பத்ரு, உஹது படிப்பினை – 4
முன்னுரை
இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான பத்ரு போரைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம்.
அபூஜஹ்லைக் கொன்ற இரு இளைஞர்கள்
இஸ்லாத்தின் முதல் எதிரியாக இருந்த அபூஜஹ்லை அன்சாரித் தோழர்களான இரு இளைஞர்களே கொன்றனர். இந்த இளைஞர்கள் இதற்கு முன்னர் அபூஜஹ்லைப் பார்த்ததுகூட கிடையாது.
பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
“அவர்களைவிடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந் திருக்கக் கூடாதா’ என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண்சாடை செய்து, “என் பெரிய தந்தையே! நீங்கள் அபூஜஹ்லை அறிவீர்களா?” என்று கேட்டார். நான், “ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!” என்று கேட்டேன்.
அதற்கு அச்சிறுவர், “அவன் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப் பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டே யிருப்பேன்)” என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும்.
அதற்குள் அபூஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, “இதோ, நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!” என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூஜஹ்லைக் கொன்று விட்ட செய்தியைத் தெரிவித் தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்களில் யார் அவனைக் கொன்றது?” என்று கேட்டார்கள்.
அவர்களில் ஒவ்வொரு வரும், “நான் தான் (அவனைக் கொன்றேன்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?” என்று கேட்டார்கள். இருவரும், “இல்லை” என்று பதிலளித் தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு, “நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) “அபூஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹுக்கு உரியவை” என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ரலி) அவர்களும் ஆவர்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி),
நூல் :புகாரி (3141)
பத்ருப் போர் (நடந்த) நாளில், “அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரப்) போனார்கள். அவனை அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். இப்னு மஸ் ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக் கொண்டு, “அபூஜஹ்லே! நீயா?” என்று கேட்டார்கள். (அப்போது) அவன், “தம் (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப் பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக…. அல்லது நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக…. ஒருவன் உண்டா?” என்று கேட்டான்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் :புகாரி (3963)
பத்ருப் போரில் அபூஜஹ்லின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த போது நான் அவனிடம் வந்தேன். அப்போது அவன், “நீங்கள் எவனைக் கொலை செய்தீர்களோ அவனை விடச் சிறந்தவன் ஒருவன் உண்டா?” என்று (தன்னைத் தானே புகழ்ந்தபடிச்) சொன்னான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),
நூல் :புகாரி (3961)
கொல்லப்பட்ட முஸ்லிம்கள்
பத்ருப் போரில் முஸ்லிம்கள் தரப்பிலும் சில தோழர்கள் கொல்லப்பட்டார்கள். எதிர்கள் தரப்பில் பெரும் தலைவர்களும் மற்றும் பலரின் தலைகளும் உருட்டப்பட்டன.
ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வேன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் “ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த் தியாகத் திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக் கொண்டார்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் :புகாரி (2809)
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந் திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ருபய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி),
நூல் : புகாரி (4001)
கொல்லப்பட்ட இணைவைப்பாளர்கள்
அபூஜஹ்ல் கூட்டத்தினரில் 70க்கும் அதிமானவர்கள் கொல்லப்பட்டார்கள்.
உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், (மலைக்கணவாயில்நிறுத்தப்பட்ட) அம்பெய்யும் வீரர்களுக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை(த்தலைவராக) நியமித்தார்கள். (அந்தப் போரின் போது முஸ்லிம்களாகிய) எங்களில் எழுபது பேர்களை (இணைவைப்பவர்களான) அவர்கள் கொன்றனர். (அதற்கு முன் நடந்த) பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் இணை வைப்பவர்களில் எழுபது பேர்களைக் கைது செய்து இன்னும் எழுபது பேர்களைக் கொன்று, (ஆக மொத்தம்) நூற்றி நாற்பது பேர்களை வீழ்த்தினார்கள். (இதைப் பற்றி) அபூ சுஃப்யான் கூறினார்: இந்த (உஹுதுப் போரின்) நாள் பத்ருடைய நாளுக்கு பதிலாகும். போர் என்பதே (கிணற்று) வாளிகள் தாம். (மாறி, மாறி தான் இறைக்க முடியும்)”
அறிவிப்பவர் : பரா (ரலி),
நூல் : புகாரி (3986)
கிணற்றில் போடப்பட்ட இணைவைப்பாளர்கள்
பத்ருப் போரில் கொல்லப்பட்ட இணைவைப்பாளர்களில் 24 தலைவர்கள் கிணற்றில் போடப்பட்டார்கள்.
பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள்.
(எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆகவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களுடைய தோழர்களும்அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
நபி (ஸல்) அவர்கள் ஏதோ தமது தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள்.
(கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர் களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” என்று கூறினார்கள்.
உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதல்ஹா (ரலி)
நூல் : புகாரி (3976)
உர்வா பின் ஸுபைர் அவர்கள் கூறியதாவது: “குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப் பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “(நபி -ஸல்- அவர்கள் அப்படிச் சொல்ல வில்லை.) “இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுதுகொண்டிருக்கின்றனர்’ என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள்.
(மேலும்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இது எப்படியிருக்கிறதென்றால், “(குறைஷித் தலைவர்களான) இணைவைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது நபி ஸல்-அவர்களிடம், “உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?’ என்று உமர் -ரலி- அவர்கள் கேட்ட போது) “நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும். ஆனால், “நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்” என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்” என்று நபியவர்கள் சொல்லவில்லை.)
பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியேற்பதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்:
اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ
(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது.
وَمَا يَسْتَوِى الْاَحْيَآءُ وَلَا الْاَمْوَاتُ ؕ اِنَّ اللّٰهَ يُسْمِعُ مَنْ يَّشَآءُ ۚ وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِى الْقُبُوْرِ
(நபியே!) மண்ணறைகளில் இருப்ப வர்களை உங்களால் செவியேற்கச் செய்ய முடியாது.
“நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும் போது (இந்நிலை ஏற்படும்)” என ஆயிஷா (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள். நூல் : புகாரி (3978,3979)
கைதிகள்
பத்ருப் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்த நிலையில் சுமார் 70 நபர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அவர்களை என்ன செய்வது? என்று நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.
(அதற்கு முன் நடந்த) பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் இணை வைப்பவர்களில் எழுபது பேர்களைக் கைது செய்து இன்னும் எழுபது பேர்களைக் கொன்று, (ஆக மொத்தம்) நூற்றி நாற்பது பேர்களை வீழ்த்தினார்கள். (இதைப் பற்றி) அபூ சுஃப்யான் கூறினார்: இந்த (உஹுதுப் போரின்) நாள் பத்ருடைய நாளுக்கு பதிலாகும். போர் என்பதே (கிணற்று) வாளிகள் தாம்.(மாறி, மாறி தான் இறைக்க முடியும்)”
அறிவிப்பவர் : பரா (ரலி),
நூல் :புகாரி (3986)
முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறைப்பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் “இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?” என்று (ஆலோசனை) கேட்டார்கள்.
அவர்கள் அளித்த ஆலோசனைகள், அதில் ஏற்பட்ட திருப்பங்கள், இறைவனது கண்டனம் என பல்வேறு செய்திகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில் காண்போம்!