பத்ரு, உஹது படிப்பினை – 1
முன்னுரை
இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான பத்ரு மற்றும் உஹது போர்களங்களைப் பற்றியும், அந்த போருக்கான காரணத்தையும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்க்க இருக்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கை மக்களிடம் எடுத்துரைத்த போது கடும் எதிர்ப்புகள் வந்தன. அவற்றின் உச்சகட்டமாக இஸ்லாத்தை ஏற்ற மக்களை கருவறுக்க போர்கள் தொடுக்கப்பட்டன. அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் பல போர்களைச் சந்தித்துள்ளார்கள். அவர்கள் சந்தித்த போர்கள் மொத்தம் 19 ஆகும்.
நபிகளார் சந்தித்த போர்களில் முக்கியத்துவமான போராகவும் முதல் போராகவும் இருந்தது பத்ருப் போராகும்.
பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு
وَاِذْ يَعِدُكُمُ اللّٰهُ اِحْدَى الطَّآٮِٕفَتَيْنِ اَنَّهَا لَـكُمْ وَتَوَدُّوْنَ اَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُوْنُ لَـكُمْ وَيُرِيْدُ اللّٰهُ اَنْ يُّحِقَّ الْحَـقَّ بِكَلِمٰتِهٖ وَيَقْطَعَ دَابِرَ الْـكٰفِرِيْنَۙ
8:7. (அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.
இவ்வசனம் (8:7) கூறுவது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவியபின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் வழியாகப் பயணம் செய்து வந்தனர்.
அனுமதியின்றி நுழைந்த கூட்டத்திற்கு தடை
தமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னிய நாட்டவர் தமது நாட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதைத் தடுக்கத் திட்டமிட்டார்கள். குறிப்பாக முஸ்லிம்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு ஊரைவிட்டே விரட்டியடித்த மக்காவாசிகள் தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க வேண்டும் என நினைத்தார்கள்.
நாட்டின் மீது அக்கறையுள்ள எந்தத் தலைவரும் செய்வது போலவே தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களைத் தடுத்து நிறுத்தவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பித்தார்கள்.
இந்த நிலையில்தான் மக்காவின் முக்கியப் பிரமுகரான அபூஸுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக் கூட்டம் அதிகமான சரக்குகளுடன் தமது நாட்டுக்குள் புகுந்து பயணித்துக் கொண்டிருக்கும் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.
எனவே அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்வதற்காகத் தமது தலைமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படைநடத்திச் சென்றார்கள்.
படை திரட்டப்படுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வணிகக் கூட்டத்தின் வர்த்தகப் பொருட்களைப் பறிமுதல் செய்ய வரும் செய்தி வணிகக் கூட்டத்தின் தலைவரான அபூஸுஃப்யானுக்குத் தெரிந்தது. உடனே அபூஸுஃப்யான் தம்மையும், தமது வர்த்தகப் பொருட்களையும் காப்பாற்றப் படையெடுத்து வருமாறு மக்காவுக்குத் தகவல் அனுப்பினார்.
இத்தகவலுக்குப் பின் மக்காவிலிருந்து சுமார் ஆயிரம் பேர் கொண்ட பெரும் படை மதீனாவை நோக்கிப் புறப்பட்டு வந்தது.
வர்த்தகக் கூட்டத்தை வழிமறித்துப் பறிமுதல் செய்வதா? அல்லது எதிர்த்து வரும் எதிரிகளுடன் போர் செய்வதா? என்ற குழப்பமான நிலை நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. வணிகக் கூட்டத்தை வழிமறித்தால் அதிகம் இரத்தம் சிந்தாமல் அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்பதாலும், அவர்களின் பொருட்களைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பதாலும் அதைத்தான் பெரும்பாலோர் விரும்பினார்கள்.
எதிரிகளின் படையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிலேயே தங்கள் படைபலம் இருந்ததால் போரை விட வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.
ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைக் களத்தில் சந்திப்பதையே தேர்வு செய்தார்கள். எதிரிகளை பத்ர் என்னும் இடத்தில் நடந்த மாபெரும் போரைப் பற்றி விரிவாக காண்போம்!
போர் ஏற்படக் காரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவிய பின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் வழியாகப் பயணம் செய்து வந்தனர்.
தமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னிய நாட்டவர் தமது நாட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதைத் தடுக்கத் திட்டமிட்டார்கள். குறிப்பாக முஸ்லிம்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு ஊரை விட்டே விரட்டியடித்த மக்காவாசிகள் தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க வேண்டும் என நினைத்தார்கள்.
நாட்டின் மீது அக்கறையுள்ள எந்தத் தலைவரும் செய்வது போலவே தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களைத் தடுத்து நிறுத்தவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பித்தார்கள்.
இந்த நிலையில் தான் மக்காவின் முக்கியப் பிரமுகரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமனாருமான அபூஸுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக் கூட்டம் அதிகமான சரக்குகளுடன் தமது நாட்டுக்குள் புகுந்து பயணித்துக் கொண்டிருக்கும் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது.
எனவே அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்வதற்காக தமது தலைமையில் படை நடத்திச் சென்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணிகக் கூட்டத்தின் வர்த்தகப் பொருட்களைப் பறிமுதல் செய்ய வரும் செய்தி வணிகக் கூட்டத்தின் தலைவரான அபூஸுஃப்யானுக்குத் தெரிந்தது. உடனே அபூஸுஃப்யான் தம்மையும், தமது வர்த்தகப் பொருட்களையும் காப்பாற்ற படையெடுத்து வருமாறு மக்காவுக்குத் தகவல் அனுப்பினார்.
இத்தகவலுக்குப் பின் மக்காவிலிருந்து சுமார் ஆயிரம் பேர் கொண்ட பெரும் படை மதீனாவை நோக்கிப் புறப்பட்டு வந்தது.
வர்த்தகக் கூட்டத்தை வழிமறித்து பறிமுதல் செய்வதா? அல்லது எதிர்த்து வரும் எதிரிகளுடன் போர் செய்வதா? என்ற குழப்பமான நிலை நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. வணிகக் கூட்டத்தை வழிமறித்தால் அதிகம் இரத்தம் சிந்தாமல் அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்பதாலும் அவர்களின் பொருட்களைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பதாலும் அதைத் தான் பெரும்பாலோர் விரும்பினார்கள்.
எதிரிகளின் படையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிலேயே தங்கள் படை பலம் இருந்ததால் போரை விட வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள்.
ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைக் களத்தில் சந்திப்பதையே தேர்வு செய்தார்கள். எதிரிகளை “பத்ர்’ என்னும் இடத்தில் எதிர் கொண்டார்கள்.
போர் நடந்த காலம்
பத்ருப் போர்க்களம் ரமலான் மாதம் வெள்ளிக்கிழமை 17 ஆம் நாள் நடந்தது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அஹ்மத் (2121)
இது தொடர்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.
كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِنْۢ بَيْتِكَ بِالْحَـقِّ وَاِنَّ فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ لَـكٰرِهُوْنَۙ
(முஹம்மதே!) உம்மை, உமது இறைவன் உமது வீட்டிலிருந்து உண்மையுடன் வெளியேற்றிய (போது வெறுத்த)து போலவே, நம்பிக்கை கொண்டோரில் ஒரு சாரார் (போரை) வெறுத்தனர். உண்மை தெளிவாகத் தெரிந்த பின்பு உம்மிடம் எதிர்வாதம் செய்கின்றனர். பார்த்துக் கொண்டிருக்கும் போதே மரணத்திற்கு இழுத்துச் செல்லப்படுபவர்களைப் போல் அவர்கள் உள்ளனர். “எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)” என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.
لِيُحِقَّ الْحَـقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَۚ
குற்றவாளிகள் வெறுத்த போதும் உண்மையை நிலை நாட்டி, பொய்யை அழித்திட அவன் நாடுகிறான்.
தோழர்களின் கருத்து
அபூசுஃப்யான் (தலைமையில் வணிகக் குழு) வரும் தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (தம் தோழர்களிடம்) ஆலோசனை கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது கருத்தைச்) சொன்னபோது, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டு கொள்ளவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது கருத்தைச்) சொன்னபோதும் கண்டுகொள்ளவில்லை.
அப்போது (அன்சாரிகளில் கஸ்ரஜ் கூட்டத்தாரின்) தலைவர் சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந்து, “எங்(கள் அன்சாரிகளின் கருத்து)களையா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! எங்கள் குதிரைகளைக் கடலுக்குள் செலுத்துமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் செலுத்துவோம். எங்கள் குதிரைகளின் பிடரிகளில் அடித்து (தொலைவில் உள்ள) “பர்குல் ஃகிமாத்’ நோக்கி (விரட்டிச்) செல்லுமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நாங்கள் அவ்வாறே செய்வோம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி).
நூல் : முஸ்லிம் (3646)
நான் மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்களது அவைக்குச் சென்றேன். நான் அவர்களது அவையில் (கலந்து கொண்டு, அவர்கள் கூறும் விஷயங்களை எடுத்துரைப்பவனாக) இருப்பது, அதற்கு நிகரான(மற்ற அனைத்)தை விடவும் எனக்கு விருப்பானதாயிருக்கும்.
(மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:)
நான், நபி (ஸல்) அவர்கள் இணை வைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், “(இறைத்தூதர்) மூசாவின் சமுதாயத்தார், “நீங்களும் உங்கள் இறைவனும் போய்ப் போர் செய்யுங்கள்’ என்று (நகைப்பாகக்) கூறியது போல நாங்கள் கூற மாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப்பக்கமும், இடப் பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளிடம்) போரிடுவோம்” என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்,) நபி (ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை நான் கண்டேன். (எனது சொல்) அவர்களை மகிழச் செய்தது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),
நூல் : புகாரி (3952)
அபூசுப்யான் பாதுகாப்பாக மக்கா சென்றடைதல்
நபி (ஸல்) அவர்கள் தலைமையில் நமது பொருட்களை அபகரிக்க ஓர் கூட்டம் வருகிறது என்பதை அறிந்த அபூசுப்யான் வேறு வழியில் மக்காவிற்குப் பத்திரமாக சென்றுவிடுகிறார். இந்தத் தகவலை மதீனா நோக்கிச் சென்ற அபூஜஹ்ல் கூட்டத்திற்கு தெரிவித்து திரும்பி வந்துவிடுமாறு கூறுகிறார்கள். ஆனால் அபூஜஹ்ல் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று இஸ்லாத்தை ஒழிக்க வேண்டுமென எண்ணியவன் போர் செய்யாமல் வரமட்டேன் என்று கூறிவிட்டான்.
இது தொடர்பாக திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது
وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِؕ وَاللّٰهُ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ .
தமது இல்லங்களிலிருந்து பெருமைக்காகவும், மக்களுக்குக் காட்டவும் புறப்பட்டோரைப் போன்றும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்தவர்களைப் போன்றும் ஆகி விடாதீர்கள்! அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் முழுமையாக அறிபவன்
பத்ரை நோக்கி……………
இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில்..