4) நான்கு மட்டும் தான் ஹராமா?
இவ்வசனத்தில் அடங் கியிருக்கும் மற்றொரு செய்தியை சிலர் தவறாக விளங்கிக் கொண்டு குழம்பிப் போய் இருக்கின்றனர். அந்தச் செய்தியைக் குறித்து தான் விளக்கம் தேவைப்படுகின்றது.
குர்ஆன் மட்டும் போதும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று குர்ஆனுக்கு எதிரான வாதத்தை முன்வைக்கும் அறிவீனர்கள் – குர்ஆனைப் பற்றி சரியான அறிவு இல்லாத காரணத்தால் தாமும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுக்க எண்ணுகின்றனர்.
இத்தகையோர் வழிகெடுப்பதற்கு பயன்படுத்தும் வசனங்களில் இந்த வசனங்களும் அடங்கும். எனவே, இது குறித்து நாம் விரிவாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் நான்கு உணவுகள் ஹராம் என்பது மட்டும் தெரிய வில்லை. மாறாக இந்த நான்கைத் தவிர வேறு எந்த உணவும் ஹராமில்லை என்பதும் தெரிகிறது. எனக்கு வஹியாக (இறைச் செய்தியாக) அறிவிக்கப்பட்டதில் அந்த நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராமாக்கப்பட்டதாக நான் காண வில்லை என்ற வாசக அமைப்பிலிருந்தும் தாமாகச் செத்தவை…. ஆகியவற்றைத்தான் ஹராமாக்கி யுள்ளான் என்ற வாசக அமைப் பிலிருந்தும் அதை விளங்கலாம்.
எனவே, கழுதை, நாய், கரப்பான் பூச்சி, பாம்பு, பல்லி, தேள், முள்ளம் பன்றி, குரங்கு போன்ற எதுவானாலும் உண்ணத்தக்கதே என்று இவர்கள் வாதிடுகின்றனர். வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் மலத்தையும் கூட உண்ணலாம் என்பது இவர்களின் வாதமாகும். இவ்வாறு வாதிடக்கூடிய ‘அறிவு ஜீவிகள்’ தமது வாதத்துக்கு இந்த வசனங்களைத் தான் சான்றுகளாக முன் வைக்கின்றனர். இந்நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராமாக்கப் பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட வில்லை என்று அல்லாஹ் தேவையில்லாமல் கூறுவானா? என்றும் இவர்கள் கேட்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாய், கழுதை போன்றவற்றை ஹராம் என்று அறிவித்துள்ளனர். இது குறித்த ஹதீஸ்கள் யாவும் மேற்கண்ட வசனங்களுக்கு முரணாகவுள்ளதால் அவற்றை நம்பக்கூடாது எனவும் வாதிடுகின்றனர்.
மேற்கண்ட வசனங்களில் இவர்கள் வாதிடுவது போன்ற கருத்துக்கள் அடங்கியுள்ளன என்பது உண்மை தான். ஆனால், இது குறித்து சரியான விளக்கத்தை அறிய திருக்குர் ஆனை இன்னும் ஆராய வேண்டும். ஹலால் ஹராம் குறித்து அந்த வசனங்கள் தவிர வேறு வசனங்கள் உள்ளனவா? எனவும் தேடிப்பார்க்கவேண்டும். அதன் பிறகுதான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். இத்தகைய ஆய்வு இல்லாததன் காரணமாகவே கிறுக்குத்தனமான இத்தகைய வாதங்களை முன் வைக் கின்றனர்.
‘செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், இறைவனல்லாத மற்றவர் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியும், கழுத்து நெறிக்கப்பட்டும், அடிபட்டும், உயரத்திலி ருந்து வீழ்ந்தும், மோதப்பட்டும் இறந்த பிராணிகளும் உங்க ளுக்குத் தடுக்கப்பட்டவையாகும். மேலும், கொடிய விலங்கு களால் கடித்துக் குதறப்பட்ட பிராணிகளும் (தடுக்கப் பட்டவை யாகும்.)-எவற்றை உயிருடன் நீங்கள் அறுத்து விட்டீர் களோ – அவற்றைத் தவிர! இன்னும் பலி பீடங்கள் மீது அறுக்கப்பட்ட பிராணியும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. குறிபார்ப்பதன் மூலம் விதிகளை நிர்ணயிப்பதும் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் பாவமான செயல்களாகும். இன்று உங்களுடைய மார்க்கம் குறித்து நிராகரிப்போர் முற்றிலும் நிராசை அடைந்துவிட்டிருக்கின்றனர். எனவே, நீங்கள் அவர்களுக்கு அஞ்சவேண்டாம். மாறாக எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்க ளுக்காக இஸ்லாத்தை உங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டேன். ஆயினும், கடும் பசியினால் நிர்பந்திக்கப்பட்டு – பாவம் செய்யும் நாட்டமின்றி ஒருவர் அவற்றில் ஏதாவ தொன்றைப் புசித்துவிட்டால் – நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பெருங்கருணை உடையவனாகவும் இருக்கின்றான்’
இவ்வசனமும் விலக்கப்பட்ட உணவுகளைக் குறிப்பிடும் வசனம் தான். இவ்வசனத்தில் முன்னர் கூறப்பட்ட நான்கு உணவுகளையும் கூறி விட்டு மேலும் சில உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நான்கைத் தவிர வேறு சில உணவுகள் ஹராம் என்று ஹதீஸ் களில் கூறப்படும் போது குர்ஆனுக்கு முரண்’ எனக் கூறி நிராகரித்தவர்கள் இப்போது இந்த வசனமே மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக இருப்பதை சிந்திக்கத் தவறிவிட்டனர்.
நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராம் இல்லை என்ற கருத்தில் அமைந்த வசனங்களும், நான்கைத் தவிர வேறு சில உணவுகளும் ஹராம் எனக் கூறும் வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை தான். குர்ஆனில் எந்த முரண்பாடும் இருக்காதே! ஆனால் இங்கே முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறதே என்று சிந்தித்திருந்தால் சரியான தீர்வைக் கண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் ஒரே நாளில் மொத்தமாக அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் இறங்கியது என்பதை அனைவரும் அறிவோம். சிறிது சிறிதாக கடமைகளும் கட்டளைகளும் அதிகரிக்கப்பட்டு வந்தன.
அந்த அடிப்படையில் நாம் ஆரம்பமாக எடுத்துக் காட்டிய வசனங்கள் எப்போது அருளப்பட்டனவோ அந்தக் கால கட்டத்தில் அந்த நான்கு உணவுகள் மட்டுமே ஹராமாக்கப் பட்டிருந்தன. இவ்வசனங்கள் அருளப்படுவதற்கு முன் அந்த நான்கு கூட ஹராமாக்கப்படாமல் இருந்தன. எதுவுமே ஹராமாக்கப் படாமல் இருந்த நிலையை மாற்றி நான்கு உணவுகள் முதலில் ஹராமாக்கப்பட்டன. பின்னர் மேலும் சில உணவுகள் ஹராமாக்கப்பட்டன. அதைத் தான் இப்போது நாம் சுட்டிக்காட்டிய 5:3 வசனம் கூறுகிறது.
எனவே நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்பது ஒரு கால கட்டத்தில் இருந்த நிலைமை. அந்த நிலைமை 5:3 வசனத்தின் மூலம் மாற்றப்பட்டுவிட்டது. இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நான்கு உணவுகளை மட்டும் ஹராம் எனக் கூறும் வசனங்களில் இவை மட்டும் தான். இவை தவிர வேறு இல்லை என்பது போன்ற வாசக அமைப்பை பயன்படுத்தியுள்ளான். ஆனால், இவ்வசனத்தில் இவற் றைத் தவிர வேறு இல்லை என்று குறிப்பிடவில்லை. இவற்றைத் தவிர வேறு ஹராம் இல்லை எனக் கூறாததால், மேலும் ஹராம்கள் இருப்பதற்கான சாத்தியத்தை இவ்வசனம் மறுக்கவில்லை.
இவ்வாறு விளங்கிக் கொண்டால் குர்ஆனுடன் குர்ஆன் முரண்படுகிறதே என்ற ஐயமும் விலகும். ஹதீஸ்கள் குர்ஆனுடன் முரண்படுகிறதே என்ற ஐயமும் விலகும்.
இறுதியாக அருளப்பட்ட வசனத்தில் எவை ஹராமாக்கப் பட்டுள்ளதோ அவற்றை மட்டும் ஹராம் என்று கூற வேண்டியது தானே? ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியது தானே? என்று சிலர் கேட்கலாம்.
அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் எப்படி ஹராமாக்கலாம் என்று 66:1 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். இதிலிருந்து ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ் வுக்குத் தான் உள்ளதே தவிர நபிகள் நாயகத்துக்கு இல்லை எனவும் கூறுகின்றனர்.
இதுவும் அறியாமையின் வெளிப்பாடுதான். எவர்கள் எழுதப்படிக்க தெரியாத நபியாகிய நம் தூதரை பின்பற்றுகிறார்களோ-அவர்கள் தங்களிட முள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களை அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டி ருக்கும் ஒளிமயமான (வேதத்) தையும் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராமாக் கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார் களோ, அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர் களுடன் போர் புரியுங்கள்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹராமாக்கியவைகளை ஹராம் எனக் கருதாதவர்களுடன் போரிடுமாறு இவ்வசனம் கூறுகிறது. ஹராமாக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இவ்வசனம் மிகத் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. திருக்குர்ஆனில் தேவையில்லாத ஒரு வார்த்தையும் இருக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
குர்ஆன் மூலம் ஹராமாக்கப் பட்டவை மட்டும் தான் ஹராம் என்று இருந்தால் அல்லாஹ் ஹராமாக்கியவை என்று மட்டும் அல்லாஹ் கூறியிருக்கலாம். ஆனால், அல்லாஹ்வும் ரசூலும் ஹராமாக்கியவை என்று கூறியது ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
7:157 வசனத்தில் நல்லவைகளை அவர் ஹலாலாக்குவார். கெட்டவைகளை ஹராமாக்குவார் என்று தெளிவாகப் பிரகடனம் செய்யப் பட்டுவிட்டது. நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்றால் இந்த வாசகத்திற்கு எந்தத் தேவையுமில்லை.
‘கெட்டவை ஹராம் என்று கூறுகிற இறைவன் அவற்றுக்கான விளக்கத்தை நபிகள் நாயகத்தின் இதயத்தில் போடுகிறான். அதன் மூலம் அவர்கள் ஹராமாக்கப் பட்டதை அறிவிக்கிறார்கள்’ என் பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.
எனவே, நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை எனக் கூறுவோர் மேற்கண்ட குர்ஆன் வசனங் களையே மறுக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை உமது மனைவியரின் திருப்தியை நாடி நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர் என்ற வசனத்தை (66:1) ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதையும் ஹராம் என்று பிரகடனம் செய்ய அதிகாரமில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.
இவ்வசனத்தை சரியாக சிந்திக்காத காரணத்தால் இத்தகைய வாதத்தை எழுப்புகின்றனர். அல்லாஹ் ஹலாலாக ஆக்கிய ஒரு பொருளை (தேனை) தமது மனைவியருக்காக தம்மீது மட்டும் ஹராமாக்கிக் கொண்டார்கள். இனிமேல் தேனை உட்கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்தார்கள். மக்கள் அனைவருக்கும் தேனை ஹராமாக ஆக்கவில்லை.
அல்லாஹ் அனுமதித்த ஒரு பொருள் ஒருவருக்கு பிடிக்க வில்லையானால் அதை தன்னளவில் அவர் தவிர்த்துக் கொள்ளலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஹலால் என்றாலே உண்பது எப்படி அனுமதியோ, உண்ண மறுப்பதும் அனுமதி என்றே பொருள்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை தம் மீது மட்டும் விலக்கிக் கொண்டார்கள் என்பதைத் தான் அவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை ஹராம் என்று அறிவித்தார்கள் என்று கூறவில்லை. அவ்வாறு எந்த இறைத் தூதரும் கூற மாட்டார்கள்.
அப்படியானால் இந்தச் செயலை இறைவன் ஏன் ஆட்சேபிக்கிறான்? அதற்கான காரணம் அவ்வசனத்தி லேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவியரின் திருப்தியை நாடி – தமக்கு அதில் விருப்பம் இருந்தும் விலக்கிக் கொண்டார்களே அது தான் இங்கே ஆட்சேபிக்கப்படுகிறது.