நாகூர் மீரான் என்று பெயர் வைக்கலாமா?

கேள்வி-பதில்: குழந்தை வளர்ப்பு

நாகூர் மீரான் என்று பெயர் வைக்கலாமா?

நாகூர் என்றால் அது ஒரு ஊரின் பெயர். மீரான் என்றால் பார்சி மொழியில் தலைவர் என்று பொருள். நாகூர் மீரான் என்றால் நாகூர் தலைவர் என்று பொருள். நீங்கள் நாகூர் பஞ்சாயத்து போர்டு தலைவர் என்றால் இது அர்த்தமுள்ள் பெயராகும். இல்லாவிட்டால் அர்த்தமற்ற பெயராகும்.

பெயர்களுக்கு பொதுவாக அர்த்தம் பார்க்க அவசியம் இல்லை. ஸாலிஹ் (நல்லவன்) என்று பெயர் வைக்கப்பட்டவர் கெட்டவராக இருப்பார். இதனால் அவர் பெயரை மாற்ற அவசியம் இல்லை. நபிமார்களின் பெயர்களை வைத்துள்ள பலர் இப்லீஸாக இருக்கலாம். பெயர் என்பது ஒருவரை அறிந்து கொள்ளும் அடையாளம் தான். அதன் அர்த்தம் அப்படியே பொருந்த வேண்டும் என்று அவசியம் இல்லை.

ஆனால் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் அர்த்தம் கொண்ட பெயர்களாக இருந்தால் அதைக் கட்டாயம் மாற்ற வேண்டும். உதாரணமாக அப்துல் முத்தலிப் (முத்தலிபின் அடிமை) முத்தலிப் என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று அல்ல. எனவே முத்தலிபுக்கு அடிமை என்று கூறினால் அதில் இணை கற்பித்தல் ஏற்படுகிறது. நாகூர் பிச்சை, மைதீன் பிச்சை (நாகூரில் அடங்கப்பட்டவரால் பிச்சையாக வழங்கப்பட்டவர், முஹ்யித்தின் என்பவரால் பிச்சையாக வழங்கப்பட்டவர்) போன்ற பெயர்களும் அப்பட்டமான இணை வைத்தலாகும்.

அசிங்கமான அர்த்தம் தரும் பெயர்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆனால் அர்த்தமற்ற அல்லது பொருந்தாத பெயர்களை மாற்ற வேண்டியது அவசியம் இல்லை. எத்தனையோ நபித்தோழர்களின் பெயர்கள் அர்த்தமற்றவையாக இருந்தன. ஆனால் அவற்றை நபியவர்கள் மாற்றவில்லை.