02) நாஸிக் மன்ஸூக் ஏன்? எதற்கு?

முக்கிய குறிப்புகள்: நாஸிக் - மன்ஸூக்

ஹதீஸ் கலை துறையிலும், உசூலுல் ஃபிக்ஹ் எனும் சட்டக் கலைத் துறையிலும் நாஸிக், மன்ஸூக் என்பது பற்றிய அறிவு மிக முக்கியமான ஒன்றாகும்.

‘‘நாஸிக்” ‘‘மன்ஸுக்” என்ற சொற்கள் ‘‘நஸக” என்ற மூலச் சொல்லிருந்து தோன்றியவையாகும்.

‘‘நஸக” என்ற அரபி வார்த்தைக்கு ‘‘நீக்குதல்” ‘‘பிரதியெடுத்தல்” என்று பொருளாகும்.

‘‘இறைவனால் முதலில் விதியாக்கப்பட்ட ஒரு மார்க்கச் சட்டம் இறுதியாக விதியாக்கப்பட்ட மற்றொரு சட்டத்தின் மூலம் மாற்றப்படுவதை” இஸ்லாமிய சட்டக் கலைத் துறையில் ‘‘நஸ்க்” என்று கூறப்படும்.

மாற்றப்பட்ட முந்தைய சட்டத்திற்கு ‘‘மன்ஸுக்” என்றும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு ‘‘நாஸிக்” என்றும் குறிப்பிடப்படும்.

இந்த மாற்றம் என்பது பல வகைகளில் இருக்கும்.

கட்டாயக் கடமையாக இருந்த ஒரு சட்டம் விரும்பியவர் செய்யலாம் என்ற நிலைக்கு மாற்றம் பெற்றிருக்கலாம். அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்று, தடை செய்யப்பட்டது என்ற நிலைக்கு மாற்றப் பட்டிருக்கலாம்.

அதுபோன்று முதலில் தடுக்கப்பட்ட ஒரு விஷயம் பின்னர் அனுமதிக்கப்பட்டதாக மாற்றப்பட்டிருக்கலாம். இப்படிப் பல வகைகளில் இறைவன், தான் முதலில் விதித்த சட்டத்தைப் பின்னர் மாற்றியுள்ளான்.

இறைவன் அல்லது இறைவனுடைய அனுமதியின் பிரகாரம் இறைத்தூதரால் விதிக்கப்பட்ட சட்டங்களை மாற்றும் அதிகாரம் இறைவனுக்கும், இறைவனுடைய அனுமதிப் பிரகாரம் அவனுடைய தூதருக்கும் மட்டுமே உள்ளது. வேறு எந்த அடிப்படைகளும் இறைவனாலும் அவனுடைய தூதராலும் விதிக்கப்பட்ட சட்டங்களை மாற்றாது.

சட்டங்கள் மாற்றப்படுவது ஏன்?

இறைவன், தான் முதலில் விதித்த சட்டங்களை பின்னர் மாற்றுவான் என்பதைப் பல்வேறு வசனங்களில் குறிப்பிட்டுள்ளான்.

مَا نَنْسَخْ مِنْ اٰيَةٍ اَوْ نُنْسِهَا نَاْتِ بِخَيْرٍ مِّنْهَآ اَوْ مِثْلِهَا ‌ؕ اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததையோ, அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

(அல்குர்ஆன்: 2:106)

13:39 يَمْحُوْا اللّٰهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ ‌ۖ ‌ۚ وَعِنْدَهٗۤ اُمُّ الْكِتٰبِ

அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.

(அல்குர்ஆன்: 13:39)

16:101 وَاِذَا بَدَّلْنَاۤ اٰيَةً مَّكَانَ اٰيَةٍ‌ۙ وَّ اللّٰهُ اَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مُفْتَرٍؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ

ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் “நீர் இட்டுக்கட்டுபவர்’’ எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 16:101)

மேற்கண்ட வசனங்களில் இறைவன் தனது வசனங்களை மாற்றுவான் என்று சொல்லப்படுகிறது.

இறைவன் அருளிய வசனத்தை அவனே ஏன் மாற்ற வேண்டும்? அவனுக்குத்தான் அனைத்தும் தெரியுமே? மாற்றுவதற்கு அவசியம் ஏற்படாத வகையில் முதலிலேயே சரியாகக் கூறிடலாமே? என்று இவ்வசனங்களை வாசிக்கும் சிலர் நினைக்கலாம்.

இது இறைவனின் அறியாமையைக் குறிக்காது. அவனது அளவற்ற அறிவையே குறிக்கும் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். வரலாறுகளிலும், வாக்குக் கொடுப்பதிலும் முன்னர் சொன்னதை மாற்றிக் கொள்ளக் கூடாது. சட்டங்களைப் போடும்போது இருக்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்பத்தான் சட்டம் போட வேண்டும். சூழ்நிலை மாறிய பின் சட்டத்தை மாற்றாவிட்டால் அதுதான் அறியாமையாகும்.

நெருக்கடியான நேரத்தில் அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கின்றன. நெருக்கடி நீங்கியதும் ஊரடங்கை விலக்கிக் கொள்கின்றன. ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அதையே தொடர்வதும் அறிவுடைமையாகாது. அல்லது நெருக்கடியான நேரம் வரும்போது ஊரடங்கு உத்தரவு போடாமல் இருப்பதும் விவேகமாகாது.

ஒரு தாய், இரண்டு வயதுப் பாலகனுக்குச் சில உணவுகளை மறுப்பாள்; சாப்பிடக் கூடாது எனத் தடுப்பாள். அதே குழந்தை 10 வயதை அடையும்போது, முன்பு தடுத்த உணவை உண்ணுமாறு கூறுவாள். இவ்வாறு கூறும் நிலை ஏற்படும் என்பது அவளுக்கு ஏற்கனவே தெரியும். இங்கு குழந்தையின் நிலைதான் மாறியதே தவிர தாயின் அறிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரத்தைத் துவக்கியபோது மக்காவில் முஸ்லிம்கள் உயிர் வாழ்வதே பெரும் பிரச்சினையாக இருந்தது. இவ்வாறு இருக்கும்போது “திருடினால் கையை வெட்டுங்கள்’’ எனக் கூற முடியாது. கூறினால் அதற்கு அர்த்தம் இருக்காது. ஆட்சி, அதிகாரம் முஸ்லிம்கள் கைக்கு வந்த பிறகுதான் இந்தச் சட்டத்தைப் போட முடியும். எனவே மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப சட்டங்களை வழங்குவதுதான் அறிவுடமை.

வரலாறு போன்ற நடந்த நிகழ்வுகளை மாற்ற முடியாது. இத்தகைய மாறுதல் ஏதும் திருக்குர்ஆனில் இல்லை. சில சட்டங்களில் மட்டுமே இத்தகைய நிலை உள்ளது. எனவே சட்டங்கள் மாற்றப்படுதல் என்பது இறைவனின் கருணைக்கும் அவனுடைய எல்லையற்ற அறிவிற்கும் மிகச் சிறந்த சான்றாகும்.