123) நிலைத்து நிற்கும் தர்மம் செய்தல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

மனிதன் மரணித்து விட்டால் அவனால் எந்த நன்மையும் செய்ய முடியாது என்பதை அனைவரும் அறிவோம்.

ஆயினும் நிலைத்து நிற்கும் வகையில் நாம் ஒரு நல்லறத்தைச் செய்துவிட்டு மரணித்தால் அந்த நல்லறத்தின் மூலம் மக்கள் பயனடையும் காலம் வரை நமக்கு நன்மைகள் வந்து சேர்ந்து கொண்டிருக்கும்.

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி

(முஸ்லிம்: 3084)

இவ்வுலகில் வாழும் போது நாம் ஒரு பள்ளிவாசல் கட்டிவிட்டு மரணித்தால் அதில் மக்கள் தொழுகை நடத்தும் காலமெல்லாம் நமக்கு நன்மைகள் வந்து சேரும்.

நாம் ஒரு கிணறு தோண்டி விட்டு மரணித்தால் அக்கிணற்றில் மக்கள் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தும் போதெல்லாம் நமக்கு நன்மை வந்து சேரும்.

எந்த ஒரு முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டு, அம்மரத்திலிருந்து மனிதர்களோ, மற்ற விலங்கினங்களோ சாப்பிட்டால் அது அவர் செய்யும் தர்மமாகக் கருதப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்கள்:(புகாரி: 6012, 2320),(முஸ்லிம்: 2904)

ஒவ்வொருவரும் இதில் அதிகக் கவனம் செலுத்தி நன்மைகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக மரணத்தை நெருங்கியவர் இதில் சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும்.