நீயா? நானா?

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

மனித சமுதாயம் ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து தோன்றியிருந்தாலும் அனைவரும் ஒரே குணம் படைத்தவர்களாக இல்லை. சிலர் மென்மையானவர்களாக இருப்பார்கள். சிலர் அதற்கு நேரெதிராகக் கடும்போக்கு உள்ளவர்களாக இருப்பார்கள். சிலர் அதிகம் பொறாமை கொள்பவர்களாக இருப்பார்கள். சிலர் அனைவருக்கும் நலம் நாடுபவர்களாக இருப்பார்கள்.

இவ்வாறு ஒவ்வொருவரும் பல்வேறு குணங்களை தன்னகத்தே கொண்டவர்களாக உள்ளனர். இத்தகைய குணங்களில் நமக்கும், நம்மைச் சுற்றியுள்ளோருக்கும் பயன் தருகிற குணம் எது? தீங்களிக்கிற குணம் எது? என்பதை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. அவற்றை இந்த உரையில் காண்போம்..

ஈகோ
عَنِ النَّوَّاسِ بْنِ سِمْعَانَ الْأَنْصَارِيِّ، قَالَ
سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الْبِرِّ وَالْإِثْمِ فَقَالَ: «الْبِرُّ حُسْنُ الْخُلُقِ، وَالْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ، وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ»

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை மற்றும் தீமை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்து கொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்’’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்சாரீ (ரலி)
நூல்: (முஸ்லிம்: 4992) 

இந்தச் செய்தியில் நன்மை என்பதற்கு வரைவிலக்கணமே நற்குணம்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இத்தகைய நன்மைக்குப் பங்கம் விளைவிக்கும் பல தீயகுணங்களில் ஒன்றுதான் “ஈகோ”. ஈகோ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, தமிழில் ஒரு வார்த்தையில் அர்த்தம் சொல்லிவிட முடியாது.

அகங்காரம், பெருமை, கர்வம், பொறாமை, பிறரை இழிவாகக் கருதுவது, வறட்டு கௌரவம் போன்ற பல தீய குணங்களின் ஒன்றிணைந்த வெளிப்பாடே ஈகோவாகும். மனிதர்களைப் பல்வேறு வேறுபாடுகளுடன் இறைவன் இந்த உலகத்தில் படைத்துள்ளான். ஒருவரைச் செல்வச் செழிப்பில் உயர்ந்தவராகப் படைத்துள்ளான். மற்றொருவரை அவருடைய பணியாளாக ஆக்கியுள்ளான்.

ஒருவரைக் கல்வி ஞானத்தில் சிறந்தவராக விளங்கச் செய்கிறான். இன்னொருவரை அவரிடத்தில் கற்றுக் கொள்பவராக ஆக்கியுள்ளான். ஒருவரை அதிகாரம் உள்ளவராக வைத்துள்ளான். இன்னொருவரை அவருடைய அதிகாரத்திற்குக் கீழ் செயல்படுபவராக வைத்துள்ளான்.

இப்படியான வேறுபாடுகளை இறைவன் இயற்கையிலேயே வைத்திருப்பதினால் தான் உலகம் சீராக இயங்குகிறது. அவ்வாறில்லாமல், அனைவரையும் ஒரே சீராக வைத்திருந்தால் உலகத்தின் இயக்கமே சீர்குலைந்துவிடும்.

இத்தகைய வேறுபாடுகளுடன் இறைவன் மனிதர்களைப் படைத்திருந்தாலும், ஒரு சாராரை அனைத்து விஷயங்களிலும் உயர்ந்தவர்களாகவும், இன்னொரு சாராரை அனைத்து விஷயங்களிலும் தாழ்ந்தவர்களாகவும் இறைவன் படைக்கவில்லை.

ஒருவர் பொருளாதார உயர்வின் காரணத்தினால் முதலாளியாக இருக்கிறார். மற்றொருவர் இவருக்குக் கீழே வேலை செய்பவராக இருக்கிறார் எனில் தொழிலாளியை விட முதலாளி பொருளாதார விஷயத்தில் மட்டுமே உயர்ச்சியில் இருப்பார்.

உடல் ஆரோக்கியத்திலோ, சந்தோஷமான குடும்பம் விஷயத்திலோ தொழிலாளி முதலாளியை விட உயர்ச்சியில் இருப்பார். இவ்வாறு எல்லோரும் அனைத்து விஷயத்திலும் உயர்ந்தவர்களாகவோ, தாழ்ந்தவர்களாகவோ இருப்பதில்லை.

ஒருவர் ஒன்றில் உயர்ந்தவராகவும் வேறொன்றில் தாழ்ந்தவராகவும் இருப்பார். இத்தகைய சுழற்சி முறையிலேயே இறைவன் உலகை இயங்கச் செய்கிறான். ஆனால், இதைப் புரியாத குறைமதியுள்ள சிலர் ஈகோ எனும் தீய குணத்திற்கு அடிமையாகி தனக்குக் கீழ் நிலையில் இருப்பவர்களை இழிவாகக் கருதக்கூடியவர்களாக மாறிவிடுகின்றனர்.

ஈகோவின் பிறப்பிடம்
«لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ» قَالَ رَجُلٌ: إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً، قَالَ: «إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ، الْكِبْرُ بَطَرُ الْحَقِّ، وَغَمْطُ النَّاسِ»

நபி (ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 147) 

இச்செய்தியில், தற்பெருமை என்பது மக்களை இழிவாகக் கருதுவதும், உண்மையை மறுப்பதுமே என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதுவே ஈகோவின் பிறப்பிடமாகவும் உள்ளது.

ஒருவன் தனக்கு இறைவன் வழங்கிய சிறப்பை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. பொருளாதார வசதி வழங்கப் பெற்றிருப்பவன் தனது ஆடை, காலணி போன்ற விஷயங்களை விலைமதிப்புள்ளதாகப் பயன்படுத்துகிறான் எனில் இது ஆணவமோ, அல்லது ஈகோவோ கிடையாது.

தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்துவதற்காகப் பிறரை இழிவாகக் கருதுவதும், தனக்குக் கீழ்நிலையில் ஒருவர் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் சொல்கிற உண்மையை மறுப்பதுமே ஈகோவாகும். உதாரணமாக, ஒருவர் முதலாளியாக இருக்கிறார். அவரிடம் தொழிலாளியாக மற்றொருவர் இருக்கிறார். முதலாளி தரமற்ற பொருளைத் தரமானது என்று பொய்ச்சொல்லி விற்பனை செய்கிறார்.

அவரிடம் வேலைபார்க்கும் தொழிலாளி இது தவறு என்று தன் முதலாளியிடம் கூறுகிறார் எனில் “ஒரு வேலைக்காரன் நீ எனக்கு புத்திமதி சொல்கிறாயா?’’ என்று அவரது ஏழ்மையை இழிவாகக் கருதி, தனக்குக் கீழ்நிலையில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் சொல்லும் உண்மையை ஏற்க மறுக்கின்றார். இவ்வாறு ஈகோ எனும் கெட்ட குணத்திற்கு இன்றைக்குப் பலர் பலியாகி விடுகின்றனர்.

இறையருளை விட்டும் தூரமாக்கும் ஈகோ

ஈகோ நம்மை இறையருளை விட்டும் தூரமாக்கி விடும். ஷைத்தான் இறையருளை விட்டும் தூரமானதற்கும் இறைவனின் சாபத்திற்குரியவனாகப் போனதற்கும் காரணமே இந்த ஈகோ எனும் அகங்காரம் தான்.

اِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ خَالِـقٌ ۢ بَشَرًا مِّنْ طِيْنٍ‏
فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِىْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ‏
فَسَجَدَ الْمَلٰٓٮِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ‏
اِلَّاۤ اِبْلِيْسَؕ اِسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ‏
قَالَ يٰۤـاِبْلِيْسُ مَا مَنَعَكَ اَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَىَّ‌ ؕ اَسْتَكْبَرْتَ اَمْ كُنْتَ مِنَ الْعَالِيْنَ‏
قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ‌ ؕ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ‏
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِيْمٌ
وَّاِنَّ عَلَيْكَ لَعْنَتِىْۤ اِلٰى يَوْمِ الدِّيْنِ‏

“களிமண்ணால் மனிதனைப் படைக்கப் போகிறேன்; அவரைச் சீர்படுத்தி எனது உயிரை அவரிடம் நான் ஊதும் போது அவருக்குப் பணிந்து விழுங்கள்!’’ என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது இப்லீஸைத் தவிர வானவர் அனைவரும் பணிந்தனர். அவன் அகந்தை கொண்டான். (ஏக இறைவனை) மறுப்போரில் ஆனான்.

“எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?’’ என்று (இறைவன்) கேட்டான்.

“நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்’’ என்று அவன் கூறினான்.

“இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது’’ என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன்: 38:71-78)

ஆதம் (அலை) அவர்கள் களிமண்ணால் படைக்கப்பட்டுள்ளார்கள். இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளான். களிமண்ணை விட சிறந்த மூலப்பொருள் எது என்று பார்த்தால் நெருப்புதான். இத்தகைய உயர்ச்சியின் காரணத்தினால் ஆதம் (அலை) அவர்களை இழிவாகக் கருதி அவர்களுக்குப் பணிய மறுக்கிறான்.

மேலும், அல்லாஹ்வுக்கு முன்னிலையில் நாம் அனைவரும் சமம்தான். அவன் சொல்லும் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உண்மையை இப்லீஸ் தலைக்கேறிய ஈகோவினால் மறக்கிறான். இதனாலே, வானவர்களுடன் இருந்தவன் இறை சாபத்திற்குரியவனாக மாறிவிட்டான்.

இத்தகைய மாபாதகக் கெட்ட குணமான ஈகோ, இன்றைக்குப் பல இடங்களில் தலைவிரித்தாடுகிறது. நண்பர்களுக்கு மத்தியில், நிர்வாகங்களில், அலுவலகங்களில், பாடசாலைகளில் என்று மக்கள் எங்கெல்லாம் ஒன்றிணைகிறார்களோ அங்கெல்லாம் இந்த ஈகோ எனும் ஷைத்தானிய குணமும் சேர்ந்து வந்துவிடுகிறது.

இவ்வளவு ஏன் ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் கூட அதில் இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினருக்கும் மத்தியில் ஈகோ. கணவன், தன் தாயை விடத் தன் மீதே அன்பு செலுத்த வேண்டும் என்று மனைவிக்கு ஈகோ;

மகன் திருமணத்திற்குப் பிறகு தன் மனைவியுடன் அதீத அன்பு செலுத்தி விடுவானோ என்று மாமியாருக்கும் மருமகளுக்கும் மத்தியில் ஈகோ; கணவனை விட மனைவி படித்திருந்தால் கணவன் மனைவிக்கு மத்தியில் ஈகோ; ஒரு வீட்டில் பல மருமகள்கள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் மற்றவருடன் ஈகோ;

ஒரு பெண் ஆலிமாவாக இருந்தால் அவளது கணவன் அவளுக்கு அறிவுரை சொல்லும்போது அதை ஏற்காமல், நான் ஆலிமாவாக இருக்கிறேன்; நீங்கள் எனக்கு அறிவுரை செய்யுமளவுக்கு நான் ஒன்றும் தெரியாதவளா? அல்லது என்னை விட தங்களுக்கு எல்லாம் தெரியுமா? என்று மனைவி கணவனின் மீது கொள்ளும் ஈகோ;

ஒரு ஆண் குர்ஆன் கூட ஓதத் தெரியாதவனாக இருப்பான். மனைவியோ ஆலிமா. மனைவியிடம் சென்று ஓதக் கற்றுக் கொண்டு, ஓர் ஆண் என்ற ஆணவத்தை விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை என்று கணவனுக்கு மனைவியின் மீது ஈகோ.

இப்படி ஈகோ என்பது ஒரு குடும்பத்திற்குள் எடுத்துப் பார்த்தால் கூட பல பரிமாணங்களில் பரந்து விரிந்திருக்கிறது. இந்த ஈகோ என்பது குடும்பம் உட்பட மக்கள் ஒன்றிணையும் எந்த இடத்தில் ஏற்பட்டாலும் அந்த இடத்தில் பிளவுகளும், பிரிவினைகளும் ஏற்பட்டு சீர்கெட்டுப் போய்விடும்.

கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் ஈகோ பிரச்சனைகளினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடுகின்றனர். மாமியார் மருமகள் மத்தியில் ஏற்படும் ஈகோவினால் முதியோர் இல்லங்களும் விவாகரத்து பிரச்சனைகளும் தான் அதிகரிக்கின்றன.

ஈகோவை விட்டொழிக்க இஸ்லாத்தின் வழிகாட்டல்
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَيْنَ اَخَوَيْكُمْ‌وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّ‌ۚ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ‌ؕ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِ‌ ۚ وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ‌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌ ؕ اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ‌ ؕ وَاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ‏

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும்.

உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன்: 49:10-13)

முஃமின்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்படாமலிருக்க என்னென்ன வழிமுறையைப் பேண வேண்டும் என்றும் மேற்கண்ட வசனங்களில் இறைவன் குறிப்பிடுகிறான்.

யாரும் யாரையும் விட சிறப்பானவர்களாக இருக்கலாம். ஒருவர் தன்னிடம் இருக்கும் சிறப்பை வைத்து இன்னொருவனைக் கேலியாகக் கருதினால் கேலி செய்யப்படுபவன் இன்னொரு விஷயத்தில் அவனை விட உயர்ந்தவனாக இருப்பான் என்றும் அதனால் ஒருவர் மற்றொருவரை இழிவாகக் கருதாதீர்கள் என்றும் இறைவன் குறிப்பிடுகிறான்.

அத்துடன் குலம், கோத்திரம் அடிப்படையில் எந்த மனிதனும் இன்னொரு மனிதனை இழிவுப்படுத்தக் கூடாது.

இன்றைக்கும் இஸ்லாமிய சமூகத்தில் சிலர் தொழிலின் அடிப்படையில் தங்களுக்கு மத்தியில் உள்ள பிரிவுகளான மரைக்காயர், இராவுத்தர், லெப்பை போன்றவைகளை வைத்து மரைக்காயர் என்றால் நான் உயர்ந்தவன், நீ எனக்குக் கீழே தான் இருக்க வேண்டும் என்று ஈகோ கொள்ளும் தன்மைகள் சில இடங்களில் இருந்து வருகிறது.

அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் தான் சிறந்தவர்களே தவிர, குலம் கோத்திரத்தால் எந்தச் சிறப்பும் கிடையாது என்று இவ்வசனங்களில் இறைவன் தெளிவுபடுத்துகிறான். மேற்படி வசனங்களில் இறைவன் சொன்ன வழிமுறைகளைக் கையாண்டாலே ஈகோவிற்குப் பலியாவதிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ளலாம்.

அடுத்து, அல்லாஹ்வின் தூதர்-நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைமைப் பொறுப்பையும் பெற்றிருந்தார்கள். தனக்காக உயிரையே கொடுக்கும் தொண்டர் படையைப் பெற்றிருந்தார்கள். இப்படிப்பட்ட அனைத்து விதமான அதிகாரமும் வழங்கப்பட்டவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

ஆனால், தனது வாழ்நாளில் ஒரு நாள் கூட பிறரை இழிவாகக் கருதியது கிடையாது. தனக்குக் கீழ்நிலையில் இருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக யார் சொல்லும் உண்மையையும் மறுத்தது கிடையாது. எந்த ஈகோவும் அவர்களது உள்ளத்தில் கடுகளவும் வந்தது கிடையாது.

عَنْ قُتَيْلَةَ، امْرَأَةٍ مِنْ جُهَيْنَةَ:
أَنَّ يَهُودِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّكُمْ تُنَدِّدُونَ، وَإِنَّكُمْ تُشْرِكُونَ تَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ، وَتَقُولُونَ: وَالْكَعْبَةِ، ” فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادُوا أَنْ يَحْلِفُوا أَنْ يَقُولُوا: وَرَبِّ الْكَعْبَةِ، وَيَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ، ثُمَّ شِئْتَ “

ஒரு யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து (முஸ்லிம்களாகிய) நீங்களும் இணை கற்பிக்கிறீர்கள்; கஅபாவின் மீது ஆணையாக என்று கூறுகிறீர்கள் எனக் கேட்டார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், முஸ்லிம்கள் இனி மேல் சத்தியம் செய்வதாக இருந்தால் (கஅபாவின் மீது ஆணையாக எனக் கூறாமல்) கஅபாவின் இறைவன் மீது ஆணையாக எனக் கூற வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: கு(த்)தைலா (ரலி)
நூல்கள்: (நஸாயீ: 3773) ,(அஹ்மத்: 25845)

ஏகத்துவத்தை எடுத்துச்சொல்ல வந்த இறைத்தூதரிடமே வந்து ஒரு யூதர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள் என்று சொல்லுகிறார். அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் ஒரு இறைத்தூதர்; எனக்குத் தெரியாதது ஒரு யூதனான உனக்குத் தெரிந்துவிட்டதா? என்று வந்தவரை அவமதிக்காமல், ஈகோ கொண்டு அவரை விரட்டிவிடாமல் அவர் சொல்லும் செய்தி என்ன என்று நபி (ஸல்) அவர்கள் நிதானிக்கிறார்கள்; தவறைத் திருத்தியும் கொள்கிறார்கள்.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاقَةٌ تُسَمَّى العَضْبَاءَ، لاَ تُسْبَقُ – قَالَ حُمَيْدٌ: أَوْ لاَ تَكَادُ تُسْبَقُ – فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ فَسَبَقَهَا، فَشَقَّ ذَلِكَ عَلَى المُسْلِمِينَ حَتَّى عَرَفَهُ، فَقَالَ: «حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لاَ يَرْتَفِعَ شَيْءٌ مِنَ الدُّنْيَا إِلَّا وَضَعَهُ»

நபி (ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்திக் கொண்டது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்த போது நபி (ஸல்) அவர்கள், “உலகில் உயர்ந்து விடுகின்ற பொருள் எதுவாயினும் (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 2872) 

அல்லாஹ்வின் தூதரின் ஒட்டகத்தை ஒரு கிராமவாசியின் ஒட்டகம் முந்திவிட்டதே என்று மக்கள் நினைக்கிறார்கள். ஒரு ஜனாதிபதியின் ஒட்டகத்தை, ஒரு சாதாரண கிராமப்புறக் குடிமகனுடைய ஒட்டகம் எப்படி முந்தலாம் என்று அவருக்கு எதிராகவோ, அவருடைய ஒட்டகத்திற்கு எதிராகவோ ஈகோ கொண்டு நபி (ஸல்) தாக்குதல் தொடுக்கவில்லை.

இன்றைக்கு இது போன்ற அரசியல் செல்வாக்கு உள்ள மனிதருக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எந்த உயர்வுக்கும் ஒரு தாழ்வு இருக்கிறது என்று ஓர் அழகான நியதியை எடுத்துரைக்கிறார்கள். உதாரணத்திற்கு மேற்சொன்ன நிகழ்வுகள் மட்டும். இதுபோன்று தான் நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்க்கை நெடுக எந்த ஈகோவும் இல்லாமல் வாழ்ந்து இருக்கிறார்கள். 

மேலும் அல்லாஹ் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்.

وَنَفْسٍ وَّمَا سَوّٰٮهَا
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰٮهَا
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰٮهَا
وَقَدْ خَابَ مَنْ دَسّٰٮهَا

உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!

அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.

அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.

அதைக் களங்கப்படுத்தியவர் இழப்பு அடைந்தார்.

(அல்குர்ஆன்: 91:7-10)

இஸ்லாம் சொல்லும் அறிவுரைகளை ஏற்று, நீயா நானா எனும் ஈகோவை விட்டொழித்து, தூய உள்ளத்துடன் நாம் வாழ்ந்தாலே மறுமை வெற்றி நமக்குக் கிட்டும். இல்லையேல் நரகப் படுகுழிக்குக் கொள்ளிக்கட்டைகளாகி விடுவோம். அல்லாஹ் அந்த நரகத்திலிருந்து நம்மை காப்பாற்ற வேண்டும். அப்படிப்பட்டவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவனாக.!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.