பத்ரு, உஹது படிப்பினை – 5
முன்னுரை
இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான பத்ரு போரைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம்.
ஆலோசனை
முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறைப்பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் “இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?” என்று (ஆலோசனை) கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே. அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத் தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்” என்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?” என்று கேட்டார்கள்.
உமர் (ரலி) அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர்கள்), அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்றதன்று. மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்துவிடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்! (உமர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத் துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்களை விடுவிக்க வேண்டாம்)” என்று (ஆலோசனை) கூறினார்கள்.
இறைவனின் கண்டனம்
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.
நான் “அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேனே!” என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்துவிடலாம் என உங்களுடைய நண்பர்கள் எனக்குக் கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன். ஆனால், (இதோ) இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று (தமக்கு அருகிலிருந்த ஓர் மரத்தைக் காட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், “பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது” என்று தொடங்கி, “நீங்கள் அடைந்த போர்ச் சொல்வங்களை அனுமதிக்கப்பட்ட தூய்மையானவையாகவே (கருதி) உண்ணுங்கள்” (8:67-69) என்பது வரை (மூன்று வசனங்களை) அருளினான். அப்போதுதான் போர்ச் செல்வங்களை அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான்.
பிணைத் தொகை
பத்ருப் போரில் கைது செய்யப்பட்டவர்களை குறிப்பிட்ட தொகை பெற்றக் கொண்டு அவர்களை நபிகளார் விடுதலை செய்தார்கள்.
என் தந்தை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் பத்ருப் போர்க் கைதிகளின் (பிணைத் தொகை மற்றும் விடுதலை) விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தார்கள். அப்போது, “நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் “தூர்’ அத்தியாயத்தை ஓதக் கேட்டேன்” என்று (என் தந்தை) கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மத் பின் ஜுபைர்.
நூல் :புகாரி (3050)
சிறப்புகள்
பத்ருப் போரில் கலந்து கொண்ட வீரர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தனி சிறப்புகளை கூறியுள்ளார்கள். அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாகவும் சொர்க்கவாசிகளாகவும் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.
ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வேன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் “ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த் தியாகத் திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக் கொண்டார்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி (2809)
நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூமர்ஸத் (கினாஸ் பின் ஹுஸைன்)அவர்களையும், ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும், “நீங்கள் “ரவ்ளத்து காக்’ என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில்) இணைவைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணைவைப்பவர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் பின் அபீ பல்தஆ அனுப்பியுள்ள (நமது ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)” என்று கூறினார்கள். (பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப் பிட்ட இடத்தில் அந்தப் பெண் தனது ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந்தோம். அவளிடம், “கடிதம் (எங்கே? அதை எடு)” என்று கேட்டோம். அவள், “எம்மிடம் கடிதம் எதுவுமில்லை” என்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை. அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஒன்று, நீயாக கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக உனது ஆடையை) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்” என்று நாங்கள் சொன்னோம்.
விடாப் பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்ட போது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தனது இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அ(ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர் (ஹாதிப் பின் அபீ பல்தஆ) அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார்.
என்னை விடுங்கள்; அவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி), “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ் வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாத வனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இணைவைப்பாளர் (களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன்.
தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களுடைய மனைவி மக்களையும், அவர்களது செல்வத் தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக் கின்றனர்” என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள்” என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கை யாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன்” என்று (மீண்டும்) கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டவர் அல்லவா? பத்ரில் கலந்து கொண்டவர்களை நோக்கி அல்லாஹ், “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது’… அல்லது “உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன்’…. என்று கூறி விட்டிருக்கலாம் அல்லவா?” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் தமது கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி),
நூல் : புகாரி (3983)
நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, “உங்களிடையே பத்ருப் போரில் கலந்து கொண்டவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள்” என்றோ அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவ்வாறுதான் வானவர்களில் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்)” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸை பத்ருப் போரில் கலந்து கொண்டவரான ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ் ஸுரகீ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (3992)
கைஸ் பின் அபீ ஹாஸிம் அவர்கள் கூறியதாவது: பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் (வருடாந்திர உதவித்) தொகை (நபர் ஒன்றுக்கு, தீனார்/திர்ஹம்) ஐயாயிரம், ஐயாயிரமாக இருந்தது. உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தின் போது), “(உதவித் தொகையை) மற்றவர்களை விட இவர்களுக்கு அதிக மாக்கித் தருவேன்” என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (4022)
(ஒரு முறை) ஹாத்திப் (ரலி) அவர்களின் அடிமை ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (தம் உரிமையாளர்) ஹாத்திபைப் பற்றி முறையிட்டார்; “அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் கட்டாயம் நரகத்திற்குத்தான் செல்வார்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ தவறாகச் சொல்கிறாய். அவர் (நரகத்திற்குச்) செல்லமாட்டார். ஏனெனில், அவர் பத்ருப் போரிலும் ஹுதைபியாவிலும் கலந்துகொண்டிருக்கிறார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : புகாரி (4908)
கனீமத்
பத்ருப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றதால் எதிரிகளின் பொருட்கள் முஸ்லிம்களுக்கு பதிர்ந்தளிக்கப்பட்டது.
பத்ருப் போரின் போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து எனது பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி).
நூல் : புகாரி (3091)
உஸ்மான் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் போனதற்குக் காரணம், அவரது மனைவியாக அல்லாஹ்வின் தூதருடைய மகள் (ருகைய்யா (ரலி) அவர்கள்) இருந்தார்கள். மேலும், அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், “பத்ருப் போரில் கலந்து கொண்டவருக்குரிய நற் பலனும் (போர்ச் செல்வத்தில்) அவருக்குரிய பங்கும் உங்களுக்கு உண்டு” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : புகாரி (3130
அடுத்த உரையில், உஹதுப் போர்
சஹாபாக்களுக்கு மிகப் பெரிய பாடத்தையும், நபியவர்கள் ஒரு மனிதர் தான் என்பதை உணர்த்தும் இறைவசனம் இறங்கியது என பல்வேறு சுவையான தகவல்களை உள்ளடக்கிய உஹது போர் பற்றிய செய்திகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில் காண்போம்!