பருவ மழையைப் பாழாக்கிய தமிழகம்

கேள்வி-பதில்: மற்ற கேள்விகள்

 

கொட்டித் தீர்த்தது மழை, சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது, பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்ற செய்திகள் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

உண்மையில் தமிழகத்திற்குத் தேவையான மழைபெய்ந்து விட்டதா? என்றால் நிச்சயம் இல்லை என்று சொல்லலாம். இதை வரும் கோடைகாலங்களில் நாம் உணருவோம்.

வடகிழக்குப் பருவமழைதான் தமிழகத்தின் தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்கிறது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம்  என்றழைக்கப்படுகின்றது. இக்காலமே. தென்னிந்திய தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலமாகும்.

குறிப்பாக ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவையின் தேவையை இந்த மழைதான் பூர்த்தி செய்கிறது.  தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த மழையளவில் 48 % சராசரியாகப் பொழிகிறது. தமிழகத்தின் கரையோரப் பகுதிகளில் 60 % மழையளவும் உள்மாவட்டங்களில் 40-50% மழையளவும் இக்காலத்தில் பொழிகிறது

இறைவன் தரும் அந்த அருட்கொடையைப் பாதுகாத்து, வரும் வருடங்களில் அதைப் பயன்படுத்த நம் முன்னோர்கள் செய்த ஏற்பாட்டைச் சரியாக நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மழைநீரைப் பாதுகாக்க குளம், ஏரி, கண்மாய் என்று ஏராளமான நீர்தேக்கங்களை தமிழகத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். ஆனால் அவற்றில் 40 விழுக்காட்டிற்கும் மேலாக இன்று காணாமல் போய்விட்டது.

ஆக்கிரமிப்பு, ரியல் எஸ்டேட் அதிபர்களின் கொள்ளைகள் என்று ஏராளமான நீர்த் தேக்கங்கள் காணாமல் போனதால்தான் இன்று சென்னை போன்ற நகரங்கள் தத்தளிக்கின்றன.

இருக்கும் குளம், கண்மாய், ஏரி போன்றவற்றையாவது தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீர் தேக்கி வைப்பதற்குரிய வேலையைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அரசு அந்த வேலையைச் செய்யவில்லை.

சில இடங்களில் பெயருக்கு தூர்வாரி உள்ளனர். இது யானைப் பசிக்கு சோளப்பொறி கொடுப்பது போலாகி விட்டது. இதனால்தான் சிறிய கொள்ளளவுடன் தண்ணீர் நிரம்பி இடம் இல்லை என்று சாலைக்கு தண்ணீர் வந்துவிட்டது.

குளம், குட்டை, ஏரி, கண்மாய், கால்வாய் போன்றவை முற்புதர்கள் நிரம்பி இருப்பதால் தண்ணீர் முழுமையாக உள்ளடங்க முடிவதில்லை.

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஏரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இவற்றுள் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஆக்கிரமிப்பால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் மூடப்பட்டு விட்டன. நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன. இதன் காரணமாக எப்போதாவது பெய்யும் மழை நீரைச் சேமிக்க முடியாமல் அவை வீணாகக் கடலில் கலக்கின்றன.

தேவையான மழை பொழிந்தும் தமிழகம் தண்ணீருக்கு கையேந்தும் நிலை ஏற்படுகிறது.

கடந்த 2007-08 ஆம் ஆண்டு ஏரி, குளம் ஆகியவற்றைப் பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், 2009 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு பகுதியில் 10 ஆண்டாகக் குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. எனவே, பெரும்பாலான ஏரி, குளங்கள் மாயமாகி விட்டன. இது போன்ற அரசியல் காரணங்களும் தண்ணீரைச் சேமிப்பதற்குத் தடையாக இருக்கிறது.

குளங்கள், ஏரிகள் காணாமல் போனதற்கும், தூர் வாராமல் இருந்ததற்கும் காரணமான அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புப் பகுதிகளை அப்புறப்படுத்தி, தூர்வாரி, ஆழப்படுத்தி தண்ணீர் சேமிக்கும் வழியை ஏற்படுத்தினால் அடுத்தவனிடம் கையேந்தும் நிலை தமிழகத்திற்கு வராது.