நினைப்பதெல்லாம் கிடைக்கும் நித்திய வாழ்க்கை
மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இம்மைக்கும், மறுமைக்கும் இடையேயான வேறுபாட்டினை நாம் சரியாகப் புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், சத்தியப் பாதையில் உறுதியாக இருக்க முடியும். அவ்வகையில் இவ்வுலக வாழ்வை விடவும் சொர்க்க வாழ்வு எந்தளவு சிறந்தது என்பது குறித்து ஒரு முக்கியமான செய்தியை இப்போது பார்க்க இருக்கிறோம்.
பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு விதமான விருப்பங்கள், கனவுகள் கண்டிப்பாக இருக்கும். மரணத்தை எதிர்நோக்கிய நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் மனிதனுக்கும் கூட இந்த விஷயத்தில் விதிவிலக்கு வழங்க இயலாது.
அந்தளவிற்குச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துப் பருவத்தினருக்கும் ஏராளமான எதிர்பார்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அவை மனிதனின் வயது, சூழ்நிலை, தேவைகளுக்கு ஏற்ப ஆளாளுக்கு வேறுபடும்.
ஆயினும், மனிதர்கள் அனைவருக்கும் பொதுவாக சில ஆசைகள், எண்ணங்கள் இருக்கின்றன. அவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்து வரும். 1. இம்மை வாழ்வின் மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழ வேண்டும் என்ற ஆசை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 6420)
முதியவரின் மனம்கூட இரண்டை நேசிப்பதில் இளமையாகவே உள்ளது: 1.இம்மை வாழ்வின் மீதுள்ள ஆசை. 2. பொருளாசை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 1891)
நீண்ட நாள் வாழ வேண்டும்; செல்வம் அதிகமாக இருக்க வேண்டும்; உலக இன்பங்கள் விசாலமாக வேண்டும் என்று மனிதனிடம் இருக்கும் மனநிலையை நபிகளார் தெளிவுபடுத்துகிறார்கள்.
இதன் ஓர் அம்சமாக, வாழ்வில் எது இருந்தாலும், எவ்வளவு இருந்தாலும் இன்னும் நிறைய வேண்டும் என்கிற பேராசை மனிதனை பற்றிப் பிடித்துக் கொள்கிறது.
அதனால், அவன் தன்னிடம் இருக்கும் பொருட்களைப் பெருக்கிக் கொள்ளத் துடிக்கிறான். அதற்காக வரம்பு மீறவும் துணிந்து விடுகிறான் என்பதை அல்லாஹ்வின் தூதர் நமக்கு அற்புதமாக விளக்கி இருக்கிறார்கள்.
அப்பாஸ் இப்னு ஸஹ்ல் இப்னி ஸஅத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் மக்காவில் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) உரையாற்றும்போது சொல்லக் கேட்டேன். மக்களே! நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும் அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன் மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று விரும்புவான். அவனது வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் மூடாது. மேலும், திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
நூல்: (புகாரி: 6438)
நிச்சயமாக ஒவ்வொரு நபருக்கும் பல வகையான தேடல்கள், ஏக்கங்கள் இருக்கும். அவை அனைத்தையும் அடைந்து கொள்ளும் வாழ்வு இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை.
சாமானியர்கள், பாமரர்கள், ஏழைகள் போன்றவர்களுக்கு மட்டுமல்ல! செல்வந்தர்கள், ஆட்சியாளர்கள், மேதைகள் உட்பட உலகில் வாழும் எல்லோருக்கும் இந்த நிலைதான். இதோ படைத்தவனின் அறிவிப்பைப் பாருங்கள்.
விரும்பியது (யாவும்) மனிதனுக்கு இருக்கிறதா?
எனவே, மனம் எதையெல்லாம் எண்ணுகிறதோ அதனை அடைந்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டுவிடக் கூடாது. உண்மையில், இந்த நொடிக்கு முன்பு எத்தனையோ விஷயங்களை எண்ணியிருப்போம். அவற்றுள் அனேகமானவை வெறும் பகல் கனவாகக் கடந்து போயிருப்பதை யாரும் மறுக்க இயலாது.
நாமிருக்கும் இந்த நொடியில், இனிமேல் எதிர்காலத்தில் இப்படியெல்லாம் இருக்க வேண்டும், இதெல்லாம் கிடைக்க வேண்டுமென நிறையவே பட்டியல் போடுகிறோம். அவையெல்லாம் நிறைவேறும் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. இதோ நபிகளாரின் போதனையைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். அதன் நடுவிலிருந்து சதுரத்திற்கு வெளியே செல்லுமாறு ஒரு கோடு வரைந்தார்கள். பின்னர் நடுவிலுள்ள அந்தக் கோட்டின் ஓர் ஓரத்தில் இருந்து (சதுரத்துடன் முடியும்) மறு ஓரம் வரை சிறு சிறு கோடுகள் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:
(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம்தான் அவனைச் ‘சூழ்ந்துள்ள’ அல்லது ‘சூழ்ந்து கொண்டுவிட்ட’ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: (புகாரி: 6417)
மனித வாழ்வின் யதார்த்தமான நிலையை நபிகளார் படம் வரைந்து விளக்கி இருக்கிறார்கள். எல்லையற்ற எதிர்பார்ப்புகள் கொண்டவன் மனிதன். அவன் அடைய துடிப்பவற்றுள் பல விஷயங்கள் கிடைக்காமல் போகும்.
சில விஷயங்கள் மட்டும் கிடைக்கும். அதுவும்கூட சிரமங்கள், சோதனைகள் இல்லாமல் பெற்றுக் கொள்ள முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனது தேவைகளைத் தேடிப் போகும் போது இடையிலேயே மரணம் தொற்றிக் கொள்ளும். அதனிடம் யாரும் தப்ப முடியாது.
பெரும்பாலும் போதுமான உணவு; தேவையான ஆடை, சொந்தமாக வீடு; நல்ல வேலை, தரமான வாகனம் போன்ற ஒரு சில தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குள் ஆயுள் கழிந்து விடுகிறது. பலருக்கு இவை கூட வெறும் கனவாகவே முடிந்து விடுகிறது. இதுதான் உலக வாழ்க்கை. இதற்கு நேர்மாற்றமானது சொர்க்க வாழ்க்கை. அது நினைப்பதெல்லாம் கிடைக்கும் நித்திய வாழ்க்கை.
அவர்கள் விரும்பியவை அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. நன்மை செய்வோருக்கு இதுவே கூலி.
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவன் தனது வாக்குறுதியை எங்களுக்கு உண்மைப்படுத்தி விட்டான். சொர்க்கத்தில் நாங்கள் விரும்பியவாறு தங்கிட, இப்பூமியை எங்களுக்கு உடமையாக்கினான். உழைத்தோரின் கூலி நல்லதாகவே இருக்கிறது என்று அவர்கள் கூறுவார்கள்.
அவர்கள் அதன் இரைச்சலைச் செவியுற மாட்டார்கள். தமது உள்ளங்கள் ஆசைப்படுவதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை அங்கே உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் அங்கே உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.
நிலையான சொர்க்கச் சோலைகளில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அவர்கள் விரும்பியவை அங்கே அவர்களுக்கு உண்டு. இவ்வாறே (தன்னை) அஞ்சுவோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
சொர்க்கத்திலே பல படித்தரங்கள் உள்ளன. நம்முடைய நம்பிக்கை, நல்லறங்களுக்கு ஏற்ப அங்கு இடம் ஒதுக்கித் தரப்படும். அதில் நுழைந்தவருக்கு அளிக்கப்படும் குறைந்தபட்சமான பரிசு என்ன தெரியுமா? அவர் எதையெல்லாம் விரும்புகிறாரோ அவை அனைத்தும் கிடைப்பதாகும்.
உலகில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் எவருக்கும் கிடைக்காத வாய்ப்பு, சொர்க்கத்திற்குச் சென்று விட்டவருக்குக் குறைந்தபட்ச பாக்கியமாகக் கிடைத்து விடும். இதனை நினைத்துப் பார்ப்பதற்கே பெரும் பூரிப்பாக இருக்கிறது, இல்லையா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் உங்களில் ஒருவரது குறைந்தபட்சத் தகுதி என்னவென்றால், “நீ (இன்னதை) ஆசைப்படு” என்று அவரிடம் (இறைவன்) சொல்வதாகும். அப்போது அவர் ஒவ்வொன்றாக ஆசைப்படுவார். (இறுதியில்) அவரிடம், “ஆசைப்பட்டு (முடித்து)விட்டாயா?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “ஆம்’’ என்று பதிலளிப்பார். அப்போது அவரிடம், “நீ ஆசைப்பட்டதும் அத்துடன் அதைப் போன்றதும் உனக்குக் கிடைக்கும்’’ என்று இறைவன் கூறுவான்.
நூல்: (முஸ்லிம்: 301)
மறுமை வெற்றி என்பது எதிர்பார்க்கின்ற எல்லாமும் கிடைக்கும் பேரின்ப வாழ்க்கை. அங்கு சிலருக்கு அவர்கள் ஆசைப்பட்டது மட்டுமல்ல, அதுபோன்று பல மடங்கு இன்பங்கள் வாரி வழங்கப்படும். மறுமை வெற்றியின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
…(மறுமை நாளில்) இறுதியாக இறைவன், தன் அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்த பின், வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்று உறுதி கூறியவர்களில், தான் நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்ற விரும்புவான். அப்போது அவர்களை வெளியேற்றுமாறு வானவர்களுக்கு ஆணையிடுவான்.
வானவர்கள் அவர்களை சஜ்தாவின் (சிரவணக்கத்தின்) அடையாளங்களை வைத்து இனம் கண்டுகொள்வார்கள். (ஏனெனில்,) அல்லாஹ் நரகத்திற்கு, மனிதனை அவனிலுள்ள சஜ்தாவின் அடையாளத்தில் தீண்டக் கூடாதெனத் தடை விதித்துள்ளான். ஆகவே, வானவர்கள் அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள்.
அப்போது அவர்கள் (நரக நெருப்பில்) கரிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, அவர்கள் மீது “மாஉல் ஹயாத்’ எனப்படும் (ஜீவ)நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள்.
அவர்களில் தமது முகத்தால் நரகத்தை முன்னோக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர் மட்டும் எஞ்சுவார். அவர் “என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது. ஆகவே, நரகத்தை விட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பி விடுவாயாக!’’ என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார்.
அப்போது அல்லாஹ் “(உன் கோரிக்கையை ஏற்று) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?’’ என்று கேட்பான். அதற்கு அவர் “இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன்’’ என்பார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு (வேறு பக்கம்) திருப்பிவிடுவான்.
அதற்குப் பிறகு “என் இறைவா! சொர்க்கத்தின் வாசல் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக!’’ என்பார் அவர். அதற்கு இறைவன் “வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ கூறவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன!’’ என்பான். ஆனால், அவர் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பார்.
அப்போது இறைவன் “நீ கேட்டதை உனக்கு நான் கொடுத்தால் இன்னொன்றையும் நீ என்னிடம் கேட்கக்கூடும்’’ என்பான். அதற்கு அவர் “இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதுவல்லாத வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்’’ என்று சொல்லிவிட்டு, வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் இறைவனிடம் வழங்குவார்.
இதையடுத்து இறைவன் அவரை சொர்க்கத்தின் வாசல் அருகே கொண்டு செல்வான். சொர்க்கத்திற்குள் இருப்பவற்றைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம் வரை மௌனமாக இருப்பார். பிறகு “இறைவா! என்னை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!’’ என்று கூறுவார். பின்னர் இறைவன் “வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ சொல்லவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலை தான் என்ன!’’ என்று கேட்பான்.
அதற்கு “என் இறைவா! என்னை உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆக்கிவிடாதே!’’ என்று இறைவன் சிரிக்கும் வரை பிரார்த்திக் கொண்டே இருப்பார். அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவருக்கு இறைவன் அனுமதி வழங்கிடுவான். சொர்கத்திற்குள் அவர் நுழைந்த பின், “நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்’’ என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைப்படுவார்.
பிறகு (மீண்டும்) “நீ (விரும்பிய) இன்னதை ஆசைப் படலாம்’’ என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைகள் முழுதும் முற்றுப் பெறும்வரை ஆசைப்பட்டு (தன் விருப்பங்களைத் தெரிவித்து)க்கொண்டே இருப்பார். அப்போது இறைவன் “இது உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்’’ என்பான். (இந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார்.)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 6573)
சொர்க்கம் என்பது தூய எண்ணங்கள், நல்ல காரியங்கள் மட்டும் நிறைந்திருக்கும் இடம். அங்கே கெட்ட சிந்தனைகளுக்கும், தீய செயல்களுக்கும் அறவே இடம் கிடையாது. அதில் நுழைந்தவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். இன்பங்களில் திளைப்பார்கள். அவர்கள் விரும்பும் விஷயம் சிறிதாயினும் பெரிதாயினும் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்: சொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், ‘நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்).
ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்’ என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவிவிடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகிவிடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன், ‘எடுத்துக் கொள். ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது’ என்று கூறுவான்.
(நபியவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள், நாங்களோ விவசாயிகள் அல்லர்’ என்று கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 2348)
உலகில் ஆசைப்படும் விஷயங்களை அடைவதற்கு அல்லும், பகலும் அயராது பாடுபட வேண்டியிருக்கிறது. அப்படி உழைத்தாலும் கூட அனைத்தும் கிடைத்து விடாது; அதுவும்கூட நினைத்தது போன்று நூறு சதவீதம் அமைந்து விடாது. ஆனால் சொர்க்கமோ அனைத்தையும் சாத்தியமாக்கும் பேரின்பத் தலம்.
இரு வாழ்க்கையையும் ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்று கூடச் சொல்ல முடியாது. உலக வாழ்வை விடவும் பல இலட்சம் மடங்கு உயர்ந்தது சொர்க்க வாழ்க்கை. அதற்குள் செல்ல அனுமதி கிடைப்பதே மிகப்பெரும் பேறு.
“சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது), உலகத்தையும் அதில் இருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) செல்வது உலகத்தையும் அதில் இருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்‘’ என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: (புகாரி: 6415)
உயர்வான அல்லாஹ் கூறுகின்றான்: “என் நல்லடியார்களின் சேமிப்பாக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவை (அங்கே கிடைக்கவிருக்கும் இன்பங்களுடன் ஒப்பிட்டால்) சொற்பமானவையே ஆகும்’’.
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, பிறகு, “அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்’’ எனும் (அல்குர்ஆன்: 32:17) ஆவது இறைவசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 4780)
சொர்க்க வாழ்வு என்பது மகத்துவமானது. எந்தளவிற்கெனில், அங்கிருக்கும் இன்பங்களைப் பார்க்கும் வாய்ப்பு இங்கேயே கிடைத்தால் இப்போது போன்று நாம் இருக்க மாட்டோம்.
ஆர்வத்தோடும், அக்கறையோடும் மார்க்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவோம். எந்தவொரு காரியத்தையும் அலட்சியமாகக் கருத மாட்டோம். இத்தகைய மாற்றத்தையே இஸ்லாம் நம்மிடம் விரும்புகிறது. ஆகவேதான் சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து மார்க்கத்தில் அதிகமதிகமாகச் சொல்லப்பட்டுள்ளது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ‘உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்’ என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர்.
பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் ‘என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?’ என்று கேட்கிறான். – அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் – ‘உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும், உன்னைத் துதித்துக் கொண்டும் இருக்கின்றனர்’ என்று வானவர்கள் கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், ‘அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?’ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான்.
வானவர்கள், ‘அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்’ என்பார்கள். அதற்கு இறைவன், ‘அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை’ என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்’ என்று பதிலளிப்பார்கள்.
இறைவன், ‘அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?’ என்று வினவுவான். வானவர்கள், ‘நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)’ என்று பதிலளிப்பர். இறைவன், ‘அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை’ என்பர்.
அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?’ என்று கேட்பான் வானவர்கள், ‘நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டு ஓடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்’ என்பர். அப்போது இறைவன், ‘எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்’ என்று கூறுவான்.
அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ‘(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்’ என்பார். அதற்கு இறைவன், ‘அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்’ என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 6408)
சகோதரர்களே! சொர்க்கம் செல்வதே நமது முதன்மை இலக்காக இருக்க வேண்டும். உலக இன்பங்களைச் சேகரிப்பதற்காக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் தொழுகை, நோன்பு போன்ற கடமையான காரியங்களை விட்டுவிடாதீர்கள். அதுபோன்று, சொர்க்கத்தைத் தூரமாக்கும் இணைவைப்பு, மூடநம்பிக்கையான காரியங்களைத் தூக்கி எறியுங்கள்.
நரகத்தின் வாடை கூடப் படாமல் நேரிடையாக சொர்க்கம் செல்ல வேண்டுமெனில், வாய்ப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நற்காரியங்களைக் கவனத்தோடு செய்ய வேண்டும். அனைத்து வகையான தீமைகளை விட்டும் விலகி இருக்க வேண்டும். குறிப்பிட்டுக் கூறின், அல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதுதான் மார்க்கம் என்பதை விளங்கி அதன்படி அழகிய முறையில் வாழ்ந்து வெற்றி பெறுவோமாக!