பணம் கொட்டும் கடவுள் தொழில்

பயான் குறிப்புகள்: கொள்கை

பணம் கொட்டும் கடவுள் தொழில்

பொருள் முதலீடு இல்லாமல் ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டுமா? அதுவும் கொள்ளை லாபம் தருகின்ற, கோடிக்கணக்கில் பணம் கொட்டுகின்ற தொழில் வேண்டுமா? அது மூடத்தனத்தை மூலதனமாகக் கொண்ட கடவுள் தொழில் தான்.

பொதுவாக முதலீடு செய்து நடத்தப்படும் தொழில்களில் லாபமும் ஏற்படும்; நஷ்டமும் ஏற்படும். சாய்பாபா செய்த இந்தக் கடவுள் தொழிலில் கிடைத்த லாபம் 40,000 கோடி (நாற்பதாயிரம் கோடி) ரூபாய். உலகெங்கும் உள்ள மூன்று கோடி “பக்தர்கள்’ இந்த வியாபாரத்தில் அவருக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியை வைத்து அவரைக் கடவுள் என்று நம்ப முடியுமா? ஒருபோதும் முடியாது. இதோ திருக்குர்ஆன் கூறும் பிரகடனத்தைப் பாருங்கள்.

“கெட்டதும், நல்லதும் சமமாகாது” என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

(அல்குர்ஆன்: 5:100)

எவ்வளவு தான் கோடான கோடி பக்தர்கள் இருந்தாலும், கோடான கோடி செல்வம் இருந்தாலும் அவை அனைத்தும் ஒரு கெட்டதை, நல்லதாக்கி விட முடியாது. இது தான் நீதியான, நியாயமான பார்வையாகும். பகுத்தறிவுப் பார்வையாகும். அல்குர்ஆன் இந்தப் பார்வையைத் தான் பார்க்கின்றது.

கோடான கோடி பணத்தைத் திருடுபவன், அந்தப் பணத்தை கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பல்நோக்கு மருத்துவமனைகள், குடிநீர் குழாய்கள் போன்றவற்றை அமைத்து அதை ஏழைகளுக்குக் கொடுத்து விட்டால் சமூகத்தின் பார்வையில் அவன் நல்லவனாகி விடுவான்.

அதனால் தான் ஆந்திரத்தில் சாய்பாபாவுக்காக அரசு விடுமுறையும், அரசு மரியாதையுடன் அடக்கமும் நடைபெறுகின்றது.

ஆனால் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பார்வையில் நல்லவர்களாகி விடுவார்களா? சாய்பாபாவின் நிலை இது தான். சாய்பாபா, மக்களின் அறியாமையை முதலீடாக்கி, மூடத்தனத்தை மூலதனமாக்கி, சில ஏமாற்று வித்தைகளைச் செய்து தன்னைக் கடவுள் என்று காட்டிய பொய்யர்.

பொய்: 1

தேள் கொட்டிய பின் தேவன்?

சத்ய நாராயண ராஜுவுக்கு (சாய்பாபாவின் இயற்பெயர் அது தான்) 14 வயது இருக்கும் போது புட்டபர்த்திக்கு அருகேயுள்ள உரவகொண்டா என்ற இடத்தில் தேள் கடித்து மயக்கடைந்தானாம். மயக்கம் தெளிந்து எழுந்ததும் சிரித்தானாம்; அழுதானாம்; பாடினானாம். அவனது செயல்கள் எல்லாம் புரியாத புதிராக இருந்ததாம். அன்று முதல் தான் அவரது வாழ்க்கை திசை மாறி விட்டது என்று கூறுகிறார் அவரது சகோதரர் சீஷம்மா ராஜு.

சாதாரண கூலித் தொழிலாளி ஒருவன் இதைப் போன்று கூத்துப் போட்டால் அவனை எந்த முதலாளியாவது வேலைக்கு வைத்துக் கொள்வானா?

ஆனால் இப்படி ஒரு கூத்துப் போட்ட சாய்பாபா கடவுளாகி இருக்கின்றார். அதுவும் தேள் கொட்டியவுடன் தெய்வீக வசனம் பேசி தேவனாகியிருக்கின்றார். சமஸ்கிருதம் பேசத் தெரியாத அவர் திடீரென சமஸ்கிருதம் பேசத் தொடங்கினாராம். அவர் பேசியது சமஸ்கிருதம் தானா என்று அந்த மொழி அறிஞர் யாரையேனும் வைத்து ஒப்பு நோக்கினார்களா? இது ஓர் அபத்தமான, அப்பட்டமான பொய்!

பொய்: 2

அவதாரம்

சிறுவன் சத்ய நாராயணா தனது பெற்றோர், சகோதரர்கள் அனைவரையும் அழைத்தானாம். அனைவரின் முன்னிலையில் காற்றிலிருந்து விபூதி, இனிப்பு போன்றவற்றை வரவழைத்துக் கொடுத்தானாம். இதைப் பார்த்த அவனது தந்தை தனது மகனுக்கு ஏதோ பிடித்து விட்டது என்று நினைத்து, பிரம்பை எடுத்து, “யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டாராம்.

அதற்கு சத்ய நாராயணா, “நான் தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் அவதாரம்” என்று கூறினானாம். அன்று முதல் அந்தச் சிறுவனை சாய்பாபா என்று அழைக்க ஆரம்பித்தார்களாம்.

ஷீரடி சாய்பாபா என்பவர் இறந்து போய் வெகு நாட்கள் ஆகி விட்டன. இறந்து போன ஒருவர் எழுந்து வர முடியும் என்றால் அவர் தன்னுடைய உருவத்திலேயே வரலாம். அது தான் அவருக்கு மரியாதையையும் மதிப்பையும் தரும். அந்த சாய்பாபா ஏன் இவரிடத்தில் ஊடுறுவ வேண்டும்?

ஒரிஜினல் சாய்பாபாவின் கடவுள் தன்மையே கேள்விக்குறியானது. சூரத்துல் பாத்திஹா மூலம் ஓதிப் பார்த்தவர் காலப்போக்கில் பரதேசி போன்று திருவோடு ஏந்தி பிச்சையெடுக்க ஆரம்பித்தார் என்று அவரது வரலாறு கூறுகின்றது.

தன்னுடைய தேவைக்காகப் பிறரிடத்தில் கையேந்திய ஷீரடி சாய்பாபா எப்படிக் கடவுளாக முடியும்? அவர் எப்படி இன்னொருவரிடம் புகுந்து அவதாரம் எடுக்க முடியும்?

அறிவியல் அடிப்படையில் ஒருபோதும் ஒருவர் அடுத்தவர் மீது ஊடுறுவவோ, மேலாடவோ முடியாது. எனவே இதுவும் அப்பட்டமான பொய்யாகும்.

பொய்: 3

அற்புதங்கள்

சாய்பாபா சில அற்புதங்களை (?) நிகழ்த்தியிருக்கின்றார். அதனால் அவர் கடவுள் என்று அவரது பக்தர்கள் வாதிடுகின்றனர். அந்த அற்புதங்கள் என்னென்ன?

விபூதி (அதாவது திருநீறு எனும் சாம்பல்), மோதிரம், தங்கச் சங்கிலி, சந்தனம், ஹெச்.எம்.டி. வாட்சுகள் போன்றவற்றை எடுத்துக் காட்டுவது தான் அந்த அற்புதங்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவர் தந்திரக் கலையில் வல்லுநர்! அதைப் பயன்படுத்தி லிங்கம் கக்குவது, கையிலிருந்து திருநீறு கொண்டு வருவது போன்றவற்றைச் செய்து காட்டி மக்களை மயக்கினார் என்பது தான் உண்மை.

விபூதி

டாக்டர் ஆபிரஹாம் கோவூர் என்பவர் 1976ஆம் ஆண்டு சாய்பாபாவின் ஆசிரமத்திற்குச் சென்று சாய்பாபாவை நேரிலேயே சந்தித்து சவால் விடுத்தார். அந்தச் சவாலைச் சந்திக்க சாய்பாபா மறுத்து விட்டார். உண்மையில் இவர் ஒரு கடவுள் என்றால் டாக்டர் கோவூரின் சவாலை ஏற்றுக் கொண்டு, தான் கடவுள் என்று நிரூபிக்க வேண்டியது தானே! அவ்வாறு நிரூபிக்காததன் மூலம் தான் ஒரு போலிக் கடவுள் என்று ஒப்புக் கொண்டு விட்டார்.

சாய்பாபாவின் மோசடியை அம்பலப்படுத்த வேண்டும் என்று பிரபல தந்திரக் கலை நிபுணர் பி.சி. சர்க்கார் ஒரு திட்டம் போட்டார். சாய்பாபாவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கடிதம் எழுதினார். சாயிபாபா அவருக்கு  நேரம் ஒதுக்கித் தரவில்லை. பி.சி. சர்க்கார் என்ன செய்தார்? அசாம் வியாபாரி என்று சொல்லி சாய்பாபாவைச் சந்திக்க நேரமும் பெற்று விட்டார்.

சாய்பாபா கை அசைப்பில் சந்தனத்தை வரவழைத்துக் கொடுத்து ஆசீர்வதித்தார். பி.சி. சார்க்காரும் அவ்வாறே கையிலிருந்து சாய்பாபாவுக்கு ஒரு ரசகுல்லாவை வரவழைத்துக் கொடுத்தார். சாயிபாபா கூச்சல் போட்டார். “நான் தான் பி.சி. சர்க்கார்!” என்று கம்பீரமாகக் கூறி வெளியேறினார். (இம்பிரிண்ட் 1983 ஜூன்)

ஹெச்.எம்.டி. வாட்சுகள்

ஒரு முறை சாய்பாபா காற்றில் கையைச் சுழற்றி, அந்தரத்திலிருந்து 200 ஹெச்.எம்.டி. வாட்சுகள் வரவழைத்துக் கொடுத்தார். இதையறிந்த ஆந்திராவைச் சேர்ந்த நரசய்யா என்பவர் அந்தப் பகுதியில் எந்த இடத்தில் 200 ஹெச்.எம்.டி. வாட்சுகள் வாங்கப்பட்டன என்று விசாரித்த போது, பெங்களூரில் ஒரு கடையில் வாங்கப்பட்டதற்கான ஆதாரங்களை ரசீதுடன் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார் நரசய்யா!

ஆனால் நீதிமன்றமும் அதிலிருந்த நீதிமான்களும் பெரும்பான்மையானவர்கள் பாபா பக்தர்கள் என்பதால் அதைக் கண்டு கொள்ளவில்லை. கடைசியில் நரசய்யா பொது மேடையில் ஒரு சவால் விட்டார். ஆனால் அந்த சவால் இன்று வரை ஏற்றுக் கொள்ளப்படாமல் அந்தரத்தில் நிற்கின்றது.

பெங்களூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் இயற்பியல் வேந்தருமான ஹெச். நரசிம்மையா என்பவர் சாய்பாபாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சூழலில் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுமாறு அந்தக் கடிதத்தில் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் சாய்பாபா ஏற்க மறுத்து விட்டார்.

இவர் உண்மையான கடவுள் என்றால் நரசிம்மையாவின் அழைப்பை ஏற்று அவர் கூறிய நிபந்தனைப்படி அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டியது தானே! ஏன் மறுத்தார்? அவர் ஒரு போலிக் கடவுள் என்பதால் தானே! அவர் ஒரு பொய்யர் என்பதற்கு இவற்றை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

பொய்: 4

ஞானக் கண்ணா? ஊனக் கண்ணா?

1993ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாய்பாபாவின் பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஆறு பேர் கொலை செய்யப்பட்டனர். நான்கு இளைஞர்கள் உள்ளே நுழைந்து அவரது இரு காவலாளிகளைச் சுட்டுத் தள்ளினர். பதிலுக்கு அந்த நால்வரும் காவல்துறையினரால் சுட்டுத் தள்ளப்பட்டனர். (சாய்பாபாவே, அதாவது கடவுளே இந்தக் கொலைச் சதியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.)

இப்போது இங்கு எழுகின்ற கேள்வி:

கொலையாளிகள் உள்ளே வருகின்றனர் என்ற விபரம் ஏன் கடவுளுக்குத் தெரியாமல் போனது? அப்படியானால் அதிலும் இவரது போலித்தனம் தெளிவாகப் புலனாகின்றது. இவர் ஒரு பக்கா ஏமாற்றுப் பேர்வழி என்பது உறுதியாகின்றது.

பொய்: 5

முன்னறிவிப்பு

இந்தக் கடவுள் ஜென்மம் ஒரு முன்னறிவிப்புச் செய்ததாம். “தங்களுக்குப் பின் அறக்கட்டளையை நிர்வகிப்பது யார்? அந்தப் பொறுப்புக்குத் தாங்கள் இப்போது ஆளை நியமியுங்கள்” என்று பக்தர்கள் கேட்டதற்கு இந்தப் பகவான், “நான் 96 வயது வரை வாழ்வேன்; அதனால் கவலைப்படாதீர்கள்; கலங்காதீர்கள்!” என்று ஆறுதல் சொன்னாராம். ஆனால் வாக்களித்தபடி 96 வயதிற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே, 84 வயதிலேயே பக்க வாத பகவான் பரலோகம் போய் விட்டார்.

இந்த லட்சணத்தில் இந்த ஜென்மம் கர்நாடக மாநிலம், பாண்டியா நகரில் பரத்வாஜா கோத்திரத்தில் பிரேம, பிரேம சத்ய சாய்பாபாவாக மறு ஜென்மம் எடுக்கப் போகின்றதாம். எடுத்த ஒரு பிறவியிலேயே கொடுத்த வாக்கு ஒரு துளி கூட நிறைவேறவில்லை. இது மறு பிறவி எடுக்கப் போகின்றதாம்.

இது இந்தக் கடவுள் கூறுகின்ற பிரம்மாண்ட பொய்யாகும். இத்தனை பொய்களையும் புளுகுகளையும் அவிழ்த்து விட்ட இந்த சாய்பாபா ஒரு பொய்க் கடவுள்; போலிக் கடவுள்! இத்தகைய போலிக் கடவுள்கள் இந்த உலகில் தப்பி விடலாம். ஆனால் மறு உலகில் உண்மையான கடவுளின் தண்டனையை விட்டுத் தப்ப முடியாது. அவ்வளவு ஏன்? மரணத்திற்கு முன்பு மலக்குகளிடமிருந்து மரண அடி வாங்கி விட்டுத் தான் சாய்பாபா கூட மரணத்தைத் தழுவினார்.

இதோ திருக்குர்ஆன் சொல்கின்றது:

“அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்” என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

(அல்குர்ஆன்: 21:29)

சாய்பாபாவைப் போன்று இஸ்லாமிய சமுதாயத்திலும் தங்களை அல்லாஹ்வின் அடிமைகள் என்று கூறிக் கொண்டே தங்களுக்குக் கடவுள் தன்மைகளைக் கற்பிக்கின்ற போலிக் கடவுள்கள் இருக்கின்றார்கள்.

இதுபோன்ற போலிக் கடவுள்கள் எந்தச் சமுதாயத்தில் தோன்றினாலும் அவர்களை அடையாளம் காட்டுவது தான் ஏகத்துவம் இதழின் தூய பணி! அந்தத் தூய பணியின் ஓரம்சமாகத் தான் சாய்பாபாவைத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.

மரணத்தைத் தழுவிய மாமன்னர் சுலைமான்

உலகத்தில் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர்களில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற தூதர்கள் தாவூத் (அலை) அவர்களும், அவரது மகன் சுலைமான் (அலை) அவர்களும் ஆவர். அவ்விரு தூதர்களுக்கும் அளித்த அருட்கொடைகளைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். “நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று அவ்விருவரும் கூறினர்.

(அல்குர்ஆன்: 27:15)

பறவைகளின் மொழி அறிந்தவர்

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட் கொடையாகும்” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 27:16)

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். “ஹுத்ஹுத்‘ பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார்.

“அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்” (என்றும் கூறினார்).

(அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. “உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறியது.

“நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது”

(அல்குர்ஆன்: 27:20-23)

ஜின்களின் அரசர்

ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.

(அல்குர்ஆன்: 27:17)

ஜின்களின் பணிகள்

தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.

அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. “தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்” (என்று கூறினோம்.)

(அல்குர்ஆன்: 34:12-13)

காற்று ராஜா

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும்.

(அல்குர்ஆன்: 34:12)

வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.

(அல்குர்ஆன்: 21:81)

அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.

(அல்குர்ஆன்: 38:36)

எறும்புகளின் பேச்சையும் அறிபவர்

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது “எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது” என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார்.

(அல்குர்ஆன்: 27:18-19)

செம்பு ஊற்று

அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம்.

(அல்குர்ஆன்: 34:12)

இம்மாபெரிய அதிகாரத்தையும் ஆட்சியையும், இறைத் தூதையும் ஒருசேர இணையப் பெற்ற ஒரு பாக்கியமிக்க, பாராண்ட மன்னர் சுலைமான், “நான் கடவுள்’ என்று ஒருபோதும் வாதித்ததில்லை. இதோ அவர் எறும்புகளின் பேச்சை ரசித்தவாறு பணிந்து, கனிந்து உதிர்த்த பிரார்த்தனையைப் பாருங்கள்.

“என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!” என்றார்.

(அல்குர்ஆன்: 27:19)

இம்மாமன்னரையும் மரணம் தழுவிக் கொண்டது.

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் “நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே” என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

(அல்குர்ஆன்: 34:14)

இது ஒரு நல்லடியாரின் வாழ்க்கை! ஒரு நபியின் வாழ்க்கை! நல்ல முன்மாதிரியை, நல்ல எடுத்துக்காட்டைக் கொண்டது.

இப்போது ஒரு தீய அடியானைப் பற்றி இங்கு பார்ப்போம். ஆணவ அரசனான அவன் தான் ஃபிர்அவ்ன்! அவனும் தன்னைக் கடவுள் என்று வாதிட்டான்.

(மக்களைத்) திரட்டி, பிரகடனம் செய்தான். நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.  அவனை இம்மையிலும், மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.

(அல்குர்ஆன்: 79:23-25)

அவனை அல்லாஹ் கடலில் மூழ்கடித்து அவனது உடலைப் பாதுகாத்து வைத்துள்ளான். தன்னைக் கடவுள் என்று சொன்னவனின் கதியைப் பாருங்கள் என்று கூறி அதைப் பாடமாக்கி வைத்துள்ளான்.

உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.

(அல்குர்ஆன்: 10:90-91)

போலிக் கடவுளின் உடல் இங்கே! உயிர் எங்கே? அவனது உயிர் என்னிடம் தான் உள்ளது என்று உண்மையான கடவுள் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றான்.

ஃபிர்அவ்னாவது ஓர் ஆட்சியாளன். ஆனால் சாய்பாபாவோ சாதாரண குடிமகன் தான். இவர் தன்னைக் கடவுள் என்று கூறியது வெட்கக் கேடு! இவரையும் கடவுளாக பக்தர்கள் நம்புவது ஒரு கேலிக் கூத்து!