பப்ஜி கேம் தடைசெய்யப்படுமா?
பப்ஜி கேம் தடைசெய்யப்படுமா?
இண்டர்நெட் பயன்படுத்தும் பழக்கம் மக்களிடம் பெருகிய பிறகு பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களின் வரத்து அதிகமாகி விட்டது. அந்த ஃபோன்களில் பயன்படுத்தும் வகையில் ஏராளமான அப்ளிகேசன்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. அதுவும் பொழுது போக்குவதற்கு என்று நிறைய கேம்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதில் சில கேம்கள் சில நாட்களிலேயே பெரும்பாலான மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவிடுகின்றன. அதற்கு அவர்கள் அடிமையாக மாறிவிடுகிறார்கள்.
இந்த வகையில் புளூவேல் எனும் கேம் உலக அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த கேமின் விளைவால் மனரீதியாக பாதிக்கப்பட்டு சிலர் தற்கொலையும் கூட செய்து கொண்டனர். அதனால், அதற்கு எதிப்புகள் வலுக்கவே அந்த கேம் தடைசெய்யப்பட்டது. அடுத்து டிக்டாக் எனும் செயலி மக்களிடம் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது. சினிமா நடிகர்கள் குரலுக்கு ஏற்ப நடித்துக் காட்டுவது இதன் சிறப்பம்சமாக கருதப்பட்டது. இதில் ஏராளமான் டீன்ஏஜ் வயதினர் பெரிதும் ஆர்வம் காட்டினர்.
கடைசியில் கலாச்சார சீர்கேடுகளை விதைக்கும் வகையில் தப்பும் தவறுமாக இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதால் இதற்கு எதிராகவும் குரல்கள் ஒலித்தன. இந்தச் செயலியைத் தடைசெய்ய உத்தரவு இடுமாறு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட்து. இந்தச் சர்ச்சை ஓய்வதற்குள் பப்ஜி எனும் கேம் தொடர்பாகவும் பெரும் அதிர்வலை எழுந்துள்ளது. `Player’s Unknown Battle Ground’ என்ற தொடரின் சுருக்கமே பப்ஜி (PUBG) என்பதாகும். ஐரீஸ் நாட்டின் பிராடன் கிரீனி என்பவர் இந்த கேமை உருவாக்கி இருக்கிறார்.
பல குட்டித் தீவுகள் அடங்கிய பெரிய நாட்டுக்குள் ஆயுதம் ஏந்தி சண்டைப் போடுவது போன்று கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் இந்த கேம் இருக்கிறது. ஒரு நேரத்தில் எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் விளையாடலாம். அவர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்திய வீரர்களாக இருப்பார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களை சுட்டுக் கொன்று விட்டு கடைசி வரையிலும் உயிரோடு இருப்பவரே வெற்றிப் பெற்றவர் என்பது இதன் விதி. இந்த கேமில் எதிரிகளை கொல்வதற்கு தனியாகவும் விளையாடலாம்;
அல்லது இரண்டு, நான்கு, ஆறு என்று குழுவாகவும் சேர்ந்து செயல்படலாம். இவ்வாறு குழுவாக விளையாடும் நபர்கள் மைக்ரோஃபோன் மூலம் தங்களுக்குள் பேசுக்கொள்ளவும் செய்யலாம். ஒரு நாளைக்கு சுமார் பத்து கோடி பேர் இந்த கேமை விளையாடி வருகிறார்கள். வெளிநாடுகளில் மட்டும் பிரபலமாக இருந்த இந்த கேம், 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் இந்தியாவில் அறிமுகம் ஆனது. ஆனால், சில நாட்களுக்குள் சிறுவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று அனைத்து தரப்பினரிம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
விடுமுறை நாட்கள், ஓய்வு நேரங்கள் என்பதையும் தாண்டி வேலை நேரங்களில் கூட விளையாடும் அளவுக்கு இதற்கு அடிமையாகி விட்ட ஆட்களும் உள்ளார்கள். நடந்து செல்லும் போது, வாகனத்தில் அமர்ந்து பயணிக்கும் போது என்று கிடைக்கும் நேரத்தில் எல்லாம் இதை விளையாடும் நபர்களும் இருக்கிறார்கள். இதனால், தங்களது பென்னான நேரங்களை வீணடித்துக் கொள்கிறார்கள் என்பது மட்டுமல்ல, குடும்பம், சமூகம் என்ற கட்டமைப்புகளை விட்டும் ஒதுங்கி, தனிமையில் இருந்து கொண்டு பப்ஜி எனும் நிழல் உலகத்திலேயே வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.
டிஜிட்டல் போதை என்று மருத்துவ ஆய்வாளர்களால் சொல்லப்படும் இதுபோன்ற கேம்களுக்கு அடிமையாகும் ஆட்கள் தங்களது கடமைகளை, பொறுப்புகளை மறந்து விடுகிறார்கள். அந்த கேம்களில் ஏற்பட்ட விரக்தியை சுற்றியுள்ள மக்களிடம் வெளிப்படுத்துவது இயல்பாகி விட்டது. இதில் பப்ஜிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? கர்நாடகா மாநிலம், கடாக் எனும் பகுதியிலுள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர், தேர்வின் போது பாடம் தொடர்பான கேள்விக்கு பப்ஜி பற்றி விளக்கத்தை விடையாக எழுதியுள்ளார்.
அந்த மாணவரை அழைத்துப் பேசும் போதுதான் எந்தளவுக்கு பப்ஜி கேமில் மயங்கி கிடக்கிறார் என்பது தெரிய வந்தது. தேர்வுக்கு சுமார் 15 நாட்களுக்கு முன்னர் இருந்துதான் இந்த கேமை விளையாடி வருவதாகவும் தனது சிந்தனையெல்லாம் எப்போதும் பப்ஜி மீதே இருப்பதாகவும் அதனால் தான் இப்படி எழுதிவிட்டேன் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தற்போது அந்த மாணவருக்கு உளவியல் சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
இந்த செல்ஃபோன் விளையாட்டால் மனநிலை பாதிக்கப்பட்டு வெறித்தனமாக நடக்கும் ஆட்களும் இருக்கிறார்கள் என்பது இன்னொரு சம்பவம் மூலம் தெளிவாகிறது. டெல்லியில் வசிக்கும் சுராஜ் அலியாஸ் சர்னம் வெர்மா எனும் இளைஞர் பப்ஜி கேமில் மூழ்கியதால் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு சரிவர படிக்காமல் அதில் தோல்வி அடைந்துவிட்டார். அதற்குப் பிறகும் அந்த கேமிலேயே மூழ்கி இருந்த காரணமாக, இனிமேல் அந்த கேமை விளையாடக் கூடாது என்று வீட்டில் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்து பெற்றோரையும் தனது சகோதரியையும் கத்தியால் குத்தி கொன்றுவிட்டார்.
அவரை காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி மஹாராஷ்டிராவில் ஹிங்கோலி எனும் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகே நாகேஷ் கோர், சுவப்னில் அன்னப்பூர்ணே எனும் இரு இளைஞர்கள் ப்ப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு செல்லும் இரயிலைக் கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருந்த காரணமாக அதில் அடிபட்டு இறந்து விட்டனர்.
இது போன்று, ஐதராபாத்திலுள்ள ஐத்மல்கஜ்கிரி பகுதியை சேர்ந்த கல்லக்குரி சம்பசிவா எனும் சிறுவன், மறுநாள் தேர்வுக்குத் தயார் ஆகாமல் இரவு முழுவதும் எப்போதும் போன்று பப்ஜி கேமை விளையாடிக் கொண்டிருந்தான். அதனால் அவனது தாய் திட்டியுள்ளார். மனவேதனை அடைந்த சம்பசிவா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.
இப்படி பலரையும் வசப்படுத்தி நாசப்படுத்தும் இந்த கேமுக்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகவே, இந்த கேம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டுமே விளையாட முடியும் என்று இந்தியவில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. ஆனாலும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. முதல் முறையாக கடந்த ஆண்டு வேலூர் பல்கலை கழகத்தில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டது.
பிறகு குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் ராஜ்கோட் ஆணையர் மனோஜ் அகர்வாஅல் இந்த விளையாட்டுக்கு தடை விதித்து ஆணையிட்டார். இதையும் மீறி பப்ஜி கேம் விளையாடியதாக கல்லூரி மாணவர்கள் உட்பட பத்து நபர்களை ராஜ்கோட் போலீசார் கைது செய்தனர். பிறகு ஜாமீனில் விடுதலை செய்தனர். இவ்வாறு பப்ஜி விளையாட்டு காரணமாக ஏற்படும் விபரீதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் பப்ஜி பற்றிய தொடர் புகார்கள் காரணமாக நேபாளத்தில் பப்ஜி கேம் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேபாள தொலைத்தொடர்பு நிறுவனம் இந்த அதிரடி உத்தரவை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அவர்களுடைய நெட்வொர்க்கில் பப்ஜியை தடைசெய்யுமாறு நேபாள தொலைத்தொடர்பு நிறுவனம் உத்தரவு வழங்கியுள்ளது.
இதுபோன்ற சட்டம் இந்தியாவிலும் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமூக சீரழிவில் இருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு இந்திய அரசுக்கும் இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு, பெரும்பாலான பொதுமக்களின் உணர்வை, கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இங்கும் பப்ஜி கேம் தடைசெய்யப்படுமா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.
Source:unarvu(24/05/2019)