நலம் நாடுவோம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

பிறர் நலம் நாடுவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை; இறை நம்பிக்கையின் அடையாளம்; இறையச்சத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்து இருக்கிறோம். எனவே, எப்போதும் எல்லோரும் எல்லோருக்கும் நலம் நாடும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறோம். நலம் நாடுதல் என்று பொதுவாகக் குறிப்பிட்டுச் சொன்னாலும் அந்த வார்த்தை விரிவான விளக்கம் கொண்டது.

நலம் நாடுதல் என்றால், அனைவரும் நலமாக இருப்பதற்காகச் செய்கின்ற அனைத்து நல்ல காரியங்களையும் குறிக்கும். நன்மையான காரியங்களை செய்வது, அதற்கு உதவுவது, தர்மம் செய்வது, நீதியை நிலை நாட்டுவது, பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்றுவது, சிரமப்படுவோருக்கு உதவுவது, பசியைப் போக்குவது, ஏழைகளுக்கு உதவுவது, அநாதைகளை ஆதரிப்பது, இணக்கத்தை ஏற்படுத்துவது, நேர்மையாக நடப்பது போன்ற அனைத்து விதமான காரியங்களும் இதற்குள் வந்துவிடும்.

அதுபோன்று நலம் நாடுதல் என்பது, தீய காரியங்களைச் செய்யாமல் இருப்பதையும் உள்ளடக்கும். தீமையைச் செய்யாமல் இருப்பது, அதை விட்டும் காப்பாற்றுவது, அதைத் தடுப்பது, அதற்குத் துணை போகாமல் இருப்பது, வரம்பு மீறாமல் இருப்பது, அடுத்தவர் உரிமைகளைப் பறிக்காமல் இருப்பது, மோசடி செய்யாமல் இருப்பது, வட்டி வரதட்சனை போன்ற சமூகத் தீமைகளை விட்டும் விலகுவது என்று அனைத்து தீய  காரியங்களையும் விட்டு அகன்று கொள்வதையும் குறிக்கும்.

இந்த அடிப்படையில் சமுதாயத்தின் அனைத்து மட்டத்தில் இருப்பவர்களும் பிறர் நலம் நாடும் வகையில் நடந்து கொள்வதற்கு தோதுவாக, இஸ்லாம் கூறும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. அவற்றுள் நலம் நாடுதல் தொடர்பாகக் குறிப்பிட்டுக் கூறப்படும் சிலவற்றை மட்டும் இப்போது இந்த உரையில் காண்போம்.

பெற்றோருக்கு நலம் நாடுதல்

பிறர் என்று சொல்லும் போது அவர்களில் முதல் நிலையில் இருப்பவர்கள் பெற்றோர்கள். ஒவ்வொரு நபரும் தமது பெற்றொருக்கு நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை சரிவரச் செய்ய வேண்டும். அவர்களிடம் அன்பு செலுத்தி அரவணைக்க வேண்டும். அவர்களைப் புண்படுத்துதோ துன்புறுத்துவதோ பெரும்பாவம். மார்க்கத்திற்கு முரணில்லாத காரியங்கள் அனைத்திலும் அழகிய முறையில் அவர்களுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும்.

وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ‏

“என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி “சீ” எனக் கூறாதே!

அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! “சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 17:23-24)

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي؟ قَالَ: «أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أَبُوكَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்றார். “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “பிறகு, உன் தந்தை” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 5971)

قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُجَاهِدُ؟ قَالَ: «لَكَ أَبَوَانِ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَفِيهِمَا فَجَاهِدْ»

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (இருக்கிறார்கள்)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு” என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(புகாரி: 5972)

குழந்தைகளின் நலம் நாடுதல்

குழந்தை பாக்கியம் என்பது இறைவனின் மாபெரும் அருள். இத்தகைய குழந்தைகளை, பெற்றோர் சரியான முறையில் பராமரிப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால வாழ்வு நல்ல முறையில் அமைவதற்குரிய ஏற்பாடுகளை முடிந்தளவிற்குச் செய்ய வேண்டும். அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். அவர்களுக்கு மத்தியில் அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதில் பாகுபாடு கற்பிக்கக் கூடாது. அவர்களுக்கு சீரிய முறையில் நல்லொழுக்கங்களைப் போதிக்க வேண்டும்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. எனக்கு என் ஒரே மகள் மட்டுமே (இப்போது) வாரிசாக வருகிறாள். ஆகவே, என் செல்வங்கள் அனைத்திலும் (அவை அறவழியில் செலவிடப்பட) மரண சாசனம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்” என்றார்கள். நான் “மூன்றில் இரண்டு பாகங்களில் (மரண சாசனம் செய்து விடட்டுமா)?” என்று கேட்டேன்.

அதற்கும் “வேண்டாம்” என்றார்கள். “அவ்வாறாயின் பாதியிலாவது (மரண சாசனம் செய்து விடட்டுமா)?” என்று கேட்டேன். அதற்கும் “வேண்டாம்” என்று சொன்னார்கள். “அவ்வாறாயின் மூன்றில் ஒரு பாகத்திலேனும் (மரண சாசனம் செய்து விடட்டுமா)?” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், “மூன்றில் ஒரு பாகமா! மூன்றில் ஒரு பாகம்கூட அதிகம்தான். நீர் உமது செல்வத்திலிருந்து (பிறருக்கு) கொடுப்பதும் தர்மம் தான். நீர் உம்முடைய குடும்பத்தாருக்கு வழங்கும் செலவுத் தொகையும் தர்மம் தான்.

உமது செல்வத்திலிருந்து உம்முடைய துணைவி உண்பதும் தர்மம் தான். நீர் உம்முடைய வீட்டாரை மக்களிடம் கையேந்தும் நிலையில் விட்டுச்செல்வதைவிட (பொருளாதார) நலத்துடன் (அல்லது நல்ல நிலையில்) விட்டுச்செல்வதே சிறந்ததாகும்” என்று கூறினார்கள். (“கையேந்தும் நிலையில்” என்று கூறும்போது) தமது கரத்தால் சைகை செய்து காட்டினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
(முஸ்லிம்: 3352)

ஆமிர் பின் ஷர்ஹபீல்  (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, “என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், “நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே!  நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன்; அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும்படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, “இல்லை” என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார்.

(புகாரி: 2587)

உடன் பிறந்தோருக்கு நலம் நாடுதல்

நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவது போன்று, நமது சகோதரர்களும் சகோதரிகளும் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, அவர்கள் மீது பொறாமைப்பட்டு அவர்களுக்குக் கெடுதல் தரும் காரியங்களை செய்வதற்குத் துணிந்துவிடக்கூடாது. நமது உடன்பிறந்தவர்களின் நலனில் ஆர்வம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும்.

 وَلاَ يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ، وَلاَ تَسْأَلُ المَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا لِتَكْفَأَ مَا فِي إِنَائِهَا

ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் (திருமணத்திற்காக) பெண் பேசிக்கொண்டிருக்கும் போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை மணவிலக்கு (தலாக் செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தனது பாத்திரத்தை நிரப்பிக்கொள்ள வேண்டாம்!” என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 2140)

لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
(புகாரி: 13)

انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا»  قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، هَذَا نَنْصُرُهُ مَظْلُومًا، فَكَيْفَ نَنْصُرُهُ ظَالِمًا؟ قَالَ: «تَأْخُذُ فَوْقَ يَدَيْهِ

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவி செய்வோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவனது கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
(புகாரி: 2444)

உறவினருக்கு நலம் நாடுதல்

உறவுகளை இணைத்து வாழ வேண்டும், உறவினர்களுக்கு உதவ வேண்டும் என்று இஸ்லாம் கட்டையிடுகிறது. ஆனால். சின்னஞ்சிறிய அற்பமான விஷயங்களை எல்லாம் பாரதூரமாக எடுத்துக் கொண்டு உறவுகளை துண்டித்து வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு இல்லாமல் உறவினர்களுக்கு நலம் நாடி அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இயன்றளவு நன்மைகளை செய்ய வேண்டும்.

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏

“எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். இன்னும் இரத்த பந்த உறவுகளை (சீர்குலைப்பதை) அஞ்சுங்கள். திண்ணமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.”

 (அல்குர்ஆன்: 4:1)

اِنَّ اللّٰهَ يَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيْتَآىِٕ ذِى الْقُرْبٰى وَيَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْىِ‌ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏

நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 16:90)

أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللهِ إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي، وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ، وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ، فَقَالَ: «لَئِنْ كُنْتَ كَمَا قُلْتَ، فَكَأَنَّمَا تُسِفُّهُمُ الْمَلَّ وَلَا يَزَالُ مَعَكَ مِنَ اللهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு அபகாரம் செய்கிறார்கள். (என்னைப் புண்படுத்தும்போது) அவர்களை நான் சகித்துக்கொள்கிறேன். (ஆனாலும்,) அவர்கள் என்னிடம் அறியாமையோடு நடந்துகொள்கிறார்கள்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சொன்னதைப் போன்று நீங்கள் நடந்திருந்தால், அவர்களது வாயில் நீங்கள் சுடு சாம்பலைப் போட்டவரைப் போன்றுதான். இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்து கொண்டேயிருப்பார்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
(முஸ்லிம்: 5000)

முதலாளியின் நலம் நாடுதல்

மக்கள் பொருளாதாரம் வைத்திருக்கும் விஷயத்தில் அவர்களுக்கு மத்தியில் வித்தியாசம், ஏற்றத் தாழ்வு இருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் தங்களது பொருளாதாரத் தேவைக்காக பிறரிடம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய தொழிலாளர்கள் எப்போதும் தங்களது முதலாளிக்கு நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும். தங்களுக்கு ஊதியம் தரும் முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிடாமல், தரப்படும் பணியை சிறப்பாகச் செய்து கொடுக்க வேண்டும்.

المَمْلُوكُ الَّذِي يُحْسِنُ عِبَادَةَ رَبِّهِ، وَيُؤَدِّي إِلَى سَيِّدِهِ الَّذِي لَهُ عَلَيْهِ مِنَ الحَقِّ، وَالنَّصِيحَةِ وَالطَّاعَةِ لَهُ أَجْرَانِ

தன் இறைவனை நல்லமுறையில் வணங்கி, தன் எஜமானுக்குத் தான் செய்ய வேண்டிய கடமைகளை (ஒழுங்காக) நிறைவேற்றி, அவனுக்கு நலம் நாடி (நேர்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொண்டு) அவனுக்கு கீழ்ப்படிந்தும் நடக்கின்ற அடிமை என்றால் அவனுக்கு இரு நன்மைகள் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி),
(புகாரி: 2551)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேருடைய நற்செயலுக்குரிய பிரதிபலன் இரண்டு முறை அவர்களுக்கு வழங்கப்படும். அவர்கள்:

  1. ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றிருந்து அவளுக்குக் கல்வி கற்றுத் தந்து, அதை அழகுறக் கற்றுத் தந்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை அழகுறக் கற்பித்து, அவளை (தானே) மணம் புரிந்தும் கொண்ட மனிதர். இவருக்கு (அதற்காக) இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.
  2. வேதம் வழங்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நம்பிக்கையாளர். (முந்தைய இறைத்தூதர் மீதும், முந்தைய வேதத்தின் மீதும்) நம்பிக்கை கொண்டிருந்த அவர், பிறகு நபி (ஸல்) அவர்கள் மீதும் நம்பிக்கை கொண்டுவிட்டார் எனில், இவருக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.
  3. அல்லாஹ்வின் உரிமையையும் நிறைவேற்றி, தன் எஜமானுக்கும் நலம் நாடுகின்ற அடிமை.

(புகாரி: 3011)

தொழிலாளிகளுக்கு நலம் நாடுதல்

முதலாளிகள், தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர்களது ஊதியத்தைக் கால தாமதம் இல்லாமல் சரியாக முழுமையாக வழங்கிவிட வேண்டும். நிறைவான பொருளாதாரம் பெற்று வளமாக இருப்பதற்கு தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

தொழிலாளர்களிடம் அவர்களது சக்திக்கு மீறிய காரியங்களைச் சுமத்தி வேதனையை அளிக்கக் கூடாது. தங்களது ஊழியர்கள் சிரமத்தில் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் போது அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும். எப்போதும் அவர்களின் நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும்.

إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ، فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ، فَلْيُنَاوِلْهُ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ، أَوْ لُقْمَةً أَوْ لُقْمَتَيْنِ، فَإِنَّهُ وَلِيَ حَرَّهُ وَعِلاَجَهُ

உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் அவருக்கு “ஒரு பிடி அல்லது இரு பிடிகள்” அல்லது “ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள்” உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 5460)

மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) “ரபதா” எனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றோம். அப்போது அவர்கள்மீது ஒரு (புதிய) மேலங்கியும், அவர்களுடைய அடிமையின் மீது அதே போன்ற ஒரு (புதிய) மேலங்கியும் இருந்தன. நாங்கள், “அபூதர் அவர்களே! (அவர் அணிந்திருக்கும் மேலங்கியையும் வாங்கி) இரண்டையும் சேர்த்து நீங்களே அணிந்து கொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி (புதிய) ஆடையாக இருக்குமே?” என்று கேட்டோம். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் பின்வருமாறு விடையளித்தார்கள்:

எனக்கும் என் சகோதரர்களில் ஒருவருக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அம்மனிதரின் தாய் அரபுப் பெண் அல்லர். எனவே, நான் அவருடைய தாயைக் குறிப்பிட்டுத் தரக் குறைவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) என்னைப் பற்றி முறையிட்டார். நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது, “அபூதர்ரே! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் மற்ற மனிதர்களை ஏசும்போது பதிலுக்கு அவர்கள் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசத்தானே செய்கிறார்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அபூதர்! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்” என்று கூறிவிட்டு, “(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான்.

ஆகவே, நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள். நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு அணியக் கொடுங்கள். அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழைப்புத் தாருங்கள்” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 3417)

ஆதரவற்றோருக்கும் ஏழைகளுக்கும் நலம் நாடுதல்

சமுதாயத்தில் பலதரப்பட்ட வாழ்க்கை நிலையில் பல மக்கள் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஆதாரவற்றோர், அநாதைகள், ஏழைகள் போன்றோர் இருக்கிறார்கள். இத்தகைய மக்களுடைய வாழ்க்கையின் தரம் உயர்வதற்கு முடிந்தளவு உதவக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையானவை எல்லாம் பெற்றிருப்பவர்கள் சுயநலமாக இருந்து விட கூடாது. வாழ்வாதாரம் இல்லாமல் சிரமப்படுபவர்கள் இயல்பான தன்னிறைவான வாழ்க்கை பெற்று வாழ்வதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்.

السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ: كَالَّذِي يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்” அல்லது “இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 6006)

أَنَا وَكَافِلُ اليَتِيمِ فِي الجَنَّةِ هَكَذَا» وَقَالَ بِإِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالوُسْطَى

“நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தமது சுட்டு விரலாலும் நடு விரலாலும் (சற்றே இடைவெளி விட்டு) சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி),
(புகாரி: 6005)

தன் அடிமையில் தனக்குள்ள பங்கை எவர் விடுதலை செய்து விடுகின்றாரோ அவர் (வசதியுடையவராயின்) தன் செல்வத்தைக் கொண்டு அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவர் மீது கடமையாகும். அவரிடம் செல்வம் இல்லையென்றால் அந்த அடிமையின் விலை, (அவனை) ஒத்த (அடிமையின்) விலையைக் கொண்டு மதிப்பிடப்பட்டு அவன் உழைத்துச் சம்பாதிக்க அனுமதியளிக்கப்பட வேண்டும். அவன்  மீது தாங்க முடியாத (உழைப்பைச் சுமத்திச்) சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 2492)

பெண்களின் நலம் நாடுதல்

பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பல வகையில் பலவீனமாக, வலிமை குறைந்தவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதையும் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்யாமல் அநீதம் இழைக்கப்படுவதையும் பார்க்கிறோம். சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராகப் பல்வேறு குற்றங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. எனவே எப்போதும் பெண்களின் நலம் நாடுபவர்களாக நாம் இருக்க வேண்டும்.

وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا، فَإِنَّهُنَّ خُلِقْنَ مِنْ ضِلَعٍ، وَإِنَّ أَعْوَجَ شَيْءٍ فِي الضِّلَعِ أَعْلاَهُ، فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ، فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பெண்கள் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ (பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 5186),(முஸ்லிம்: 2914)

பாதிக்கப்படுவோருக்கு நலம் நாடுதல்

நாம் நலமாக இருக்கிறோம்; நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் சமுதாயத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் இருந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்டோர், சிரமப்படுவோர், பலவீனமானவர்கள் போன்று பல்வேறு மக்கள் நமக்கு மத்தியில் இருக்கிறார்கள். அவர்களின் துயர் துடைப்பதற்கு உறுதுணையாக  இருக்க வேண்டும். அவர்களின் சிரமங்கள் நீங்குவதற்குத் துணை நிற்க வேண்டும். அவர்கள் இன்னல்கள் நீங்கி நலமாக வாழ அதரவு அளிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்: 1. நோயாளிகளை நலம் விசாரிப்பது 2. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது 3. தும்மியவருக்கு அவர், “அல்ஹம்துலில்லாஹ்” (“அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று) சொன்னால், “யர்ஹமுக் கல்லாஹ்” – (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று துஆ செய்வது 4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது 5. அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு உதவுவது 6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது 7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி),
(புகாரி: 2445)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் “நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?” எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், “வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!” என்று கூறினார். உடனே, “அவரது தவறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்!” என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),
(புகாரி: 2077)

நான் நபி (ஸல்) அவர்களிடம், “எந்த நற்செயல் சிறந்தது?” என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடுவதும்) ஆகும்” என்று பதிலளித்தார்கள். நான், “எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும்  (தான் சிறந்தவர்கள்)” என்று பதிலளித்தார்கள். 

நான், “என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?” என்று கேட்டேன்.  நபி (ஸல்) அவர்கள், “பலவீனருக்கு உதவி செய்; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்” என்று கூறினார்கள். 

நான், “இதுவும் என்னால் இயலவில்லையென்றால்….?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்குச் செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
(புகாரி: 2518)

குடிமக்களின் நலம் நாடுதல்

ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பொதுப்பணிகளைச் செய்யும் பொறுப்பளர்கள் போன்றோர் மக்களுக்குரிய தேவைகளை, கடமைகளைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போதும், மற்ற நேரங்களிலும் பொதுமக்கள் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் போதும் அவர்களுக்கு உதவ வேண்டும். எல்லா நேரத்திலும் அவர்களுக்கு நல்ல முறையில் சேவையாற்ற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், முஆத்  அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரச்சாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், “நீங்கள் இலேசானதையே மக்களுக்கு எடுத்துரையுங்கள்; சிரமமானதை எடுத்துரைக்காதீர்கள். மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்; வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழகி (அன்பு செலுத்தி)க் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபாடு கொண்டு) பிணங்கிக் கொள்ளாதீர்கள்” என்று (அறிவுரை) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),
(புகாரி: 3038)

ஹஸன் அல்பஷரீ அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்) மஅகில் பின் யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன்.

நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்‘ என்று சொல்ல நான் கேட்டேன்” எனக் கூறினார்கள்.

(புகாரி: 7150)

வியாபாரத்தில் நலம் நாடுதல்

பெரும்பாலும் வியாபாரத்தின் போது பிறர் நலம் பேணும் நற்செயல் புறக்கணிக்கப்படுவதைப் பார்க்கிறோம். கலப்படம் செய்வது, தரமற்ற பொருளை விற்பது, பதுக்குவது என்று பணம் சம்பாதிப்பதற்காக அநியாயமான செயல்களைச் செய்கிறார்கள். பிறரை எப்படியும் ஏமாற்றலாம் எனுமளவிற்குத் தீமையான நடவடிக்கைகள் சர்வ சாதரணமாக நடக்கின்றன. பொருட்களை விற்பவர்களாக இருந்தாலும் வாங்குபவர்களாக இருந்தாலும் எப்போதும் ஒருவருக்கொருவர் நன்மை செய்யும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மைபேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்)  அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி),
(புகாரி: 2079)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لاَ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ أَخِيهِ»

ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
(புகாரி: 2139)

نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ، وَلاَ تَنَاجَشُوا وَلاَ يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ

கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்!

(விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது!) ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 2140)

பள்ளிவாசலில் பிறர் நலம் நாடுதல்

எல்லா விதமான இடங்களிலும் பிறருக்கு நலம் நாடும் வகையில் இருக்க வேண்டும். அல்லாஹ்வை நினைத்து வணங்குவதற்கு அனைவரும் வரும் அவனது ஆலயத்திலும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். பள்ளிவாசலைப் பராமரிப்பதற்கு ஆள் இருப்பார்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கு அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது. அடுத்தவர்களுக்குத் துன்பம் தரும் காரியங்களைச் செய்துவிடக்கூடாது. வணக்க வழிபாடுகள் புரியும் மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடக்கும் குணம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும்.

نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ أَكْلِ الْبَصَلِ وَالْكُرَّاثِ، فَغَلَبَتْنَا الْحَاجَةُ، فَأَكَلْنَا مِنْهَا، فَقَالَ: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الْمُنْتِنَةِ، فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا، فَإِنَّ الْمَلَائِكَةَ تَأَذَّى، مِمَّا يَتَأَذَّى مِنْهُ الْإِنْسُ

வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்துவிடவே அவற்றிலிலிருந்து நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அப்போது அவர்கள், “துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
(முஸ்லிம்: 974)

உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது, அவரது வீட்டிலோ கடைவீதியிலோ தனியாகத் தொழுவதைவிட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும்! ஏனெனில், அவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகிறார்.

தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் நாடவில்லை. தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளிவாசலுக்கு) எழுந்து செல்ல வைக்கவில்லை! அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு படித்தரம் (அந்தஸ்து) அவருக்கு உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு தவறு அவரை விட்டு நீக்கப்படுகிறது!

உங்களில் ஒருவர் தொழக் கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் அவருக்காக பிரார்த்திக்கின்றனர்! அங்கே, அவருக்கு காற்றுப் பிரிந்து, உளூ நீங்கிவிடாமலிருக்கும் வரை, (பிறருக்குத்) தொல்லை தரும் எதையும் அவர் செய்யாமலிருக்கும்வரை, “இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டுவாயாக!” என்று வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள்! உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கின்றார்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 2119)

பிற உயிரினங்களுக்கு நலம் நாடுதல்

சக மனிதர்களுக்கு மட்டுமல்ல சுற்றி வாழும் மற்ற உயிரினங்களுக்கும் நல்லதைச் செய்ய வேண்டும் என்று சொல்லும் தலைச்சிறந்த மார்க்கம் இஸ்லாம். இறைவன் அனுமதித்த அடிப்படையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறேதும் இல்லை. அதேசமயம், பகுத்தறிவு இல்லாத ஜீவன்கள் தானே என்று சொல்லிக் கொண்டு அவற்றை எப்படியும் துன்புறுத்தலாம்; வதைக்கலாம் என்று நினைத்துவிடக் கூடாது.

மற்ற உயிரினங்களிடம் கருணை காட்டுவதற்கும் நன்மைகள் இருக்கிறது. கொடுமைப்படுத்தும் காரியங்களை செய்பவர்களுக்கு அதற்குரிய தண்டனை இருக்கிறது என்பதை என்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலை)க் கொடுத்து விடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் செய்தால், ஒட்டகங்களைத் துரிதமாகச் செலுத்துங்கள். நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால், (போக்குவரத்துச்) சாலையைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், அது இரவில் விஷ ஜந்துகள் உலவும் இடமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 3891)

مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا إِلَّا كَانَ مَا أُكِلَ مِنْهُ لَهُ صَدَقَةً، وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ، وَمَا أَكَلَ السَّبُعُ مِنْهُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَمَا أَكَلَتِ الطَّيْرُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَلَا يَرْزَؤُهُ أَحَدٌ إِلَّا كَانَ لَهُ صَدَقَةٌ

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்.

அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
(முஸ்லிம்: 3159)

ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது.  உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்த போது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) “எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்” என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார்.

அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(ஆம் உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவிசெய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 2363),(முஸ்லிம்: 2244)

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது நாங்கள் “இளைஞர்கள் சிலரை” அல்லது “மக்கள் சிலரைக்” கடந்து சென்றோம். அவர்கள் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு கலைந்து சென்று விட்டனர்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், “இதைச்  செய்தது யார்? இவ்வாறு செய்பவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்” என்று சொன்னார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். இதையே நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

(புகாரி: 5515)

أَنَّهُ نَهَى عَنِ النُّهْبَةِ وَالمُثْلَةِ

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பிறர் பொருளை அபகரிப்பதையும் (பிராணிகள் மற்றும் மனிதர்களின்) அங்கங்களைச் சிதைப்பதையும் தடை செய்தார்கள்.

(புகாரி: 5516)

عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ، فَدَخَلَتْ فِيهَا النَّارَ، لاَ هِيَ أَطْعَمَتْهَا وَلاَ سَقَتْهَا، إِذْ حَبَسَتْهَا، وَلاَ هِيَ تَرَكَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ

ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்த போது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்பதற்காக (அவிழ்த்து) விடவுமில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
(புகாரி: 3482),(முஸ்லிம்: 2242)

பிறர் நலம் நாடுவது குறித்து இஸ்லாம் போன்று வேறு எந்தக் கொள்கையாலும் இந்தளவிற்குத் தெளிவாக விளக்கிவிட முடியாது. உண்மையைச் சொல்வதாக இருப்பின், இதுபோன்று எடுத்துரைக்கும் எந்தவொரு கொள்கையும் எங்கும் இல்லவே இல்லை. காரணம், பிற மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்; தீமை செய்யக் கூடாது என்பது குறித்து அனைத்து கோணங்களிலும், கண்ணோட்டத்திலும் இஸ்லாம் கவனத்தைச் செலுத்துகிறது. இதுவரை நாம் பார்த்த செய்திகள் கூட அவற்றுள் ஒரு பகுதிதான்.

இன்னும் பற்பல செய்திகள், கருத்துக்கள் இருக்கின்றன. இத்தகைய இஸ்லாமிய மார்க்கம் உலகில் தலைவிரித்தாடும் தீவிரவாதத்தை ஆதரிக்குமா? என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதுபற்றி சிந்தித்தால் நமக்கு கிடைக்கும் ஒரே பதில், இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை, அதை ஆதரிக்கவில்லை என்பது தான். இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவான ஒன்று என்பதை எவராலும் மறுக்க இயலாது. 

ஆகவே இஸ்லாம் என்கிற மார்க்கம் பிறர் நலம் நாடக்கூடிய மார்க்கமாகவே திகழ்கிறது. அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கட்டளையிட்ட அனைத்து விஷயங்களையும் கடைபிடிப்போமாக.! அல்லாஹ் அப்படிப்பட்ட நன்மக்களாக நம்மை ஆக்கி அருள்புரிவனாக.!  

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.