நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-5

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-5

இஸ்லாத்தின் கருத்துக்களை ஏந்தி நிற்கின்ற பாடல்கள் என்று மக்களுக்கு மத்தியில் உலா வருகின்ற பாடல்கள் இஸ்லாத்திற்கு எதிரான பாடல்கள் என்பதை இத்தொகுப்பின்  வாயிலாக தொடர்ச்சியாக அறிந்து வருகிறோம்.

“நானிலம் போற்றிடும் நாகூரார்” என்று துவங்கும் ணி.வி. ஹனிஃபா அவர்கள் பாடிய பாடல் எவ்வாறு இஸ்லாத்திற்கு எதிராக அமைந்திருக்கிறது என்பதை இப்போது காண்போம்.

“நானிலம் போற்றிடும் நாகூரா

உம்மை நம்பி வந்தேன் திரு நபி பேரா”

உலகமே போற்றிடும் நாகூராரை தனது காரியங்கள் அனைத்திற்கும் பொறுப்பு சாட்டி  அவரையே நம்பி, அவரையே சார்ந்திருப்பதாகவும், நாகூரார், நபி (ஸல்) அவர்களின் பேரன் என்றும் இந்த பாடலின் முதல் வரியில் பாடுகின்றார். இதுபோன்ற கவிதை வரிகளைத் தயாரிப்பதன் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை அறிவுகூட தனக்கு இல்லை என்பதை இந்த கவிஞர் நிரூபித்திருக்கின்றார்.

இஸ்லாத்தின் அடிப்படையைப் பொறுத்த வரையில் நமது அனைத்து காரியங்களுக்கும் அல்லாஹ்வையே பொறுப்பு சாட்டி அவனையே நம்பி சார்ந்திருக்க வேண்டும். இந்த அந்தஸ்தை அவனல்லாத யாருக்கும் வழங்கிவிடக் கூடாது. அவ்வாறு வழங்குவது அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கும் மாபாதகச் செயலாகும்.

எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே சார்ந்துள்ளேன். எந்த உயிரினமானாலும் அதன் முன் நெற்றியை அவன் பிடித்துக் கொண்டிருக்கிறான். எனது இறைவன் நேரான வழியில் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 11:56)

“என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே சார்ந்திருங்கள்!’’ என்று மூஸா கூறினார்.

(அல்குர்ஆன்: 10:84)

“அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்‘’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 9:51)

உங்களில் இரு குழுவினருக்கும் அல்லாஹ் உதவுபவன் என்ற நிலையில் அவ்விரு குழுவினரும் கோழைகளாகிட எண்ணினர். நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

(அல்குர்ஆன்: 3:122)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

(அல்குர்ஆன்: 64:13)

“அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்”

(அல்குர்ஆன்: 14:12)

இத்துனை வசனங்களும் அல்லாஹ்வையே நம்ப வேண்டும், அவனையே சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றன். இவைகளுக்கு மாற்றமாக நாகூர் மீரானைத் தான் நம்பிச் செல்வதாக இப்பாடலில் தெரிவிக்கின்றார். இது இறைவனது அந்தஸ்தை நாகூராருக்கு வழங்கும் அப்பட்டமான இணைவைப்பாகும்.

மேலும், இப்பாடல் வரியில் கூடுதல் தகவலாக நாகூர் மீரான நபி (ஸல்) அவர்களின் வழியில் வந்த பேரனாவார் என்று தெரிவிக்கின்றார். நாகூர் மீரான் நபி (ஸல்) அவர்களின் பேரன் என்பதற்கு என்ன ஆதாரம்? எந்த வழியில் இவர் பேரனாக இருக்கின்றார் என்று எவ்வித ஆதாரமும் கிடையாது.

நபி (ஸல்) அவர்களின் வழிதோன்றலாகிய நாகூர் மீரானைத் தானே நாங்கள் நம்பியிருக்கின்றோம் இதில் என்ன தவறிருக்கிறது என்ற அர்த்தமற்ற வியாக்கியானத்துக்காக இவ்வாறு சொல்கின்றார் போலும். நபி (ஸல்) அவர்களாக இருந்தால் கூட அல்லாஹ்வின் அந்தஸ்தை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.

அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொறுப் பேற்கப் போதுமானவன்.

(அல்குர்ஆன்: 33:3)

ஏக இறைவனை) மறுப் போருக்கும் நயவசகருக்கும் கட்டுப்படாதீர்! அவர்களின் தொல்லைகளை அலட்சியப் படுத்துவீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

(அல்குர்ஆன்: 33:48)

இவ்வாறிருக்க நபி (ஸல்) அவர்களின் குடும்பத் தாரில் ஒருவரைச் சார்ந்திருப்பது அர்த்தமற்றதாகும்.

இன்னும் இப்பாடலின் மற்றொரு வரி

“திக்குத் திசை பணியும் தெய்வீக மீரா”

உலகமே பணிகின்ற தெய்வமாக நாகூர் மீரான் திகழ்வதாக பாடலின் இந்த அடி கூறுகிறது. அனைத்து பலவீனங்களையும் சுமந்து கொண்டிருக்கும் நம்மைப் போன்ற ஒரு மனிதன் அவர் மரணித்து ஆண்டுகள் பல ஓடி விட்டது. அத்தகைய உடல், உலகமே பணிகின்ற தெய்வம் என்று கூறி இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் வரிகளைக் கொண்டிருக்கிறது இப்பாடல்.

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

(அல்குர்ஆன்: 13:15)

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 16:49)

“வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரி னங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமா னோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்’’ என்பதை நீர் அறியவில்லையா? இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவ னுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான்.

(அல்குர்ஆன்: 22:18)

அகிலத்தார் அனைவரும் அல்லாஹ்வுக்கே பணிய வேண்டும் என்று இவ்வசனங்கள் கூற இந்தப் பாடலோ அல்லாஹ்வுக்குப் பணிய வேண்டாம் நாகூராருக்குப் பணியுங்கள் என்று எடுத்துரைக்கிறது. திருமறைக்குர்ஆனின் பல்வேறு வசனங்கள் அல்லாஹ் அல்லாத எவ்விதக் கடவுளும் இல்லை என்று சொல்ல, நாகூர் மீரானை தங்களது கடவுளாக கற்பனை செய்கின்றனர் தர்காவாதிகள்.

அல்லது அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு வேறு கடவுள் உண்டா? அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

(அல்குர்ஆன்: 52:43)

மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கும் அல்லாஹ்வைத் தவிர (வேறு) படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?

(அல்குர்ஆன்: 35:3)

அல்லாஹ் அல்லாத கடவுள் உண்டா? என்ற இறைவனின் கேள்விக்கு ஆம் எங்கள் நாகூரார் இருக்கின்றார். அவர் அருள் புரிவார் என்று இப்பாடல் வரிகளின் வாயிலாக பதிலுரைக்கின்றார். அடுத்து இப்பாடலின் மற்றொரு வரியில் “அடியேனெனக்கிரங்கும் அண்ணலே மீரா” என்று வருகிறது. அவர் அடியார்கள் அழைத்தால் அவர்களுக்காக இரங்கி, அருள் புரிகின்றார் என்ற கருத்தை இவ்வரி தருகின்றது. இறந்தவர்களுக்கும் உயிருடன் உலகில் வாழுபவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!’’ என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை  உள்ளது.

(அல்குர்ஆன்: 23:99-100)

இவ்வாறு இந்தப் பாடலிலும் இதுபோன்ற இன்னும் பல பாடல்களிலும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை நாகூர் ஹனிஃபா பாடியிருக்கின்றார். சமாதி வழிபாட்டை ஆதரித்து பல பாடல்களை அரங்கேற்றிய நாகூர் ஹனிஃபா “பொன் மொழி கேளாயோ, நபிகளின் பொன் மொழி கேளாயோ” என்ற பாடலின் ஒரு வரியில் “வீழ்ந்து சமாதி முன் பூஜைகள் செய்வதை விட்டொழி என்றுரைத்தார்” என்றும் பாடியிருக்கின்றார்.

இப்பாடலில் ஏகத்துவத்தின் அடிப்படை சித்தாந்தத்தை விதைத்து விட்டு, ஏனைய பல பாடல்களில் ஏகத்துவத்திற்கு வேட்டு வைக்கும் விஷம கருத்தை பாடுவதேனோ?