நரகத்திற்கு கொண்டு செல்லும் பொய்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

மனிதர்களில் சிலரிடம் தவறைச் செய்யாதே! என்று கூறினால் நான் அப்படித்தான் செய்வேன் என்று கூறுவர். இதைச் செய் என்று கூறினால் அதைச் செய்ய மாட்டேன் என்று கூறக்கூடியவர்களும் உண்டு. நல்லதை ஏற்பதைவிட தீயதை ஏற்று நடக்கூடியவர்கள்தான் மனிதர்களில் அதிகம். அந்த தீயதிலே மிக மோசமானது பொய் எனும் தீமையாகும்.  எப்போதாவது பொய் என்ற நிலை போய், சிலரது வாழ்க்கையே பொய்யிலேதான் கழிகிறது. அதை ஒரு பாவமாகவே கருதுவது கிடையாது.

அல்லாஹ் கூறுகிறான் :

 وَاجْتَنِبُوْا قَوْلَ الزُّوْرِۙ‏

பொய் பேசுவதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 22:30)

மனிதனின் இம்மை, மறுமை வாழ்க்கை மேம்பட பின்பற்ற வேண்டிய காரியங்களில் ஒன்று மெய்யை பேசி பொய்யை தவிர்ப்பது. ஆனால் பொய் பேசுவதினால் சில நேரங்களில் நாம் தப்பித்துவிடலாம், பலரின் கோபத்திலிருந்தும் தப்பித்துவிடலாம் என்று சர்வசாதரணமாக பொய் பேசுவதை பழக்கமாக சிலர் கொண்டுள்ளனர். இது நல்லதா? கெட்டதா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை காண்போம்.

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்

ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணத்தை நடத்தலாம் என்ற பழமொழியை கவனத்தில் கொண்டு மூட்டை கணக்கில் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்திவிடுகின்றனர். ஆனால் திருமணத்திற்கு பின்னர் அந்த பெண் படும் கஷ்டத்தை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. இவ்வாறு பொய் சொல்லி நடத்தப்பட்ட பல திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது.

ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்

ஒரு பொய் சொல்ல போய் அதை நியாயப்படுத்திட நூறு பொய் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடுகிறது. இதனால் நூறு பொய் சொன்ன பாவத்திற்கு நாம் ஆளாக நேரிடும். மேலும் இவ்வாறு பொய் சொல்லி, பொய் சொல்லி பழகிவிடுபவர்கள் அல்லாஹ்விடம் மாபெரும் பொய்யர் என்று எழுதப்பட்டு இறுதியில் அவர் நரகத்திற்கு சொந்தக்காரராக மாறி விடுகிறார்.

 عَنْ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا.

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் “வாய்மையாளர்’ ஆகிவிடுவார்.

(இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் “பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),
நூல் : (புகாரி: 6094) , முஸ்லிம் (5081)

தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப சிலர் தன் வாயால் பொய்களை பேசி, பேசி, பெரும் பொய்யராக மாறி நரகத்திற்கு செல்லும் பாவியாகிவிடுகிறார்கள்.

பொய் பேசுவதின் விளைவு கெட்ட செயல்களை செய்யத் தூண்டும். கெட்ட செயல்கள் நரகத்திற்கு கொண்டு போய் சேர்த்திடும் என்ற நபிகளாரின் எச்சரிக்கையை கவனிக்க மறந்துவிடக்கூடாது.

பொய் பேசுவது கூடாது என்று தெரிந்திருந்தும் பொய் பேசுகிறாயா என்று கேட்டால் “பொய் பேசாதோர் யார்?” என்று நம்மை கேலி செய்வார்கள். பொய் பேசாத மனிதன் உண்டா? அவ்வாறு இருக்க முடியுமா? என்று அவர்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு நாம் பேசும் சின்ன விஷயங்கள் கூட மறுமையில் தண்டனை பெற்றுத் தரும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

கண்காணிப்புக் கேமரா! எச்சரிக்கை!

اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ‏
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

(அல்குர்ஆன்: 50:17,18)

மனிதன் பேசும் எந்த வார்த்தைகளையும் அல்லாஹ் பதிவு செய்யாமல் விடுவதில்லை. அவன் பேசும் பொய்யான பேச்சுகளும் வானவர்கள் பதிவு செய்கின்றனர். அந்த வார்த்தைகளுக்கு அவன் மறுமையில் பதில் சொல்லியே தீர வேண்டும்.

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏
وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.

(அல்குர்ஆன்: 99:7,8)

சிறியது விடப்படுமா?

மிகச்சிரிய அளவு பொய் சொன்னால்கூட அது மறுமை நாளில் பார்க்க நேரிடும் எனும்போது நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! இதன் பாதிப்பு மறுமை நாளில்தான் தெரியும், அவன் செய்த பாவங்களில் பதிவு செய்யப்பட்ட ஏட்டை அவன் காணும்போது இதன் கடுமையை தெரிந்து கொள்வான்.

وَوُضِعَ الْكِتٰبُ فَتَرَى الْمُجْرِمِيْنَ مُشْفِقِيْنَ مِمَّا فِيْهِ وَ يَقُوْلُوْنَ يٰوَيْلَـتَـنَا مَالِ هٰذَا الْـكِتٰبِ لَا يُغَادِرُ صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً اِلَّاۤ اَحْصٰٮهَا‌ ۚ وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا‌ ؕ وَ لَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا

பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்ற வாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! “இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!” எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண்முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட் டான்.

(அல்குர்ஆன்: 18:49)

சிறிதாயின் பெரிய தண்டனை கிடைக்கலாம்

நாம் சிறியது என்று எண்ணும் சில வார்த்தைகள் மறுமையில் நரகத்தின் அடிபாதளத்தில்கூட தள்ளவிடலாம் என்பதை கவனத்தில் கொண்டு சிறியதுதான் என்று பேசிவிடக்ககூடாது.

عَنْ أَبِي هُرَيْرَةَ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ :
إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يَتَبَيَّنُ فِيهَا يَزِلُّ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مِمَّا بَيْنَ الْمَشْرِق.

ஓர் அடியான் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒரு சொல்லை பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 6477) 

குழந்தைகளிடம் பொய்

பொய் பேசக்கூடாது, திருடக்கூடாது, பாவம் செய்யக்கூடாது, தீய வார்த் தைகளை பேசக்கூடாது என்று விரும்பும் பெற்றோர்கள். தம் குழந்தை களிடமே பொய் பேசும் பழக்கத்தை உருவாக்கிவிடுகிறார்கள். கடன்காரன் வீட்டுக்கு வந்து தந்தை கேட்டால் வீட்டில் இருந்து கொண்டே தம் குழந்தையிடம், தான் இல்லை என்று சொல்லச் சொல்லி குழந்தையின் உள்ளத்தில் பொய் பேசும் பழக்கத்திற்கு அடித்தளம் போடுகிறார்கள்.

இவ்வாறு பொய் சொல்ல கற்றுக் கொடுப்பதினால் நம் குழந்தைகள் வளரும் போது பொய் சொல்லியே உருவாகிறது. பள்ளிக்கூடம் போகாமல் ஊர் சுற்றிவிட்டு வந்து பள்ளிக்கூடம் போனதாக சொல்வது, ஸ்பெஷல் கிளாஸ் இன்று உள்ளது என்று கூறிவிட்டு சினிமாவுக்கு போய்விட்டு வருவது போன்றவை நாம், பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தப் பாடத்தின் பின் விளைவே! எனவே பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் பொய் பேசும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.

 أَنَّ أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :
مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُيُهَوِّدَانِهِ ، أَوْ يُنَصِّرَانِهِ ، أَوْ يُمَجِّسَانِهِ كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ

“ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்றவிலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள்தாம், குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 1359) 

மார்க்கத்தில் பொய்

இஸ்லாமிய மார்க்கம் திருக்குர்ஆன் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் அமைந்ததாகும். ஆனால் சிலர் தங்களின் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு தங்களின் வளர்ச்சிக்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் இஸ்லாத்தின் சட்டங்களில் விளையாடுகிறார்கள். இஸ்லாத்தில் இல்லாததை, நபிகளார் கூறியதாக பொய்யான செய்திகளை மக்கள் மன்றங்களில் உலா விடுகின்றனர். இதனால் கிடைக்கும் தண்டனை பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதில்லை.

மக்களுக்கு ஆர்வமூட்ட வேண்டும் என்பதற்காவோ அல்லது தீய செயல்களிலிருந்து எச்சரிக்கை செய்வதற்காவோ நபிகளார் கூறாததை கூறியதாக கூறினால் அவருக்கு கிடைக்கும் தண்டனை நரகமாகும்.

قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم :
لاَ تَكْذِبُوا عَلَيَّ ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَلِجِ النَّار.

(நான் சொல்லாததை நான் சொன்னதாக) என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அலீ (ரலி),
நூல் : (புகாரி: 106) , முஸ்லிம் முன்னுரை ஹதீஸ்-2

பெருமைக்காக பொய்

ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணமுடித்திருக்கும்போது சக்களத்தியிடத்தில் தம் கணவர் எதையும் தராதபோது எனக்கு இதை வாங்கிக் கொடுத்தார், அதை வாங்கிக் கொடுத்தார் என்று கூறும் பொய்யும் தண்டனைக்குரியதாகும்.

عَنْ أَسْمَاءَ
أَنَّ امْرَأَةً قَالَتْ يَا رَسُولَ اللهِ إِنَّ لِي ضَرَّةً فَهَلْ عَلَيَّ جُنَاحٌ إِنْ تَشَبَّعْتُ مِنْ زَوْجِي غَيْرَ الَّذِي يُعْطِينِي ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّعُ بِمَا لَمْ يُعْطَ كَلاَبِسِ ثَوْبَيْ زُورٍ.

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சக்களத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக்கொண்டால், அது குற்றமாகுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கிடைக்கப்பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக் கொள்கிறவர், போலியான இரு ஆடைகளை அணிந்துகொண்டவர் போலாவார்” என்று கூறினார்கள்.

அறி : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி),
நூல் : (புகாரி: 5219) ,(முஸ்லிம்: 4318)

நயவஞ்கனின் குணங்கள் நான்கு

இந்த நான்கில் ஒரு குணம் இருந்தாலும் அவரிடம் நயவஞ்கனின் ஒரு குணம் உள்ளதாகவே கருதப்படுவார். அவர் தொழுதவராக நோன்பு நோற்றவராக இருந்தாலும் சரியே!

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ :
أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا ، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ ، وَإِذَا حَدَّثَ كَذَبَ ، وَإِذَا عَاهَدَ غَدَرَ ، وَإِذَا خَاصَمَ فَجَرَ.

நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும்.

(ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வதும், பேசும்போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்து கொண்டால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை (நான்கும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : (புகாரி: 34) 

(முஸ்லிம்: 109) இன் செய்தியில்… “நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்… அவன் நோன்பு நோற்றாலும், தொழுதாலும், தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொண்டாலும் சரியே” என்று இடம் பெற்றுள்ளது.

எனவே பொய்யினால் கிடைக்கும் நரகத்தின் தண்டனையை பயந்து மறுமையின் வெற்றியை கவனத்தில் கொண்டு பொய் பேசுவதை தவிர்ப்போம். உண்மையை மட்டும் உரைப்போம். இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக! இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!

ராபியத்துல் பஸரிய்யா, நாமக்கல்