நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டதால் தலித் இளைஞர் படுகொலை!
நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டதால் தலித் இளைஞர் படுகொலை!
கடந்த ஐந்து வருட கால பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மற்றும் தலித் இனத்தைச் சார்ந்த மக்களுக்கு எதிராக கடுமையான அராஜகப் போக்கையும், படுகொலைகளையும் பாஜக அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காலகட்டத்தில் அரங்கேறியது. எத்தனையோ படுகொலைகள் ஆட்சிக் காலத்தில் தான் அரங்கேற்றப்பட்டது. இப்போது ஆட்சிக் கட்டிலில் இல்லையே அநியாயங்கள் அரங்கேறுவதற்கு வாய்ப்பில்லை என்று மக்களெல்லாம் எண்ணி விடக் கூடாது என்பதற்காக மிகப்பெரும் ஒரு அநியாயத்தை மதவெறி பிடித்த, ஜாதி வெறியில் ஊறித் திளைத்த அயோக்கியர்கள் அரங்கேற்றி இருக்கின்றார்கள்.
உத்திரகாண்ட் மாநிலத்தில் தெஹ்ரி கார்வால் பகுதியைச் சார்ந்த ஜிதேந்திர தாஸ் என்பவர் உறவுக்கார வீட்டுக்கு திருமண நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார். ஜிதேந்திர தாஸ் என்பவர் தலித் இனத்தைச் சார்ந்த சமூகத்தை சார்ந்தவர். இவர் உறவுக்கார திருமண விழாவில் கலந்து கொண்டு நாற்காலியில் அமர்ந்து திருமண விருந்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஜாதி வெறி பிடித்த கொடூர கும்பல் இவரை கீழே தள்ளி விட்டு கடுமையாக தாக்க ஆரம்பித்து விட்டனர். நடந்த சம்பவத்தை தாஸின் உறவுக்காரர் கூறும்போது.
நாங்கள் உறவுக்கார திருமண விழாவிற்கு சென்றோம். அப்போது சாப்பாடு நேரத்தில் எங்களுக்கு முன்னால் தாஸ் பந்தியில் அமருவதற்கு சென்று விட்டார். சாப்பாடு போடப்பட்டுள்ள இடத்தில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, இதைக் கண்ட உயர்சாதி வெறிபிடித்த அயோக்கியர்கள் சிலர், தாழ்ந்த ஜாதியாக இருக்கின்ற இவன் எப்படி நாற்காலியில் அமர்ந்து சாப்பிடுவான்? என்று கூறி கடுமையாக தாக்கி கீழே தள்ளி விட்டனர். கீழே தள்ளி விட்ட பிறகும் அந்த கொடூர கும்பல் தாஸை விட்டு வைக்காமல் அடிக்க ஆரம்பித்து விட்டனர். மேலும் கீழே மிதித்து கடுமையாக தாக்க ஆரம்பித்தனர்.
மேலும் தாஸ் அடிபட்ட வேதனையில் அங்கிருந்து மெதுவாக நகர முற்பட்ட போதும் கூட, அந்த வெறிபிடித்த கும்பல் தாஸை துரத்தி துரத்தி அடிக்க ஆரம்பித்தனர். மேலும் தாஸை கடுமையாக தாக்க முற்பட்ட போது தாஸின் நண்பர் தடுக்க முயன்றார். தடுக்க முயன்ற நண்பரையும் அந்த வெறிபிடித்த கும்பல் கடுமையாக தாக்கியது. எப்படியோ அந்த ஜாதிவெறி பிடித்த கும்பலிடமிருந்து தப்பித்து தாஸ் மெதுவாக வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டிற்கு வந்து யாரிடமும் சொல்லாமல் வீட்டு வாசலிலேயே படுத்து தூங்கி விட்டார்.
அதிகாலையில் தாஸின் தாயார் வாசலில் படுத்து இருந்த தாஸை எழுப்பினார். ஆனால் தாஸ் அடிபட்ட வேதனையில் மயக்கமுற்று இருந்தார். உடனே அருகில் இருக்கின்ற மருத்துவமனைக்கு தாஸை அழைத்து சென்ற தாஸின் குடும்பத்தார்கள், தாஸ் ஏற்கனவே இறந்து விட்டார் என்று மருத்துவமனையில் தகவல் தெரிவித்ததைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றனர். அந்த வெறிபிடித்த கும்பல் கடுமையாக தாக்கியதில் தாஸுக்கு பலமாக அடிபட்டு, அந்த வேதனையிலேயே துடிதுடித்து இறந்திருக்கின்றார்.
இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய ஏழு நபர்கள் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்துனை பெரிய கொடூரமான சம்பவத்தை துணிச்சலோடு செய்யத் துணிகின்ற இதுபோன்ற கொடூரக் காரர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டதை பாரதூரமான குற்றமாகக் கருதி அடித்து துவைத்து எடுத்து கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள் என்றால் ஜாதி வெறி எந்த அளவுக்கு தலைக்கு ஏறி பைத்தியத்தில் மூழ்கித் திளைத்திருக்கின்றார்கள் என்பது அப்பட்டமாக தெரிகின்றது. இதுபோன்ற ஜாதிவெறி கொண்ட நபர்களிடமிருந்து தாழ்ந்த ஜாதியின மக்கள் என்று பிறரால் கொச்சைப்படுத்தப்படுத்த படுகின்ற இலட்சோப இலட்ச மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் அற்புதமான மருந்தை தருகின்றது.
உலகத்திலேயே இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டும் தான் ஜாதிவெறி, இனவெறி, நிறவெறி போன்ற அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் உடைத்தெறிந்து தரைமட்டமாக்குகின்றது இஸ்லாம். ஜாதிவெறியை தகர்த்தெறிய இஸ்லாம் கூறும் அழகான அறிவுரை!
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர் அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
Source:unarvu(17/05/2019)