நான் ஏன் இஸ்லாத்திற்கு மாறினேன், அதில் பிடித்தது என்ன? யுவன் கூறிய விளக்கம்
பயான் குறிப்புகள்:
வரலாற்று ஆவணங்கள்
நான் ஏன் இஸ்லாத்திற்கு மாறினேன், அதில் பிடித்தது என்ன?: யுவன் விளக்கம்
கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவை தன்னை திருமணம் செய்ய வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றிவிட்டார் என்று சமூக வலைதளவாசிகள் ஜஃப்ரூன் நிஷா மீது பழி போட்டார்கள். யுவன் ஷங்கர் ராஜா கடந்த 2014ம் ஆண்டில் இஸ்லாத்திற்கு மாறி தன் பெயரை அப்துல் காலிக் என்று மாற்றினார்.
யுவன் ஆடை வடிவமைப்பாளரான ஜஃப்ரூன் நிஷாவை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு ஜியா என்கிற மகள் உள்ளார். இந்நிலையில் தான் ஜஃப்ரூன் நிஷா பிளான் பண்ணி யுவனை இஸ்லாத்திற்கு மாற்றிவிட்டார் என்று சமூக வலைதளவாசிகள் குற்றம் சாட்ட அவர் சரியான பதிலடி கொடுத்தார்.
யுவன் என்னை திருமணம் செய்வதற்கு முன்பே இஸ்லாத்திற்கு மாறிவிட்டார். நான் ஏன் அவரை மாற்ற வேண்டும். இது பெரியவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம். யுவனுக்கு இஸ்லாம் பிடித்திருந்ததாலும், குர்ஆனில் அவர் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை கிடைத்ததாலும் மாறினார். மற்றபடி அவர் மதம் மாறியதற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. வேண்டுமானால் யுவனை இன்ஸ்டா லைவில் பேட்டி எடுக்கிறேன்.
அப்பொழுது அவர் ஏன் இஸ்லாத்திற்கு மாறினார் என்று கேட்கிறேன் என்றார் ஜஃப்ரூன் நிஷா.
இன்ஸ்டாகிராமில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா தற்போது பதில் அளித்துள்ளார். இஸ்லாத்தில் பிடித்தது என்ன என்கிற கேள்விக்கு யுவன் கூறியதாவது,
யாரும் யாரையும் விட உயர்ந்தவர் இல்லை என்பது மிகவும் பிடித்துள்ளது. பள்ளிவாசலில் தொழுகும் போது நம் வலப்பக்கம் மற்றும் இடப்பக்கம் யார் வேண்டுமானாலும் நின்று தொழலாம். அவர் தான் முன்னால் நிற்க வேண்டும் இவர் தான் பின்னால் நிற்க வேண்டும் என்கிற பாகுபாடு இல்லை. இது தான் இஸ்லாத்தில் என்னை ஈர்த்த முதல் விஷயம் ஆகும் என்றார்.
குர்ஆனில் இருந்து உங்களுக்கு என்ன பதில் கிடைத்தது என சொல்ல முடியுமா என்கிற கேள்விக்கு யுவன் கூறியதாவது,
நான்கு பேர் பேசும்போது எழும் கேள்விகள் எனக்குள்ளும் எழுந்தன. நாம் இறந்த பிறகு நம் ஆன்மா எங்கு செல்லும், இந்த ஏழை, பணக்காரர் என்கிற வித்தியாசம் ஏன் இருக்கிறது உள்ளிட்ட பல கேள்விகள் நமக்கு தோன்றும் அல்லவா. அப்படி கேள்வி எழும் நேரத்தில் குர்ஆனை ஓதியபோது எனக்கு சரியான விடைகள் கிடைத்தது போன்று உணர்ந்தேன். வீட்டிற்கு ஒரு தலைவன், நாட்டிற்கு ஒரு தலைவன் போன்று உலகிற்கு ஒரு தலைவன் என்பது என் மனதில் பதிந்துவிட்டது என்றார்.