பயனுள்ள கல்வியை வேண்டுவோம்

பயான் குறிப்புகள்: கொள்கை

பயனுள்ள கல்வியை வேண்டுவோம்

மனிதன் இணைந்திருக்கக் கூடிய குடும்பம், வணிகம், அரசியல் என எந்த ஒரு துறையையும் விட்டு வைக்காமல் நமது மார்க்கம் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த வகையில் மனித வாழ்வில் இன்றியமையாததாய் இருக்கக் கூடிய கல்வித் துறை குறித்தும் அதிகம் போதிக்கின்றது.

இஸ்லாம் அல்லாத இன்னபிற மதங்களில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்துவது மட்டுமல்லாமல், தாழ்ந்த சாதியினர் கல்வி கற்கக் கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நமது அருள்மறையோ உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி என்ற சித்தாந்தத்தை அதிகமதிகம் வலியுறுத்தி அறிவுக் கண்ணைத் திறந்து விடுகின்றது. 

கல்விக்காகப் பயணம் மேற்கொள்ளுதல்

அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) விளங்குகிற உள்ளங்களும், கேட்கும் செவிகளும் அவர்களுக்கு இருந்திருக்கும்.

(அல்குர்ஆன்: 22:46)

அறிவாளிகள் தான் அருள் மறையை அறியமுடியும்

இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன.

(அல்குர்ஆன்: 29:49)

கல்வியாளர்களின் சிறப்பு

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 58:11)

அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.

(அல்குர்ஆன்: 39:9) 

இவ்வாறு திருக்குர்ஆன் கல்விக்காகப் பல முயற்சிகள் மேற்கொள்வதற்கு வழிகாட்டுவதுடன், கல்வியாளர்களே சிறந்தவர்கள் என்று கூறி, கல்விக்கு ஆர்வமூட்டி அதன்பக்கம் நம்மை அழைத்துச் செல்கின்றது.

இல்லாம் வலியுறுத்தும் இக்கல்வியைப் பற்றிய தற்போதைய நிலை என்ன? அதற்கான இஸ்லாமிய வழிகாட்டுதல் என்ன என்பதைக் காண்போம்.

பெற்றோர்களின் பார்வையில் கல்வி

வாழ்க்கையை எதிர்கொள்வதற்கும், அதில் ஏற்படும் பிரச்சனைகளைப் போராடி வெல்வதற்கும் உரிய அறிவையும் ஆற்றலையும் தரக்கூடிய ஆயுதமாகக் கல்வி இருக்கின்றது.

தமது குழந்தைகளின் வாழ்விற்கு முழுப் பொறுப்பேற்றிருக்கும் பெற்றோர்கள், வாழ்வின் அஸ்திவாரமாக இருக்கும் கல்வி, தரமாக அமைய வேண்டும் என்பதில் அதிக ஈடுபாடும் எதிர்பார்ப்பும் கொள்கின்றனர். குழந்தை கருவில் இருக்கும் போதே தமது குழந்தையை டாக்டராக்க வேண்டும், கலெக்டராக்க வேண்டும் என்று எண்ண அலைகளை ஓட விடுவது இதன் வெளிப்பாடு தான்.

மழலையர்களுக்கு, கல்வி என்றால் என்னவென்பது கூட அறியாமல் பள்ளிக்கூட வாசலில் காலடி எடுத்து வைக்கும் அந்தத்  தருணத்திலேயே, எந்தப் பள்ளியில் குழந்தையைச் சேர்த்தால் தரமான கல்வி கிடைக்கும்? இதுவா? அதுவா? என பல வகைகளில் அலைந்து திரிந்து, நண்பர்கள், உறவுகளிடம் விசாரித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துகிறார்கள்.

பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் எந்தக் கல்வி நிறுவனம் அதிக வாக்குகள் வாங்குகின்றதோ அதைத் தேர்வு செய்து அங்கே சீட் வாங்குவதற்காக நாயாய்  பேயாய் அலைந்து திரிந்து, லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள். போதிய பணம் இல்லையென்றால் வட்டிக்கு வாங்கியாவது பணத்தைக் கட்டி ஒருவழியாகப் பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டு, சாதித்து விட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

ஆக, பெற்றோரின் பார்வையில் சிறப்பான கல்வி என்பது ஒவ்வொரு வருடமும் அதிக மதிப்பெண் பட்டியலைக் காட்டக் கூடிய, மக்களிடத்தில் பெயர் பெற்ற கல்வி நிறுவனங்களில் தான் கிடைக்கும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கின்றது.

சிறந்த கல்வி எது?

குழந்தைகளின் அறிவுச் சுடர் தீட்டக்கூடிய கல்வி என்பது இன்றைய காலத்தில் ஒரு வியாபாரமாகவே மாறி நிற்கின்றது. தம்மால் இயன்றவரை பணத்தை வாரிச் சுருட்டிக் கொள்வதில் ஒவ்வொரு நிறுவனமும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொள்கின்றன. இந்தப் போட்டியை குழந்தைகளின் அறிவை மேம்படுத்துவதில், சிந்தனையைக் கூர் தீர்ட்டுவதில் காட்டுகின்றனவா என்று பார்த்தால் அது கேள்விக் குறியாகத் தான் இருக்கின்றது.

ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களது நிறுவனத்தை சிறப்பாகக் காண்பிப்பதற்காக, கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கென அதிகக் கவனம் செலுத்தி, பயிற்சி கொடுத்து அவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்கின்றனர். அந்த மாணவர்களின் பட்டியலைக் காட்டி தங்கள் பள்ளியின்  பெயரைப் பிரபலப்படுத்துகின்றனர்.

ஒரு பொருளை விற்பனை செய்வதற்காக கண்கவர் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதைப் போன்றே கல்வி எனும் பொருளை விற்பனை செய்வதற்காக இந்த யுக்தியைக் கையாளுகின்றனர். அரசாங்கம் என்ன தான் சட்டம் போட்டு இதைத் தடுத்தாலும் அதை இவர்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் படிப்பில் கீழ் நிலையில் உள்ள மாணவர்கள் மேலும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களை யாரும் ஊக்குவிப்பதில்லை. ஆரம்பக் கல்வியிலிருந்து பட்டப் படிப்பு வரையிலும் இதே நிலை தான்.

புத்தகத்திலுள்ளதை வாசித்து விட்டு, அதில் குறிப்பிட்ட சிலவற்றைக் குறித்துக்  கொடுத்து, அதை மனப்பாடம் செய்ய வைத்து ஒப்பிக்கச் சொல்வது, அதிலிருந்தே ஒரு தேர்வை நடத்தி மதிப்பெண் வழங்குவது இது தான் இன்றைய கல்வி முறையாக உள்ளது. குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் விதமான கல்வியாக இல்லாமல் வெறும் மனப்பாடத்தை மட்டும் நம்பி, மதிப்பெண்களை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கல்வியாக உள்ளது. இதைப் போன்ற பல கோளாறுகள் நமது கல்வி முறையில் உள்ளதைக் கல்வியாளர்கள் அனைவருமே ஒப்புக் கொள்கின்றனர்.

சிந்தனையைத் தூண்டும் சிறந்த கல்வி

எல்.கே.ஜி. முதற்கொண்டே குழந்தைகள் அதிகம் படித்து மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களது வயதை மீறிய சுமைகள் கொடுக்கப்படுகின்றன. பொதி சுமக்கும் கழுதையைப் போன்று ஒவ்வொரு குழந்தையும் புத்தக மூட்டையைச் சுமக்கின்றன.

அதிகப்படியான கல்வி அவர்களின் அறிவை வளர்த்துள்ளதா? ஆர்வத்தைத் தூண்டியுள்ளதா? என்றால் இல்லை. மாறாக சலிப்பைத் தான் தந்துள்ளது. ஆசிரியர் என்ன பாடம் நடத்தினார் என்று கேட்டால், யாருக்குத் தெரியும் என்று அங்கலாய்ப்பதைப் பார்க்கிறோம். நாமும் இதுபோன்ற  ஒரு நிலையைக் கடந்து தான் வந்திருக்கிறோம். கனியாய் இனிக்க வேண்டிய கல்வி கசந்து போனதன் காரணம் என்ன? அறிவுக்கு வேலை இல்லாமல் போனது தான்.

அறிவுத் திறன் வளர்வதற்கு என்ன வழி? ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே அறிவுத் திறனில் போட்டி ஏற்படும் வகையில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும். சிந்தனையைத் தூண்டும் விதமாகக் கேள்வி எழுப்பி, அறிவுக் கூர்மைக்கு விருந்தளித்து விடை காணல் வேண்டும். இதைத் தான் அறிவின் ஊற்றாய் இருக்கும் அருள்மறை போதிக்கின்றது.

மனிதன் தனது உணவைக் கவனிக்கட்டும்! நாமே தண்ணீரை (வானிலிருந்து) ஊற்றினோம். பின்னர் பூமியை முறையாகப் பிளந்தோம். உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயன்படுவதற்காக தானியத்தையும், திராட்சையையும், புற்பூண்டையும், ஒலிவ மரத்தையும், பேரீச்சை மரத்தையும், அடர்ந்த தோப்புகளையும், கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம்.

(அல்குர்ஆன்: 80:24-32)

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது? மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன? பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)

(அல்குர்ஆன்: 88:17-19)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுக்கும் முறையும் அவ்வாறே  இருந்தது.

‘மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?’ என்று நபி(ஸல்) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்’ என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘பேரீச்சை மரம்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(புகாரி: 61)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். ஒருவர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள், ‘இது எந்த நாள்?’ என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘இது நஹ்ருடைய (துல்ஹஜ் மாதம் பத்தாம்) நாள் அல்லவா?’ என்றார்கள். அதற்கு ‘ஆம்’ என்றோம்.

அடுத்து இது ‘எந்த மாதம்?’ என்றார்கள். அந்த மாதத்துக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘இது துல்ஹஜ் மாதமல்லவா?’ என்றார்கள். நாங்கள் ‘ஆம்!’ என்றோம். அடுத்து ‘(புனிதமான) இந்த ஊரில், இந்த மாதத்தில், இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ, அதுபோன்று, உங்களின் உயிர்களும், உடைமைகளும் புனிதம் வாய்ந்தவையாகும்’ என்று கூறிவிட்டு ‘இங்கே வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இச்செய்தியைக் கூறி விடவேண்டும்; ஏனெனில், வருகை தந்திருப்பவர் அவரை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அச்செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்’ என்றார்கள்’ என அபூபக்ரா(ரலி) அறிவித்தார்.

(புகாரி: 67)

படித்த எத்தனையோ நபர்களைக் காட்டிலும் படிக்காதவர்கள் மேதைகளாக இருக்கின்றனர். பல பிரச்சனைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண்கின்றனர். சாதாரண கூட்டல் கணக்கிற்குக் கூட படித்தவர்கள் பேப்பரையும் பேனாவையும் தேடுவார்கள்.

96ஐயும் 36ஐயும் கூட்டினால் என்ன வரும் என்று படித்தவர்களிடம் கேட்டால் கால்குலேட்டரையோ அல்லது பேப்பர் பேனாவையோ எடுத்து கணக்குப் பார்ப்பார்கள். அல்லது குறைந்தபட்சம் கைவிரல்களையாவது பயன்படுத்திக் கூட்டுவார்கள். ஆனால் படிக்காதவர்களிடம் கேட்டால் மறுகணமே 132 என்று பதில்  சொல்லி விடுவார்கள். ஏனெனில் இவர்கள் ஏட்டுக் கல்வியைப் படிக்கவில்லை. அனுபவ ரீதியான, உணர்வுப்பூர்வமான கல்வியைப் பயின்றுள்ளார்கள். எனவே சிந்தனையைத் தூண்டும் கல்வியே சிறந்த கல்வியாகும்.

கல்வியின் முதற்படி

நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களில் முதன்மையானது அடக்கியாளும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வைப் பற்றியது தான். ஏனெனில் இறைவனைப் பற்றிய அறிவு ஒருவருக்குக் கிடைத்து விட்டால் அவரது உள்ளத்தில் இறையச்சம் நிறைந்து விடும்.

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.

(அல்குர்ஆன்: 35:28)

எனவே நமது குழந்தைகளுக்கு வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிக்காமல், மதிப்பெண்களை மட்டுமே நாளைய வெற்றியின் நோக்கமாகக்  கொள்ளாமல் இறையச்சத்தை ஏற்படுத்தும் விதமான கல்வியையும் இஸ்லாம் கூறும் அடிப்படையில் கற்றுத் தர வேண்டும்.

ஆசிரியர்களையும், பள்ளிப் பாடத்தையும் மட்டும் நம்பியிராமல் நடைமுறை ரீதியிலான சிந்தனைகளைத் தூண்டும் விதமான கல்வியை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். நமது கல்வி நிறுவனங்கள் செய்யத் தவறியதை, அறிவுக்கு வேலை தரும் வேலையை நம்மால் இயன்ற வரை நாம் செய்ய வேண்டும். அத்துடன் இறைவனின் ஆற்றலையும் படைப்புகளின் அற்புதங்களையும் சொல்லிக் கொடுக்க ஒருபோதும் தவறிவிடக் கூடாது.

லுக்மான் தமது மகனுக்கு வழங்கிய அறிவுரையை இறைவன் தனது திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்.

என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதிமிக்க காரியமாகும்.

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

“நீ நடக்கும்போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்‘’ (என்றும் அறிவுரை கூறினார்).

(அல்குர்ஆன்: 31:16-19)

இறைவனின் ஆற்றலை முழுமையாக அறிந்து உணர்ந்தால் மட்டுமே தவறிலிருந்து ஒருவர் தவிர்ந்திருக்க முடியும். அத்தகைய கல்வியை நமது குழந்தைக்கு நாம் போதிக்க வேண்டும். அதுவே நமது குழந்தைகளைப் பண்படையச் செய்யும். அதுவே இம்மை, மறுமையில் வெற்றியைத் தரும் பயனுள்ள கல்வியாக அமையும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 3358)

படித்த பட்டதாரிகளும், படிக்கும் மாணவர்களும் கொலை,  கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைக்கு அடிமையாதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்களது கல்வி பயனற்றுப் போனதே முக்கியக் காரணம்.

பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாப்பு தேடுவோம்

வருங்காலத்தைச் சீர்படுத்தக் கூடிய கல்வி என்பது நமது குழந்தைக்கும் பயனுள்ளதாக அமைந்து, அதன் மூலம் பிறருக்கும் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும். அப்படி அமைவதற்காக, பயனற்ற கல்வியை விட்டும் படைத்தவனிடம் நாள்தோறும் பாதுகாப்புத் தேட வேண்டும்.

அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி வந்ததைப் போன்றுதான் நான் உங்களிடம் அறிவிக்கிறேன்” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:

அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கசலி, வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரமி, வ அதாபில் கப்ர். அல்லாஹும்ம! ஆத்தி நஃப்சீ தக்வாஹா, வ ஸக்கிஹா, அன்த்த கைரு மன் ஸக்காஹா. அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா. அல்லா ஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யக்ஷஉ, வ மின் நஃப்சின் லா தஷ்பஉ, வ மின் தஅவத்தின் லா யுஸ்தஜாபு லஹா.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் மண்ணறையின் வேதனை யிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப் படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன்.

இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்தி லிருந்தும் திருப்தியடையாத மனத்திலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)

(முஸ்லிம்: 5266)