நொந்தே போயினும் வெந்தே மாயினும் வந்தே மாதரம் பாடமாட்டோம்
நொந்தே போயினும் வெந்தே மாயினும் வந்தே மாதரம் பாடமாட்டோம்
பட்டதாரி ஆசிரியர் கே.வீரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வந்தே மாதரம்’ எந்த மொழியில் எழுதப்பட்டது என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நான் வங்காள மொழி என்று எழுதினேன். ஆனால், எனது பதில் தவறு என்று கூறி ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது. பி.எட் படிப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் வங்காள மொழியில்தான் வந்தே மாதரம் எழுதப்பட்டது என உள்ளது.
ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீ ஆன்சரில் மட்டும் சமஸ்கிருதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எனது பதிலுக்கு ஒரு மதிப்பெண் தருமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வந்தே மாதரத்தைப் பள்ளி, கல்லூரிகளில் பாடாததால் தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டது. எனவே, பள்ளி, கல்லூரிகளில் வாரம் ஒரு முறையாவது வந்தே மாதரம் பாடலைக் கட்டாயம் பாட வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழைமைகளில் பாடலாம். அரசு, தனியார் நிறுவனங்களில் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும். வந்தே மாதரம் பாடலை சமஸ்கிருதம், வங்கத்தில் பாட விருப்பமில்லாத பட்சத்தில் தமிழில் மொழிபெயர்த்து பாடலாம். வந்தே மாதரம் பாடலைப் பாட விருப்பமில்லாதோர் மீது எவ்வித அழுத்தத்தையும் கொடுக்கக் கூடாது” என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக உயர்நீதிமன்றம் கடந்த (2017) ஜூலை மாதம் 25ஆம் தேதி அளித்த இந்தத் தீர்ப்பு மகாராஷ்டிரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பாஜகவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜ் புரோகித், எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் வந்தேமாதரம் பாடுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்குப் பதில் அளித்த மும்பை ஆல் இந்தியா மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீனைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் பதான் ‘என் தலை மீது துப்பாக்கியை வைத்து பாடச் சொன்னாலும் வந்தேமாதரம் பாட மாட்டேன்’ என்று முழங்கினார்.
மகாராஷ்டிரா சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அபூ ஆசிம் அஜ்மி, என்னை நாட்டை விட்டு வெளியே வீசினாலும் வந்தேமாதரம் பாட மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
(2017) ஆகஸ்ட் 19ஆம் தேதி, மகராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாநகராட்சிக் கூட்டத்தில் வந்தேமாதரம் பாடப்பட்ட போது ஆல் இந்தியா மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீனைச் சார்ந்த இரு உறுப்பினர்கள் எழுந்து நிற்கவில்லை. இதனால் மாநகராட்சிக் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. இப்படி வந்தேமாதரம் பாடவேண்டும் என்று முஸ்லிம்கள் மீது ஓர் இணைவைப்பு திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது.
மண்ணே! உன்னை நான் வணங்குகின்றேன் என்று மண்ணைக் கடவுளாக்கி வணங்கச் சொல்கின்றது இந்தப் பாடல்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு முஸ்லிமின் கடமை என்ன? இது தொடர்பாக ஆகஸ்ட் 4ஆம் தேதி, தமிழ் இந்துவில் ‘வந்தேமாதரம் பாடுவதைக் கட்டாயமாக்க முடியுமா?’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒரு வழக்கைப் பார்த்து வருவோம்.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பிஜு இமானுவேல் என்ற 15 வயது மாணவனும், அவனது சகோதரிகளான பினோ மோள், பிந்து இமானுவேலும் பள்ளியில் தேசிய கீதம் பாடப்படுகையில் எழுந்து நிற்பார்கள். ஆனால், பாட மாட்டார்கள். ஜெகோவா விட்னஸ் என்ற கிறித்துவ மதப் பிரிவைச் சேர்ந்த அவர்கள், தங்கள் மத விதிகளின்படி, ஜேகோவாவைத் தவிர வேறு யாரையும் வாழ்த்தி எந்தப் பாடலையும் பாடக் கூடாது. அவர்கள் தேசிய கீதத்தைப் பாடாததன் பின்னணி இதுதான்.
இது ஒரு பத்திரிகையில் செய்தியாக வந்ததையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. வி.சி.கபீர் இதுகுறித்து சட்டமன்றத்தில் பிரச்சினை எழுப்பினார். இதை விசாரிக்க ஒரு நபர் குழுவை அப்போதைய காங்கிரஸ் முதல்வர் கருணாகரன் அமைத்தார். ‘தேசிய கீதம் பாடப்படுகையில், இந்தப் பிள்ளைகள் அமைதியாக எழுந்து நிற்கின்றன, தேசிய கீதத்துக்கு எவ்விதமான அவமரியாதையும் செய்யவில்லை’ என்று அறிக்கை அளித்தது குழு.
ஆனால், தேசிய கீதம் பாடுவோம் என்று எழுதிக் கொடுத்தால் மட்டுமே பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடியும் என்றது மாவட்ட நிர்வாகம். மூவரும் மறுத்தனர். இதையடுத்து, பள்ளியிலிருந்து மூவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தேசிய கீதத்தில் கடவுளைப் புகழும் வாக்கியங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்த உயர் நீதிமன்றம், மாணவர்கள் தேசிய கீதம் பாடாதது தவறு என்று தீர்ப்பளித்தது. அவர்களின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சின்னப்ப ரெட்டி மற்றும் எம்.எம். தத் ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஒருவர் தேசிய கீதம் பாடியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் எந்தச் சட்டமும் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 51-ஏ வின்படி ஒரு குடிமகன், அரசியல் அமைப்புச் சட்டத்தையும், தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதிக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. தேசிய கீதம் இசைக்கப் படுகையில் எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர். எனவே, ஒன்று சேர்ந்து பாடாத காரணத்தால், அவமரியாதை ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது.
இந்த வழக்கில் மாணவர்களின் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை மற்றும் மதத்தைப் பின்பற்றுவதற்கு அரசியல் சாசனம் தந்த உரிமை ஆகியவை மீறப்பட்டிருப்பதாகக் கருதுகிறோம் என்று கூறி, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது. “நமது பாரம்பரியம் நமக்கு சகிப்புத்தன்மையைக் கற்றுத் தந்துள்ளது. நமது தத்துவங்கள் சகிப்புத்தன்மையை வலியுறுத்துகின்றன. நமது அரசியலமைப்புச் சட்டம், சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்கிறது. நாம் அதை நீர்த்துப்போகச் செய்ய வேண்டாம்’’ என்றும் குறிப்பிட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நேர் முரணாக அமைந்திருக்கின்றது என்பதைப் பார்க்கின்ற அதே வேளையில் ஒரு ஜெகோவா விட்னஸ் என்ற கிறிஸ்துவப் பிரிவினர் தங்கள் கொள்கையில் உறுதியாக நிற்கும் போது முஸ்லிம்களாகிய நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தச் சமயத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாம் இப்ராஹீம் நபியைப் போன்று இருக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் தியாகத் திருநாள் நம்மிடம் வந்து சென்றாலும் நமக்கு இன்றைய இந்தியச் சூழலில் இப்ராஹீம் நபியின் வழிகாட்டுதல் மிகவும் அதிகமாகத் தேவைப்படுகின்றது.
செந்தழலில் தனது மேனி எரிந்து சாம்பலானாலும் இதயத்தில் ஏந்திய ஏகத்துவக் கொள்கையை விட்டு ஓர் இம்மியளவும் விலக மாட்டேன் என்ற அவர்களின் கொள்கை உறுதிப்பாடு நம்மிடத்தில் ஆர்த்தெழும் அக்கினி ஜுவாலையாகப் பற்றி எரிய வேண்டும். இன்றைய இந்தியச் சூழல் காவிச் சித்தாந்தத்தின் கரிச் சிந்தனையால் கருப்புச் சிந்தனையால் மாசு பட்டுக் கிடக்கின்றது.
அண்மையில் யோகா என்ற பெயரில் நம்மிடம் சூரிய வணக்கத்தை மத்தியில் ஆளும் காவி அரசு திணிக்கப் பார்த்தது. அடுத்த கட்டமாக காவிச்சிந்தனை, நீதிமன்றத்தின் கருப்பு ஆடையை அணிந்து கொண்டு வந்தே மாதரத்தைத் திணிக்கின்றது.
அனைத்திந்திய அளவில் கொஞ்சம் கொஞ்சம் ஏகத்துவ சிந்தனை வெளிச்சம் கொண்ட மத்ரஸாக்கள், ஜமாஅத்துகள், இஸ்லாமிய அரசியல் சார்ந்த, சாராத அமைப்புகள், இயக்கங்கள் அத்தனையும் இந்த இணைவைப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றன. கொதித்து, கொந்தளித்து எழுகின்றன.
குறட்டை விட்டுக் கொண்டு கூண்டுக்குள் அடங்கிக் கிடப்பது பரேலவிய, ஷியா கொள்கைக் கூட்டம் மட்டுமே! அது எழப் போவதுமில்லை. இதற்காக எதிர்ப்புக் குரல் கொடுக்கப் போவதுமில்லை. காரணம், அந்தக் கொள்கையும் இந்து மதக் கொள்கையும் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகும் கேடு கெட்ட கொள்கையாகும். மொத்தத்தில், படைப்பினத்தைக் கடவுளாக்கும் இருட்டுக் கோட்பாடாகும்.
தேவ்பந்த் தாருல் உலூம் மத்ரஸா 2009ல் தேவ்பந்தில் நடத்திய 3 நாட்கள் மாநாட்டில் வந்தே மாதரம் இஸ்லாத்திற்கு எதிரானது; அதை முஸ்லிம்கள் பாடக்கூடாது என்று தீர்மானம் போட்டது. தேவ்பந்த் இன்றும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் காணமுடிகின்றது. தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தேவ்பந்த் மற்றும் இதர அரசியல் ஆன்மீக அமைப்புகள், இயக்கங்கள், ஜமாஅத்துகளுக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வந்தேமாதரத்திற்கு எதிரான அவர்களது போர்க்குரலைப் பாராட்டுகின்றது.
அந்த அடிப்படையில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களும் வந்தேமாதரம் என்ற இணைவைப்பிற்கு எதிராக இப்ராஹீம் நபியைப் போன்று எரிமலையாகப் பொங்கி எழும்படி தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது.
இந்த வந்தேமாதரத்தை ஆதரித்து பாரதியார்,
நொந்தே போயினும்
வெந்தே மாயினும்
நந்தேசத்தவர்
உவந்து சொல்வது
வந்தே மாதரம்
என்று பாடிய பாடல் வரிகளை நாம் அப்படியே மாற்றிப் பாடுவோம்.
நொந்தே போயினும் வெந்தே மாயினும் இந்திய தேசத்து முஸ்லிம்கள் நாங்கள் வந்தே மாதரம் ஒரு போதும் பாடமாட்டோம் என நம்மை அடக்க நினைக்கும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக முழங்குவோம்.
ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டதற்காக தீக்குண்டம் தான் இந்திய முஸ்லிம்களுக்குப் பரிசு என்றால் அதை ஏற்றுக் கொள்ள இப்ராஹீம் நபியைப் போன்று தயங்க மாட்டோம் என்று உரத்து சொல்லிக் கொள்கின்றோம்.
‘‘இவரைக் கொல்லுங்கள்! அல்லது தீயிட்டுப் பொசுக்குங்கள்!’’ என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை. அவரை அல்லாஹ் நெருப்பிலிருந்து காப்பாற்றினான். நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன்: 29:24) ➚.)
தீக்குண்டவாசிகள் போன்று தீக்குண்டத் தண்டனையை ஏற்கவும் தயங்க மாட்டோம் என்று பிரகடனப்படுத்துவோமாக!
நட்சத்திரங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக!
வாக்களிக்கப்பட்ட நாள் மீது சத்தியமாக!
சாட்சி கூறுவோர் மீதும், சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக!
எரிபொருள் நிரப்பிய நெருப்புக் குண்டத்தைத் தயாரித்தவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர்.
அவர்கள் அதனருகே அமர்ந்திருந்தபோது நம்பிக்கை கொண்டோரை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
“புகழுக்குரியவனும், மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பினார்கள்’’ என்பதற்காகவே தவிர அவர்களை இவர்கள் பழி வாங்கவில்லை.
(அத்தியாயம் 85:1-8)
இந்த இறை வசனங்களில் தெறிக்கின்ற ஏகத்துவத் தீக்கனலை இந்த தியாகத் திருநாள் நம்மிடத்தில் பற்றி எரியச் செய்யட்டுமாக! அசத்தியக் கொள்கையை கரித்துப் பொசுக்கட்டுமாக!