பயிரிடப்பட வேண்டிய காலம்
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
மனித வாழ்வு, ஏற்றத் தாழ்வுகளை கொண்டது. வாழ்க்கையில் சில நேரங்களில் சிலவற்றை இழப்போம், சிலவற்றை பெறுவோம். ஆனால், ஒரே ஒரு இறைவனின் அருள் மட்டுமே இழந்தால், மீண்டும் பெற முடியாமல் போய் விடுகிறது. அது தான் காலம் என்பதை நாமெல்லாம் மிகவும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். எனவே தான் மனிதன் மிகவும் மதிக்கும் செல்வமான பொன்னோடும், கண்ணோடும் ஒப்பிட்டு, காலம் பொன் போன்றது எனவும், கண் போன்றது எனவும் சித்தரிப்பதை பார்க்கிறோம்.
பல நாட்கள் செய்து கொண்டிருந்த பணிகளை சில நோடி பொழுதுகளில் செய்யக்கூடியளவிற்கு காலத்தை சுருக்கி விட்ட நவீன உலகத்தில், தினங்களை கொண்டாடுவதில் தான் காலத்தை கழிக்கின்றனர். பெரும்பாலோர். அனுதினமும் ஏதாவது ஒரு பெயரில் தினங்களை கொண்டாடும் மனிதர்கள், இந்த காலத்தை உரிய வகையில் பயன்படுத்தாவிட்டால் திண்டாடும் நிலை தான் ஏற்படும் என்பது தான் நிதர்சனம்.
காலத்தின் சுழற்சியால் நடைபெறும் வருட பிறப்புகளில் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை. புது வருட கொண்டாட்டங்கள் அறிவுப்பூர்வமானதும் இல்லை. ஏதாவது ஒன்றை கஷ்டப்பட்டு மனிதன் அடைந்தால் அதை கொண்டாடலாம். மாறாக பகல் மற்றும் இரவை மாறி மாறி அடைந்து நாட்களை கழிப்பதிலும், மனிதனுடைய வயது உயருவதை கொண்டாடுவது பகுத்தறிவிற்கு முரணானது தான். இவ்வாறு புது வருட பிறப்பை கொண்டாடுவது இஸ்லாமிய வழிமுறையல்ல. மாறாக கிருத்துவர்களின் நடைமுறையாகும். மாற்றார்களின் நடைமுறையை பின்பற்றுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்கள்.
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ.
எவர் ஒருவர் ஒரு சமூகத்தினரை பின்பற்றுகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவரே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : ஹுதைஃபா (ரலி)
நூல் : முஸ்னத் பஸ்ஸார்-2966 (2573)
எனவே, இந்த காலத்தை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் வீணடிக்காமால், அரிய காலத்தை எவ்வாறு பயன்படுத்த நமக்கு இஸ்லாமிய மார்க்கம் அறிவுறுத்துகிறது என பார்ப்போம்.
காலத்தின் அருமையை கருத்தில் கொண்டு, நம்முடைய மரணம் வருவதற்கு முன்பாகவே நமக்கு கிடைக்கின்ற காலங்களை நல்லறங்கள் செய்வதிலே விரைவுபடுத்த வேண்டும். இதைத் தான் இறை நம்பிக்கையாளர்களுக்குரிய பண்பாக இறைவன் கூறுகின்றான்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.
அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.
உலகில் ஒரு வீடு கட்டுவதற்கு (அதுவும் கூட நமக்கு நிரந்தரமல்ல) நாம் எவ்வளவு உழைப்பையும், காலத்தை செலவழிக்கிறோம். ஆனால், உலக மாளிகைகளை காட்டிலும் பல கோடி மடங்கு உயர்ந்ததாகவும், சிறப்பிற்குரியதாகவும் மறுமையில் கிடைக்க போகும் நிரந்தர சொர்க்கம் இருக்கும் என திருக்குர்ஆனின் மற்றும் நபிமொழிகளின் வாயிலாக நாம் அறிந்தும், அந்த உயர்ந்த பாக்கியத்தை அடைய நாம் எந்த முயற்சியையும் எடுப்பதில்லை. நம்முடைய காலங்களை இறைவனுடைய மன்னிப்பையும், அந்த உயர்ந்த மாளிகைகளையும் பெற முயற்சிக்க வேண்டும் என வல்ல அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய வாழ்வில் நமக்காகவும், நம்முடைய குடும்பத்திற்காகவும் எப்படி எதிர்கால திட்டங்களை தீட்டுகிறோமோ அதைப்போலவே நிரந்தர மறுமை வாழ்விற்காக நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம் என சிந்தித்து அதற்கேற்றார் போல நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என வல்ல அல்லாஹ் திருமறையில் போதனை செய்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொரு வரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
பொழுது போக்கிற்காக, குறிப்பிட்ட நேரம் மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் நம்முடைய நேரங்களில் சில துளிகளை ஒதுக்குவதை இஸ்லாமிய மார்க்கம் தடை செய்யவில்லை. ஆனால், பொழுதை போக்குவதே கேளிக்கைகளிலும், ஆபாச நிகழ்ச்சிகளிலும் தான் என்கிற போக்கை இஸ்லாமிய மார்க்கம் கண்டிக்கிறது. இவ்வாறு தங்களுடைய நேரங்களை வீணடிப்பவர்கள் காலத்தின் அருமையை உணராதவர்கள்.
“(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்” என கூறுவீராக!
اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ
اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ۙ وَتَوَاصَوْا بِالصَّبْ
காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.
தமக்குக் கிடைத்த மிகக் குறைந்த வாழ்நாட்களில் நல்லறங்கள் செய்து நன்மைகளை சேர்க்காமல் அவற்றை வீணாக்குபவன் மிகப்பெரும் நஷ்டத்தில் இருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட அத்தியாயத்தில் இறைவன் நமக்கு உணர்த்துகிறான். இவ்வுலக வாழ்க்கையில் நம்மை ஈர்க்கின்ற இந்த வீணான மனோ இச்சைகளில் அளவு கடந்து வீழ்வது தான் நம்முடைய மறுமையின் தோல்விக்குக் காரணமாக அமைகின்றது.
தங்களுடைய வாழ்வை வல்ல அல்லாஹ் சொன்னது போல அமைத்துக்கொள்ளாமல் மரணிக்க நேரிடுபவர்களுக்கு இறுதி நேரத்தில் (மரண தருவாயில்) ஏற்படப்போகும் அவலத்தை திருமறை குர்ஆன் படம் பிடித்து காட்டுகிறது.
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே! என்று அப்போது (மனிதன்) கூறுவான். அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
மரணத்தருவாயில் வாய்ப்பு மறுக்கப்பட்டது போல், மறுமையிலும் அந்த உன்னத வாய்ப்பு மறுக்கப்படும் என வல்ல அல்லாஹ் எச்சரிக் கிறான்.
“எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி நல்லறங்களைச் செய்கிறோம்” என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். “படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா? உங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை” (என்று கூறப்படும்)
(முஹம்மதே!) அவர்களை வேதனைப்படுத்தும் நாளைப் பற்றி மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) “எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம்” என்று அநீதி இழைத்தோர் கூறுவார்கள். உங்களுக்கு அழிவே வராது என்று இதற்கு முன் சத்தியம் செய்து நீங்கள் கூறிக் கொண்டிருக்கவில்லையா?
காலத்தை நாம் நல்ல காரியங்களில் பயன்படுத்தினால், மரணத்திற்கு பின்பும் பலனை அடையலாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபதேசம் செய்துள்ளார்கள்.
يَتْبَعُ الْمَيِّتَ ثَلاَثَةٌ فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى مَعَهُ وَاحِدٌ يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عَمَلُهُ.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது.
அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கி விடும்.
அறி: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 6514)
எவ்வித சிரமுமின்றி வல்ல இறைவன் கொடுத்த காலம் என்ற கொடையை நம் சரியாக பயன்படுத்தாமல் கோட்டை விட்டால் மறுமையிலே நமக்கு சொர்க்கம் என்ற கோட்டை கிடைக்காமல் போய்விடும். இவ்விஷயத்தில் மக்களில் அதிகமானோர் கவனமற்று இருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்துள்ளார்கள்.
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
1. ஆரோக்கியம்
2. ஓய்வு
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (புகாரி: 6412)
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நாங்கள் எங்களுக்குரிய மூங்கிலாலான ஒரு குடிசை வீட்டைச் சரி செய்து கொண்டிருந்த நிலையில் நபியவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, “இது என்ன?” என்று கேட்டார்கள். “வீடு பாழடைந்து விட்டது. அதைச் சரி செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினோம். அதற்கு நபியவர்கள், “(மரணம் என்ற) அக்காரியம் இதை விட மிக விரைவானது” என்று கூறினார்கள்.
நூல்: (திர்மிதீ: 2335) (2257)
எனவே நம்முடைய அதிகமான கால நேரங்களை நல்லமல்கள் அதிகம் செய்வதில் ஈடுபடுத்துவோம். இறைவன் நம் அனைவரையும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக ஆக்கி அருள்புரிவானாக.
அப்படி ஒரு வாய்ப்பினை வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக.! வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
இப்னு சாபிரா, பேரணாம்பட்டு