நெகிழ வைக்கும் முன்னறிவிப்புகள் நேரில் கண்ட அறிவிப்பாளர்கள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

நபிகளார் காலத்தில் நடந்த சில நிகழ்வுகள், நபிகளார் முன்னறிவிப்பு செய்ததைப்போல நடந்திருக்கிறது. அப்படிப்பட்ட முன்னறிப்பின் நிகழ்வுகளை இந்த உரையில் நாம் காண்போம்.. 

நெகிழ வைக்கும் முன்னறிவிப்புகள் நேரில் கண்ட அறிவிப்பாளர்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதேனும் முன்னறிவிப்புச் செய்தால் உடனே நபித்தோழர்கள் அது நிறைவேறும் தருணத்தை ஆவலுடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் அறிவிக்கும் இறைச்செய்தி பொய்க்காது என்ற இறைநம்பிக்கையுடன் அதற்கான நேரத்திற்காகக் காத்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கின்ற சில அறிவிப்புகள் உடனடியாகவும் பலித்திருக்கின்றன. அதற்கு ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْتَقَى هُوَ وَالْمُشْرِكُونَ فَاقْتَتَلُوا، فَلَمَّا مَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَسْكَرِهِ، وَمَالَ الْآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ، وَفِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ لَا يَدَعُ لَهُمْ شَاذَّةً وَلَا فَاذَّةً إِلَّا اتَّبَعَهَا يَضْرِبُهَا بِسَيْفِهِ، فَقَالَ : مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلَانٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ “. فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ : أَنَا صَاحِبُهُ. قَالَ : فَخَرَجَ مَعَهُ، كُلَّمَا وَقَفَ وَقَفَ مَعَهُ، وَإِذَا أَسْرَعَ أَسْرَعَ مَعَهُ. قَالَ : فَجُرِحَ الرَّجُلُ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ الْمَوْتَ، فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ بِالْأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ عَلَى سَيْفِهِ فَقَتَلَ نَفْسَهُ. فَخَرَجَ الرَّجُلُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ. قَالَ : ” وَمَا ذَاكَ ؟ ” قَالَ : الرَّجُلُ الَّذِي ذَكَرْتَ آنِفًا أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَأَعْظَمَ النَّاسُ ذَلِكَ، فَقُلْتُ : أَنَا لَكُمْ بِهِ، فَخَرَجْتُ فِي طَلَبِهِ، ثُمَّ جُرِحَ جُرْحًا شَدِيدًا فَاسْتَعْجَلَ الْمَوْتَ فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ فِي الْأَرْضِ، وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ ثُمَّ تَحَامَلَ عَلَيْهِ فَقَتَلَ نَفْسَهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ : ” إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ

நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்களத்தில்) சந்தித்துப் போரிட்டனர். நபியவர்கள் தம் படையினர் பக்கம் சென்று விட, மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார்.

அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித்தோழர்களுக்கு விட்டுவைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார்.

(அவரின் துணிச்சலான போரைக் கண்ட) நபித்தோழர்கள், ‘இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை’ என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘அவரோ நரகவாசியாவார்’ என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர், ‘நான் அவருடன் இருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார்.

அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்.

(இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ‘தாங்கள் இறைத்தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள். அவர், சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி ‘அவர் நரகவாசி’ என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), ‘உங்களுக்காக (அவரின் நிலையை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார்.

உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்’ என்று கூறினார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி),
நூல்: (புகாரி: 2898) , 3062

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த மாத்திரத்தில் ஒரு நபித்தோழர் போர்க்களத்தில், அதை கவனத்திற்குரிய அரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, புலன் துலக்கப் புறப்பட்டு விடுகின்றார். இறுதியில் அவர் கண்டு நெகிழ்ச்சியடைந்த அந்த நிகழ்வையும் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கின்றார்கள். இப்படி உடனடியாகவும் கொஞ்சம் காலங்கடந்தும் பலித்த, பல்வேறு ஆதாரப்பூர்வமான முன்னறிவிப்புகளைப் பல்வேறு ஹதீஸ் நூல்களில் நாம் காண்கிறோம். 

மேற்கண்ட இந்த ஹதீஸை ஸஹ்ல் பின் ஸஅத் அஸ்ஸாயிதி (ரலி) அவர்களும், அதுபோல் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். யார் பின் தொடர்ந்து பார்த்தாரோ அந்த நபித் தோழர் இந்தச் செய்தியை அறிவிக்கவில்லை. சில முன்னறிவிப்புகளை சம்பந்தப்பட்ட அறிவிப்பாளர்களே நேரடியாகக் களத்தில் கண்டு நெகிழ்ந்து போய் அறிவிப்பார்கள். அத்தகைய சில அறிவிப்புகளை நாம் இங்கு காண்போம்.

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்த ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அவர்களைப் பற்றி அறிவித்த முன்னறிவிப்பு வரலாற்றில் பொறிக்கப்பட்ட பொன்னறிவிப்பாகும்.

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ افْتَقَدَ ثَابِتَ بْنَ قَيْسٍ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَنَا أَعْلَمُ لَكَ عِلْمَهُ، فَأَتَاهُ فَوَجَدَهُ جَالِسًا فِي بَيْتِهِ، مُنَكِّسًا رَأْسَهُ، فَقَالَ لَهُ: مَا شَأْنُكَ؟ فَقَالَ: شَرٌّ، كَانَ يَرْفَعُ صَوْتَهُ فَوْقَ صَوْتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ، فَأَتَى الرَّجُلُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ أَنَّهُ قَالَ كَذَا وَكَذَا، فَقَالَ مُوسَى: فَرَجَعَ إِلَيْهِ المَرَّةَ الآخِرَةَ بِبِشَارَةٍ عَظِيمَةٍ، فَقَالَ: ” اذْهَبْ إِلَيْهِ فَقُلْ لَهُ: إِنَّكَ لَسْتَ مِنْ أَهْلِ النَّارِ، وَلَكِنَّكَ مِنْ أَهْلِ الجَنَّةِ

 (அல்குர்ஆன்: 49:2) வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர், “அவரைக் குறித்த செய்தியைத் தங்களுக்காக நான் அறிந்து வருகின்றேன், அல்லாஹ்வின் தூதரே’’ என்று கூறினார். ஸாபித் பின் கைஸிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையுடன்) தமது வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி)யிடம், “உங்களுக்கு என்ன ஆயிற்று?’’ என்று கேட்டார்.

அதற்கு ஸாபித் பின் கைஸ் (ரலி), “மோசம் தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்கு மேல் எனது குரலை உயர்த்தி வந்தேன். நான் நரகவாசிகளில் ஒருவன் தான்’’ என்று கூறினார். அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார்’’ என்று தெரிவித்தார். அந்த மனிதர் (நபி (ஸல்) அவர்களிடமிருந்து) மகத்தான நற்செய்தியை வாங்கிக் கொண்டு மீண்டும் ஸாபித் பின் கைஸ் (ரலி)யிடம் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஸாபித் பின் கைஸிடம் சென்று, “நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று சொல்வீராக’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: (புகாரி: 4846) , 3613

இந்த ஹதீஸை அறிவிப்பவர் அனஸ் (ரலி) அவர்கள் ஆவார்கள். அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான முன்னறிவிப்பு நிறைவேறியதை நேரில் காணும் பாக்கியத்தைப் பெறுகின்றார்கள்.

கபன் துணி அணிந்த ஸாபித் பின் கைஸ்

கொடி சரிந்தால் படையின் கூடாரம் சரிந்தது என்றாகி விடும். அதனால் அன்சாரிகளின் கொடியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி), தோண்டிய குழியில் கணுக்கால்கள் வரை பதித்துக் கொண்டார். உலக வரலாற்றில் போருக்குச் செல்லும் வீரர்கள் தங்கள் ஊருக்குத் திரும்ப வரவும் செய்யலாம். வராமலும் போகலாம் என்ற இரு நிலைப்பட்ட எண்ணத்தில் செல்வதைக் கண்டிருக்கின்றோம்; கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் திரும்ப வர மாட்டோம்; வரக் கூடாது; உயிர் போவது ஒரு முறை தான்!

அது தீனுக்காக இருக்கட்டும். அடையப் போவது சுவனம் தான் என்று உறுதி பூண்டு, இறந்தோருக்கு அணிவிக்கும் கபன் துணியை போராடையாக தரித்துக் கொண்டு, சடலத்திற்குப் பூச வேண்டிய வாசனைத் திரவியத்தை உயிருடன் இருக்கும் போதே பூசிக் கொண்டு, போர்க்களத்திற்கு வந்த போர் வீரரை உலகம் கண்டதே இல்லை. வரலாற்றில் முதன் முதலில் பிணக் கோலத்தில் போருக்கு வந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவர் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) தான்.

நெகிழ்வூட்டும் நிகழ்வை, பலிக்கும் இந்த முன்னறிவிப்பை அனஸ் (ரலி) அவர்கள் நேரில் கண்டு நேர்முகத்தை புகாரியிலிருந்து நுகர்வோம்.

عَنْ مُوسَى بْنِ أَنَسٍ، قَالَ
وَذَكَرَ يَوْمَ اليَمَامَةِ – قَالَ: أَتَى أَنَسٌ ثَابِتَ بْنَ قَيْسٍ وَقَدْ حَسَرَ عَنْ فَخِذَيْهِ وَهُوَ يَتَحَنَّطُ، فَقَالَ: يَا عَمِّ، مَا يَحْبِسُكَ أَنْ لاَ تَجِيءَ؟ قَالَ: الآنَ يَا ابْنَ أَخِي، وَجَعَلَ يَتَحَنَّطُ – يَعْنِي مِنَ الحَنُوطِ – ثُمَّ جَاءَ، فَجَلَسَ، فَذَكَرَ فِي الحَدِيثِ، انْكِشَافًا مِنَ النَّاسِ، فَقَالَ: هَكَذَا عَنْ وُجُوهِنَا حَتَّى نُضَارِبَ القَوْمَ، «مَا هَكَذَا كُنَّا نَفْعَلُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِئْسَ مَا عَوَّدْتُمْ أَقْرَانَكُمْ»

மூஸா இப்னு அனஸ் (ரஹ்) யமாமா போரை நினைவு கூர்ந்த வண்ணம் கூறினார். (என் தந்தை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) ஸாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஸாபித் இப்னு கைஸ் (ரலி) தம் தொடைகளைத் திறந்து நறுமணம் பூசிக் கொண்டிருந்தார்கள். அனஸ் (ரலி), ‘என் சிறிய தந்தையே! நீங்கள் (யமாமா போருக்கு) ஏன் வரவில்லை?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இதோ! இப்போது வருகிறேன்’ என்று கூறிவிட்டு நறுமணம் பூசத் தொடங்கிவிட்டார்கள். பிறகு வந்து (போர் வீரர்களுடன்) உட்கார்ந்து விட்டார்கள்.

அப்போது மக்கள் தோற்றுப் பின்வாங்கியதாக (என் தந்தை) கூறினார்கள்.(மக்கள் தோற்றுப் பின்வாங்குவதைக் கண்ட) ஸாபித் (ரலி), ‘எனக்கு விலகி வழிவிடுங்கள். நான் எதிரிகளுடன் போரிடுவேன். நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் இருந்த பொழுது இப்படிப் பின்வாங்கி (ஓடி)யதில்லை. நீங்கள் உங்கள் எதிரிகளுக்குப் பழக்கப்படுத்தும் இந்த விஷயம் மிகமோசமானது’ என்று கூறினார்கள். இதை ஹம்மாத் (ரஹ்) அவர்களும் ஸாபித் அல் புனானி(ரஹ்) என்பவர் வாயிலாக அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்.

நூல்: (புகாரி: 2845) 

இது அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற நேர்முகமாகும். இந்த முன்னறிவிப்பை அறிவித்த அனஸ் (ரலி) அவர்களே களத்தில் அது நிறைவேறுவதைக் காணும் போது அவர்களைப் போன்ற இந்த நேர்முகம் நெகிழவைக்கின்றது. மேனியை சிலிர்க்க வைக்கின்றது. ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் தியாக மரணத்தில் இன்னொரு தகவுப் பொருத்தத்தையும் நாம் பார்க்க முடிகின்றது. இன்றைய அரசியல் கட்சிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பேச்சாளர்கள் (Spokes person) இருப்பதை நாம் அறிவோம். அது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பேச்சாளராக ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் இருந்த நிகழ்வை நாம் புகாரியில் பார்க்க முடிகின்றது,

قَدِمَ مُسَيْلِمَةُ الكَذَّابُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَقُولُ: إِنْ جَعَلَ لِي مُحَمَّدٌ الأَمْرَ مِنْ بَعْدِهِ تَبِعْتُهُ، وَقَدِمَهَا فِي بَشَرٍ كَثِيرٍ مِنْ قَوْمِهِ، فَأَقْبَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ، وَفِي يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِطْعَةُ جَرِيدٍ، حَتَّى وَقَفَ عَلَى مُسَيْلِمَةَ فِي أَصْحَابِهِ، فَقَالَ: «لَوْ سَأَلْتَنِي هَذِهِ القِطْعَةَ مَا أَعْطَيْتُكَهَا، وَلَنْ تَعْدُوَ أَمْرَ اللَّهِ فِيكَ، وَلَئِنْ أَدْبَرْتَ لَيَعْقِرَنَّكَ اللَّهُ، وَإِنِّي لَأَرَاكَ الَّذِي أُرِيتُ فِيهِ، مَا رَأَيْتُ، وَهَذَا ثَابِتٌ يُجِيبُكَ عَنِّي» ثُمَّ انْصَرَفَ عَنْهُ، قَالَ ابْنُ عَبَّاسٍ: فَسَأَلْتُ عَنْ قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكَ أُرَى الَّذِي أُرِيتُ فِيهِ مَا أَرَيْتُ»، فَأَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” بَيْنَا أَنَا نَائِمٌ، رَأَيْتُ فِي يَدَيَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ، فَأَهَمَّنِي شَأْنُهُمَا، فَأُوحِيَ إِلَيَّ فِي المَنَامِ: أَنِ انْفُخْهُمَا، فَنَفَخْتُهُمَا فَطَارَا، فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ يَخْرُجَانِ بَعْدِي ” أَحَدُهُمَا العَنْسِيُّ، وَالآخَرُ مُسَيْلِمَةُ

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (தன்னை இறைத்தூதர் என்று வாதிட்ட) ‘முஸைலிமா’ எனும் மகா பொய்யன் (யமாமாவிலிருந்து மதீனா) வந்தான். அவன், ‘முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால் தான் நான் அவரைப் பின்பற்றுவேன்’ என்று கூறலானான். அவன் தன் சமுதாயத்து மக்கள் பலபேருடன் மதீனா வந்திருந்தான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ் (ரலி) தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள். அப்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டைத் துண்டு ஒன்று இருந்தது.

முஸைலிமா தன் தோழர்களுடனிருக்க நபி (ஸல்) அவர்கள் அவனருகே (சென்று) நின்று கொண்டு, ‘இந்தத் துண்டை நீ கேட்டால் கூட நான் இதை உனக்குக் கொடுக்க மாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச் செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைத் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்து விடுவான். மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத் தான் உன்னை காண்கிறேன். இதோ, இவர் தாம் ஸாபித், இவர் என் சார்பாக உனக்குப் பதிலளிப்பார்’ என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: (புகாரி: 4373) 

முஸைலமா வரும் போது நபி (ஸல்) அவர்களுடன் ஸாபித் (ரலி) இருந்ததிலும், உனக்கு ஸாபித் பின் கைஸ் பதில் அளிப்பார் என்று சொன்னதிலும், யமாமா போரில் ஸாபித் (ரலி) பங்கேற்று அதில் முஸைலமாவுக்கு எதிராகக் களம் காண்பார்கள் என்ற ஒரு மறைமுக முன்னறிவிப்பு இருப்பதையும் இங்கு நாம் கவனிக்காமல் இருக்க முடியாது.

அனஸ் (ரலி) அவர்களின் அடுத்ததோர் அறிவிப்பு

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற) அபூசுஃப்யானின் வணிகக் குழு என்ன ஆயிற்று எனக் கண்டறிய புசைசா பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்களை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்றுவிட்டு (திரும்பி) வந்தபோது, என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் வீட்டில் இருக்கவில்லை. அவர் வந்து (அபூசுஃப்யானின் வணிகக் குழு, மக்காவை நோக்கிப் புறப்பட்டு விட்டது என்ற) தகவலைச் சொன்னார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து (எங்களிடம்) பேசினார்கள். “நமக்கு ஒரு முக்கிய அலுவல் உண்டு. யாரிடம் வாகனம் (ஒட்டகம்) உள்ளதோ அவர் நம்முடன் பயணமாகட்டும்’’ என்று சொன்னார்கள். உடனே சிலர் மதீனாவின் மேட்டுப் பகுதி கிராமத்துக்குச் சென்று தம் ஒட்டகங்களுடன் வர அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரலாயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, (இங்கு) யாரிடம் ஒட்டகம் தயாராக உள்ளதோ அவரைத் தவிர (வேறெவரும் புறப்பட வேண்டாம்)” என்று கூறிவிட்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (சில) நபித்தோழர்களும் புறப்பட்டனர்.

அவர்கள் இணைவைப்பாளர்களை முந்திக்கொண்டு ‘பத்ர்’ வந்து சேர்ந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நான் முன்னிலை வகிக்காமல் (என்னிடம் கேட்காமல்) உங்களில் யாரும் எதற்காகவும் முந்த வேண்டாம்’’ என்று கூறினார்கள். இணை வைப்பாளர்கள் நெருங்கி வந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கு எழு(ந்து தயாராகு)ங்கள்” என்று கூறினார்கள். உடனே உமைர் பின் அல்ஹுமாம் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், “வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கமா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்’’ என்று பதிலுரைக்க, “ஆஹா, ஆஹா” என்று உமைர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆஹா, ஆஹா என்று நீர் கூறக் காரணமென்ன?” என்று கேட்டார்கள். உமைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! வேறொன்றுமில்லை, அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகளில் நானும் ஒருவனாக இருக்கவேண்டும் என்ற ஆசை தான் (அவ்வாறு நான் சொல்லக் காரணம்)” என்றார்.

அதற்கு “சொர்க்கவாசிகளில் நீரும் ஒருவர்தாம்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமைர் (ரலி) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து பேரீச்சம் பழங்களை எடுத்து, அவற்றில் சிலவற்றை உண்ணத் தொடங்கினார்கள். பிறகு, “இந்தப் பேரீச்சம் பழங்களை உண்டு முடிக்கும்வரை நான் உயிர் வாழ்ந்தால் அது ஒரு நீண்ட நெடிய வாழ்க்கையாகி விடுமே!” என்று கூறியபடி தம்மிடமிருந்த அந்தப் பேரீச்சம் பழங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, எதிரிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.

நூல்: (முஸ்லிம்: 3858) 

இந்த ஹதீஸிலும் உமைர் (ரலி)க்குச் சொன்ன அந்த முன்னறிவிப்பு அனஸ் (ரலி) கண் முன்னரே நடப்பது நமக்கு இறை நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கின்றது.

பத்ரு போர் முன்னறிவிப்பு பங்கு பெற்ற இப்னு மஸ்ஊத்
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي عِنْدَ البَيْتِ، وَأَبُو جَهْلٍ وَأَصْحَابٌ لَهُ جُلُوسٌ، إِذْ قَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: أَيُّكُمْ يَجِيءُ بِسَلَى جَزُورِ بَنِي فُلاَنٍ، فَيَضَعُهُ عَلَى ظَهْرِ مُحَمَّدٍ إِذَا سَجَدَ؟ فَانْبَعَثَ أَشْقَى القَوْمِ فَجَاءَ بِهِ، فَنَظَرَ حَتَّى سَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَضَعَهُ عَلَى ظَهْرِهِ بَيْنَ كَتِفَيْهِ، وَأَنَا أَنْظُرُ لاَ أُغْنِي شَيْئًا، لَوْ كَانَ لِي مَنَعَةٌ، قَالَ: فَجَعَلُوا يَضْحَكُونَ وَيُحِيلُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدٌ لاَ يَرْفَعُ رَأْسَهُ، حَتَّى جَاءَتْهُ فَاطِمَةُ، فَطَرَحَتْ عَنْ ظَهْرِهِ، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ ثُمَّ قَالَ: «اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ». ثَلاَثَ مَرَّاتٍ، فَشَقَّ عَلَيْهِمْ إِذْ دَعَا عَلَيْهِمْ، قَالَ: وَكَانُوا يَرَوْنَ أَنَّ الدَّعْوَةَ فِي ذَلِكَ البَلَدِ مُسْتَجَابَةٌ، ثُمَّ سَمَّى: «اللَّهُمَّ عَلَيْكَ بِأَبِي جَهْلٍ، وَعَلَيْكَ بِعُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَالوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ، وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ» – وَعَدَّ السَّابِعَ فَلَمْ يَحْفَظْ -، قَالَ: فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدْ رَأَيْتُ الَّذِينَ عَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَرْعَى، فِي القَلِيبِ قَلِيبِ بَدْرٍ

நபி (ஸல்) அவர்கள் கஃபத்துல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து ‘இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப் பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தா செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?’ என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான்.

நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால், அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அங்கே வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி ‘யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக’ என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், ‘அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்’ என அவர்களும் நம்பியிருந்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, ‘யா அல்லாஹ்! அபூஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!’ என்று கூறினார்கள்.

ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் ‘கலீப்’ என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

நூல்: (புகாரி: 240) 

பத்ருப் போரில் கொல்லப்படும் எதிரிகளின் முன்னறிவிப்பை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களே நேரில் கண்டு அறிவிக்கின்ற இந்த நேர்முகம் நம்மைப் புல்லரிக்கச் செய்கின்றது.

பலித்து விட்ட பாரசீக வெற்றி பார்த்து அறிவிக்கும் அதீ பின் ஹாத்திம்
بَيْنَا أَنَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَتَاهُ رَجُلٌ فَشَكَا إِلَيْهِ الفَاقَةَ، ثُمَّ أَتَاهُ آخَرُ فَشَكَا إِلَيْهِ قَطْعَ السَّبِيلِ، فَقَالَ: «يَا عَدِيُّ، هَلْ رَأَيْتَ الحِيرَةَ؟» قُلْتُ: لَمْ أَرَهَا، وَقَدْ أُنْبِئْتُ عَنْهَا، قَالَ «فَإِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ، لَتَرَيَنَّ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنَ الحِيرَةِ، حَتَّى تَطُوفَ بِالكَعْبَةِ لاَ تَخَافُ أَحَدًا إِلَّا اللَّهَ، – قُلْتُ فِيمَا بَيْنِي وَبَيْنَ نَفْسِي فَأَيْنَ دُعَّارُ طَيِّئٍ الَّذِينَ قَدْ سَعَّرُوا البِلاَدَ -، وَلَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتُفْتَحَنَّ كُنُوزُ كِسْرَى»، قُلْتُ: كِسْرَى بْنِ هُرْمُزَ؟ قَالَ: ” كِسْرَى بْنِ هُرْمُزَ، وَلَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ، لَتَرَيَنَّ الرَّجُلَ يُخْرِجُ مِلْءَ كَفِّهِ مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ، يَطْلُبُ مَنْ يَقْبَلُهُ مِنْهُ فَلاَ يَجِدُ أَحَدًا يَقْبَلُهُ مِنْهُ، وَلَيَلْقَيَنَّ اللَّهَ أَحَدُكُمْ يَوْمَ يَلْقَاهُ، وَلَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تَرْجُمَانٌ يُتَرْجِمُ لَهُ، فَلَيَقُولَنَّ لَهُ: أَلَمْ أَبْعَثْ إِلَيْكَ رَسُولًا فَيُبَلِّغَكَ؟ فَيَقُولُ: بَلَى، فَيَقُولُ: أَلَمْ أُعْطِكَ مَالًا وَأُفْضِلْ عَلَيْكَ؟ فَيَقُولُ: بَلَى، فَيَنْظُرُ عَنْ يَمِينِهِ فَلاَ يَرَى إِلَّا جَهَنَّمَ، وَيَنْظُرُ عَنْ يَسَارِهِ فَلاَ يَرَى إِلَّا جَهَنَّمَ ” قَالَ عَدِيٌّ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقَّةِ تَمْرَةٍ فَمَنْ لَمْ يَجِدْ شِقَّةَ تَمْرَةٍ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ» قَالَ عَدِيٌّ: فَرَأَيْتُ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنَ الحِيرَةِ حَتَّى تَطُوفَ بِالكَعْبَةِ لاَ تَخَافُ إِلَّا اللَّهَ ، وَكُنْتُ فِيمَنِ افْتَتَحَ كُنُوزَ كِسْرَى بْنِ هُرْمُزَ وَلَئِنْ طَالَتْ بِكُمْ حَيَاةٌ، لَتَرَوُنَّ مَا قَالَ النَّبِيُّ أَبُو القَاسِمِ: صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخْرِجُ مِلْءَ كَفِّهِ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا أَبُو مُجَاهِدٍ، حَدَّثَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ، سَمِعْتُ عَدِيًّا كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அதீ இப்னு ஹாத்திம் (ரலி) அறிவித்தார்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘அதீயே! நீ ‘ஹீரா’வைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்டார்கள்.

‘நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்’ என்று கூறினார்கள்.

நான் என் மனத்திற்குள், ‘அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட ‘தய்யி’ குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?’ என்று கேட்டுக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), ‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்’ என்று கூறினார்கள். நான், ‘(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தரக்காரரான) கிஸ்ரா இப்னு ஹுர்முஸா?’ என்று கேட்டேன். ‘கிஸ்ரா இப்னு ஹுர்முஸ் தான் (தோற்கடிக்கப்படுவார்)’ என்று பதிலளித்தார்கள்.

(மேலும் கூறினார்கள்:) உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தன்னுடைய கை நிறைய தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக் கொண்டு அதைப் பெறுபவரைத் தேடியலைவார். ஆனால், அ(ந்தத் தர்மத்)தை ஏற்கும் எவரையும் அவர் காணமாட்டார். இதையும் நீ பார்ப்பாய். உங்களில் ஒருவர் அல்லாஹ்வைச் சந்திக்கும் (மறுமை) நாளில், அவருக்கும் அவனுக்குமிடையே மொழிபெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளர் எவரும் இல்லாத நிலையில் அவனைச் சந்திப்பார். அப்போது அல்லாஹ், ‘நான் உனக்கு ஒரு தூதரை அனுப்பினேனே, அவர் உனக்கு (என் செய்தியை) எடுத்துரைக்கவில்லையா?’ என்று கேட்பான். அவர், ‘ஆம், (எடுத்துரைத்தார்)’ என்று பதிலளிப்பார்.

பிறகு அல்லாஹ், ‘உனக்கு நான் செல்வத்தைத் தந்து உன்னை நான் மேன்மைப்படுத்தவில்லையா?’ என்று கேட்பான். பிறகு அவர், ‘ஆம் (உண்மைதான்)’ என்பார். பிறகு அவர் தன் வலப்பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார். தன் இடப்பக்கம் பார்ப்பார்; நரகத்தைத் தவிர வேறெதையும் காண மாட்டார்.

அதீ இப்னு ஹாத்திம் (ரலி) தொடர்ந்து கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்கள், ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தாவது நரகத்திலிருந்து (உங்களைக்) காத்துக் கொள்ளுங்கள். எவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டு கூட இல்லையோ அவர் நல்ல சொல் ஒன்றைக் கொண்டாவது (நரகத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளட்டும்)’ என்று சொல்லக் கேட்டேன்.

மேலும், ‘ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) பார்த்தேன். (பாரசீக மன்னன்) கிஸ்ரா இப்னு ஹுர்முஸின் கருவூலங்களை வென்றவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். நீங்கள் நீண்ட நேரம் வாழ்ந்தால் ‘ஒருவன் தங்கத்தையோ வெள்ளியையோ கைநிறைய அள்ளிக்கொண்டு அதை தர்மமாக ஏற்றுக் கொள்பவரைத் தேடியலைவதை நீ பார்ப்பாய்’ என்று அபுல் காஸிம் நபி(ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம் (நடைமுறையில்) காண்பீர்கள்.

நூல்: (புகாரி: 3595) 

நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் வந்து முறையிடும் போது அதீ பின் ஹாத்திம் (ரலி), நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்ததும், அவர்களிடமே நபி (ஸல்) அவர்கள், உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் என்று குறிப்பிட்டதும் இது ஓர் இறைத்தூதரின் முன்னறிவிப்பு என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது. அதில் இரு முன்னறிவிப்புகள் பலித்ததும் சம்பந்தப்பட்ட அறிவிப்பாளரான அதீ பின் ஹாத்திம் நேரடியாகக் கண்டு, அனுபவித்து, அறிவிப்பதும் நமது இறை நம்பிக்கையை அதிகரிக்கச் செய்து விடுகின்றது.

இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட அறிவிப்பாளர்கள் நபியவர்களின் முன்னறிவிப்பைக் கேட்டு விட்டு, பின்னர் நீண்ட கால இடைவெளி ஆனாலும் அது நிகழ்வதற்கான காலத்தை எதிர்பார்த்து, களத்தில் நின்று நேரடியாகப் பார்த்து விட்டு அறிவிக்கின்ற நேர்முகங்களாகும். இது அல்லாமல், ஒரு சில நிகழ்வுகள் நபித்தோழர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையே நடந்திருக்கும்.

அது போன்ற நிகழ்வுகளையும் நபித்தோழர்கள் உன்னிப்பாகக் கவனித்திருக்கின்றனர். இது நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளில் அடங்காது என்றாலும் நபித்தோழர் ஒருவரது விருப்பம் எப்படி நிறைவேறுகின்றது என்பதைக் கூட மற்ற நபித்தோழர்கள் எவ்வாறு கூர்ந்து கவனித்து வந்துள்ளனர் என்பதற்காகவே இந்தச் செய்தியை இங்கு குறிப்பிடுகின்றோம்.

அபூஹாஸிம் ஸலமா இப்னு தீனார் அறிவித்தார்.

جَاءَتِ امْرَأَةٌ بِبُرْدَةٍ، قَالَ سَهْلٌ: هَلْ تَدْرِي مَا البُرْدَةُ؟ قَالَ: نَعَمْ، هِيَ الشَّمْلَةُ مَنْسُوجٌ فِي حَاشِيَتِهَا، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَسَجْتُ هَذِهِ بِيَدِي أَكْسُوكَهَا، فَأَخَذَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا لَإِزَارُهُ،

فَجَسَّهَا رَجُلٌ مِنَ القَوْمِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اكْسُنِيهَا، قَالَ: «نَعَمْ» فَجَلَسَ مَا شَاءَ اللَّهُ فِي المَجْلِسِ، ثُمَّ رَجَعَ فَطَوَاهَا، ثُمَّ أَرْسَلَ بِهَا إِلَيْهِ،

فَقَالَ لَهُ القَوْمُ: مَا أَحْسَنْتَ، سَأَلْتَهَا إِيَّاهُ، وَقَدْ عَرَفْتَ أَنَّهُ لاَ يَرُدُّ سَائِلًا، فَقَالَ الرَّجُلُ: وَاللَّهِ مَا سَأَلْتُهَا إِلَّا لِتَكُونَ كَفَنِي يَوْمَ أَمُوتُ. قَالَ سَهْلٌ: فَكَانَتْ كَفَنَهُ

‘ஒரு பெண்மணி ‘புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டு வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் இதை என் கையால் நெய்தேன். இதைத் தாங்கள் அணிவதற்காக வழங்குகிறேன்’ என்றார்’ என ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ‘புர்தா’ என்றால் என்ன என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். (அங்கிருந்தவர்கள் ‘தெரியும்’ என்று சொல்ல,) ‘ஆம் அது கரை வைத்து நெய்யப்பட்ட போர்வை’ என ஸஹ்ல் (ரலி) கூறினார். (பின்னர் தொடர்ந்து அவர்கள் சொன்னார்கள்:) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அது தமக்குத் தேவையென்று கருதி அதை வாங்கினார்கள்.

பிறகு, அதை கீழங்கியாக அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது மக்களில் ஒருவர் அதைத்தொட்டுப் பார்த்து (அதன் அழகை ரசித்தவராக) ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இதை அணியக் கொடுங்கள்’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘சரி’ என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் நாடிய (நேரம்)வரை அந்த அவையில் அமர்ந்திருந்துவிட்டு (தம் வீட்டுக்கு)த் திரும்பினார்கள். பிறகு அந்தச் சால்வையை மடித்து அந்த மனிதருக்குக் கொடுத்தனுப்பினார்கள். மக்கள், ‘நீ செய்தது சரியல்ல!

நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கேட்பவரை (வெறுங்கையோடுத்) திருப்பி அனுப்புவதில்லை என்று தெரிந்துகொண்டே அவர்களிடம் (ஏன்) இதைக் கேட்டாய்’ என்றார்கள். அதற்கு அந்த மனிதர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதைக் கேட்டதெல்லாம் நான் இறக்கும் நாளில் என் (உடலில் அணிவிக்கப்படும்) கஃபனாக இது இருக்கட்டும் என்பதற்காகத் தான்’ என்றார். அவ்வாறே அது அவருக்குக் கஃபனாக ஆயிற்று என்று இதை அறிவிக்கும் ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) தெரிவிக்கின்றார்.

நூல்: (புகாரி: 5810) 

நபித் தோழர்கள் எந்த அளவிற்கு உன்னிப்பாகக் கவனித்திருக்கின்றார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும்.

ஆகவே நம்முடைய வாழ்கையில் இன்நிகழ்வுகளை பாடமாகவும் படிப்பினையாகவும் எடுத்துக் கொண்டு வாழும் நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக.!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.