லுஹர் முன் சுன்னத் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா?

கேள்வி-பதில்: தொழுகை

லுஹர் முன் சுன்னத் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா?

நான்கையும் ஒரு ஸலாமில்.

லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக்அத்களை ஒரே சலாமில் தொழ ஹதீஸ் உள்ளதா? கடமை அல்லாத எல்லா தொழுகைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டிரண்டாகத் தொழுதார்கள் என்று வந்துள்ளதே? அது இரவுத் தொழுகையைத் தான் குறிக்குமா? ஜூம்ஆவின் முன் சுன்னத் நான்கு ரக்அத்துகளை எப்படித் தொழ வேண்டும்?

லுஹருக்கு முன் உள்ள சுன்னத் தொழுகை இரண்டு ரக்அத்கள் எனவும், நான்கு ரக்அத்கள் எனவும் ஹதீஸ்கள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
(புகாரி: 937, 1169)

லுஹருக்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான்கு ரக்அத்களை விட்டதே இல்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி: 1182)

ஆனால் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள் என்று கூறப்படும் ஹதீஸில் ஒரு ஸலாமில் தொழுதார்களா? இரண்டு ஸலாமில் தொழுதார்களா என்று கூறப்படவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) நான்கு ரக்அத்கள் தொழுதார்கள் என்று கூறப்பட்டால் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவது தான் முறையாகும்.

 

இரவுத் தொழுகையை இரண்டிரண்டாகத் தான் தொழ வேண்டும் என்று அவர்கள் நமக்குத் தெளிவாக கட்டளை இட்டுள்ளதால் இரவுத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவதே சரியானதாகும். ஆனால் பகல் தொழுகைக்கு இது போல் கட்டளை இல்லாததால் நான்கு ரக் அத்கள் தொழுதால் நான்கையும் ஒரு ஸலாமில் தான் தொழ வேண்டும்.