நிறைய வேண்டாம்! பரக்கத் போதும்!

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!

கோடான கோடி செல்வம் இருந்தாலும், இறைவன் அதில் பரக்கத்தை நீக்கி விட்டால் அந்த செல்வத்தைக் கொண்டு எதனையும் சாதிக்க இயலாது. மிகக் குறைவான செல்வம் இருந்தாலும் அதில் இறைவனது பரக்கத் இருந்தால் அது கோடி ரூபாய் செய்யும் வேலையை சுலபமாக செய்துவிடும். இதுவே மறைமுகமான அபிவிருத்தியாகும். இந்த மறைமுகமான அபிவிருத்தியாக இருக்கிற பரக்கத்தைப் பற்றியும், அதனை பெறுவதைப் பற்றியும் இந்த சிறிய உரையிலே நாம் பார்க்க இருக்கிறோம்.

விரலை சூப்புதல்

முஸ்லிம்களில் சிலர் நவீன கலாச்சாரம் என்றபெயரில் ஹோட்டல்களில் சாப்பிடும்போது கைவிரல்களை சூப்பி சாப்பிடுவதில்லை. காரணம் பிறமதத்தவர்கள் அங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று ஒன்றுக்கும் ஒவ்வாத காரணத்தை சொல்லி இந்த சுன்னத்தை விட்டுவிடுகிறார்கள்.

கலாச்சாரத்தையும், அழகான ஒழுக்கங்களையும் கற்றுத்தந்த மார்க்கம் இந்த இஸ்லாம். இந்த மார்க்கம் கற்றுத்தந்த இந்த மார்க்கத்தில் அழகான நடைமுறைகளை விடுகிறார்கள். இவர்கள் எப்படி பரக்கத்தை பெறுவார்கள்.?

إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ، فَإِنَّهُ لَا يَدْرِي فِي أَيَّتِهِنَّ الْبَرَكَةُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 4140) 

உறவைப்பேணுதல்

இது அல்லாமல் நாம் பெற்ற செல்வங்களின் மூலம் நமது உறவினர்களையும் கவனிக்க வேண்டும். உறவினர்களை கவனிக்கும்போது நமது பொருளில் அருள்வளம் கிடைக்கும்.

مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் செல்வவளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: (புகாரி: 2067) 

சத்தியம் செய்து விற்பது கூடாது

இன்று பெரும்பாலும் வியாபாரிகள் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதற்கும், அதிக லாபம் பெறுவதற்கும் சத்தியம் செய்து விற்பனை செய்கிறார்கள். இதை முஸ்லிம்கள்கூட செய்து தங்களுடைய பொருள்களில் வரும் அருள்வளம் இழந்து விடுகிறார்கள்.

الحَلِفُ مُنَفِّقَةٌ لِلسِّلْعَةِ، مُمْحِقَةٌ لِلْبَرَكَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்: ஆனால், பரக்கத் (எனும் அருள்வளத்)தை அழித்துவிடும்!

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 2087) 

செலவில் சிக்கனம்

நாம் சம்பாதிக்கும் செல்வங்களை கரியாக்கிடாமலும், வீண்விரையத்தில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும். இன்று பெரும்பாலோர் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அது எப்படி வந்தது? எப்படி போனது? என்று தெரியாமல் திருதிருவென்று முழிப்பார்கள்.

நாம் செய்யும் காரியங்களில் திருமண நிகழ்ச்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கில் செலவழித்து மண்டபங்களையும், விருந்துகளையும் ஏற்பாடுகளையும் நடத்துகிறார்கள்.

இப்படி நடத்தப்படுகின்ற திருமணங்களில் இன்று ஆயிரம் பிரச்சினைகள் கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படுகிறது. காரணம் பரக்கத் இல்லாமல் போய்விடுகின்றது.

إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مَؤُونَةً

நபி (ஸல்) அவர்கள் குறைந்த செலவில் நடத்தப்படுகின்ற திருமணமே மிகவும் பரக்கத் பொருந்தியது என்று கூறினார்கள்.

நூல் : (அஹ்மத்: 24529) (23388)

அனைத்திற்கும் மேலாக போதுமென்ற மனம்

அடுத்து நமக்கு வந்த செல்வங்களில் திருப்தியையும், போதுமென்ற மனத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

أَنَّ اللَّهَ يَبْتَلِي عَبْدَهُ بِمَا أَعْطَاهُ، فَمَنْ رَضِيَ بِمَا قَسَمَ اللَّهُ لَهُ، بَارَكَ اللَّهُ لَهُ فِيهِ، وَوَسَّعَهُ، وَمَنْ لَمْ يَرْضَ لَمْ يُبَارِكْ لَهُ

அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு கொடுத்த பொருளில் சோதனை செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததை பொருந்திக்கொள்கிறாரோ அவருக்கு அதில் பரக்கத் செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததில் திருப்திகொள்ளவில்லையோ அதில் அல்லாஹ் பரக்கத் செய்வதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : (அஹ்மத்: 20279) (19398)

இந்த அறிவுரைகளை மனதில் நிறுத்தி,  பரக்கத்தை அடைந்து, நல்ல முஸ்லிமாக வாழ்கிற நல்லடியார்களாக, அந்த ஏக இறைவன் ஆக்கி அருள்புரிவானாக!