24) பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல்
சிறுவர்களுக்கும் தொழுகை நடத்தப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்கள்:(திர்மிதீ: 952), நஸயீ 1917,(இப்னு மாஜா: 1496),(அஹ்மத்: 17459, 17497)
‘விழு கட்டிகளுக்குத் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், அவர்களுக்காகவும் துஆச் செய்ய வேண்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 2766,(அஹ்மத்: 17468, 17475)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு சிறுவர் (உடல்) கொண்டு வரப்பட்டது. அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1921
சிறுவர்களுக்காகவும், முழு வடிவம் பெறாத கட்டிகளுக்காகவும் ஜனாஸா தொழுகை உண்டு என்பதை மேற்கண்ட ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.
ஆயினும் பெரியவர்களைப் போல் இது கட்டாயம் இல்லை. சிறுவர்களுக்குத் தொழுகை நடத்தாமல் விட்டு விட்டால் அது குற்றமாகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் 18 மாதத்தில் மரணித்த போது அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலி)
நூல்: அபூ தாவூத் 2772,(அஹ்மத்: 25101)
சிறுவர்களுக்கு ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமை என்றால் தமது மகனுக்கு அதைச் செய்யாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்.