கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் மார்க்கம் காட்டிய வழிமுறைப்படி நடந்தால் குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் நிம்மதியான வாழ்வைப் பெற முடியும். இல்லையேல் கணவன், மனைவியின் வாழ்க்கையிலும் நிம்மதியில்லாமல் அதனால் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் வாழ்விலும் நிம்மதியில்லாமல் போய்விடும்.
கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் மிக முக்கிய ஒன்றான மாமியார், மருமகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். மாமியார், மருமகள் பிரச்சனைகளுக்கு அடுத்தபடியாக குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களுக்குக் காரணமாக அமைவது நாத்தனார்கள் எனப்படும் கணவனின் சகோதரிகள் ஆவர்.
கூட்டுக் குடும்பத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரின் வாழ்க்கைக்கிடையில் கணவனின் சகோதரிகள் குறுக்கிடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அந்தப் பிரச்சனைகளையும் அவை குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டையும் பார்ப்போம்.
நாத்தனார்களின் பிள்ளைகளை, அவர்களது அண்ணன், தம்பியினுடைய குழந்தைகள் அடித்துவிட்டால் அதற்காக அந்தக் குழந்தைகளை அடிப்பதற்கும், கண்டிப்பதற்கும் உரிமை இருக்கின்றது. இதில் தவறில்லை. ஆனால் இதைச் சாக்காக வைத்து மச்சியிடம் இதற்காகச் சண்டையிடுகின்றனர்.
தனது சகோதரன் குழந்தைகள் செய்த அதே தவறுகளைத் தன்னுடைய குழந்தைகள் செய்தால் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இதைப் பற்றி குழந்தையின் தாய், அதாவது அண்ணி தட்டிக் கேட்டு விட்டால் போதும். அவள் தன் தாய் வீட்டிற்குப் போய் விடவேண்டியது தான். அந்த அளவிற்குப் பிரச்சனை பெரிதாகிவிடுகின்றது.
இதில் தன் பிள்ளைக்கு ஒரு நியாயம்; தன் அண்ணியின் பிள்ளைக்கு ஒரு நியாயம் என்று நியாயமின்றி நாத்தனார்கள் நடக்கின்றனர்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கா வெற்றிப் போரின்போது, (“மக்ஸூமி‘ எனும் குலத்தைச் சேர்ந்த) ஒரு பெண் திருடிவிட்டாள். இந்த விஷயம் குறைஷியருக்குக் கவலையளித்தது. அவர்கள், “அவளுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசுபவர் யார்?” என்று பேசிக் கொண்டார்கள். பிறகு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமா பின் ஸைதைத் தவிர வேறு யார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் துணிந்து பேச முடியும்?” என்று (தங்களுக்குள்) பேசிக்கொண்டனர். பின்னர் அந்தப் பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அவளுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.
உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அப்போது, “அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா நீ பரிந்துரைக்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோருங்கள்” என்றார்கள்.
அன்று மாலை நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) எழுந்து நின்று அல்லாஹ்வை, அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
இறைவாழ்த்துக்குப் பின்! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் அழிந்துபோனதற்குக் காரணமே, அவர்களில் உயர் குலத்தார் திருடிவிட்டால் அவரை (தண்டிக்காமல்) விட்டுவிடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள்மீது தண்டனையை நடை முறைப்படுத்துவார்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (என் புதல்வி) ஃபாத்திமா பின்த் முஹம்மதே திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்தே இருப்பேன்” என்று கூறிவிட்டு, திருடிய அப்பெண்ணின் கையைத் துண்டிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவளது கை துண்டிக்கப்பட்டது.
குழந்தைகள் வந்ததற்குப் பிறகு இனியும் கூட்டுக் குடும்பம் சரிவராது என்று பலர் கூறுகின்றனர். குழந்தைகளிடத்தில் பக்குவம் கிடையாது, பின்விளைவுகளையும் அது அறியாது. ஆனால் பெரியவர்களோ சிறுபிள்ளைத்தனமாக குழந்தைகள் சண்டையைப் பெரிதுபடுத்துகின்றனர். இதில் சரியான அணுகுமுறைகளைக் கையாண்டாலே இது போன்ற பிரச்சனைகள் பெரிதாகாது என்பதை, குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் உணரவேண்டும்.
நாத்தனார்கள், வீட்டு வேலைகளில் தங்கள் அண்ணிக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். தங்கள் வேலைகளைக் கூட தங்கள் அண்ணி தான் செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். தாங்கள் டீ குடித்த தம்ளரைக் கூட கழுவி வைக்கக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.
அதாவது வீட்டின் மருமகள் தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஒருவர் மற்றவர்களுக்குச் செய்யக்கூடிய உதவிகளுக்கு நன்மை இருக்கின்றது என்று கூறிய மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எல்லா நற்செயல்களும் தர்மமே.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மார்க்கத்தில் இருந்து கொண்டு, தனது வேலைகளைக் கூட மற்றவர்களிடத்தில் திணிப்பது எவ்வகையில் நியாயம்?
ஒருவர் விரும்பி மற்றவர்களுக்கு உதவிகள் செய்தால் அது நன்மையைப் பெற்றுத்தரும். ஆனால் நாத்தனார் கூறியதற்காக அவள் செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டால் அது அநியாயத்தில் போய்ச்சேரும். எனவே நாத்தனார்கள் தங்கள் சுய தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். வீட்டு வேலைகளில் அண்ணிக்கு உதவியாக இருக்க வேண்டும். தங்கள் வேலைகளையும் சேர்த்து அண்ணியிடம் திணிக்கக் கூடாது. இந்த வேலைச் சுமையே சில சமயங்களில் குடும்பம் பிரிவதற்குக் காரணமாக அமைகின்றது.
தங்களை தனது அண்ணி உள்ளங்கையில் வைத்து தாங்கவேண்டும் என்று சிலர் எண்ணுகின்றனர். மார்க்கத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த அல்லாஹ்வின் தூதரே தமது சொந்த வேலைகளைத் தாமே செய்துள்ளார்கள். மனைவி தமக்காக வேலை செய்து தரவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அத்துடன் வீட்டு வேலைகளிலும் உதவியாக இருந்துள்ளார்கள்.
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?” என்று நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், “தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். தொழுகை (நேரம்) வந்து விட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.
ஆனால் இந்த நாத்தனார்களோ, தங்களுடைய சொந்த வேலைகளைக் கூட வீட்டிற்கு வந்திருக்கும் பெண் தான் செய்ய வேண்டும்; அதுவும் சொல்லாமலே செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அவ்வாறு செய்யவில்லையென்றால் அதனைப் பிரச்சனையாக்குகின்றனர். இவ்வாறு நடந்து கொள்வது குடும்பத்தில் உள்ள அனைவரின் நிம்மதியையும் கெடுக்கின்றது என்பதை இவர்கள் உணர்வதில்லை.
மாமியார் கொடுமைகளுக்கு அடுத்தபடியாக நாத்தனார் பிரச்சனைகளால் பிரிந்த கணவன் மனைவிகள் எத்தனை பேர்? தன்னுடைய சகோதரன் தனிக்குடித்தனம் சென்று விடக்கூடாது என்றே நாத்தனார்கள் விரும்புகின்றனர். ஆனால் இதுபோன்ற வேலைச்சுமைகளின் காரணமாகவே தனிக்குடித்தனம் அல்லது விவாகரத்து போன்ற சம்பவங்கள் அந்த குடும்பத்தில் நடந்துவிடுகின்றது.
இந்த நாத்தனார்கள் தாங்கள் தனிக் குடித்தனம் இருந்தாலும், அண்ணி தன் கணவனுடன் தனிக்குடித்தனம் சென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இதிலும் தனக்கு ஒரு நீதி; அடுத்தவருக்கு ஒரு நீதி என்றே நடக்கின்றனர்.
பெண் கொடுத்து பெண் எடுத்த குடும்பங்களில் ஒரு கொடுமை நடக்கின்றது. ஒரு மருமகள் தவறு செய்து, அதனால் அவளை அவளது தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் போதும். என் மகளை எப்படி இவ்வாறு செய்வீர்கள்? அல்லது என் தங்கையின் வாழ்க்கையையா கேள்விக்குறியாக்கினீர்கள்? என்று மாமியாரும் கணவனும் சேர்ந்து கொண்டு தவறே செய்யாத இன்னொரு பெண்ணைத் தண்டிக்கிறார்கள். இதற்குத் தூண்டுகோலாக இருப்பதும் நாத்தனார் தான். அந்தப் பெண்ணின் வீட்டார் என்னைத் துரத்தி விட்டதால் அந்தப் பெண் இந்த வீட்டில் வாழக்கூடாது என்று இந்த நாத்தனார்கள் தனது சகோதரனை நிர்ப்பந்திக்கின்றனர். இதனால் இரண்டு குடும்பங்களிலும் பிரச்சனை முற்றி விவாகரத்தில் போய் முடிகின்றது.
தான் மட்டும் தன் கணவன் வீட்டில் மிகவும் கஷ்டப்படுவதாகவும், தன் தாய் தன்னுடைய மருமகளை நல்ல முறையில் வைத்திருப்பதாகவும், அவள் சொகுசாக வாழ்வதாகவும் எண்ணிக் கொண்டு, குரோத மனப்பான்மையுடன் பொறாமை உணர்வோடு தனது அண்ணியிடம் நடந்து கொள்கிறார்கள்.
தனது சகோதரனிடமும், தாயிடமும் அண்ணியைப் பற்றி எதையாவது சொல்லி கோள் மூட்டி பிரிவினையை ஏற்படுத்துகின்றனர்.
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மக்கள்) பேசிக் கொள்வதை ஒரு மனிதர் (ஆட்சியாளர் வரை கொண்டுபோய்) கோள் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனும் செய்தி ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், “கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
தன் சகோதரன் அவனது மனைவியை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது. அவளுடன் சகஜமாகப் பேசக்கூடாது. கணவன் மனைவி தனியாக வெளியே சென்றால் தன்னையும் அவர்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நிர்ப்பந்திக்கின்றனர். அவ்வாறு அழைத்துச் செல்லவில்லையென்றால் அதையே நினைத்து உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
பெண் வீட்டில் உள்ள சிறுவர்கள் உட்பட அனைவரும் மாப்பிள்ளையின் வீட்டிற்கு வேலை செய்து கொடுக்கவேண்டும் என்று நினைப்பது எழுதப்படாத விதியாக உள்ளது.
நாத்தனாரின் தாய் வீட்டிற்கு, அவளது கணவன் எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக் கொடுக்கலாம். என் தாயாருக்கு அதை வாங்கித் தாருங்கள்; என் தந்தைக்கு இதை வாங்கித் தாருங்கள் என்றெல்லாம் தங்கள் கணவனிடம் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். ஆனால் தன் அண்ணியின் தாய் வீட்டிற்கு, அதாவது தனது சகோதரன் அவனது மாமியார் வீட்டிற்கு ஏதாவது உதவிகள் செய்துவிட்டால் போதும். “என்ன சொக்குப் பொடி போட்டாளோ? கணவனை வளைத்துப் போட்டு அவனது வருமானத்தையெல்லாம் இவள் வீட்டிற்குத் தான் கொண்டு போகிறாள்’ என்று அண்ணியைக் குத்திக் காட்டிப் பேசுகின்றார்கள்.
அண்ணியின் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்தால் கூட, அதற்காக அண்ணனையும் அண்ணியையும் சேர்த்து இடித்துரைக்கிறார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.
இவ்வாறெல்லாம் குடைந்து குடைந்து கேள்வி கேட்பதன் விளைவுதான் பெரும்பாலான ஆண்கள் தன்னுடைய மனைவிக்கு வாங்கிக் கொடுக்கும் பொருட்களை வீட்டில் உள்ள தன் தாய் தங்கைகளுக்குத் தெரியாமல் மறைத்துக் கொடுக்கின்றனர்.
வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பும் போது கொண்டு வரும் பொருட்களை அவனது மனைவி குழந்தைகளுக்குக் கொடுப்பது கூட அவனது தாய்க்கும் (மாமியாருக்கும்) அவனது அக்கா தங்கைகளுக்கும் (நாத்தனார்களுக்கும்) பிடிக்கவில்லை. இதை எனக்குத் தந்தால் என்ன? எல்லாவற்றையும் பெண்டாட்டியிடமே கொண்டு போய் கொட்ட வேண்டுமா? என்று கேட்கத் துவங்கிவிடுகின்றனர்.
இதைப் புரிந்து கொண்ட ஆண்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இறங்குவதற்கு முன்பே தன் தாய் வீட்டிற்கு பார்சல் அனுப்புவது போல ஒரு பார்சலை தன் குடும்பத்திற்குத் தெரியாமல் மனைவியின் வீட்டிற்கு அனுப்பிவிடுகின்றனர்.
ஒருவன் தனது மனைவி, மக்களுக்குச் செலவு செய்வதற்கும் இறைவனிடம் கூலி வழங்கப்படுகின்றது.
அல்லாஹ்வின் பாதையில் (அறப்போர் செய்வதற்கு) நீ செலவழித்த ஒரு தீனார்! அடிமையை விடுதலை செய்வதற்கு நீ செலவழித்த ஒரு தீனார்! ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு தீனார்! உனது குடும்பத்திற்கு நீ செலவு செய்த ஒரு தீனார்! இவற்றில் மாபெரும் கூலியைக் கொண்டது உனது குடும்பத்தாருக்கு நீ செலவழித்த தீனார் தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இப்படிப்பட்ட மார்க்கத்தில் இருந்துகொண்டு தனது மûனைவி, மக்களுக்கு பயந்து, பயந்து செலவு செய்யும் நிலை ஒரு ஆணுக்கு ஏற்படலாமா? இதற்குக் காரணமாக அமைவது இந்த நாத்தனார்கள் தான்.