நெல்லுக்கு ஸகாத் உண்டா?

கேள்வி-பதில்: ஜகாத்

நெல்லுக்கு ஸகாத் உண்டா?

குறிப்பிட்ட தானியங்களைத் தவிர மற்ற தானியங்களுக்கு ஸகாத் இல்லை என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு நெல்லுக்கு ஸகாத் இல்லை எனச் சிலர் கூறுகின்றனர்.

இந்தச் செய்திகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல.

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ
إِنَّمَا سَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ فِي هَذِهِ الْخَمْسَةِ فِي الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالتَّمْرِ وَالزَّبِيبِ وَالذُّرَةِ

رواه إبن ماجه

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

தோல் நீக்கப்பட்ட கோதுமை, தோல் நீக்கப்படாத கோதுமை, பேரீச்சம் பழம், காய்ந்த திராட்சை, கம்பு ஆகிய ஐந்து தானியங்களில் மட்டுமே ஸகாத் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

நூல் : (இப்னு மாஜா: 1815) (1805)

இந்தச் செய்தியில் முஹம்மது பின் உபைதில்லாஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவருடைய அறிவிப்புக்களை நன்மக்கள் புறக்கணித்து விட்டனர் என்று அஹ்மது பின் ஹம்பல் கூறியுள்ளார். இவர் பயனற்றவர் என யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவர் மிகவும் பலவீனமானவர் என்று அபூஹாதிம் ராஸி கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் அல்ல என்று நஸாயீ கூறியுள்ளார். இவரது அறிவிப்புகள் சரியானவை இல்லை என ஹாகிம் கூறியுள்ளார். எனவே இந்த அறிவிப்பு பலவீனமானதாகும்.

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ يَعْنِي ابْنَ مَوْهَبٍ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ قَالَ
عِنْدَنَا كِتَابُ مُعَاذٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ إِنَّمَا أَخَذَ الصَّدَقَةَ مِنْ الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالزَّبِيبِ وَالتَّمْرِ رواه أحمد

மூசா பின் தல்ஹா கூறுகிறார் :

தோல் நீக்கப்பட்ட கோதுமை, தோல் நீக்கப்படாத கோதுமை, காய்ந்த திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றில் மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் வாங்கினார்கள் என எங்களிடம் உள்ள முஆத் (ரலி) அவர்களின் புத்தகத்தில் உள்ளது.

நூல் : (அஹ்மத்: 21989) (20985)

இந்தச் செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்றாலும் இதன் அறிவிப்பாளர்களிடையே தொடர்பு அறுந்துள்ளது.

تلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير

وذكره الدارقطني في العلل وقال الصواب مرسل وروى البيهقي بعضه من حديث موسى بن طلحة قال عندنا كتاب معاذ ورواه الحاكم وقال موسى تابعي كبير لا ينكر له لقي معاذ قلت قد منع ذلك أبو زرعة وقال بن عبد البر لم يلق معاذا ولا أدركه

முஆத் (ரலி) அவர்களிடமிருந்து இந்தச் செய்தியை அறிவிக்கும் மூசா பின் தல்ஹா என்பவர் முஆத் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என இப்னு அப்துல் பர் கூறியுள்ளார். அபூ ஸுர்ஆ அவர்களும் இவ்வாறு கூறியுள்ளார்.

இதனால் இச்செய்தி தொடர்பு அறுந்தது என இமாம் தாரகுத்னீ, இமாம் இப்னு ஹஜர் ஆகியோர் கூறியுள்ளனர். இது தொடர்பாக வரும் எந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை என இமாம் திர்மிதீ கூறியுள்ளார்கள். எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.

المستدرك على الصحيحين للحاكم – كتاب الزكاة حديث

أخبرناه أبو بكر بن إسحاق ، وأبو بكر بن أبي نصر المروزي ، قالا : ثنا محمد بن غالب ، ثنا أبو حذيفة ، ثنا سفيان ، عن طلحة بن يحيى ، عن أبي بردة ، عن أبي موسى ، ومعاذ بن جبل ،

حين بعثهما رسول الله صلى الله عليه وسلم إلى اليمن يعلمان الناس أمر دينهم ” لا تأخذوا الصدقة إلا من هذه الأربعة ، الشعير ، والحنطة والزبيب والتمر ”

ஏமன் நாட்டு மக்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ மூசா (ரலி) மற்றும் முஆத் பின் ஜபல் (ரலி) ஆகிய இருவரையும் அந்நாட்டுக்கு அனுப்பிய போது தோல் நீக்கப்பட்ட கோதுமை, தோல் நீக்கப்படாத கோதுமை, காய்ந்த திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றில் தவிர (வேறு தானியங்களில்) நீங்கள் ஸகாத் வசூலிக்காதீர்கள் என அவ்விருவரிடமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் (ஹாகிம்: 1459) 

இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள அபூ ஹுதைஃபா என்பவர் பலவீனமானவர் ஆவார். இவருடைய மனன சக்தியில் கோளாறு உள்ளது என இப்னு ஹஜர் கூறியுள்ளார். இவர் தவறிழைப்பார் என இப்னு ஹிப்பான், தஹபீ ஆகிய இருவரும் கூறியுள்ளனர். இவர் பலவீனமானவர் என்று திர்மிதீ அவர்களும், பந்தார் என்பவரும் கூறியுள்ளனர்.

எனவே இச்செய்திகளை ஆதாரமாகக் கொண்டு நெல்லுக்கு ஸகாத் இல்லை என்று கூறக்கூடாது.

நான்கு வகை விளைபொருட்களைத் தவிர மற்றவைகளுக்கு ஜகாத் இல்லை என்ற ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாவையாக உள்ளதால் விளைபொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் நெல்லுக்கும் ஜகாத் கொடுத்தாக வேண்டும்.