நோன்பாளி நகம் மற்றும் முடி வெட்டலாமா?
உண்ணாமலும், பருகாமலும், இல்லறத்தில் ஈடுபடாமலும் இருப்பது தான் நோன்பாகும்.
நோன்பின் அடிப்படையைப் புரியாததால் இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
நோன்பாளி நகம் மற்றும் முடி வெட்டலாமா?
குளிக்கலாமா? ஆற்றில் மூழ்கிக் குளிக்கலாமா?
பற்பசைகள் பயன்படுத்தலாமா?
சோப்பு மற்றும் நறுமணப்பொருட்களை உபயோகிக்கலாமா?
வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடுமா?
என்பன போன்ற கேள்விகள் யாவும் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் ஏற்படும் கேள்விகளாகும்.
உண்ணாமலும், பருகாமலும், இல்லறத்தில் ஈடுபடாமலும் இருப்பது தான் நோன்பாகும். இவை தவிர உள்ள (மார்க்கத்தில் தீமை என்று சொல்லப்பட்டவைகளை தவிர) ஏனைய காரியங்களை செய்வது நோன்பில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மேலும் நோன்பை முறிக்கும் செயல்கள் எவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி விட்டார்கள். இது போன்ற செயல்கள் நோன்பை முறிப்பவையாக இருந்திருந்தால் அதைச் சொல்லாமல் விட்டிருக்க மாட்டார்கள். இவற்றைச் செய்வது நோன்பைப் பாதிக்கும் என்று எங்கும் கூறப்படவில்லை.
எனவே நோன்பு நோற்ற நிலையில் இவற்றைச் செய்வதால் நோன்பில் எந்தப் பாதிப்பும் இல்லை.
மேலும் நகம் வெட்டுவதை இயற்கை மரபுகளில் ஒன்றாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். நோன்புக் காலங்களிலும் நபியவர்களின் இந்த சுன்னத் கடைப்பிடிக்கப்பட வேண்டியதே.