நிலநடுக்கம்
நிலநடுக்கம்
நிலநடுக்கம் (அல்லது பூகம்பம், அல்லது பூமியதிர்ச்சி, ஆங்கிலம்: (earthquake) என்பது பூமிக்கடியில்அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வுல்லன.
பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்து கண்டங்களும்பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம்.
இந்தப் பிளேட்டுகள் சுமார் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.
இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை. ஒரு நிலநடுக்கம் நிலச்சரிவுகளையும் சிலசமயம் எரிமலை செயல்பாட்டையும் அதிகரிக்க செய்யும்.
ஒரு நிலநடுக்கத்தின் அளவுக்கு வரையறை ஏதுமில்லை என்றாலும் வரலாற்றில் பதிவான மிக பெரிய நிலநடுக்கங்கள், 9.0 ரிக்டருக்கும் கூடுதலானவை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவன ஆகும். இத்தகைய மிக அன்மையின் நிகழ்ந்த நிலநடுக்கமானது 2011ஆம் ஆண்டு செண்டாய், சப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கமாகும். பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களுல் சப்பானில் பதிவான வலுவான நிலநடுக்கம் இதுவாகும். ஆழமற்ற நிலநடுக்கங்களே அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை ஆகும்.
கண்டங்கள், துணைக் கண்டங்கள்
ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த நிலப்பரப்பாக காணப்பட்டாலும் இரண்டும் தனித்தனி தட்டுகளில் அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட தெற்காசியப் பகுதி ஆசிய தட்டில் இல்லாமல் தனித்தட்டாக அமைந்துள்ளது. இதனாலேயே இது இந்தியத் துணைக் கண்டம் என்றழைக்கப்படுகிறது.
மேலும் இந்திய பிளேட், ஆசிய பிளேட் ஆகிய இரண்டும் வடக்கு நோக்கி நகர்கின்றன. இதில் ஆசிய தட்டை விட இந்திய தட்டு வேகமாக நகர்வதால், இந்திய தட்டு ஆசிய தட்டை மோதி அந்த அழுத்தத்தில் உருவானதே இமயமலைப் பிரதேசம். இமயமலை இன்னும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணமும் இது தான். இரு பிளேட்களின் அழுத்தத்தால் இமயமலைப் பகுதி வளரும் பொழுது உராயும் பாறைகள் அசைந்து கொடுப்பதால் இப்பகுதி நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியாக கருதப்படுகிறது.
பல கோடி வருடங்களுக்கு முன்பு ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்து இருந்தது. இது யூரேசியா என்று அறிவியலாளர்களால் கூறப்படுகிறது. ஒரு பெரிய பூகம்பதால் தான் ஆசியாவும் ஐரோப்பாவும் தனித்தனி கண்டங்களாக பிரிந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.
வகைகள்
நிலநடுக்கம் மூன்று வகையான புவித்தட்டு அசைவுகளால் ஏற்படும். சாதாரண முறை, மேற்தள்ளல் முறை மற்றும் சமாந்தர அசைவு என்பனவே அவையாகும். சாதாரண மற்றும் மேற்தள்ளல் முறைகளில் ஒரு புவித்தட்டு மேல் நோக்கியும் மற்றையது கீழ்நோக்கியும் அசையும். சமாந்தர அசைவில் இரண்டு புவித்தட்டுக்கள் சமாந்தரமாக உராய்வுடன் செல்லும். இவ் அனைத்து புவித்தட்டு அசைவுகளும் புவியின் மேலோட்டுக்ளுக்குக் கீழுள்ள உருகிய பாறைக் குழம்பின் அசைவுகளாலேயாகும்.
புதிதாக புவி மேலோடு உருவாகும் இடங்களான புவித்தட்டு விலகற் பிரதேசங்களில் சாதாரண முறை அசைவு இடம்பெறும். இம்முறையில் ஏற்படும் நிலநடுக்கம் பொதுவாக 7 ரிச்டரைத் தாண்டாது. மேலெழும்பல் அசைவு முறையால் ஏற்படும் நிலநடுக்கங்களே அதிக ரிச்டர் அளவோடு அதிக அழிவையும் ஏற்படுத்துவனவாகும். புவித்தட்டு அசைவுகளைத் தவிர பாறைகளின் அசைவுகளால் சிற்சிறு நிலநடுக்கங்கள் ஏற்படும்.
நிகழ்வுத் தரவுகள்
ஒவ்வொரு வருடமும் 5,00,000 நிலநடுக்கங்கள் புவியில் ஏற்படுகின்றன. இவற்றில் 1,00,000 நிலநடுக்கங்கள் மக்களால் உணரப்படுகின்றன. புவியின் அனைத்துப் பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. எனினும் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன. உலகின் 90%இற்கும் அதிகமான பூகம்பங்கள் பசுபிக் சமுத்திரத்தை அண்டிய பகுதிகளிலேயே உருவாகின்றன.
கண்டறிதலும் அளவிடலும்
நிலநடுக்கத்தின் வீரியத்தை நிலநடுக்கப் பதிவுக் கருவி மூலம் அளவிடலாம். இதில் ரிக்டர் அளவீடு பயன்படும்.
நிலநடுக்கத்தின் தாக்கங்கள் நிலம் நடுங்குதலும் பிளத்தலும்
இதுவே நிலநடுக்கத்தின் பிரதான விளைவாகும். இதனால் கட்டடங்களும் ஏனைய பல செயற்கையான அமைப்புகளும் அழிவுக்குள்ளாகும். இதன் தாக்கமானது நிலநடுக்கத்தின் அளவு, மையத்திலிருந்துள்ள தூரம் மற்றும் பிரதேசத்தின் புவியியல் தோற்றப்பாடு போன்ற காரணிகளால் வேறுபடக்கூடியது.
மண்சரிவு, பனிச்சரிவு
நிலநடுக்கத்துடன் கூடிய கடும் புயல், எரிமலை வெடிப்பு, சுனாமி, காட்டுத்தீ போன்ற இயற்கை அனர்த்தங்களால் நிலத்தினதும் பனிப்பாறைகளினதும் உறுதித்தன்மை பாதிக்கப்படுவதால் மண்சரிவோ குளிர் காலநிலையுடைய இடங்களில் பனிச்சரிவோ ஏற்படலாம்.
தீ அனர்த்தம்
நிலநடுக்கத்தின் போது வாயு வழங்கல் குழாய்களும், மின்சாரக் கம்பிகளும் பாதிக்கப்படுவதால் பாரிய தீ அனர்த்தம் ஏற்படும் வாய்ப்புள்ளது. 1906 ஆம் ஆண்டில் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் அதிகமான இறப்புகளுக்கு தீயே காரணமாகும்.
ஆழிப்பேரலை
சென்னை மெரினா கடற்கரை ஆழிப்பேரலை தாக்கங்கள் நிலநடுக்கத்தின் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் விளைவே சுனாமியாகும்.பொதுவாக கடலடியில் ஏற்படும் 7.5 க்கும் குறைவான ரிக்டர் அளவு நிலநடுக்கங்கள் ஆழிப்பேரலைகள் உருவாவதில்லை. ஆனால் ரிக்டரில் 7.5 க்கும் அதிகமான நிலநடுக்கங்களே ஆழிப்பேரலை உருவாவதற்கும் அதனால் ஏற்படும் பெருஞ்சேதங்களுக்கும் காரணங்களாக அமைகின்றன. உதாரணமாக 2004 இல் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியை உருவாக்கியமையாலேயே அது உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கமாகக் கருதப்படுகின்றது.
வெள்ளம்
நீர்நிலைகளிலிருந்து அதிகப்படியான தண்ணீர் பெருக்கெடுத்து நிலத்தை அடைவது வெள்ளம் எனப்படுகிறது. நீர்நிலைகளான ஆறு, குளம், போன்றவற்றின் மொத்த கொள்ளளவைத் தாண்டி நிரம்பும் போது நீர் வெளியேறி வழக்கமாக வெள்ளம் ஏற்படுகிறது. ஆனால் பூகம்பம் அல்லது நிலநடுக்கத்தின் போது நீர் நிலைகளின் தடுப்பணைகள் உடைந்து சேதமுறுவதால் அதிகப்படியான நீர் வெளியேறி பெருத்த சேதத்தை உண்டாக்கலாம்.நிலநடுக்கத்தின் போது அணைகள் உடைந்து வெள்ளம் ஏற்படுவது இரண்டாம் நிலை பாதிப்பாகும். சில நேரங்களில் நிலநடுக்கம் ஏற்படும் போது உண்டாகும் நிலச்சரிவுகள் ஆற்றின் குறுக்கே விழுந்து தற்காலிக நீர்த்தேக்கம் உருவாகி பின்னர் அது வலுவிழந்து உடைந்து தண்ணீர் வெளியேறினாலும் வெள்ளம் உண்டாகக்கூடும்.
தஜிகிஸ்தான் நாட்டின் சரெசு ஏரிக்கு கீழே உள்ள நிலப்பகுதி பெருங்கேடு விளைவிக்கும் வெள்ளத்தால் பாதிக்கும் நிலையில் உள்ளது. இப்பகுதியில் பாயும் ஆற்றுக்கு குறுக்கே நிலச்சரிவினால் உருவாகிய உசோய் அணை உள்ளது. எதிர்காலத்தில் ஏதேனும் நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்த வலுவற்ற அணை உடைந்து பெருவெள்ளம் ஏற்படும் என்றும் அதனால் சுமார் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்படுகிறது.
உயிர்ச் சேதங்கள்
மால்டாவில் உள்ள ஹஜன் கோபுரம் 1856 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதமடைந்திருக்கும் காட்சி நிலநடுக்கத்தின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் உறுப்பு சேதங்கள் மரணத்தை ஏற்ப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் அடிந்து நாசமாகின்றன அல்லது பெருஞ்சேதமுறுகின்றன (பொதுவாக நிலநடுக்கத்தால் கட்டிடங்களுக்கு ஏற்படும் சேதங்கள் இடிந்து விழுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன). அதுமட்டுமல்லாமல் நிலநடுக்கத்தால் நோய்களும் அடிப்படைத் தேவை குறைபாடுகளும் ஏற்படும் அபாயங்கள் உள்ளன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீதி, உயிர் பிழைத்தவர்களுக்கு மன அழுத்தம் , மற்றும் அதிக காப்பீட்டு சந்தா போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
அளவும் எண்ணிக்கையும்
தற்போதைய நவீன கருவிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்படக்கூடிய நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 ஏற்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் 100,000 மனிதர்களால் உணரக்கூடியவையாகும்.[6][7] சிறு நிலநடுக்கங்கள் உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மற்றும் அலாஸ்கா, மெக்சிக்கோ, குவாத்தமாலா, சிலி, பெரு, இந்தோனேசியா, ஈரான், பாக்கித்தான், போர்த்துகலின் சில பகுதிகள், துருக்கி, நியூசிலாந்து, கிரேக்கம், இத்தாலி, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றில் கிட்டத்தட்ட தொடர்ந்து ஏற்படுக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் நிலநடுக்கங்கள் நியூயார்க் நகரம், இலண்டன் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட, கிட்டத்தட்ட உலகில் எங்கும் ஏற்படலாம்.
உலகின் நிலநடுக்கங்கள் (90% முதல் 81% வரையான பெரிய நிலநடுக்கங்கள் அடிக்கடி பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள எரிமலை வளையம் என்ற பகுதியில் அமைந்துள்ளன. இமய மலையின் அடிவாரத்திலும் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிலநடுக்க பாதிப்பு (seismic risk) அதிகம் உள்ள இடங்களில் மெக்சிகோ நகரம், தோக்கியோ மற்றும் தெஹ்ரான் போன்ற பெரு நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியால், ஒரே நிலநடுக்கத்தில் 3 மில்லியன் மக்கள் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
Source: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D