நபி(ஸல்) ஃபாத்திமா(ரலி)க்கு கற்றுக் கொடுத்த ஐந்து வார்த்தைகள்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

நபி(ஸல்) ஃபாத்திமா(ரலி)க்கு கற்றுக் கொடுத்த ஐந்து வார்த்தைகள்

الدعاء للطبراني 360 (ص: 319)
1047- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُصَيْرٍ الأَصْبَهَانِيُّ ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ قَالَ أَصَابَتْ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ فَاقَةٌ فَقَالَ لِفَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا لَوْ أَتَيْتِ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَسَأَلْتِيهِ وَكَانَ عِنْدَ أُمِّ أَيْمَنَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَدَقَّتِ الْبَابَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُمِّ أَيْمَنَ إِنَّ هَذَا لَدَقُّ فَاطِمَةَ وَلَقَدْ أَتَتْنَا فِي سَاعَةٍ مَا عَوَّدَتْنَا أَنْ تَأْتِيَنَا فِي مِثْلِهَا فَقُومِي فَافْتَحِي لَهَا الْبَابَ قَالَتْ فَفَتَحْتُ لَهَا الْبَابَ فَقَالَ يَا فَاطِمَةُ لَقَدْ أَتَيْتِنَا فِي سَاعَةٍ مَا عَوَّدْتِنَا أَنْ تَأْتِينَا فِي مِثْلِهَا فَقَالَتْ يَا رَسُولَ اللهِ هَذِهِ الْمَلائِكَةُ طَعَامُهَا التَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَالتَّمْجِيدُ فَمَا طَعَامُنَا قَالَ وَالَّذِي بَعَثَنِي بِالْحَقِّ مَا اقْتَبَسَ فِي آلِ مُحَمَّدٍ نَارٌ مُنْذُ ثَلاثِينَ يَوْمًا وَقَدْ أَتَانَا أَعْنُزٌ فَإِنْ شِئْتِ أَمَرْتُ لَكِ بِخَمْسَةِ أَعْنُزٍ وَإِنْ شِئْتِ عَلَّمْتُكَ خَمْسَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ جِبْرِيلُ عَلَيْهِ السَّلامُ آنِفًا قَالَتْ بَلْ عَلِّمْنِي الْخَمْسَ كَلِمَاتٍ الَّتِي عَلَّمَكَهُنَّ جِبْرِيلُ عَلَيْهِ السَّلامُ قَالَ قُولِي يَا أَوَّلَ الأَوَّلِينَ يَا آخِرَ الآخَرِينَ ذَا الْقُوَّةِ الْمَتِينَ وَيَا رَاحِمَ الْمَسَاكِينِ وَيَا أَرْحَمَ الرَّاحِمِينَ قَالَ فَانْصَرَفَتْ حَتَّى دَخَلَتْ عَلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَتْ ذَهَبْتُ مِنْ عِنْدِكِ إِلَى الدُّنْيَا وَأَتَيْتُكَ بِالآخِرَةِ قَالَ خَيْرًا يَأْتِيكِ خَيْرًا يَأْتِيكِ

அலீ(ரலி) அவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. எனவே, அலீ(ரலி) அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், நீ அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றால் அவர்களிடம் (உதவி) கேள்! என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் உம்மு அய்மன்(ரலி) அவர்களி(ன் வீட்டி)டம் இருந்தபோது சென்று கதவை தட்டினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் உம்மு அய்மன்(ரலி) அவரகளிடம், இது ஃபாத்திமா கதவை தட்டுகின்ற சத்தமாகும். எந்த நேரத்தில் வருவது ஃபாத்திமாவின் வழமை இல்லையோ அந்த நேரத்தில் நம்மிடம் வந்துள்ளார். எனவே, எழுந்து, கதவை ஃபாத்திமாவிற்கு திறந்து விடுங்கள் என்று கூறினார்கள்.

நான் அவர்களுக்கு கதவை திறந்து விட்டேன் என்று உம்மு அய்மன் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ஃபாத்திமாவே! எந்த நேரத்தில் வருவது உனது வழமையில்லையோ அந்த நேரத்தில் எங்களிடம் நீ வந்துள்ளாய் என்று கூறினார்கள். உடனே, ஃபாத்திமா(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் சொல்வது இன்னும் இறைவனை மகத்துவப்படுத்துவதெல்லாம் வானவர்களின் உணவு. எங்களின் உணவு எது? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், சத்தியத்துடன் என்னை அனுப்பியவன் மீது ஆணையாக! எங்களுக்கு செம்பறியாடு வந்த நிலையிலும் முஹம்மதாகிய (என்) குடும்பத்தில் முப்பது நாட்களாக நெருப்பு எரியவில்லை. நீ விரும்பினால் உனக்கு ஐந்து செம்பறியாடுகளை தருமாறு கட்டளையிடுகிறேன். நீ விரும்பினால் தற்போது எனக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் கற்று தந்த ஐந்து வார்த்தைகளை உனக்கு கற்றுத் தருகிறேன் என்று கூறினார்கள். (அப்போது) ஃபாத்திமா(ரலி) அவர்கள் ஜிப்ரீல்(அலை) உங்களுக்கு கற்று தந்த ஐந்து வார்த்தைகளையே எனக்கு கற்றுத்தாருங்கள் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், யா அவ்வலல் அவ்வலீன் யா ஆகீரல் ஆகீரீன் தல் குவ்வத்தில் மத்தீன் வ யா ராஹிமல் மஸாகீன் வயா அர்ஹமர் ராஹிமீன் என்று நீ சொல் என்று நபியவர்கள் கூறினார்கள். உடனே, ஃபாத்திமா(ரலி) திரும்பி அலி(ரலி) அவர்களிடம் வந்து, நான் உங்களிடமிருந்து உலகத்தை (எதிர்ப்பார்த்து) நோக்கி சென்றேன். (தற்போது) மறுமை பலனை கொண்டு வந்துவிட்டேன் என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி) அவர்கள் நல்லதே உன்னிடம் வரும் நல்லதே உன்னிடம் வரும் என்று கூறினார்கள்.

ஐந்து வார்த்தைகளுக்கான பொருள்: முதலாமவர்களில் முதலாமவனே! இறுதியானவர்களில் இறுதியானவேனே! உறுதியான ஆற்றலுடையவனே! ஏழைகளுக்கு இரக்கம் காட்டுபவனே! கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே!

இந்த செய்தி தப்ரானீ இமாமுக்குரிய துஆ எனும் புத்தகத்தில் 1047வது செய்தியாகவும், தர்தீபுல் அமாலீ எனும் புத்தகத்தில் 1138வது செய்தியாகவும் இடம்பெற்றுள்ளது. இந்த செய்திகளில், “இஸ்மாயீல் பின் அம்ர் அல்பஜலீ” எனும் அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். இவர் ஹதீஸ்துறையில் பலவீனமானவர் என்று அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

الجرح والتعديل (2/ 190)
643 – (131 م) إسماعيل بن عمرو البجلي كوفي قدم اصبهان روى عن سفيان الثوري والحسن وعلي (3) ابني صالح وقيس بن الربيع روى عنه أحمد بن محمد بن عمر بن يونس اليمامي، سألت أبي عنه فقال هو ضعيف الحديث.

இவர் ஹதீஸில் பலவீனமானவர் என்று இமாம் அபூ ஹாதம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 2 பக்கம் 190

الضعفاء والمتروكين لابن الجوزي (1/ 118)
400 إسماعيل بن عمرو بن نجيح أبو إسحاق البجلي الأصبهاني الكوفي
يروي عن الحسن بن صالح والثوري
قال الدارمي والدارقطني وابن عدي ضعيف

இவரை தாரமீ, தாரகுத்னீ, இப்னு அதீ ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன் லிப்னில் ஜவ்ஸீ பாகம் 1 பக்கம் 118

تهذيب التهذيب محقق (1/ 280)
وذكره ابن حبان في الثقات فقال يغرب كثيرا وقال أبو الشيخ في طبقات الاصبهانيين غرائب حديثه تكثر وضعفه أبو حاتم والدارقطني وابن عقدة والعقيلي والازدي وقال الخطيب صاحب غرائب ومناكير عن الثوري وغيره مات سنة (227) أرخه أبو نعيم.

சுஃப்யானுஸ் ஸவ்ரீ வழியாகவும் ஏனையோர் வழியாகவும் அரிதானவைகளையும் மறுக்கத்தக்க செய்திகளையும்(முன்கர்) அறிவிக்க கூடியவர் என்று இமாம் கதீப் கூறியுள்ளார்.

தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 1 பக்கம்280
இஸ்மாயீல் இந்த செய்தியை சுஃப்யான் வழியாகத்தான் அறிவித்துள்ளார்.

ميزان الاعتدال (1/ 239)
922 – إسماعيل بن عمرو بن نجيح البجلى الكوفى ثم الاصبهاني.
عن الثوري ومسعر، وانتهى إليه علو الاسناد بإصبهان.
قال ابن عدى: حدث بأحاديث لا يتابع عليها.

துணை சான்றாக கூட எடுக்க இயலாத செய்திகளையே இவர் அறிவிப்பார் என்று இப்னு அதீ கூறியுள்ளார்.மீஸானுல் இஃதிதால் பாகம் 1 பக்கம் 239

இவ்வாறு பலவீனமானவர் என்று இஸ்மாயீல பின் அம்ரு அல்பஜலீ என்பவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளதால் இந்த செய்தி ஏற்கத்தகுந்த செய்தியாக இல்லை.
இத்தகைய பலவீனமான செய்தியுடன், இதில் இல்லாத பல தகவல்களையும் இட்டுக்கட்டி இந்த செய்தியை பேசியிருந்தார்.

ஹுனைன் போர்க்களத்திலிருந்து நிறைய கனிமத் பொருள் நபி(ஸல்) அவர்களுக்கு வந்திருக்கிறது என அலீ(ரலி) கூறினார்கள் என்றும், கடுமையான பஞ்சம் என்று ஃபாத்திமா சொன்னவுடன் நபி(ஸல்) அவர்கள் கட்டியனைத்து அழுதார்கள் என்றும்,

உனக்கு ஏன் உலக ஆசை இப்படி வந்துவிட்டது என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்றும்,
மேலும் அனைத்தையும் விட மேலாக அல்லாஹ்வை அர்ஷிலிருந்து இந்த ஐந்து வார்த்தைகள் இறக்கிவிடும் என்றும் நாகூசாமல் நபி(ஸல்) அவர்களின் மீது இட்டுகட்டி கூறியிருந்தார்.
பலவீனமான செய்தியை சொல்வதே தவறு அதிலும் அதில் இல்லாதவைகளை இணைத்துக் கூறுவது பெருந்தவறு.

“என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக் கட்டி பொய் சொல்வானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்‘ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 108)

நான் கூறாதவற்றை நான் கூறியதாக யார் கூறுவாரோ அவர் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்.

(புகாரி: 109)

இத்தகைய பாவமான காரியத்தை திக்ரு, துஆ என்று சொன்னதும் அதை பரப்பி நாம் அக்குற்றத்தை சம்பாதிக்கலாமா? எனவே ஒரு செய்தியைப் பரப்புவதற்கு முன்னால் அல்லாஹ்வின் எச்சரிக்கைக்கு அஞ்சி அது சரியான செய்தியா என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் இதுப்போன்று ஏராளமான பலவீனமான ஆதாரமற்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டும் மக்களிடத்தில் பிரபல்யமாகவும் உள்ளன.