33) பயிற்சி அளிக்க வேண்டும்

நூல்கள்: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

பருவ வயதை அடையும் போது தான் தொழுகை நோன்பு போன்ற வணக்கங்கள் கடமையாகும். என்றாலும் அதற்கு முன்பே வணக்க வழிபாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தி பயிற்சி கொடுக்க வேண்டும். இவ்வாறு பயிற்சி கொடுக்கும் போது மார்க்க சட்டத்திட்டங்கள் அவர்களுக்கு எளிதாகவும் விருப்பமானதாகவும் மாறிவிடும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தொழுகை நோன்பு ஹஜ் போன்ற வணக்கங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தும் வழக்கம் இருந்துள்ளது.

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் அவர்களை அழைத்து, “(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து, “பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறுயாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை” என்று கூறினார்கள்.

அறி : ஆயிஷா (ரலி),

நூல் : புகாரி (862)

நபி (ஸல்) அவாகள் முஹர்ரம் பத்தாம்நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, “யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

அறி : ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி),

நூல் : புகாரி (1960)

நான் ஏழுவயதுச் சிறுவனாக இருந்தபோது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்!

அறி : ஸாயிப் பின் யஸீத் (ரலி),

நூல் : புகாரி (1858)

ஒரு பெண், தன் குழந்தையைத் தூக்கி, “இவனுக்கும் ஹஜ் உண்டா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு” என விடையளித்தார்கள்.

அறி : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : முஸ்லிம் (2596)