பரிகாரம்
‘அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாம் விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘பள்ளிவசாலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்கரிய பரிகாரமாகும்.’
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்:
நாங்கள் உமர்(ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, ‘நபி(ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்திருப்பவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்று பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு.) நபி(ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர்(ரலி) ‘நீர் அதற்குத் தகுதியானவர் தாம்’ என்றனர். ஒரு மனிதன் தம் குடும்பத்தினரிடமும் தம் சொத்துக்களிலும் தம் குழந்தைகளிடமும் தம் அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும் என்றும் நான் விடையளித்தேன்.
அதற்கு உமர்(ரலி), ‘நான் இதைக் கருதவில்லை’ என்றனர். ‘கடலலை போல் அடுக்கடுக்காக ஏற்படும் (நபிகளால் முன்னறிவிக்கப்பட்ட) ஃபித்னா (குழப்பங்கள்) பற்றியே கேட்கிறேன்’ என்று கூறினார்கள். இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை. உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்கு மிடையே மூடப்பட்ட கதவு உள்ளது என கூறினேன். ‘அக்கதவு திறக்கப்படுமா? உடைக்கப்படுமா?’ என உமர்(ரலி) கேட்டார்கள். நான் உடைக்கப்படும் என்றேன். ‘அப்படியாயின் அது ஒருக்காலும் மூடப்படாது’ என்று உமர்(ரலி) கூறினார்.
ஷகீக் கூறினார். அந்தக் கதவு எதுவென உமர்(ரலி) அறிவார்களா? என்று ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். ‘ஆம்! பகலுக்குப் பின்னர் இரவு என்பதை அறிவது போல் அதை உமர்(ரலி) அறிவார்கள். பொய்கள் கலவாத செய்தியையே நான் அவர்களுக்கு அறிவித்தேன்’ என்று ஹுதைஃபா(ரலி) கூறினார். அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சி, மஸ்ரூக்கைக் கேட்கச் செய்தோம். அதற்கு ஹுதைஃபா(ரலி) ‘அந்தக் கதவு உமர்(ரலி) தாம்’ என்றார்கள்.
இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்:
ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்’ (அல்குர்ஆன்: 11:114)➚ என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?’ என்று கேட்டதற்கு ‘என் சமுதாயம் முழுமைக்கும்’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘யாரேனும் ஒரு தொழுகையை மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவுமில்லை.’
‘என்னைத் தியானிப்பதற்காகத் தொழுகையை நிலை நிறுத்துவீராக’ (அல்குர்ஆன்: 20:14)➚ என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்:
அவர்கள் லுஹர் தொழுகையில் முதல் இருப்பில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்தபோது ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் முதல் இருப்பில் அமர மறந்ததற்குப் பரிகாரமாக ஒவ்வொரு ஸஜ்தாவிலும் தக்பீர் கூறி இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள். உடனே மக்களும் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து அந்த இரண்டு ஸஜ்தாக்களையும் செய்தனர்.
ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் நினைவில் வைத்திருப்பவர் யார்? என உமர்(ரலி) கேட்டார். (ஃபித்னா என்ற வார்த்தைக்கு, சோதனைகள், துன்பங்கள் என்ற பொருளும் உண்டு) நான் ‘நபி(ஸல) அவர்கள் கூறியதை அப்படியே நினைவில் வைத்திருக்கிறேன்’ என்றேன். உமர்(ரலி), ‘நீர் தாம் அதற்குத் துணிச்சல் பெற்றவராக இருந்தீர்! அவர்கள் எப்படிச் சொன்னார்கள்?’ என்று கேட்டார். ‘ஒரு மனிதன் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளின் விஷயத்தில் (அவர்களின் மீது அளவு கடந்து நேசம் வைப்பதன் மூலமும்) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, தர்மம், நல்லறம் ஆகியவவை அதற்கான பரிகாரமாகும்’ என்று நான் பதில் கூறினேன்.
‘நான் இதைக் கருதவில்லை; கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய நபி(ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட குழப்பத்)தைப் பற்றியே கேட்கிறேன்’ என்றார்கள். நான், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கும் அவற்றிற்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது’ எனக் கூறியதும், ‘அக்கதவு உடைக்கப்படுமா? திறக்கப்படுமா?’ என உமர்(ரலி) கேட்டார்கள். நான் ‘உடைக்கப்படும்’ என்றேன். ‘அது உடைக்கப்பட்டால் மூடப்படவே மாட்டாது தானே?’ என உமர்(ரலி) கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன்.
என்பதற்கு பதிலாக அபூ வாயில் அவர்கள் நல்லதை ஏவுதல் தீயதை தடுத்தல் என்று கூறினார்களென சுலைமான் என்பவர் கூறுகிறார்.
அபூ வாயில் கூறினார்:
கதவு எதுவென? ஹுதைபா(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே மஸ்ரூக் என்பாரை அவரிடம் கேட்கச் சொன்னோம். அவர் கேட்டதற்கு ஹுதைஃபா(ரலி) ‘(அந்தக் கதவு) உமர்(ரலி) தாம்’ என்றார். மேலும் அவரிடமே ‘நீங்கள் குறிப்பிடுவதை உமர்(ரலி) அறிவாரா?’ எனக் கேட்டோம். அதற்கவர் ‘ஆம்!, நாளை (காலை) வருவதற்கு முன்பு இரவொன்று உள்ளது என்பதை அறிவது போல் அதை உமர்(ரலி) அறிவார். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் அவருக்கு அறிவித்தேன்’ என்றும் ஹுதைஃபா(ரலி) கூறினார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
‘(துல்கஅதாவை பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ் பிறையை எதிர் நோக்கியவர்களாக, நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் ‘உம்ராவுக்கு (மட்டும்) இஹ்ராம் அணிய விரும்புகிறவர் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணியட்டும்; ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியட்டும்! நான் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திராவிட்டால் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணிந்திருப்பேன்!’ என்றார்கள். சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தனர்; மற்றும் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர். நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்களுள் ஒருத்தியாக இருந்தேன்.
மக்காவில் நுழைவதற்கு முன் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாயுள்ள நிலையிலேயே அரஃபா நாளையும் அடைந்தேன். நபி(ஸல்) அவர்களிடம் (இதுபற்றி) நான் முறையிட்டபோது, ‘உன்னுடைய உம்ராவைவிட்டுவிட்டு, தலையை அவிழ்த்து வாரிக் கொள்! மேலும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்!’ என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். முஹஸ்ஸபில் தங்கும் இரவு வந்தபோது, என்னுடன் அப்துர் ரஹ்மானை தன்யீம்வரை நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்துர்ரஹ்மான் தம் ஒட்டகத்தின் பின்னால் என்னை ஏற்றினார். விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக நான் இஹ்ராம் அணிந்தேன்.
‘அல்லாஹ் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றித் தந்தான்’ என்று அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
‘இதற்காக, ஆயிஷா(ரலி) குர்பானியோ, தர்மமோ, நோன்போ பரிகாரமாகச் செய்யவில்லை!’ என்று மற்றோர் அறிவிப்பாளர் ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஃகல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்:
நான் கஅபு இப்னு உஜ்ரா (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரம் பற்றி அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள், ‘என் விஷயமாகவே (அல்குர்ஆன்: 2:196)➚ இறைவசனம் அருளப்பட்டது; என்றாலும், அது உங்கள் அனைவருக்கும் பொதுவானதே! பேன்கள் என் முகத்தில் உதிர்ந்து கொண்டிருக்க, நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன்; நபி(ஸல்) அவர்கள், ‘உமக்கு இவ்வளவு அதிகமாக வேதனை ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை! உம்மிடம் ஓர் ஆடு இருக்கிறதா?’ என்று கேட்டார்கள்; நான் ‘இல்லை!’ என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘(தலையை மழித்து) மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பீராக!’ என்று கூறினார்கள்’ என்றார்கள்.