நாணயம் பேணல்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

நாணயம் பேணல்

நம்பி ஒப்படைக்கப்படும் அமானிதங்களை அப்படியே திரும்ப ஒப்படைப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமதிகம் வலியுறுத்தியுள்ளனர்.

 اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ‌ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا‏

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும்போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:58)

 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْۤا اَمٰنٰتِكُمْ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ

நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்!

(அல்குர்ஆன்: 8:27)

آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.

நூல் : (புகாரி: 33) , 34, 2682, 2749, 6095

وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ

தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள்.

(அல்குர்ஆன்: 23:8)

وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رٰعُوْنَ

அவர்கள் தமது அமானிதங்களையும், ஒப்பந்தத்தையும் பேணுவார்கள்.

(அல்குர்ஆன்: 70:32)

நம்பி அமானிதமாக ஒப்படைத்தவருக்கும் நமக்கும் ஏதாவது சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் அப்போது அமானிதத்துக்கு மோசடி செய்யுமாறு ஷைத்தான் நம்மைத் தூண்டுவான்; அதை அழகாக்கிக் காட்டுவான்.

சதாரண நேரத்தில் அமானிதத்தைப் பேணி நடப்பவர்கள் சண்டை ஏற்படும்போது எவ்வித உறுத்தலும் இல்லாமல் அமானித மோசடி செய்வதை நாம் பரவலாகக் காண்கிறோம். இது யூதர்களின் வழக்கம் என்று அல்லாஹ் இடித்துரைக்கிறான்.

 وَمِنْ اَهْلِ الْكِتٰبِ مَنْ اِنْ تَاْمَنْهُ بِقِنْطَارٍ يُّؤَدِّهٖۤ اِلَيْكَ‌ۚ وَمِنْهُمْ مَّنْ اِنْ تَاْمَنْهُ بِدِيْنَارٍ لَّا يُؤَدِّهٖۤ اِلَيْكَ اِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَآٮِٕمًا ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَيْسَ عَلَيْنَا فِىْ الْاُمِّيّٖنَ سَبِيْلٌۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَ هُمْ يَعْلَمُوْنَ

ஒரு குவியலையே நம்பி ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில் உள்ளனர். ஒரு தங்கக்காசை நீர் நம்பி ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர்.

எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் எங்கள் மீது எந்தப் பாவமும் ஏற்படாது என்று அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம். அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டி கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 3:75)

Source:onlinetntj.com