நிகழ்ந்து விட்ட அடையாளங்கள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

ஒவ்வொரு விஷயத்திலும் தொடக்கம் என்பது உள்ளது போல் முடிவு என்பதும் இருப்பது இந்த உலக விதி. அது போல், இந்த உலகம் ஒரு நாள் அழியக்கூடியதாக வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அத்தோடு இல்லாமல், அது எப்போது அழியும் என்பதற்கு சில அடையாளங்களையும், சான்றுகளையும் தந்துள்ளான்.

இறைவனிடத்தில் மட்டும் உள்ள ஞானம்

”அந்த நேரம்! எப்போது வரும்?” என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். ”இது

பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்” என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ”இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது” என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை. (அல்குர்ஆன்: 7:187)➚

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நானும் மறுமையும் ‘இதிலிருந்து இதைப் போல்’ அல்லது ‘இந்த இரண்டையும் போல்’ (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறிய படி சுட்டுவிரலையும், நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி),(புகாரி: 5301)

காலம் சுருங்குதல்

காலம் வெகுவேகமாக ஓடுவதை இன்று நாம் காண்கிறோம். மனிதனின் விஞ்ஞான அறிவு வளர்ந்து அவன் கண்டு பிடிக்கும் நவீன சாதனங்களால் காலம் மிகவும் சுருங்கி விட்டதைக் காண்கிறோம்.

ஒரு வாரம் பயணம் செய்யும் தூரம் ஒரு நாளில் சர்வ சாதாரண மாகக் கடக்கப்படுகின்றது. ஒரு வாரத்தில் செய்யப்படத் தக்க வேலைகள் ஒரு நாளில் செய்து முடிக்கப்பட சாதனங்கள் இன்று உள்ளன. உலகில் எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகள் அதே நேரத்தில் முழு உலகையும் எட்டி விடுகின்றன. இத்தகைய முன்னேற்றங்களும் கூட அந்த நாள் சமீபித்து வருகின்றது என்பதற்கான அடையாளமே.

காலம் சுருங்கும் வரை அந்தநாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகிவிடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபியவர்கள் காட்டிய அடையாளம்.(திர்மிதீ: 2254)

மகளின் தயவில் தாய்

ஒரு தாய் எத்தனை ஆண் மக்களைப் பெற்றாலும் அவர்கள் தாயைக் கவனிக்காத நிலை ஏற்படும். மகளை அண்டி வாழும் நிலைமையை அவள் சந்திப்பாள். அங்கே அடிமையாக நடத்தப்படுவாள் என்பது நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அடையாளங்களில் ஒன்றாகும். ”ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்று கூறி நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். இன்றைக்குப் பரவலாக இந்த நிலையைப் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர்.”(புகாரி: 4777, 50)

பொருளாதார வசதியில் மிகவும் பின்தங்கியவர்களில் சிலர் மிகவும் உயர்ந்த வசதியைப் பெறுவது உலகம் தோன்றியது முதல் நடந்து வரும் நிகழ்ச்சிகளே. ஆயினும் அத்தகைய பின் தங்கியவர்கள் ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்த நிலையை அடைவதென்பது கியாமத்நாள் நெருங்கிவிட்டது என்பதற்கான அடையாளமாகும்.

‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும், வெறுங்காலுடனும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மிகவும் உயர்ந்த கட்டிடங்களைக் கட்டிக் கொள்வார்கள்” என்ற முன்னறிவிப்பின் மூலம் நபி(ஸல்) இதை விளக்குகிறார்கள். இன்றைக்கு அரபியர்களுக்குக் கிடைத் திருக்கும் வாழ்வு இன்ன பிற பகுதிகளில் நடக்கும் புரட்சிகரமான மாறுதல்களும் இதை விளங்கிடப் போதுமானவையாகும்.

பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்

மிகவும் பின் தங்கியவர்கள் ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்த நிலையை அடைவார்கள் என்பதும் யுதத முடிவு நாளுக்குரிய அடையாளங்களில் ஒன்றாகும்.

கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளுவார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.(புகாரி: 50)

குடிசைகள் கோபுரமாகும்

அன்றைய மனிதன் பெரும்பாலும் குடிசைகளிலேயே வாழ்ந்தான். பணம் படைத்தவர்கள் ஓட்டு வீட்டில் வசித்தனர். உயரமாக அடுக்கு மாடிக் கட்டிடங்களை எழுப்பும் மூலப் பொருட்கள் அன்று கண்டு பிடிக்கப்படவில்லை.

மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாத வரை மறுமை நாள் வராது.(புகாரி: 7121)

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்

”விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.(புகாரி: 80, 81, 5577, 6808, 5231)

ஒளிவு மறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்த விபச்சாரம் இன்று வெளிப்படையாக பகிரங்கமாக நடக்கின்றது. அரசாங்கமே சிவப்பு விளக்குப் பகுதியை ஏற்படுத்துவதும், அன்னியப் பெண்களுடன் உறவு கொள்ளும் போது ஆணுறை பயன்படுத்துங்கள்’ என்று பண்பாடு மிக்க இந்தியா போன்ற நாடுகளே செய்யும் விளம்பரமும் விபச்சாரம் எந்த அளவுக்கு பெருகிப்போயுள்ளது என்பதை உணர்த்துகிறது. இந்தத் தீமைக்கு எதிராகப் போராடக் கடமைப்பட்ட பல அரபு நாடுகளில் கூட இந்தத் தீமை தலை விரித்தாடும் போது அந்த நாள் மிகவும் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது.

மக்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்ட அரசுகளே மதுபான விற்பனை செய்யத் துவங்கி விட்டன. நாகரீகமான பெயர்களில் அறிமுகப்படுத்தப்படும் உயர் ரக அன்னிய மதுவுக்கு மக்கள் அடிமைப்பட்டு வருவதும் மறுக்க முடியாத உண்மை.

தகுதியற்றவர்களிடம் பொறுப்பு

நாணயம் பாழாக்கப்படும்போது அந்த நாளை எதிர்நோக்கு! என்று நபியவர்கள் கூறியபோது எவ்வாறு பாழ்படுத்தப்படும்? என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர்நோக்கு” என்று விடையளித்தார்கள்.(புகாரி: 59, 6496)

பாலை வனம் சோலை வனமாகும்

இன்றைய அரபுகள் அடைந்துள்ள பொருளாதார உயர் நிலை 200 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து பார்க்கக் கூட இயலாததாகும். அவர்கள் வழங்கும் ஸகாத்தைப் பெறக் கூட அங்கே மக்களில்லை. ஸகாத்தை வழங்குவதற்காக ஏழை நாடுகளை அவர்கள் தேடிச் செல்லும் நிலையையும் நாம் காண்கிறோம்.

எதற்கும் உதவாத பாலை நிலம்’ என்று உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தில் சோலைகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த மாறுதலும் கூட அந்த நாள் நெருங்கி விட்டது என்பதற்கான அடையாளமே.

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது.
(முஸ்லிம்: 1681)

கொலைகள் பெருகுதல்

மனிதனை மனிதன் கொன்று குவிப்பது தொன்று தொட்டு நடந்து வருவது தான். ஆயினும் இன்றைய நவீன யுகத்தில் மிகப் பெரும் அளவுக்கு கொலைகள் பெருகிவிட்டதைக் காண்கிறோம்.

அற்பமான காரணங்களுக்காகவும், கூலிக்காகவும் கொலைகள் நடக்கின்றன. நவீன ஆயுதங்கள் காரணமாக கொலைகள் எளிதாகி விட்டன. சொந்த பந்தங்களுக்கிடையிலும். மனைவிக்கிடையிலும் கூட கொலைகள் அதிகரித்துள்ளன. கணவன்

சட்டத்தின் காவலர்களும் கூட கொலை செய்கின்றனர். போர்கள் மூலமும் கொல்லப்படுவோர் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும் செயல்பாடு (அமல்) குறைந்து போய் விடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ் பெரும் விடும் என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ கொலை, கொலை” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),(புகாரி: 7061)

இன்று ஆதரித்துப் பேசியதை நாளை எதிர்த்துப் பேசி நாளை மறுநாள் மீண்டும் ஆதரித்துப் பேசுகின்றனர். கொடுக்கின்ற காசுக்கா கவே இந்த இழிந்த நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்கின்றனர்.

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக்கூடியவரகள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

(அஹ்மத்: 1511)

நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்

சமீப காலமாக உலகில் பூகம்பங்கள் மிகவும் அதிகமாகியுள்ளன. இதனால் இலட்சக் கணக்கான மக்கள் மாண்டு போகின்றனர். இத்தகைய பூகம்பங்கள் ஆண்டுக்கு இரண்டு தடவைக்கு குறையாமல் நடப்பதை நாம் காண்கின்றோம்.

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

(புகாரி: 1036, 7121)

பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது

தூய எண்ணத்துடன் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் இன்று பெருமையை வெளிப்படுத்தும் அடையாளமாக மாறி வருவதைக் காண்கிறோம். அந்த ஊர் பள்ளிவாசலை விட நம் ஊர் பள்ளிவாசல் மட்டமா என்ற எண்ணத்தில் போட்டிக்காக பணத்தை வாரியிறைத்து ஆடம்பரமாக பள்ளிகள் கட்டப்படுகின்றன.

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக் முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

(நஸாயீ: 682) ,(அபூதாவூத்: 379) ,(இப்னு மாஜா: 731) ,(அஹ்மத்: 11931, 12016, 12079, 12925, 13509)

நெருக்கமான கடை வீதிகள்

அன்றைய காலத்தில் கடை வீதிகள் பெரிய அளவில் கிடையாது. குறிப்பிட்ட நாட்களில் கூடும் சந்தைகளில் தான் மக்கள் பொருட்களை வாங்கியாக வேண்டும். ஆனால் இன்று கண்ட இடத்திலெல்லாம் கடைகளைக் காண்கிறோம்.

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

(அஹ்மத்: 10306)

பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

ஆண்களும், பெண்களும் ஏறக்குறைய சம அளவில் தான் இருந்து வந்தனர். அவர்களின் எண்ணிக்கையில் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் ஏதும் இருக்கவில்லை. ஆனால் இன்று பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பெண் சிசுக் கொலை மூலம் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை யைக் குறைக்க கொடியவர் சிலர் முயற்சி செய்தும் கூட ஆண்களை விட பெண்கள் தாம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றனர்.

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

(புகாரி: 81, 5231, 5577, 6808)

ஆடை அணிந்தும் நிர்வாணம்

பெண்களின் ஆடைகளில் இன்று பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆண்களை விட கவர்ச்சி அதிகம் உள்ள பெண்கள் ஆண்கள் அணிவதை விட குறைந்த அளவு மறைக்கும் ஆடைகளை விரும்பி அணிகின்றனர். அவர்கள் பெயரளவுக்குத் தான் ஆடை அணிந்துள்ளனர். உண்மையில் நிர்வாணமாகத் தான் உள்ளனர். முட்டுக்கால்களுக்குக் கீழே உள்ள பகுதியை வெளிப்படுத்தும் ஆடையை ஆண்கள் கூட அணிவதில்லை. ஆனால் பெண்கள் கூச்சமின்றி இத்தகைய ஆடைகளை அணிகின்றனர். இடுப்புப் பகுதியும், முதுகுப் பகுதியும் தெரியும் வகையில் ஆண்கள் கூட ஆடை அணிவதில்லை. ஆனால் பெண்கள் கொஞ் சமும் உறுத்தலின்றி இது போன்ற ஆடைகளை அணிகின்றனர்.

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்

(முஸ்லிம்: 3971, 5098)

உயிரற்ற பொருட்கள் பேசுவது

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

(அஹ்மத்: 11365)

பறவைகள் மற்றும் விலங்கினங்களை ஆய்வு செய்து அவை தமக்கிடையே பேசிக் கொள்வதை மனிதனும் விளங்கிக் கொள்ளக் கூடிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. செருப்புகளுக்கு வாராகப் பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று பேசுவதை நாம் காண்கிறோம். ஒளி நாடாக்களிலும் குறுந்தகடுகளிலும் இது போன்ற பொருட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.

பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்

ஏதேனும் ஒரு பொருளை மக்களிடம் விற்பதற்கும் விளம்பரம் செய்வதற்கும் பேச்சுத் திறன் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்கும் பேச்சுத் திறன் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் இன்று பேச்சுத் திறன் ஒரு வியாபாரப் பொருளாகி விட்டது. இவ்வளவு நேரம் பேசுவதற்கு இவ்வளவு ரேட் என்ற அளவில் அந்த வியாபாரம் நடக்கிறது. இன்று ஆதரித்துப் பேசியதை நாளை எதிர்த்துப் பேசி நாளை மறுநாள் மீண்டும் ஆதரித்துப் பேசுகின்றனர். கொடுக்கின்ற காசுக்கா கவே இந்த இழிந்த நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்கின்றனர்.

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

(அஹ்மத்: 1511)

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முஸ்லிம்கள் ஸலாம் கூறுவது நபிவழியாகும். நமக்கு எதிர்ப்படுபவர் அறிமுகமானவராக இருந்தாலும் அறிமுகமற்றவராக இருந்தாலும் ஸலாம் கூற வேண்டும். நபிகள் நாயகத்தின் இந்த வழி காட்டுதலை சமீப காலமாக முஸ்லிம்கள் புறக்கணித்து வருகின்றனர். நன்கு தெரிந்தவர்களைக் கண்டால் மட்டுமே ஸலாம் கூறுகின்றனர்.

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

(ஹாகிம்: 4) /493

பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்

அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்டதே பள்ளிவாசல்கள் என்பதை நாம் அறிவோம். பள்ளிவாசல் பக்கமே தலை வைத்துப் படுக்காத சிலர் பள்ளி வாசலுக்குள் புகுந்து அடுத்த தெருவுக்குச் செல்ல முடியும் என்றால் அதற்கு மட்டும் பள்ளிவாசலைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

(ஹாகிம்: 4) /493

சாவதற்கு ஆசைப்படுதல்

அன்றைய சமுதாயத்தினர் எத்தகைய பிரச்சினைகளையும் துணிச்சலுடன் கையாண்டார்கள். ஆனால் ஆடல், பாடல், சினிமா, நாடகம் போன்றவற்றின் தாக்கத்தினால் மனிதர்களின் மனோ வலிமை குன்றி விட்டது. எந்தப் பிரச்சினையையும் அவர்களால் எதிர் கொள்ள முடிவதில்லை. செத்து விடுவது தான் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று எண்ணுகின்றனர், இதன் காரணமாகவே அதிகமான தற்கொலைகள் நடக்கின்றன.

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

(புகாரி: 7115, 7121)

இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி நபி, கடைசி ரஸுல் என்பதை நாம் அறிவோம். இதற்கு ஏராளமான வசனங்களும். நபிமொழிகளும் சான்றுகளாகவுள்ளன. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் பல்வேறு காலகட்டங்களில் தம்மையும் இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்ட பொய்யர் சிலர் தோன்றினார்கள்.

ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி

(புகாரி: 3609, 7121)

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ‘யமாமாவில் முஸைலமா என்பவன்’, யமன் நாட்டில் அல் அஸ்வத் என்பவன்.

ஆபூபக்ர் (ரலி) ஆட்சியில் தலீஹா என்பவன் ஸஜாஹ் என்ற பெண், பின்னர் முக்தார் என்பவன், அதன் பின்னர் அல்ஹாரிஸ் என்பவன் நமது காலத்தில் மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் என்று தோன்றியுள்ளனர் இவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று பொய்யாக அறிவித்துக் கொண்டனர்.

முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யத் தக்கவை, செய்யக் தகாதவை அனைத்தையும் நமக்குக் கற்றுத் தந்து விட்டுச் சென்றுள்ள னர் அவர்கள் மார்க்கத்தில் எள் முனையளவும் குறை வைக்கவில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் அவர்கள் காட்டிய வழியில் செல்லாமல் மற்றவர்களிடமிருந்து மார்க்கத்தைக் காப்பியடிப்பதைக் காண்கிறோம்.

உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொத்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள்.

(புகாரி: 3456, 7319)

மற்றவர்கள் திதி திவசம் செய்வது போல் முஸ்லிம்கள் மூன்றாம் பாத்திஹா நாற்பதாம் பாத்திஹா என்று ஏற்படுத்திக் கொண்டார்கள். மற்றவர்கள் தேர், சப்பரம் இழுப்பதைப் பார்த்து இவர்கள் சந்தனக் கூடு இழுக்கின்றனர். அவர்கள் கொடி மரம் ஏற்றினால் இவர்களும் ஏற்றுகின்றனர். அவர்கள் பிரசாதம் கொடுத்தால் இவர்கள் தபர்ருக், சீரனி, நார்சா என்று கொடுக்கின்றனர். அவர்கள் பஜனை பாடுவதற்குப் போட்டியாக இவர்கள் மவ்லிதை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அவர்கள் கற்பனைக் காவியம் உருவாக்கிக் கொண்டது போல் இவர்கள் சீராப்புராணம் போன்ற கட்டுக் கதைகளை உருவாக்கிக் கொண்டனர். பேய், பிசாசு, மாயம், மந்திரம் என்று அனைத்திலும் காப்பி அடித்து விட்டனர். இவையும் யுக முடிவு நாள் நெருங்கி விட்டதற்கான அடையாளமாகும்.

இது வரை நிகழாத அடையாளங்கள்

தபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் கூட்டியே எச்சரிக்கை செய்த அடையாளங்களில் இன்று வரை நிறைவேறிய அடையாளங்களை நாம் கண்டோம். அவர்கள் அறிவித்து இன்னும் நிறைவேறாத அடையாளங்களும் உள்ளன.

யூதர்களுடன் மாபெரும் யுத்தம்

யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது ‘முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்.(புகாரி: 2926)

கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்

கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் ”கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்” என்பது நபிமொழி.(புகாரி: 5179)

யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.(புகாரி: 7119)

கஹ்தான் இன மன்னரின் ஆட்சி

(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.(புகாரி: 3517, 7117)

அல்ஜஹ்ஜாஹ் மன்னர்

ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி.(முஸ்லிம்: 5183)

எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்

கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.(முஸ்லிம்: 5191)

செல்வம் பெருகும்

செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி

(புகாரி: 1036, 1412, 7121)

ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார். “நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை” என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.(புகாரி: 1424)

மாபெரும் யுத்தம்

இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.(புகாரி: 3609, 7121, 6936)

பைத்துல் முகத்தஸ் வெற்றி

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. கொத்து கொத்தாக மரணம்

4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6 மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள், ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள்.(புகாரி: 3176)

முதல் இரண்டு நிகழ்வுகள் நடந்து விட்டன.

மூன்றாவதாகக் கூறப்பட்டது ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் பாலஸ்தீனில் நடத்தப்படும் கொடுமைகளைக் குறிக்கிறதா? அல்லது இனி மேல் நடக்கவுள்ளதா? என்பது தெரியவில்லை. மற்றவை இன்னும் நடக்கவில்லை.

மதீனா தூய்மையடைதல்

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி.

(முஸ்லிம்: 2451)

அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை

யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி

(முஸ்லிம்: 3546)

பத்து அடையாளங்கள்

புகை மூட்டம், தஜ்ஜால், (அதிசயப்) பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, ஈஸா(அலை) இறங்கி வருவது, யஃஜுஜ், மஃஜுஜ், கிழக்கே ஒன்று மேற்கே ஒன்று அரபு தீபகற்பத்தில் ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது, இவற்றில் இறுதியாக ‘ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல் ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)(முஸ்லிம்: 5162)

கல்லுக்கும், மண்ணுக்கும் கடவுள் தன்மை வழங்கி வழிபட்டவர்கள், ஏக இறைவனைத் தவிர எவருக்கும், எதற்கும் அஞ்சாதவர்களாக ஆனது (33:39) இந்த நம்பிக்கையினால் தான்.
தன்னலமே பெரிது என்று வாழ்ந்த கூட்டம் தனக்கு வறுமை இருந்த போதும் தன்னை விட மற்றவர்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக மாறியது (59:9) இந்த நம்பிக்கையினால் தான்.

ஒவ்வொரு சமுதாயமும் நேர்வழியின் பக்கம் திரும்புதல்

ஒற்றுமையின்றித் தங்களுக்குள் அன்றாடம் போரிட்டுக் கொண்டிருந்த சமுதாயம்! ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது (3:103) இந்த நம்பிக்கையினால் தான்.

மதுவில் வீழ்ந்து விடந்த சமுதாயம் (5:90) அதிலிருந்து முழுமையாக விடுபட்டது இந்த நம்பிக்கையினால் தான்.

தங்களின் அனைத்துத் தீமைகளையும் விட்டு விலகுவதாக பெண்களும் கூட உறுதிமொழி எடுத்துக் கொண்டது (60:12) இந்த நம்பிக்கையினால்தான்.

எந்த மனிதரிடமும் எந்த உரிமையையும் தேடாமல் சுயமரியாதையைப் பாதுகாக்கக்கூடிய சமுதாயமாக அவர்கள் மாறியதும் (2:273) இந்த நம்பிக்கையினால்தான்.

தங்களுக்கு ‘நல்லது இது’. ‘கெட்டது இது’ என்று தெரியாத ஒரு கூட்டம் அனைத்து நன்மைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அனைத்துத் தீமைகளை விட்டும் அவர்களை விலக்கக் கூடியவர்களாக மாறியதும் (அல்குர்ஆன்: 3:104)➚
இந்த நம்பிக்கையினால் தான்.

நமது சந்திப்பை நம்பாது, இவ்வுலக வாழ்வில் திருப்தியடைந்து அதிலேயே நிம்மதி அடைவோரும், நமது வசனங்களைப் புறக்கணிப்போரும், (தீமையை) செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களின் தங்குமிடம் நரகமாகும்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களை அவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் சேர்ப்பான். அவர்களுக்குக் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். (அல்குர்ஆன்: 10:7-9)➚

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 59:18)➚

ஆண்டுகளின் எண்ணிக்கையில் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தீர்கள்?” என்று (இறைவன்) கேட்பான். ”ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் வாழ்ந்தோம். கணக்கிடுவோரிடம் விசாரிப்பாயாக!” என்று கூறுவார்கள்.

”குறைவாகவே வாழ்ந்தீர்கள். இதை அறிந்தவர்களாக நீங்கள் இருந்திருக்கக் கூடாதா?” என்று அவன் (இறைவன்) கூறுவான். (அல்குர்ஆன்: 23:112-114)➚

இரண்டு விஷயங்களில் ஏமாற்றப்படுகின்றனர்

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். அவை ஒன்று ஆரோக்கியம். மற்றோன்று ஓய்வு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),(புகாரி: 6412)

நபிகளார் சுட்டி காட்டிய மறுமையின் அடையாளங்களில் பெரும்பாலான விஷயங்கள் இன்று நடைமுறையில் நம்மால் பார்க்க முடிகின்றது. அவை அனைத்தையும் உள்ளுணர்ந்து இனி வரும் காலங்களிலாவது அதிக நன்மை செய்யக் கூடிய மக்களாக மாற வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அதன் படி நடக்க முயலுவோம்.