை சம்பந்தமான சட்டம்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். ளநபி (ஸல்) அவர்களின் துணைவியாரானன ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (வலீமா விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டு விட்டு) பேசிக் கொண்டே அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர்.
அப்போது தான் அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டா லும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும் போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்ப தில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.
நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்கவேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள் எனும் (33:53ஆவது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்து விட்டனர்.