நித்திய ஜீவனை நினைவுபடுத்தும் நிழல்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

  1. நிழலும் அருட்கொடையே!
  2. படைத்தவனுக்குப் பணியும் நிழல்
  3. நிழலை நிலையாக்கும் வல்லவன்
  4. நிழலற்ற நாளில் நிழல் பெறுவோர்
  5. நிழல் நிறைந்த சொர்க்கம்
  6. சுவனத்தில் நிழல்
  7. நிழலே இல்லாத நரகம்
  8. நிழலும் நேர்ச்சையும்
  9. நிழல்களை நாசப்படுத்தாதீர்
  10. நிழல்களைத் தடுக்காதீர்
  11. நிலையற்ற நிழல் உலகம்

முன்னுரை :

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

கோடை வெயில் அனலை அள்ளிக் கொட்டுகிறது. பாதைகளில் பயணிக்கும் மக்கள், அடிக்கடி அதன் ஓரத்தில் நிம்மதி நாடி நிழல் தேடி ஓய்வுக்காக ஒதுங்குகிறார்கள். சாமானியர்கள், செல்வச் சீமான்கள் என்று எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் தங்களது சக்திக்கேற்ப, வாட்டியெடுக்கும் வெயிலில் இருந்து பாதுகாக்கும் வசதிகளின் பக்கம் படையெடுக்கிறார்கள்.

கடைத்தெருக்களுக்கு வழக்கமாக வெளியே வந்து செல்கின்றவர்களை விட அதிகமான மக்கள், வெயிலின் காரணமாக மின்விசிறிகளுக்குக் கீழே முடங்கிக் கிடக்கிறார்கள். நிழலின் அருமை வெயிலிலே தெரியும் எனும் பழமொழியை நாமெல்லாம் தெரிந்து வைத்திருப்போம். இருப்பினும், அதன் உண்மையான விளக்கத்தை அதன் அருமையை இப்போது நாம் அனுபவ ரீதியாக உணர்கிறோம்.

வெயிலின் வெப்பம் வேகமாகத் தாக்குவதால் தேகம் வியர்வையைச் சிந்திச் சிந்தி சோர்வடைந்து விடும். இந்தத் தருணத்தில், நிழல் தொடர்பாக மார்க்கம் கூறும் செய்திகளைத் இந்த உரையில் தெரிந்து கொள்வோம். 

நிழலும் அருட்கொடையே!

நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நித்திய ஜீவனான அல்லாஹ்வே இந்த நிழலை ஏற்படுத்தியிருக்கிறான். வெறும் வெயிலை மட்டும் கொடுத்து நம்மை வேதனையில் தள்ளிவிடாமல் அதிலிருந்து இதமளிக்கும் நிழலையும் தந்து அவன் நம் மீது கருணை மழையைப் பொழிந்திருக்கிறான். நமது நலனுக்காக அவன் அளித்திருக்கும் அளவில்லா அருட்கொடைகளில் இந்த நிழலும் உள்ளடங்கும்.

இந்த உலகத்தில் தரப்பட்டிருக்கும் இன்பங்களைப் பற்றி மறுமைநாளில் விசாரிக்கும் போது, நிழல் தொடர்பாகவும் நம்மிடம் விசாரிக்கப்படும், அலை அலையாய் வரும் ஆதவனின் அக்னி கதிர்கள் ஆவேசமாக தீண்டும் வேளையில் நமக்கு ஆறுதல் அளிக்கும் இந்த நிழல் இன்பத்தைப் பற்றியும் நிச்சயமாக நாம் பதில் சொல்லியாக வேண்டும். வெயிலின் போது பல்வேறு விதமான நிழல்களில் இளைப்பாறும் நாம் இதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّمَّا خَلَقَ ظِلٰلًا وَّجَعَلَ لَـكُمْ مِّنَ الْجِبَالِ اَكْنَانًا وَّجَعَلَ لَـكُمْ سَرَابِيْلَ تَقِيْكُمُ الْحَـرَّ وَسَرَابِيْلَ تَقِيْكُمْ بَاْسَكُمْ‌ؕ كَذٰلِكَ يُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُوْنَ‏

தான் படைத்தவற்றிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு நிழல்களை ஏற்படுத்தினான். மலைகளில் உங்களுக்காகக் குகைகளையும் ஏற்படுத்தினான். வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான்.

(அல்குர்ஆன்: 16:81)

ஒருநாள் பகல் அல்லது இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர் பசியின் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து அன்சாரித் தோழர் ஒருவருடைய வீட்டிற்குச் சென்றார்கள். வீட்டிற்கு வந்த மூவரையும் அந்த அன்சாரித் தோழரான) அபுல்ஹைஸம் (ரலி) அவர்கள் தமது தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்காக அவர் ஒரு பாயை விரித்தார். பிறகு பேரித்தம் மரங்கள் நோக்கிச் சென்று ஒரு குலையை கொண்டு வந்து வைத்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “எங்களுக்காக கனிந்த பேரித்தம் பழங்களை பறித்திருக்கக் கூடாதா?” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! செங்காய் மற்றும் கனிந்த பேரித்தம் பழங்களில் இருந்து தேர்வு செய்யவே நாடினேன்” என்று கூறினார். அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். (அன்சாரித் தோழர் குடிப்பதற்காகக் கொண்டு வந்த) அந்த நீரைப் பருகினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! குளிர்ந்த நிழல், கனிந்த பழம், குளிர்ச்சியான நீர் இதுவும் அருட்கொடைகளில் உள்ளதாகும். இது பற்றியும் மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்” என்று கூறினார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஆதாரம்:(திர்மிதீ: 2369, 2292),(முஸ்லிம்: 4143)

படைத்தவனுக்குப் பணியும் நிழல்

காலையிலும் மாலையிலும் வெவ்வேறு திசையில் நிழல் விழுவதைப் பார்க்கிறோம். எந்தவொரு காரணமும் இல்லாமல் நிழல் விழுவதாக நாம் நினைத்துவிடக் கூடாது. அனைத்துப் படைப்பினங்களும் படைப்பாளனான அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டுப் பணிகின்றன. அவன் விதித்தபடி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் நிழலும் ஒரு அங்கம். எந்த நேரத்தில் எப்படி விழவேண்டும் என்று வல்ல இறைவன் செயல்திட்டம் வகுத்தானோ அதன்படி அங்குலம் மாறாமல் அப்படியே அடிபணிகிறது நிழல்.

இறைவனுக்கு மாறுசெய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கும் மனித இனம் இதைப் பற்றிச் சிறிதளவேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அப்படிச் சிந்தித்தால் நாம் இறைவனுக்குக் கட்டுப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம். இதோ, இறைவனே இறைமறையில் கேள்வியைத் தொடுக்கிறான் பாருங்கள்.

وَلِلّٰهِ يَسْجُدُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّظِلٰلُهُمْ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ‏

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

(அல்குர்ஆன்: 13:15)

 اَوَلَمْ يَرَوْا اِلٰى مَا خَلَقَ اللّٰهُ مِنْ شَىْءٍ يَّتَفَيَّؤُا ظِلٰلُهٗ عَنِ الْيَمِيْنِ وَالشَّمَآٮِٕلِ سُجَّدًا لِّلّٰهِ وَهُمْ دٰخِرُوْنَ‏

அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அவர்கள் பார்க்கவில்லையா? அதன் நிழல் வலம் மற்றும் இடப்புறங்களில் சாய்ந்து அல்லாஹ்வுக்கு விழுந்து பணிகின்றன.

(அல்குர்ஆன்: 16:48)

நிழலை நிலையாக்கும் வல்லவன்

சூரியன் எந்தத் திசையில் இருக்கிறதோ அதற்கு எதிர் திசையில் நிழல் தோன்றும். இதன் மூலம் நிழல் ஏற்படுவதற்கு சூரியனே காரணமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இப்படியான திட்டமிடப்பட்ட கச்சிதமான ஏற்பாட்டிற்குச் சொந்தக்காரன் ஏக இறைவன் ஒருவனே என்பதை எவரும் மறுக்க இயலாது.

தம்மை இறைவன் என்று சொல்பவர்களும் அல்லது தமக்கும் இறைவனின் ஆற்றல் இருக்கிறது என்று வாதிடுபவர்களும் இந்த நிழலுக்குச் சொந்தம் கொண்டாடும் அருகதை அணுஅளவும் அற்றவர்கள் என்பதை அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள். அந்த இறைவன் நினைத்தால் நிலைமாறும் விதத்தில் வைத்திருக்கும் நிழலை நிலையானதாக ஆக்கிவிடுவான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அவன் நினைத்தால் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த உலகையும் நிழல் கொண்டதாக மாற்றமுடியும். இன்னும் ஏன்? ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிழலை நிரந்தரமாக வைக்கவும் முடியும். இதற்கான சான்றுகளைக் காண்போம்.

 اَلَمْ تَرَ اِلٰى رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ‌ ۚ وَلَوْ شَآءَ لَجَـعَلَهٗ سَاكِنًا‌ ۚ ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَيْهِ دَلِيْلًا ۙ‏

உமது இறைவன் எவ்வாறு நிழலை நீட்டுகிறான் என்பதை நீர் அறியவில்லையா? அவன் நினைத்திருந்தால் அதை நிலையானதாக ஆக்கியிருப்பான். சூரியனை அதற்கு ஆதாரமாக ஆக்கினோம். பின்னர் அதை நம்மளவில் இலேசாகக் கைப்பற்றிக் கொள்வோம்.

(அல்குர்ஆன்: 25:45)

وَظَلَّلْنَا عَلَيْکُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰى‌ؕ كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ‌ؕ وَمَا ظَلَمُوْنَا وَلٰـكِنْ كَانُوْآ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏

(பனூ இஸ்ராயீல் சமுதாயமாகிய) உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். “நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!” (என்று கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

(அல்குர்ஆன்: 2:57)

 وَقَطَّعْنٰهُمُ اثْنَتَىْ عَشْرَةَ اَسْبَاطًا اُمَمًا‌ ؕ وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اِذِ اسْتَسْقٰٮهُ قَوْمُهٗۤ اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ‌ ۚ فَانْۢبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا‌ ؕ قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ‌ؕ وَظَلَّلْنَا عَلَيْهِمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَيْهِمُ الْمَنَّ وَالسَّلْوٰىؕ كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ‌ؕ وَ مَا ظَلَمُوْنَا وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏

(பனூ இஸ்ராயீல் சமுதாயமான) அவர்களைப் பன்னிரண்டு கிளைகளைக் கொண்ட சமுதாயங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமுதாயத்தினர் அவரிடம் தண்ணீர் கேட்ட போது “உமது கைத்தடியால் இப்பாறையில் அடிப்பீராக!” என்று அவருக்கு அறிவித்தோம். உடனே அதில் பன்னிரண்டு நீரூற்றுக்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர்.

அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா (எனும் உண)வை இறக்கினோம். “உங்களுக்கு நாம் வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!” (என்று கூறினோம்) அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்கே தீங்கிழைத்தனர்.

(அல்குர்ஆன்: 7:160)

உஹுதுப்போர் தினத்தன்று உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல் மீது ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது.  அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தையை)ப் பார்க்க நாடினேன்.  எனினும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்துவிட்டனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன்.  மீண்டும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிரேதத்தை  தூக்கும்படி) கட்டளையிட்டார்கள்.

(பிரேதம்) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “யார் அந்தப் பெண்?” என்று கேட்டார்கள். “அம்ருடைய மகள்” என்றோ  அல்லது “அம்ருடைய சகோதரி” என்றோ (கூடியிருந்தோர்) கூறினர்.  நபி (ஸல்) அவர்கள் “நீ ஏன் அழுகிறாய்?” அல்லது “நீ அழ வேண்டாம்”  என்று கூறிவிட்டு, “பிரேதம் தூக்கப்படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து அதற்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
ஆதாரம்:(புகாரி: 1293, 1244, 2816, 4080),(முஸ்லிம்: 4875, 4876)

நிழலற்ற நாளில் நிழல் பெறுவோர்

பூமியில் குறிப்பிட்ட காலம் வாழும் நமக்கு, சுட்டெரிக்கும் சூரியனின் செங்கதிர்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு ஏக இறைவன் நிழலைக் கொடுத்திருக்கிறான். ஆனால் ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் அழிந்து, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, அவன் முன்னால் அடிமைகளாய் அனைவரும் மஹ்ஷர் மைதானத்தில் ஒன்றுதிரட்டப்பட்டு நிற்கும் அந்த மறுமை நாளின் போது. அவனது நிழல் தவிர வேறெந்த நிழலும் இருக்காது.

மரங்களோ செடி கொடிகளோ கட்டிடங்களோ நிழல் கொடுக்கும் எந்தவொன்றும் இருக்காது. அப்போது, அந்த அதிபதியின் நிழலில் சில வகையான பண்புகள் கொண்ட மனிதர்கள் மட்டும் இருப்பார்கள். வேறு நிழலற்ற அந்த நாளில் மற்றவர்களின் நிலையை குறித்து யோசிப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது இல்லையா? எனவே. இங்கு நிம்மதியளிக்கும் நிழலைக் கொடுத்ததற்காக நாம் தினந்தோறும் தவறாது ஏக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவன் நம்மீது காட்டும் கருணையை இரக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவனது ஆற்றலை உணர்ந்து அவன் சொன்னபடி வாழ வேண்டும்.

அல்லாஹ் தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழலில் (அடைக்கலம்) அளிப்பான்: 

1. நீதி மிக்க ஆட்சியாளர். 

2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 

3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 

4. அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர். 

5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோதும் “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” என்று கூறியவர்.

6. தமது வலக்கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.

7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
ஆதாரம்:(புகாரி: 660, 1423, 6806),(முஸ்லிம்: 1869)

إِنَّ اللهَ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: «أَيْنَ الْمُتَحَابُّونَ بِجَلَالِي، الْيَوْمَ أُظِلُّهُمْ فِي ظِلِّي يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلِّي

அல்லாஹ் மறுமை நாளில், “என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள் எங்கே? எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்” என்று கூறுவான். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி),
ஆதாரம்:(முஸ்லிம்: 5015)

உபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

…பிறகு அபுல்யசர் (ரலி) அவர்கள் தம் கண்கள்மீது இரு விரல்களை வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: இந்த என்னிரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப் பகுதியில் கையை வைத்து) இந்த உள்ளம் மனனமிட்டது. பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருகின்றான்.

ஆதாரம்:(முஸ்லிம்: 5736)

நிழல் நிறைந்த சொர்க்கம்

நம்பிக்கைக் கொண்டு, நல்லறங்கள் செய்வோருக்கு சொர்க்கத்தைத் தருவதாக இறைவன் வாக்குறுதி வழங்கியிருக்கிறான். அத்துடன், அந்தச் சொர்க்கத்திற்கு செல்வதற்கேற்ப செயல்படுவதில் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக அதன் தன்மையை, அதில் இருக்கும் இன்பங்களைத் திருமறையில் வல்ல இறைவன் குறிப்பிட்டுள்ளான்.

ஆறுகள், சோலைகள், கனிகள் என்று அங்கு இருக்கும் இன்பங்களைக் குறிப்பிடும்போது நிழலைப் பற்றிப் பல இடங்களில் பேசுகிறான். இங்கு இருப்பது போன்று இல்லாமல் சொர்க்கத்தில் இருக்கும் நிழலானது நீண்டதாகவும் நிலையானதாகவும் மிகச் சிறந்ததாகவும் இருக்கும் என்று எடுத்துரைக்கிறான்.

அத்தகைய நிழல்களில் நம்பிக்கைக் கொண்டவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள் என்றும், அவர்களுக்காகவே அந்த நிழல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வல்ல இறைவன் குறிப்பிடுகிறான். இவ்வாறு, சொர்க்கத்தின் இன்பங்களில் நிழல் என்பது முக்கிய ஒன்றாக  இருக்கும் என்பதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ لَـهُمْ فِيْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيْلًا‏

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம். 

(அல்குர்ஆன்: 4:57)

 

 مَثَلُ الْجَـنَّةِ الَّتِىْ وُعِدَ الْمُتَّقُوْنَ‌ ؕ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ ؕ اُكُلُهَا دَآٮِٕمٌ وَّظِلُّهَا‌ ؕ تِلْكَ عُقْبَى الَّذِيْنَ اتَّقَوْا‌ ‌ۖ  وَّعُقْبَى الْكٰفِرِيْنَ النَّارُ‏

(இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதன் உணவும், நிழலும் நிரந்தரமானதாக இருக்கும். இதுவே (இறைவனை) அஞ்சுவோர்க்கான முடிவாகும். (ஏக இறைவனை) மறுப்போரின் முடிவு நரகமே!

(அல்குர்ஆன்: 13:35)

 اِنَّ اَصْحٰبَ الْجَـنَّةِ الْيَوْمَ فِىْ شُغُلٍ فٰكِهُوْنَ‌ۚ‏ هُمْ وَاَزْوَاجُهُمْ فِىْ ظِلٰلٍ عَلَى الْاَرَآٮِٕكِ مُتَّكِــــٴُـوْنَ‏

 لَهُمْ فِيْهَا فَاكِهَةٌ وَّلَهُمْ مَّا يَدَّعُوْنَ‌ ۖ‌ۚ‏

 سَلٰمٌ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِيْمٍ

அந்நாளில் சொர்க்கவாசிகள் (தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள். அவர்களும், அவர்களது துணைகளும்  கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும். ஸலாம்! இது நிகரற்ற அன்புடைய இறைவனின் கூற்றாகும். 

(அல்குர்ஆன்: 36:55-58)

وَاَصْحٰبُ الْيَمِيْنِ ۙ مَاۤ اَصْحٰبُ الْيَمِيْنِؕ‏  فِىْ سِدْرٍ مَّخْضُوْدٍۙ‏  وَّطَلْحٍ مَّنْضُوْدٍۙ‏ وَّظِلٍّ مَّمْدُوْدٍۙ
 وَّ مَآءٍ مَّسْكُوْبٍۙ‏  وَّفَاكِهَةٍ كَثِيْرَةٍۙ‏  لَّا مَقْطُوْعَةٍ وَّلَا مَمْنُوْعَةٍۙ‏  وَّ فُرُشٍ مَّرْفُوْعَةٍؕ‏  اِنَّاۤ اَنْشَاْنٰهُنَّ اِنْشَآءًۙ‏  فَجَعَلْنٰهُنَّ اَبْكَارًاۙ‏  عُرُبًا اَتْرَابًاۙ‏  لِّاَصْحٰبِ الْيَمِيْنِؕ‏  ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ‏  وَثُلَّةٌ مِّنَ الْاٰخِرِيْنَؕ

(அடுத்தது) வலது புறத்தில் இருப்பவர்கள்! வலது புறத்தில் இருப்போர் என்பது என்ன? அவர்கள் முள் இல்லாத இலந்தை மரத்தினடியிலும், குலைகள் தொங்கும் வாழை மரத்தினடியிலும், நீண்ட நிழல்களின் அடியிலும், ஓட்டி விடப்படும் தண்ணீருக்கு அருகிலும், தடுக்கப்படாத, தீர்ந்து போகாத, ஏராளமான கனிகளுக்கு அருகிலும் உயரமான விரிப்புகளின் மீதும் இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 56:27-40)

 فَوَقٰٮهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْيَوْمِ وَ لَقّٰٮهُمْ نَضْرَةً وَّسُرُوْرًا‌ۚ‏  وَجَزٰٮهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًا ۙ‏  مُّتَّكِـِٕـيْنَ فِيْهَا عَلَى الْاَرَآٮِٕكِ‌ۚ لَا يَرَوْنَ فِيْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِيْرًا‌ۚ‏  وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِيْلًا‏  وَيُطَافُ عَلَيْهِمْ بِاٰنِيَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِيْرَا۟ؔ ۙ‏  قَوَارِيْرَا۟ؔ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِيْرًا‏  وَيُسْقَوْنَ فِيْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيْلًا ۚ‏

எனவே, அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான். அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான். அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள். அதன் நிழல்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும். அதன் கனிகள் மிகத் தாழ்வாகத் தொங்கும். 

(அல்குர்ஆன்: 76:11-17)

சுவனத்தில் நிழல்

இந்தக் கோடை காலத்தில் வெயிலை மட்டும் கொடுத்து நம்மை வேதனையில் தள்ளிவிடாமல் அதிலிருந்து இதமளிக்கும் நிழலையும் தந்து வல்ல இறைவன் நம் மீது கருணை மழையைப் பொழிந்திருக்கிறான். நமது நலனுக்காக அவன் அளித்திருக்கும் அளவிலா அருட்கொடைகளில் நிழலும் உள்ளடங்கும். 

 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ ظِلٰلٍ وَّعُيُوْنٍۙ‏  وَّفَوَاكِهَ مِمَّا يَشْتَهُوْنَؕ‏  كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓئًا ۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏

(இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் விரும்புகிற கனிகளிலும் இருப்பார்கள். “நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்!” (எனக் கூறப்படும். இவ்வாறே நன்மை செய்தோருக்கு நாம் கூலி வழங்குவோம்.

(அல்குர்ஆன்: 77:41-44)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரகத்திலிருந்து விடுதலை பெறும் மனிதர் குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:

(நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம்  நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கிக் கரித்தும் விடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, “உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறை)வன் சுபிட்சமிக்கவன்; முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான்” என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார்.

அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், “என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன்” என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், “மனிதா! அதை நான் உனக்கு வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவா” என்று கூறுவான். அதற்கு அவர், “இல்லை; இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” என்று கூறி, வாக்குறுதி அளிப்பார்.

அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டுசெல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் நீரையும் பருகிக்கொள்வார். பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தைவிட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட) உடன் அவர், “என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்து கொள்வேன்! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” என்று கூறுவார்.

அதற்கு இறைவன், “மனிதா! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டுசென்றால், வேறொன்றை என்னிடம் நீ கேட்கக்கூடுமல்லவா” என்பான். உடனே அவர், வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார்.

இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார். பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்மியமானதாய் இருக்கும்.

உடனே அவர், “என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நிழலைப் பெறுவேன்; அதன் நீரைப் பருகிக் கொள்வேன்; இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” என்று கூறுவார். அதற்கு இறைவன், “மனிதா! வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என்று (முன்பு) என்னிடம் நீ வாக்குறுதி அளிக்கவில்லையா?” என்று கேட்பான்.

அதற்கு அவர், “ஆம்; என் இறைவா! இந்தத் தடவை (மட்டும்); இனி, இதன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்” என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர், “என் இறைவா! சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக!” என்பார்.

அதற்கு இறைவன், “மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே?” என்று கேட்பான்.  அதற்கு அவர், “என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?” என்று கேட்பார். அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். மேலும், “நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்” என இறைவன் கூறுவான்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
(முஸ்லிம்: 310, 311)

إِنَّ فِي الجَنَّةِ لَشَجَرَةً، يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لاَ يَقْطَعُهَا

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி),
(புகாரி: 6552)

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி) (ரலி),
(புகாரி: 6553)

நிழலே இல்லாத நரகம்

இறைமறுப்பிலும், இணைவைப்பிலும் வீழ்ந்து வாழ்வை அர்த்தமற்றதாக ஆக்கிக் கொள்வோர் மறுமையில் நரகில் வீழ்வார்கள் என்று அல்லாஹ் திருமறையில் எச்சரிக்கிறான். அத்துடன், அந்த நரகத்தின் கடுமையை எடுத்துச் சொல்லி, அதில் கொண்டு போய்ச் சேர்க்கும் காரியங்களை விட்டும் விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறான்.

குடிப்பதற்குக் கொதிநீர், சாப்பிடுவதற்குக் கற்றாழைச் செடி மற்றும் அணிவதற்கு நெருப்பு ஆடை என நரகில் இருக்கும் கொடுமையை விளக்கிப் பட்டியல் போடும்போது, அங்கு அடர்ந்த புகையே நிழலாக இருக்கும் என்று குறிப்பிடுகிறான். அது எந்த நிலையிலும் அங்கு இருப்பவர்களுக்கு அமைதியை அளிக்காது; அவர்களை எந்த வகையிலும் பாதுகாக்காது என்று அல்லாஹ் கூறுகிறான்.

அத்தகைய நிழலற்ற நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி நம்பிக்கையாளர்கள் ஏக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். நரகில் விழச் செய்யும் காரியங்களை விட்டும் நீங்கிக் கொள்ள வேண்டும்.

وَاَصْحٰبُ الشِّمَالِ ۙ مَاۤ اَصْحٰبُ الشِّمَالِؕ‏
 فِىْ سَمُوْمٍ وَّحَمِيْمٍۙ‏
وَّظِلٍّ مِّنْ يَّحْمُوْمٍۙ‏

(அடுத்த சாரார்) இடது புறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன? அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 56:41-43)

اِنْطَلِقُوْۤا اِلٰى ظِلٍّ ذِىْ ثَلٰثِ شُعَبٍۙ‏
 لَّا ظَلِيْلٍ وَّلَا يُغْنِىْ مِنَ اللَّهَبِؕ‏
 اِنَّهَا تَرْمِىْ بِشَرَرٍ كَالْقَصْرِ‌ۚ‏

நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி – மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை – நோக்கி நடங்கள்! அது நிழல் தரக் கூடியது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.

(அல்குர்ஆன்: 77:30-32)

நிழலும் நேர்ச்சையும்

இறைவன் நமக்காக கொடுத்திருக்கும் இன்பங்களை அவனது கட்டளைக்கு உட்பட்ட வகையில் அனுபவிப்பதில் எந்தவொரு தவறும் இல்லை. இன்னும் சொல்வதெனில், நமக்காகவே உலகிலுள்ள அனைத்தையும் படைத்திருப்பதாக வல்ல இறைவன் தமது அருள்மறையில் குறிப்பிடுகிறான். எனவே, இறைவன் நமக்கு அனுமதித்திருக்கும் அருட்கொடைகளுள் எந்தவொன்றையும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் நமக்கு நாமே தடைசெய்து கொள்ளக்கூடாது.

இவ்வாறு, நமக்காக வழங்கப்பட்டிருக்கும் இன்பங்களை தடுக்கப்பட்டதாக சித்தரிக்கும் எந்தவொரு செயலையும் இறைவனின் பெயரால் செய்தாலும் அதுவும் வன்மையாகக் கண்டிப்பதற்குரிய ஒன்றே ஆகும். இத்தகைய வரம்பு மீறுதலை ஒருபோதும் இறைவன் விரும்பவும் மாட்டான்; அதற்குக் கூலி வழங்கவும் மாட்டான் என்பதே நிதர்சனம்.

அந்த வகையில் எனது இறைவனின் அருளைப் பெறுவதற்காக  எப்போதும் நிழலில் நிற்கவே மாட்டேன்; எனது அனைத்துக் காரியங்களும் வெயிலில்தான் இருக்கும் என்று ஒருவர் சொன்னால் அதற்கேற்ப செயல்பட்டால் அவரை பழுத்த பக்திப் பழமாக பார்க்கக் கூடாது. அவர் இஸ்லாமிய மார்க்கத்தை சரியாக விளங்காதவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

بَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ، فَسَأَلَ عَنْهُ فَقَالُوا: أَبُو إِسْرَائِيلَ، نَذَرَ أَنْ يَقُومَ وَلَا يَقْعُدَ، وَلَا يَسْتَظِلَّ، وَلَا يَتَكَلَّمَ، وَيَصُومَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ، وَلْيُتِمَّ صَوْمَهُ»

நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் (வெயிலில்) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், “(இவர் பெயர்) அபூஇஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் எனவும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) எனவும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் எனவும் நேர்ந்து கொண்டுள்ளார்” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும். நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
(புகாரி: 6704)

நிழல்களை நாசப்படுத்தாதீர்

இஸலாமிய மார்க்கம் மக்கள் நலம் நாடும் வாழ்க்கைத் திட்டம் என்பதை நாம் அறிவோம். இந்த மார்க்கம் மட்டுமே மக்களுக்கு நன்மை தரும் காரியங்கள் எதுவாக இருப்பினும் அவற்றைச் செய்வதற்கு ஆர்வத்தை அளிக்கிறது. அதே வேளையில் மக்களுக்குத் தொல்லைகளை, இடையூறுகளைக் கொடுக்கும் காரியங்கள் எதுவாயினும் அவற்றைக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்கிறது.

எந்தளவிற்கெனில், பொதுநலத்தைப் போதிப்பதன் பிரதிபலிப்பாக சில தீமையான காரியங்களைப் பற்றிச் சொல்லும் போது, இந்தக் காரியத்தைச் செய்தால் இறைவனின் சாபம் கிடைக்கிறது என்று இஸ்லாம் வன்மையாக எச்சரிக்கிறது. அத்தகைய காரியங்களில் ஒன்று மக்களுக்குப் பயன்படும் வகையில் இருக்கும் நிழல்களில் அசுத்தம் செய்வதாகும்.

இந்த இழிச்செயல் பாமர மக்கள் பெருகியிருக்கும் கிராமம் முதல் படித்தவர்கள் நிறைந்திருக்கும் நகரம் வரை அனைத்துத் தரப்பு மக்கள் வாழும் இடங்களிலும் சர்வசாதாரணமாக அரங்கேறுகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயலைவிட்டும் அனைவரும் அதிலும் குறிப்பாக நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக விலகிக் கொள்ள வேண்டும்.

«اتَّقُوا اللَّعَّانَيْنِ» قَالُوا: وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ، أَوْ فِي ظِلِّهِمْ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு, “மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம், ஜலம் கழிப்பதுதான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 448)

நிழல்களைத் தடுக்காதீர்

இறைவன் கொடுத்திருக்கும் இன்பங்களை சுயநலத்தோடு தம்மோடு தடுத்து கொள்ளும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, எந்த விஷயங்களில் கண்டிப்பாக  பொதுநலத்தோடு நடந்து கொள்ள வேண்டுமோ அவற்றில் கருமித்தனத்தை கடைபிடிக்கும் மக்கள் இருக்கிறார்கள். குறிப்பிட்டு கூறுவதெனில், தங்களது இடத்தில் இருக்கும் நிழல்களில் தொல்லை தராத வகையில் பிற ஜீவராசிகள் வெயிலுக்காக ஒதுங்குவதற்குக்கூட இடமளிக்காதவர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தமான உண்மை.

இத்தகையவர்கள் தங்களது வீட்டின் அல்லது தோட்டத்தின் நிழலில் பாதைசாரிகள் சிறிது நேரம் நின்று ஒய்வு எடுத்தாலும் அவர்களை விரட்டிவிடுகிறார்கள். இவ்வாறு நிழல்கள் விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டும் நபர்கள் பின்வரும் செய்திகளிலிருந்து படிப்பினை பெற்றுத் திருந்த வேண்டும். மேலும், பிறருக்கு நிழல் அளிப்பதும், அதற்கேற்ப மரம் நடுதல் போன்ற காரியங்களைச் செய்வதும் மறுமையில் நமக்கு நன்மை தரும் என்பதையும் விளங்கி கொள்ளலாம்.

ஒரு மனிதர் என்னிடம் வந்து, “அப்துல்லாஹ்வின் அன்னையே! நான் ஓர் ஏழை. நான் தங்கள் வீட்டு நிழலில் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்” என்று கூறி (அனுமதி கோரி)னார். நான் “உங்களுக்கு அனுமதி அளித்தால் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அதை மறுப்பார். எனவே, (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் (வீட்டில்) இருக்கும்போது நீங்கள் வந்து (இது போன்று) அனுமதி கேளுங்கள்” என்று கூறினேன்.

அவ்வாறே அம்மனிதர் வந்து, “அப்துல்லாஹ்வின் அன்னையே! நான் ஓர் ஏழை. நான் தங்கள் வீட்டு நிழலில் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்” என்று கேட்டார். உடனே நான் (அவருக்கு மறுப்புத் தெரிவிப்பது போல்) மதீனாவில் உமக்கு என் வீட்டைத் தவிர வேறிடம் கிடைக்கவில்லையா?” என்று கேட்டேன்.

அப்போது (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் என்னிடம், “உனக்கு என்ன ஆயிற்று? ஓர் ஏழை வியாபாரி (நமது வீட்டு நிழலில்) வியாபாரம் செய்வதை நீ ஏன் தடுக்கிறாய்?” என்று கேட்டார். பிறகு அவர் வியாபாரம் செய்து (நல்ல) வருமானத்தைத் தேடிக் கொண்டார்.

அவருக்கே (எனது) அடிமைப் பெண்ணை நான் விற்றேன். அந்தக் காசை நான் எனது மடியில் வைத்துக்கொண்டிருந்த போது (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து, “அதை எனக்கு அன்பளிப்பாக வழங்கு” என்று கேட்டார். நான் “இதை ஏற்கெனவே தர்மமாக அளி(க்கத் தீர்மானி)த்து விட்டேன்” என்று கூறினேன்.

அறிவிப்பவர்: அஸ்மா (ரலி),
(முஸ்லிம்: 4398)

مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا إِلَّا كَانَ مَا أُكِلَ مِنْهُ لَهُ صَدَقَةً، وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ، وَمَا أَكَلَ السَّبُعُ مِنْهُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَمَا أَكَلَتِ الطَّيْرُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَلَا يَرْزَؤُهُ أَحَدٌ إِلَّا كَانَ لَهُ صَدَقَةٌ

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
(முஸ்லிம்: 3159)

நிலையற்ற நிழல் உலகம்

மறுமையில் வெற்றி பெறுவோர் யார்? தோல்வியை அடைவோர் யார்? என்று நம்மைச் சோதிப்பதற்காகவே இந்த உலக வாழ்க்கை வழங்கப்பட்டுள்ளது. நிரந்தரமான வாழ்க்கை மறுமை வாழ்க்கையே தவிர இந்த உலக வாழ்க்கையல்ல. இந்த உண்மையை உள்ளத்தில் ஆழப்பதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஏராளமான செய்திகள் பல்வேறு கோணத்தில் குர்ஆன் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு அற்புதமான உதாரணத்தின் மூலம் இந்த உணர்வை நமக்குள் பதியச் செய்கிறார்கள்.

தொலை தூரமாக செல்லும் பயணி ஒருவர், ஒரு மரத்தின் நிழலில் கொஞ்சம் நேரம் ஒய்வு எடுத்த பிறகு, அதை விட்டும் பிரிந்து சென்று விடுவதைப் போன்றே இந்த உலக வாழ்க்கை ஆகும். அனைவருமே இந்த உலகில் சில காலம் இருந்த பின்னர் இதை விட்டும் சென்றுவிடுவோம். எனவே, இந்த உலகமும் உலக வாழ்வும் நிரந்தரமற்றது என்பதை விளங்கி, நாம்  மறுமை வெற்றிக்காகப் பாடுபட வேண்டும். உலக வாழ்வை விட மறுமை வாழ்வுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கடினமான பாயின் மீது ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அது அவர்களுடைய தோள்பட்டையின் ஓரத்தில் தாரையை ஏற்படுத்தியிருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்விழித்த போது அவரது தோள்பட்டையை தடவிக் கொடுத்த நிலையில், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு நீங்கள் கட்டளையிட்டிருக்கக் கூடாதா? நாங்கள் இந்தக் கடினமான பாயின் மீது ஏதேனுமொன்றை (விரிப்பாக) விரித்திருப்போமே?” என்று நான் கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன தொடர்பு? எனக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள உதாரணம் ஒரு பயணி ஆவார். அவர் ஒரு மரத்தின் அடியில் நிழல் பெறுகிறார். பிறகு (அதிலே) ஓய்வு எடுக்கிறார். பிறகு அதை விட்டுச் சென்று விடுகிறார். இதுவே எனக்கும் இந்த உலகத்திற்குமுள்ள தொடர்பு” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),
(அஹ்மத்: 3709, 3525)

அகிலத்திலுள்ள எந்தவொன்றையும் அல்லாஹ் வீணுக்காகவோ விளையாட்டுக்காகவோ படைக்கவில்லை. மாறாக, ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் சரியான மறுக்க முடியாத காரணம் மறைந்திருக்கிறது. அந்த வகையில் அகிலத்தின் இறைவனை அறியவும் அவனது ஆற்றலை விளங்கவும் நிழலும் ஒரு வழியாக, வாய்ப்பாக இருக்கிறது. இத்தகைய நிழல் சம்பந்தமாக மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை அறிந்து கொண்டோம்.

மேலும் நிழல் விஷயத்தில் நம்பிக்கையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தகவல்களையும் தெரிந்து கொண்டோம். நாமறிந்த செய்திகள் நமக்குப் பயனளிக்கும் வகையில் வாழ்ந்து இரு உலகிலும் வெற்றி பெறுவோமாக! அதற்கு ஏக இறைவன் நமக்குத் துணை புரிவானாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.