நரகில் தள்ளும் நச்சு வார்த்தைகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

இன்றைய முஸ்லிம் பெண்கள் தாம் என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுவதைப் பார்க்கலாம். அப்படி பேசக்கூடிய பேச்சுக்களில் பல வார்த்தைகள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வார்த்தைகளாக இருப்பதையும் காணலாம்.

சில காரியங்களைச் செய்தால் அதனால் தீங்கு ஏற்படும் என்றும் நம்புகின்றனா். குறிப்பிட்ட நேரங்களில் தர்மமோ, அல்லது இரவலாக பொருளோ தந்தால் வறுமை ஏற்படும் என்றும் நம்புகின்றனர். இவை சரியா என்று பார்ப்போம்.

இருட்டு வந்து விட்டால் இரவல் கிடையாது

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் திடீரென்று தமக்குத் தேவைப்படும் ஒரு பொருளைக் கேட்கின்றனர். பகலில் கேட்டால் கொடுக்கும் குணமுடையவர்கள் கூட மாலை நேரத்திலோ இரவிலோ கேட்டுவிட்டால் போதும், “இவளுக்குக் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லை, நேரம் காலம் தெரியாம கேக்கரா பாரு! ஊசி, தண்ணீர், பணம், கேட்டால் மாலை நேரங்களில் கொடுக்கக் கூடாதுன்னு தெரியாதா! என்று கேட்கின்றனர். இதனால் தரித்திரம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயப்படுகின்றனா்.

இரவு நேரத்தில் பணம் கொடுத்தால் நம்முடைய பரக்கத் (பணம்) அவங்களுக்குப் போய்விடும். அந்த நேரத்திலே தண்ணீர் கொடுத்தால் நமக்குக் கஷ்டம் வந்துவிடும் என எண்ணுகின்றனர்.

மாலை நேரத்தின் இறைவன் அல்லாஹ்!

இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தான். வானம், பூமி, சூரியன், சந்திரன், காலை, மாலை, இரவு, பகல், அனைத்தையும் அவனே படைத்தான்.

اِنَّ فِى اخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّتَّقُوْنَ‏

இரவு, பகல் மாறி மாறி வருவதிலும், வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்திருப்பதிலும் (இறைவனை) அஞ்சுகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்: 10:6)

تُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ‌ وَتُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ‌ وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏

“இரவைப் பகலில் நுழைக்கிறாய்! பகலை இரவில் நுழைக்கிறாய்! உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறாய்” (என்றும் கூறுவீராக!)

(அல்குர்ஆன்: 3:27)

இந்த வசனத்தில் அல்லாஹ் இரவு, பகல் மாறி மாறி வருவது தன்னால் தான் என்று கூறுகிறான். இரவு நமக்கு எப்படி தீங்கு தரும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

துன்பம் தருவதும் அல்லாஹ்தான்!
وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

(அல்குர்ஆன்: 2:155)

وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ‌ؕ وَاِنْ يَّمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன்: 6:17)

மேற்கண்ட வசனங்களில் நமக்கு வறுமை, தரித்திரம், போன்ற எந்தத் துன்பம் வந்தாலும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது என்று கூற வேண்டும். மாறாக இரவுக்கோ, அல்லது மாலை நேரத்திற்கோ, துன்பம் தரும் அதிகாரம் உண்டு என்று நம்புவது இணை வைக்கும் செயலாகும். அல்லாஹ்வுக்கு இணையாக மனிதனையோ, மண்ணையோ, பொருளையோ, நேரத்தையோ, கொண்டு வந்தால் அது நம்மை நரகில் தள்ளிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

சமிக்கைகள் வரவு தருமா!

கண் துடித்தால் நல்லது நடக்கும், ஆறு விரல் உள்ள பிள்ளை பிறந்தால் பொருளாதாரம் பெருகும், கருநாக்கு இருந்தால் நல்லது, சிங்கப்பல் இருந்தால் யோகம், கரப்பான் பூச்சி இருந்தால் பரக்கத், உள்ளங்கை அரித்தால் வரவு வரும், சோத்து கற்றாலையை நடு வீட்டில் தொங்க விட்டு அது வளர்ந்தால் நாம் வளமோடு வாழ்வோம். இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் பரவலாக நம் பெண்களிடத்தில் இருக்கின்றது.

இந்த வார்த்தைகளை உற்றுக் கவனித்தால் நாம் அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் நம் உடல் உறுப்புகளையும், பூச்சிகளையும், செடிகளையும், இணையாக்குகிறோம் என்பது புரிந்துவிடும்.

பொருளாதாரம் தருபவன் அல்லாஹ்
اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًۢا بَصِيْرًا

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 17:30)

அல்லாஹ்தான் மனிதர்களுக்கு தேவையான எல்லா வசதி வாய்ப்புகளையும், தருவதாகக் கூறுகிறான். தன்னை இறைவனாக ஏற்க மறுத்தவர்களுக்கும் பொருளாதாரத்தை வாரி வழங்கியுள்ளான்.

اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰى فَبَغٰى عَلَيْهِمْ‌ وَاٰتَيْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَـتَـنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِى الْقُوَّةِ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ‌ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْفَرِحِيْنَ‏

காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். “மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 28:76)

فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ فِىْ زِيْنَتِهٖ‌ؕ قَالَ الَّذِيْنَ يُرِيْدُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا يٰلَيْتَ لَـنَا مِثْلَ مَاۤ اُوْتِىَ قَارُوْنُۙ اِنَّهٗ لَذُوْ حَظٍّ عَظِيْمٍ‏

தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். “காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்” என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர்கூறினர்.

(அல்குர்ஆன்: 28:79)

நபி சுலைமான் (அலை) அவர்களுக்கும் இறைவன் பொருளாதாரத்தை வாரி வழங்கியுள்ளான். சுலைமான் நபிக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று வேறு நபிமார்களுக்குச் செல்வங்கள் கொடுக்கப்படவில்லை.

قِيْلَ لَهَا ادْخُلِى الصَّرْحَ‌ ۚ فَلَمَّا رَاَتْهُ حَسِبَـتْهُ لُـجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَيْهَا ‌ؕ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِيْرَ ۙ‌قَالَتْ رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَـفْسِىْ وَ اَسْلَمْتُ مَعَ سُلَيْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ

“இம்மாளிகையில் நுழைவாயாக!” என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்டபோது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். “அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை” என்று அவர் கூறினார். “நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்” என்று அவள் கூறினாள்.

(அல்குர்ஆன்: 27:44)

وَوَرِثَ سُلَيْمٰنُ دَاوٗدَ‌ وَقَالَ يٰۤاَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَاُوْتِيْنَا مِنْ كُلِّ شَىْءٍؕ‌ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِيْنُ‏
وَحُشِرَ لِسُلَيْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوْزَعُوْنَ‏

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட்கொடையாகும்” என்று அவர் கூறினார். ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர் .

(அல்குர்ஆன்: 27:16,17)

ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு அளிப்பவன்
 وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ‌ ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا‏

அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.

(அல்குர்ஆன்: 65:3)

وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.

(அல்குர்ஆன்: 11:6)

عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَوَكَّلُونَ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ لَرُزِقْتُمْ كَمَا يُرْزَقُ الطَّيْرُ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا

அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஃமின் அல்லாஹ்வை நம்பவேண்டிய விதத்தில் நம்பினால் அல்லாஹ் அவனுக்கு ஒரு பறவைக்கு உணவளிப்பதைப் போல உணவளிப்பான். அது காலையில் ஒட்டிய வயிற்றுடன் செல்கிறது. ஆனால் மாலையில் நிரம்பிய வயிறோடு தன் வீட்டிற்குத் திரும்புகிறது.

நூல் : (திர்மிதீ: 2344) (2266)

அல்லாஹ்வை இறைவனாக ஏற்க மறுத்த காரூனுக்கும், இறைத்தூதரான சுலைமான் (அலை) அவர்களுக்கும், இன்னும் உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் உணவு தருவதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் நாமோ நம் உடலில் ஒரு விரல் கூடுதலாக உள்ளதால் செல்வம் கிடைக்கிறது என்று சொல்லலாமா? நம் வீட்டில் பரக்கத்திற்கு காரணம் அல்லாஹ்வா! அல்லது சோத்து கற்றாலையா? அல்லாஹ் நம் மீது புரிந்து கொண்டிருக்கிற அருளை அனாவசியமாக மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுப் பேசலாமா? நம் உடலில் உள்ள உறுப்பினாலோ, வீட்டில் மாட்டப்படுகின்ற பொருளினாலோ, நமக்கு நல்லது நடப்பதில்லை. மாறாக அல்லாஹ்தான் உலகில் உள்ள அனைத்திற்கும் அளவில்லாமல் அருள்பாலிக்கிறான்.

இப்படி இருந்தால் அப்படி நடக்கும்

நகத்தில் வெள்ளைப் புள்ளி வந்தால் புத்தாடை வாங்கி தருவார்கள். கன்னத்தில் குழி விழுந்தவர்களும் இரட்டைச் சுழி உள்ளவர்களும் இரண்டு பொண்டாட்டிகளைக் கட்டுவார்கள் என்று கூறுகின்றனர். வீட்டில் கருப்பு எறும்பு வந்தால் அது சீறு கொண்டு வரும். அதாவது வீட்டில் விசேஷம் நடக்கும் என்று வருங்காலத்தை பற்றி நம்மில் பலர் பேசிவிடுகின்றனர். நாளை நடப்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் என்பதை மறந்து பேசுகின்றனர்.

 وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ؕ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

(அல்குர்ஆன்: 6:59)

اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ‌ ۚ وَيُنَزِّلُ الْغَيْثَ‌ ۚ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ‌ ؕ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا‌ ؕ وَّمَا تَدْرِىْ نَـفْسٌۢ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ‌ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

(அல்குர்ஆன்: 31:34)

நடந்து முடிந்தவைகளைப் பற்றி நம்மிடம் கேட்டால் சொல்லலாம். ஆனால் நடக்கக் கூடியவைகளைப் பற்றிக் கேட்டால் அதுபற்றி அல்லாஹ்வே அறிந்தவன் என்று கூறவேண்டும். ஏனென்றால் இனிமேல் நடக்க உள்ளதெல்லாம் மறைவானவை. அதை அல்லாஹ்வே அறிவான். ஆனால் இதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் பட்டென இரட்டைச் சுழிக்காரனும் கன்னத்தில் குழி விழுந்தவனும் ரெண்டு பொண்டாடி கட்டுவான் என்றும் இவர்களுக்கு யார் சொன்னது? அல்லாஹ்வா! அல்லது அல்லாஹ்வுடைய துதரா!

நாளைக்கோ அல்லது அடுத்த வாரத்திலோ அல்லது அடுத்த மாதத்திலோ அல்லது அடுத்த வருடத்திலோ அல்லது மனிதனின் ஆயுளுக்குள்ளோ நடக்கலாம் என்று விளையாட்டுக்கும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் அல்லாஹ்வுக்கு மட்டும் தெரிந்த மறைவான ஞானத்தை நாம் கையில் எடுத்த குற்றத்திற்கு ஆளாவோம்.

மவ்த் பற்றி நடக்கும் கூத்து

ஆந்தை கத்தினால் அது எந்தப் பகுதியில் கத்தியதோ அந்தப் பகுதியில் மரணம் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். சனிப்பொணம் தனியே போகாது என்பார்கள். அதாவது சனிக்கிழமையில் இறந்த அவருக்காக இன்னொருவர் உயிர் போகும். அதைத் தவிர்க்க வேண்டுமானால் இறந்தவரை அடக்கம் செய்யும் இடத்துக்கருகில் கோழியோ, ஆடோ அறுத்து பரிகாரம் செய்தால் இன்னொருவர் உயிர் போகாது என்று நம்புகின்றனர்.

இறந்தவர்களின் வீட்டிற்குச் சென்று திரும்பும் போது போய் வருகிறேன் என்று கூறக்கூடாது என்கின்றனர். ஏனென்றால் இன்னொருவர் மரணம் அந்த வீட்டில் நடக்கலாம்.

மனிதனின் உயிரை கைபற்றுப்பவன் யார்?
 قُلْ يَتَوَفّٰٮكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِىْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ

“உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 32:11)

وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا ؕ وَ مَنْ يُّرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَا ‌ۚ وَمَنْ يُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ‌ؕ وَسَنَجْزِى الشّٰكِرِيْنَ‏

அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி. இவ்வுலகக் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். மறுமையின் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். நன்றியுடன் நடப்போருக்கு கூலி வழங்குவோம்.

(அல்குர்ஆன்: 3:145)

இவ்வசனங்களில் அல்லாஹ்வே நம் உயிரைக் கைப்பற்றுவதாக கூறுகிறான். எனவே மரணங்களுக்கு கிழமையோ, ஆந்தையோ, மற்றும் வேறு காரணங்களோ கூறினால் அது மறைமுகமான இணை வைப்பாகிவிடும். ஆதலால் இறந்தவர்கள் வீட்டிற்குச் செல்லும் போது இறந்தவருக்காக அதிகமதிகம் துஆ செய்வோம் .

தவறிப்போய் இணை வைப்பு வார்த்தைகள் வாயில் வர வேண்டாம்

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மேற்கண்ட வார்த்தைகளை விளையாட்டுக்குக் கூட சொல்லிவிட வேண்டாம். ஏன் என்றால் அல்லாஹ்விடத்தில் பாவங்களுக்கெல்லாம் பெரும் பாவமாக இருப்பது இணை வைப்புச் செயலாகும். அது போன்ற காரியங்களைச் செய்யாமலும், சொல்லாமலும் உளத் தூய்மையோடு அல்லாஹ்வை வணங்கி வழிபடுவோம்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللهِ لاَ يُلْقِي لَهَا بَالاً يَرْفَعُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللهِ لاَ يُلْقِي لَهَا بَالاً يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.

அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 6478) 

இதுவரை நாம் செய்த பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, இறைவனின் மன்னிப்பைப் பெற்று, சுவனத்திற்கு செல்லக்கூடிய நன்மக்களாக, அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!