நீதிக்கு சாட்சியாளர்களாகி விடுங்கள்!!
அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இறைவன் இந்த உலகத்தில் மனிதப் படைப்புகளை, பிற உயிரினங்களைக் காட்டிலும் வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். மேலும், பகுத்தறிவின் மூலமாகவும், சிந்தனை ஆற்றலின் மூலமாகவும் மனிதர்கள் தங்களின் செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதற்கு ஏற்ற சூழலை இறைவன் வழங்கி இருக்கின்றான்.
இதுபோன்ற ஏராளமான சிந்தனை ஆற்றல்கள், கூரிய அறிவு சார்ந்த காரியங்கள், சிந்தனைகளை உரசிப் பார்த்து நடைமுறைப்படுத்த வேண்டிய ஏராளமான செயல்பாடுகள் என்று மனித குலத்துக்கு இறைவன் வழங்கியிருந்தாலும், மனிதர்கள் அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தத் தவறிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, தன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களில் அதிகப்படியான அலட்சியத்தையும், கவனக்குறைவையும், அராஜகப் போக்கையும் காண முடிகின்றது.
நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களின் விஷயத்தில், மனித உரிமைகளைப் பேணுகின்ற சமத்துவத்தையும், நீதியையும், நியாயத்தையும் கட்டாயம் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். ஒரு சமுதாயத்தின் அறிவுசார்ந்த வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு செலுத்தப்படுகின்ற நீதியின் அடிப்படையிலேயே மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றது.
சமநீதியும், அநீதி கலக்கப்படாத அப்பழுக்கற்ற சமத்துவமும் எந்த இடத்தில் உச்சத்தில் நிற்கின்றதோ, அவர்களே தங்களின் வாழ்க்கைப் பயணத்தை மனசாட்சியுடன் சரியான பாதையில் அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று உலகம் அறிந்து கொள்ளும்.
ஒரு காரியத்தில் நீதம் செலுத்துவது என்பது, ஜாதி, மதம், இனம், உயர்வு, தாழ்வு என்று மனிதர்களின் தோற்றத்தையும், அவர்கள் சார்ந்திருக்கின்ற மதத்தையும் பாராமல், மாறாக சமத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். எவருக்கும் அநியாயம் செய்யப்படாத அளவுக்கு அப்பழுக்கற்ற நீதியாக அமைந்திருக்க வேண்டும்.
ஆனால் இதுபோன்ற கட்டமைப்புகளின் அடிப்படையிலும், கட்டுப்பாடுகளின் அடிப்படையிலும், நீதமாக நடப்பது என்பது, மனிதர்களால் உருவாக்கப்பட்ட கொள்கையினாலும், சட்டத்தினாலும் சாத்தியக் கூறுகள் அற்ற காரியமாகும்.
அகில உலகைப் படைத்திருக்கின்ற இறைவன், நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், அநீதி வேரறுக்கப்படுவதற்கும் எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ, அந்த அடிப்படையில் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டால் நிச்சயமாக அனைவருக்கும் சமநீதி செலுத்தப்படும்.
இஸ்லாம் என்பது பிற மதக் கொள்கை, கோட்பாடுகளைக் காட்டிலும் மிகப் பெரிய வித்தியாசத்தோடு தனித்து நிற்கின்றது. அந்த வரிசையில் நீதி செலுத்துவது குறித்தும், நீதிக்கு சாட்சியாக இருப்பது குறித்தும் இஸ்லாம் ஏராளமான இடங்களின் அழுத்தந் திருத்தமாகவும், ஆழமாகவும் உள்ளங்களில் பதிய வைக்கின்றது. அநீதிக்கு சாட்சியாக இருப்பவர்களையும், அநியாயத்திற்குத் துணை போகின்றவர்களையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. நீதி எவ்வாறு செலுத்த வேண்டும். நீதி பற்றி இஸ்லாம் கூறும் தகவல்களை இந்த உரையில் காண்போம்..
நீதியை நீதமாக வழங்குவதற்கும், அநியாயத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கும் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், உலக மாந்தர்களுக்கு நீதியை கற்றுக் கொடுத்த, படைத்த இறைவன் சொன்ன அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதேயாகும்.
இறைவன் தன்னுடைய திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது…
உண்மையைக் கொண்டு வழிகாட்டி, அதன்படி நீதி செலுத்தும் ஒரு சாராரும் நாம் படைத்தவர்களில் உள்ளனர்.
இன்றைக்கும், என்றைக்கும், உலகம் அழிகின்ற நாள் வரை ஒரு நீதியாளர் எப்படி இருக்க வேண்டும் என்றும், நீதிக்கு சாட்சியாக இருப்பது என்றால் என்ன என்பது போன்ற பலதரப்பட்ட நிகழ்வுகளை இஸ்லாமிய மார்க்கம் உலகிற்குப் பறைசாற்றுகின்றது.
இறைவனால் உலகிற்கு அருளப்பட்ட திருக்குர்ஆனில் நீதி செலுத்துவது குறித்தும், நீதிக்கு சாட்சியாக இருப்பது குறித்தும் இறைவன் ஏராளமான இடங்களில் பாடம் நடத்துகின்றான். நாம் வழங்குகின்ற நீதி என்பது உள்ளச்சத்துடனும், ஆழமான நம்பிக்கையுடனும் அமைந்திருக்க வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிடுகின்றான்.
எந்த இடத்தில் சரியான முறையில் நீதி வழங்கப்படவில்லையோ, நீதியின் குரல்வளைகள் நெறிக்கப்படுகின்றதோ, அநீதி மேலோங்கி நிற்கின்றதோ அந்த இடத்தில் பிரச்சனைகளும் குரோதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு, மனிதர்கள் பல கூறுகளாகப் பிளந்து நின்று புரட்சிகளாக வெடித்துச் சிதறி விடும்.
இதுபோன்ற ஏராளாமான பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் பல தரப்பட்ட அறிவுரைகளை மனிதகுலத்துக்கு வழங்குகின்றார்கள்.
அறியாமைக் கால தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியாக நம்பும் சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்?
அறியாமைக் காலத்தில் அரங்கேற்றப்பட்ட அநீதியான தீர்ப்பை நீங்கள் விரும்பாதீர்கள்! என்றும், அல்லாஹ்வை விட நீதியான தீர்ப்பு சொல்வதற்கும், அழகிய நீதியைக் கற்றுக் கொடுப்பதற்கும் வேறு யாருமில்லை என்றும் இறைவன் சவால் விடுகிறான்.
மேலும் இறைவன் கூறும்போது;
(நபியே!) உண்மையுடன் இவ்வேதத்தை உமக்கு அருளியுள்ளோம். இது தனக்கு முன்னிருந்த வேதத்தை உண்மைப்படுத்துவதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் உள்ளது. அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் உண்மை வந்த பிறகு அதை விட்டுவிட்டு, அவர்களது விருப்பங்களைப் பின்பற்றாதீர்!
தீர்ப்பளிக்கும் போது அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் நீதியாகத் தீர்ப்பளிக்க வேண்டும். உண்மையை அலட்சியம் செய்து, அடுத்தவரின் விருப்பத்தைப் பின்பற்றக் கூடாது என்றும் இறைவன் கண்டிக்கின்றான்.
மேலும் இறைவன் குறிப்பிடும் போது;
அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களது விருப்பங்களைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் உம்மைக் குழப்பிவிடாதபடி அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக!
அவர்கள் புறக்கணித்தால், அவர்களது சில பாவங்களின் காரணமாக அவர்களைத் தண்டிக்கவே அல்லாஹ் விரும்புகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் பாவிகளாகவே உள்ளனர்.
தீர்ப்பளிக்கும் போது ஒரு சில கயவர்கள் குழப்பத்தை விளைவிப்பார்கள். பாவமான காரியத்தைச் செய்து, அட்டூழியம் செய்ய நினைத்து, தீர்ப்பை மாற்றுவார்கள். இதுபோன்ற நபர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து சரியான நீதியை வழங்க வேண்டும் என்றும் இறைவன் கடுமையாக எச்சரிக்கின்றான்.
மேலும் தீர்ப்பளிக்கும் போது பேணவேண்டிய ஒழுங்குகளாக இறைவன் குறிப்பிடும் போது,
நம்பித் தரப்பட்ட பொருட்களை அதற்குரியோரிடம் நீங்கள் ஒப்படைக்க வேண்டும் என்றும், மக்களுக்கிடையே தீர்ப்பளித்தால் நீதியாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரையே உங்களுக்கு மிகச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
தீர்ப்பளிக்கும் போது நீதமாகவும், நியாயமாகவும் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடப்பதே அவர்களுக்கு நல்லது என்றும் இறைவன் கட்டளையிடுகின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராக ஆகிவிடுங்கள். உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுங்கள்.
(யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ அவர்) செல்வந்தராக இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன்.
எனவே, நீதி செலுத்துவதில் சுய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் மாற்றிக் கூறினாலோ அல்லது (சாட்சி கூற) மறுத்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான்.
இந்த வசனத்தை விருப்பு வெறுப்பின்றி படித்துப் பாருங்கள்! நீதிக்கு சாட்சியாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்ற அற்புதமான வசனம்.
அதாவது நீதி வழங்கும் போது சுய விருப்பத்தைப் பின்பற்றக் கூடாது. யாருக்காக நாம் சொல்கிறோமோ அவன் செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று இறைவன் அழுத்தமாகப் பதிய வைக்கின்றான்.
மேலும், சாட்சியைப் புரட்டினாலோ, சாட்சியைப் புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்; அநியாயக்காரர்களை துவம்சம் செய்ய அல்லாஹ் போதுமானவன் என்ற கருத்தில் இறைவன் அச்சுறுத்துகின்றான்.
நீதிக்கு சாட்சியாக இருப்பது குறித்து அல்லாஹ் மேலும் கூறும்போது,
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்கு சாட்சியாளர்களாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பு நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டவேண்டாம்.
நீதி செலுத்துங்கள்! அதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒட்டு மொத்த நபர்களுக்கும் இந்த வசனம் அற்புதமான பாடத்தை நடத்துகின்றது.
அதாவது ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை காரணமாக, குரோதம் காரணமாக நீதி செலுத்த விடாமல், அநியாயமாக நடக்க உங்களை, உங்கள் உள்ளம் தூண்டி விட வேண்டாம் என்று கூறி, நீதிக்குத்தான் சாட்சியாக இருக்க வேண்டும் என்று இறைவன் தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றுகின்றான்.
இந்த உலகத்திற்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நீதி செலுத்துவதிலும், நீதிக்கு சாட்சியாக நிற்பதிலும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டிருக்கின்றார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள், அவர்களின் வாழ்க்கை முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.
இன்னும் சொல்வதாக இருந்தால் முஹம்மது நபியை வேரறுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்த எதிரிகள் கூட நபி (ஸல்) அவர்களின் நேர்மையையும், நீதியையும் தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்து உண்மைப்படுத்தினார்கள்.
ரோமாபுரி மன்னருக்கும், அன்றைய தருணத்தில் எதிரியாக இருந்த அபூசுஃப்யானுக்கும் நடைபெற்ற உரையாடலை அபூஸுஃப்யான் (ரலி) அவர்களே விவரிக்கின்றார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:
(ரோம மன்னர்) ஹெர்குலிஸ் என்னைப் பார்த்து, “உம்மிடம், “அவர் (முஹம்மது நபி) எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்?’ என்று நான் கேட்டேன். அதற்கு நீர், “அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும், நல்லொழுக்கத்தையும் கைக்கொள்ளும் படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார்’ என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்’’ என்று கூறினார்.
ஆதாரம்: (புகாரி: 2681)
நபிகாளர் குறித்து அன்றைய தருணத்தில் எதிரியாக இருந்த அபூஸுஃப்யான் மன்னர் ஹெர்குலிஸிடம் கூறும் போது, முஹம்மது நபி வாக்குறுதியை நிறைவேற்றுபவராகவும், நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளைப் பாதுகாத்து, திருப்பி ஒப்படைக்கும்படியும் கட்டளையிடுகின்றார் என்றும் நபி (ஸல்) அவர்களின் அப்பழுக்கற்ற குணநலனைப் பறைசாற்றுகின்றார்.
இன்றைய காலத்தில் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களை, நீதம் செலுத்துகின்ற இடத்தில் இருப்பவர்கள், அநியாயமான முறையில் தீர்ப்பளித்து, பிறரின் பொருளை அபகரித்து, பொருளுக்கு சொந்தக்காரர்களை ஏமாற்றி விடுவதைப் பார்க்கின்றோம்.
ஆனால், நபி (ஸல்) அவர்களின் நீதம் செலுத்தும் குணம் குறித்து, எதிரிகளின் வாயிலிருந்து வந்த அற்புதமான சான்றிதழை இந்தச் செய்தி தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றுகின்றது.
மேலும், நபி (ஸல்) அவர்கள் அநியாயமான காரியத்துக்குத் துணை நிற்க மாட்டார்கள்! என்பதைத் தமது வாழ்க்கையின் மூலம் தெரியப்படுத்துகின்றார்கள்.
நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து எனக்குச் சிறிது அன்பளிப்பு வழங்கும்படி என் தாயார் கேட்டார்கள். பிறகு, அவருக்குத் தோன்றியதன் அடிப்படையில் எனக்கு அதை அன்பளிப்புச் செய்தார். என் தாயார், “நீர் நபி (ஸல்) அவர்களை சாட்சியாக்காத வரை நான் திருப்தி கொள்ள மாட்டேன்’’ என்று கூறினார்கள்.
ஆகவே, என் தந்தை, நான் சிறுவனாயிருந்ததால் என் கையைப் பிடித்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, “இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த்து ரவாஹா இவனுக்குச் சிறிது அன்பளிப்பு தரும்படி என்னிடம் கேட்டாள்’’ என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், “இவனைத் தவிர வேறு குழந்தை ஏதும் உங்களுக்கு உண்டா?’’ என்று கேட்டார்கள். என் தந்தை, “ஆம் (உண்டு)’’ என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்’’ என்று கூறினார்கள் எனக் கருதுகிறேன்.
ஆதாரம்: (புகாரி: 2650)
சிறு குழந்தைகளுக்கு அன்பளிப்பு செய்கின்ற விஷயத்தில் கூடுதல், குறைவாகச் சில நிகழ்வுகள் நடக்கின்றது. அந்தச் சம்பவம் நபி (ஸல்) அவர்களின் கவனத்துக்கு வரும் போது அவர்கள் சொன்ன கண்டனத்திற்குரிய வார்த்தை “என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்” என்பதாகும்.
இன்றைய கால கட்டத்தில் மிகப்பெரிய வணக்கத்தலங்கள் உட்பட பல தரப்பட்ட சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. தீர்ப்பு வழங்குகின்ற இடத்தில் இருப்பவர்கள் அநியாயமாகவும், அக்கிரமாகவும் சர்வ சாதாரணமான முறையில் தீர்ப்பை மாற்றி வழங்கி விடுகின்றார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பு விஷயத்தை சிறிய ஒரு சம்பவமாக நினைத்து விடாமல், சின்னஞ் சிறிய காரியமாக இருந்தாலும், பென்னம் பெரிய காரியமாக இருந்தாலும் ‘அநியாயத்துக்கு நான் ஒரு போதும் துணை நிற்க மாட்டேன்!’ என்பதை ஆணித்தரமாகப் பதிய வைக்கின்றார்கள்.
இன்றைய கால சூழ்நிலையில் நீதியாளர்கள் என்ற தகுதியிலும், அந்தஸ்திலும் இருப்பவர்கள் சகட்டு மேனிக்குத் தங்களின் மனம் போன போக்கில் நீதி வழங்கி விடுவதைப் பார்க்கின்றோம். ஆனால் நீதி செலுத்துபவர்களின் மிகச் சிறந்த முன்மாதிரியாக நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள்.
(என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் (ஈரான்-ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். “நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்க வேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்’’ (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான், ஆதாரம்: (புகாரி: 7158)
நீதி செலுத்தும் பொறுப்பைப் பெற்றவர் கடுமையான கோபத்திலும், ஆத்திரத்திலும் இருக்கும் போது நீதி வழங்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் பாடம் நடத்துகின்றார்கள். மேலும், அவ்வாறு நீதி வழங்கும் போது, எவர் மீது கோபம் கொண்டுள்ளோமோ, அத்தகையவர் நல்லவராகவே இருந்தாலும், அவரிடத்தில் தகுந்த சாட்சிகள், சான்றுகள் இருந்தாலும், அவரின் மீதுள்ள வெறுப்பு அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்க தூண்டி விடும்.
மேலும் வழக்காடுபவரின் சாதுரியத் தன்மையை வைத்துத் தீர்ப்பு சொல்வது குறித்து நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் அறைவாசலில் (நின்று) சிலர் சப்தமிட்டுத் தகராறு செய்து கொள்வதைக் கேட்டார்கள். ஆகவே, வெளியே வந்து அவர்களிடம் சென்று, “நான் மனிதன்தான். என்னிடம் வழக்காடுபவர் வருகின்றார். (அவரது அந்தரங்க நிலை எனக்குத் தெரியாது.) உங்களில் ஒருவர் மற்றவரைவிட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர் உண்மையே பேசுகிறார் என்றெண்ணி நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன்.
ஆகவே, அடுத்த முஸ்லிமுக்குரிய உரிமையை (உண்மை தெரியாமல்) யாருக்குரியதென நான் தீர்ப்பளித்துவிடுகிறேனோ (அவர் அதைப் பெற வேண்டாம். ஏனெனில்,) அதுவெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டுதான். (இதை நினைவில் கொண்டு விரும்பினால்) அதை அவர் எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது விட்டுவிடட்டும்’’ என்று கூறினார்கள்.
ஆதாரம்: (புகாரி: 7181)
இன்றைய சூழலில் நீதமாகத் தீர்ப்பளிக்கின்ற ஒரே ஒரு நபர் கூட இல்லையோ என்று எண்ணத் தோன்றுகின்ற அளவுக்கு தீர்ப்புகளின் இலட்சணம் மிகவும் கொடூரமான முறையில் அமைந்து விடுகின்றது.
ஒருவேளை நியாயமாகத் தீர்ப்பளிக்க எண்ணுபவர், தவறு செய்பவரின் சிறந்த வாதத் திறமையின் காரணமாக அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து விட்டாலும், அவர் பெறக்கூடிய அந்த பொருள் என்பது நரக நெருப்பின் ஒரு துண்டாகத்தான் இருக்க முடியும் என்று கடுமையாக எச்சரிக்கின்றார்கள்.
மேலும் ஒரு பெண்மணி, ஒரு நபருக்கு இடர் இழைத்து விடும் போது, அந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேணிய நீதத்தை வரலாறுகளில் நம்மால் பார்க்க முடிகின்றது.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ருபய்யிஉ (ரலி) அவர்களின் சகோதரி உம்மு ஹாரிஸா (ரலி) அவர்கள் ஒரு மனிதரை(த் தாக்கி) காயப்படுத்திவிட்டார்கள். இதையொட்டி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். (வழக்கை விசாரித்த) நபி (ஸல்) அவர்கள், “பழிக்குப்பழி (வாங்கிக் கொள்க!) பழிக்குப்பழி (வாங்கிக் கொள்க!)’’ என்று கூறினார்கள்.
அப்போது உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் பழி வாங்கப்படுவாரா?, அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் பழிவாங்கப்படக் கூடாது’’ என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ் தூயவன். உம்முர் ரபீஉவே! (காயங்களில்) பழிவாங்குதல் அல்லாஹ்வின் வேத(ச் சட்ட)மாகும்‘’ என்று சொன்னார்கள். அதற்கு உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள், “அப்படி நடக்காது.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஒருபோதும் அவள் பழிவாங்கப்படலாகாது’’ என்று கூறினார்கள். அப்படியே பேச்சு தொடர்ந்து, இறுதியில் (பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து) இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டனர்.
ஆதாரம்: (முஸ்லிம்: 3462)
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கு கொண்டு வரப்படும் போது, தவறிழைத்தது ஒரு பெண் என்று கூட பாராமல், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு, பழிக்குப் பழி வாங்குங்கள்! பழிக்குப் பழி வாங்குங்கள்! என்று திரும்பத் திரும்பக் கூறுகின்றார்கள்.
மேலும் பழிக்குப் பழி வாங்கப்படாது என்று ஒருவர் குறிக்கிடும் போது கூட, அல்லாஹ்வின் வேத சட்டத்தைக் கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று தீர்ப்பளிக்கின்றார்கள். பிறகு பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகின்றது.
ஆனால் இன்றைய காலத்தில் எத்தனை கொலைகள் செய்தாலும், சொத்துக்களைச் சூறையாடினாலும், இரத்தங்களை ஓட்டினாலும் தீர்ப்பளிக்கின்ற நீதிமான்கள் என்ற அந்தஸ்தில் இருப்பவர்கள், ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பயந்து கொண்டு, தெளிந்த நீரோடை போன்ற ஆதாரங்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் கண்டும் காணாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே அநியாயமாக தீர்ப்பளித்து நோகடிக்கின்ற, நீதியை சாகடிக்கின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஏராளமான நல்ல பல மனிதர்கள் முஹம்மது நபியின் பாசறையில் பயிற்சி எடுத்தவர்கள். அப்படிப்பட்ட தோழர்கள் தங்களுக்குப் பாதகமான சூழலிலும் கூட நீதத்தைக் கடைபிடித்த மகத்தானவர்களாகத் திகழ்ந்தார்கள்.
அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு கைபர் சென்றடைந்தனர். அங்கு ஓரிடத்தில் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். பிறகு அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) கொல்லப்பட்டுக் கிடப்பதை முஹய்யிஸா (ரலி) அவர்கள் கண்டு, அவரை (எடுத்து) அடக்கம் செய்தார். பின்னர் அவரும் அவருடைய (சகோதரர்) ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (கொல்லப்பட்டவரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
அப்போது அவர்கள் அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அப்துல்லாஹ் பின் சஹ்லை இன்ன மனிதர்தாம் கொலை செய்தார் என உங்களில்) ஐம்பது பேர் சத்தியம் செய்து, நீங்கள் “உங்கள் (உயிரிழந்த) தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை’ அல்லது “உங்கள் கொலையாளியிடமிருந்து (இழப்பீடு பெறும்) உரிமையை’ எடுத்துக்கொள்கிறீர்களா?’’ என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “(கொலை நடந்த இடத்தில்) நாங்கள் இருக்கவில்லையே! நாங்கள் எப்படிச் சத்தியம் செய்வோம்?’’ என்று கேட்டார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்.
ஆதாரம்: (முஸ்லிம்: 3439)
இந்த செய்தியை ஆழமாகப் படித்து பாருங்கள்! தன்னுடைய முஸ்லிம் தோழர்களில் ஒருவரை யாரோ கொன்று விட்டார்கள்! அந்தத் தோழரோ, இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றார். இப்போது நபி (ஸல்) அவர்களிடம் வழக்கு வருகின்றது. மேலும், அந்த முஸ்லிம் நபித்தோழர் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடம் என்பது, சுற்றிலும் முஸ்லிமல்லாத யூதர்கள் வசிக்கின்ற பகுதியாகும்.
இப்போது நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடத்தில் கேட்கின்றார்கள். ஐம்பது நபர்கள் சத்தியம் செய்து இன்னார் தான் கொலை செய்தார் என்று சொல்லுங்கள்! என்று கேட்க, அதற்கு அருமை தோழர்கள் சொன்ன பதில், நம்முடைய உரோமங்களையெல்லாம் சிலிர்க்க வைக்கின்றது.
அதாவது, நாங்கள் கொலை நடந்த இடத்தில் இல்லாத போது, இன்னார் தான் கொலை செய்தார் என்று கண்கூடாகக் காணாத போது, எப்படி நாங்கள் சத்தியம் செய்வோம் என்று கேட்பதன் மூலம், நாங்கள் நீதிக்குத்தான் சாட்சியானவர்கள்! அநீதிக்கு சாட்சியானவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.
அதாவது அந்த தோழர்கள் நினைத்திருந்தால் ஒரு ஐம்பது நபர்கள் பொய் சத்தியம் செய்து எதிரியாக இருந்த யூதர்களில் ஒருவனுக்குத் தண்டனை பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால் நீதியில் சங்கமித்த தோழர்கள் அப்படிப்பட்ட அநியாயத்தை எதிரியாக இருந்தாலும் செய்வதற்குத் துளியளவு கூட எண்ணவில்லை.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு சொத்தை அபகரிப்பதற்காக யார் திட்டமிட்டு பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தவிர வேறுவிதமாக அவனை அவர் சந்திக்கமாட்டார்’’ என்று சொன்னார்கள்.
ஆதாரம்: (புகாரி: 7183)
இன்றைய காலகட்டத்தில் அடுத்தவர்களின் சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பொய் சாட்சி சொல்வதையும், பொய்யான சாட்சியங்களை உண்டாக்கிக் கொண்டு வருவதையும் பார்க்கிறோம். சமமான நீதியை வழங்குகின்ற நீதியாளர்களையும், நீதிக்குச் சாட்சியாக நிற்கின்ற மக்கள் கூட்டத்தையும் அரிதாகப் பார்க்க வேண்டிய காலகட்டமாக மாறி விட்டது.
பிறருடைய சொத்துக்களையும், மான மரியாதைகளையும், உயிர்களையும் பறித்துக் கொண்டு விட்டு, சர்வ சாதாரணமாக நிரபராதி என்ற பட்டத்தைப் பெற்றவனாக பூமியில் நடமாடிக் கொண்டிருக்கின்றான். அதே போன்று எவ்வித சிரமுமின்றி, அடுத்தவர்களின் சொத்துக்களை அநியாயமாக அபகரித்து, அந்த சந்தோஷத்திலே குளிர் காய்வதையும் பார்க்கின்றோம்.
இதுபோன்ற அநியாயம் செய்பவர்களையும், அக்கிரக்காரர்களையும் அடக்கி ஒடுக்க வேண்டுமானால் சரியான நீதி வழங்குகின்ற நீதிமான்கள் பெருமளவில் உருவாக வேண்டும்.
ஒருக்காலும் அநியாயமான முறையில் தீர்ப்பளிக்க மாட்டேன்! நீதிக்குப் புறம்பாக, பெரும்பான்மையினரின் விருப்பத்தின் அடிப்படையில், அவர்களது நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளிக்க மாட்டேன்! அநியாயக்காரர்களுக்குத் துணை நிற்க மாட்டேன் என்று நீதிபதிகள் உளமாரத் தங்களின் உள்ளங்களில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே, எந்தச் சூழலிலும், எதிரியாகவே இருந்தாலும் கூட மனித உரிமைகளைப் பேணுவோம்! சமமான, நீதமான, உண்மையான நீதியை வழங்குவோம்! நீதிக்கு சாட்சியாக இருப்போம் என்ற சபதத்தை உளமார ஏற்போமாக!!
நீர் தீர்ப்பளித்தால் அவர்களுக்கிடையே நீதியாகத் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரையே அல்லாஹ் நேசிக்கிறான்.
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நீதியைப் பற்றி கூறிய அனைத்து உபதேசங்களையும் நம்முடைய அன்றாட வாழ்வில் கடைபிடிப்போமாக.! அந்த பாக்கியம் கொண்டவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.