நபிவழி நடந்தால் நரகமில்லை

பயான் குறிப்புகள்: கொள்கை

நபிவழி நடந்தால் நரகமில்லை

இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்குச் சொந்தமான மார்க்கமாகும். இந்த மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் வஹி என்னும் இறைச் செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே.

(அல்குர்ஆன்: 3:19).)

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார்.

(அல்குர்ஆன்: 3:85).)

இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதின் உண்மையான பொருள் இஸ்லாம் என்று எதை யார் கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறாத எந்த ஒன்றும் இஸ்லாமாகக் கருதப்படாது. ஒன்றைச் சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் கிடையாது.

அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை.

(அல்குர்ஆன்: 12:40).)

இறைவனுக்கு மட்டுமே சொந்தமான இந்த மார்க்கத்தில் இறைத்தூதர்களும் கூட தமது சுயவிருப்பப்படி எதையும் சட்டமாக்கி விட முடியாது.

(முஹம்மதே!) உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் இல்லை. அவனன்றி எந்தப் புகலிடத்தையும் நீர் காண மாட்டீர்!

(அல்குர்ஆன்: 18:27).)

இது அகிலத்தாரின் இறைவனிடமிருந்து அருளப்பட்டது. சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம். உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். இது (இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை.

(அல்குர்ஆன்: 70:43-48).)

அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் “இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!’’ என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப் படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்’’ என (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 10:15).)

நபியவர்கள் தமது சுயவிருப்பப்படி தேன் குடிக்கமாட்டேன் என்று கூறியபோது இறைவன் அதனை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளான்.

நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் (66:1) என்ற திருமறை வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.

மேலும் பத்ருப் போர் கைதிகள் விஷயமாக நபியவர்கள் சுய முடிவு எடுத்த நேரத்திலும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற கண் தெரியாத ஸஹாபி வந்ததற்காக முகம் சுளித்த நேரத்திலும் அல்லாஹ் கண்டித்துள்ளான். இதிலிருந்து நபியவர்கள் நமக்கு போதித்த அனைத்தும் இறைச் செய்திதான். அதாவது ஹதீஸ்கள் என்று நாம் கூறுபவை நபியவர்கள் தமது சுய இஷ்டப்படி கூறியவையல்ல. மாறாக அவையும் இறைச் செய்திதான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடிகிறது.

இறைத்தூதரும் கூட இறைவனுடைய கட்டளைகளைத்தான் மக்களுக்குப் போதிக்க வேண்டும். இதைத்தான் இறைவன் பின்வரும் வசனத்தில் உலகமக்கள் அனைவருக்கும் கட்டளையிடுகின்றான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்

(அல்குர்ஆன்: 7:3).)

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

(அல்குர்ஆன்: 6:106).)

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 43:43),44.)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்.

(அல்குர்ஆன்: 5:49).)

மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள்.

(அல்குர்ஆன்: 5:44).)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன்: 5:45).)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

(அல்குர்ஆன்: 5:47).)

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக் கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.

(அல்குர்ஆன்: 42:21).)

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர்.

(அல்குர்ஆன்: 9:31).)

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன்:49;16.)

நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களிலெல்லாம் மிகத்தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

(நஸாயீ: 1560)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே “அல்கவ்ஸர்’ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வரமுடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும்.

“(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்’’ என்று நான் கூறுவேன். அதற்கு “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்’’ என்று சொல்லப்படும். உடனே நான் “எனக்குப் பின்னால் (தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!’’ என்று (இரண்டு முறை) கூறுவேன்.

(புகாரி: 6584)

அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்’’ என்று சொல்வான்.

(புகாரி: 6585)

“உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றுவிட்டார்கள்’’ என்றார்.

(புகாரி: 6587)

(புகாரி: 6584)வது ஹதீஸில் மார்க்கத்தை மாற்றியவர்கள் என்றும், 6585வது ஹதீஸில் பழைய மதத்திற்கு திரும்பியவர்கள் என்றும், 6587வது ஹதீஸில் மதம் மாறியவர்கள் என்றும் பித்அத்துகளைச்  செய்பவர்களை அல்லாஹ் கூறியுள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே!

அறிவிப்பவர்  : ஆயிஷா(ரலி)

நூல் : புகாரீ (2697)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : நம் கட்டளையில்லாத  காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(முஸ்லிம்: 3243)

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

(அல்குர்ஆன்: 5:3).)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான (தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.

அறிவிப்பவர் :  இர்பாள் பின் ஸாரியா (ரலி)

(அஹ்மத்: 16519)

நபிகள் நாயகமும் இறைச் செய்தியையே பின்பற்ற வேண்டும்

உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற் படுத்தியுள்ளோம்.

(அல்குர்ஆன்: 5:48).)

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

(அல்குர்ஆன்: 6:106).)

நபிவழியும் இறைச் செய்தியே!

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.  அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.  அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார்.

(அல்குர்ஆன்: 53:3-7).)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப்படி பேசுவதில்லை.  அவர் பேசுவதெல்லாம் வஹி என்னும் இறைச் செய்தி தவிர வேறில்லை என்று இவ்வசனம் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறக்கூடியவர்கள் இவ்வசனம் குர்ஆனையே குறிக்கிறது.  குர்ஆன் வஹி என்பது தான் இதற்கு விளக்கம் என்று கூறுகின்றனர்.  குர்ஆன் வஹியாக உள்ளது என்பதை மட்டும் கூறும் வகையில் இவ்வாசக அமைப்பு அமையவில்லை.  “இவர் மனோ இச்சைப் படி பேச மாட்டார்’’ என்பது பொதுவாக அவர் பேசும் எல்லாப் பேச்சையும் தான் எடுத்துக் கொள்ளும்.  மனோ இச்சைப் படி பேசமாட்டார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் பேசுவதெல்லாம் வஹி தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுவோர் குர்ஆன் கூறுவதைத் தான் ஆதாரமாகக் காட்ட வேண்டுமே தவிர குர்ஆன் கூறாத ஒன்றை இதற்கு விளக்கம் என்று இவர்களாகக் கற்பனை செய்து வாதிப்பது இவர்கள் குர்ஆனைப் பின்பற்றும் போர்வையில் தங்கள் மனோ இச்சையைத் தான் பின்பற்றுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

உள்ளத்தில் எந்த அபிப்பிராயத்தையும் வைத்துக் கொள்ளாமல் – முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல் – விளக்கம் என்ற பெயரில் நாமாக எதையும் சேர்க்காமல் இந்த வசனத்தைப் படித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிய அனைத்தும் அவர்களது மனோ இச்சையின் உந்துதலால் பேசப் பட்டவையல்ல.  மாறாக அது இறைவனால் அறிவிக்கப்பட்ட வஹி எனும் இறைச் செய்திதான் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.

குர்ஆன் எப்படி வஹியாக அமைந்துள்ளதோ அது போலவே நபிகள் நாயகத்தின் பேச்சுக்களும் வஹியாக உள்ளன என்று திருக்குர்ஆனே கூறிய பிறகு யாரேனும் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் தேவையில்லை என வாதித்தால் – அந்தப் பேச்சுக்கள் வஹி இல்லை என வாதித்தால் அவர் மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை நிராகரித்தவர் ஆகி விடுகிறார்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

(அல்குர்ஆன்: 16:44).)

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல்

திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு இடங்களில் இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுவதற்குக் காரணம் இறைவனுடைய இறைச் செய்தியை இறைத்தூதர்தான் நமக்கு எடுத்துக் கூறுவார்.

இறைத்தூதர் மார்க்கமாகப் போதிப்பது அவருடைய சொந்தக்கூற்று கிடையாது. சில நேரங்களில் நபியவர்கள் இறைவனின் அனுமதியில்லாமல் சில வார்த்தைகளைக் கூறிய காரணத்தினால் அவர்கள் இறைவனால் கடுமையாகப் கண்டிக்கப்பட்டுள்ளார்கள். இறைத்தூதராக இருந்தாலும் இறைமார்க்கத்தில் அவர் தன்னுடைய சுயக்கருத்தினை கூற முடியாது என்பதை நாம் தனியாக விளக்கியுள்ளோம்.

இங்கே நாம் மிக முக்கியமாக விளங்கவேண்டியது இறைத்தூதருக்கு கட்டுப்பவதின் நோக்கின் அவர் இறைச்செய்தியை கூறுவதுதான். மார்க்கத்தில் இறைவன் வகுத்தான் சட்டமே தவிர அங்கு வேறுயாருடைய கருத்தும் கலந்துவிட இறைவன் அனுமதிக்க மாட்டான்.

அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் அனுப்புவதில்லை.

(அல்குர்ஆன்: 4:64).)

அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்கள் நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் இறைத்தூதர்கள் அனுப்பட்டார்கள். இறைத்தூதருக்கு கட்டுப்படுதல் என்பதே இறைவனுக்காகத்தான். அதாவது இறைச் செய்தியைத்தான் நாம் பின்பற்றவேண்டும். இறைச் செய்தியை பின்பற்ற வேண்டும் என்றால் அதைக்கூறும் இறைத்தூதரின் வார்த்தைகள் இறைச்செய்தி என நம்பிக்கை கொண்டு அவ்வார்த்தைகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். இதை அல்லாஹ் பல்வேறு வசனங்களில் தெளிவு படுத்துகின்றான்.

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப் பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை

(அல்குர்ஆன்: 4:80).)

இறைச்செய்திகளை இறைவனிடமிருந்து பெற்று இறைத்தூதர் அறிவிக்கின்ற காரணத்தினாலேயே இறைவன் இறைத்தூதருக்கு கட்டுப்பவதை தனக்கு கட்டுப்படுவதாக சொல்லிக்காட்டுகின்றான். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம்தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்

(அல்குர்ஆன்: 7:158).)

அல்லாஹ் இறைத்தூதருக்கு கட்டுப்படுமாறு கூறிவிட்டு அதற்கான காரணத்தையும் கூறுகிறான். அதாவது ‘’ இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்!’’  என்ற வாசகமே அது.

“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுவீராக

(அல்குர்ஆன்: 3:311).)

இறைக்கட்டளைகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதுதான் இறைநேசத்தை பெற்றுத்தரும். அப்படிப்பட்ட இறைநேசத்தை பெறுவதற்கு நபிக்கு கட்டுப்பட வேண்டும் என இறைவன் கட்டளையிடுகின்றான். நபியவர்கள் இறைக்கட்டளைகளை எடுத்துக் கூறுகின்ற காரணத்தினால் அவர்களுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதுதான் இறைக்கட்டளைகளைப் பின்பற்றுவதாகும். இதன்காரமாகத்தான் இறைநேசம் பெறுவதற்கு இறைத்தூதருக்கு கட்டுப்படுங்கள் என இறைவன் கட்டளையிடுகின்றான்.

“அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 3:32).)

இறைத்தூதருக்கு கட்டுப்ட மறுத்தால் இறைவனை மறுப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இறைத்தூதர்தான் இறைவன் என வழிகேட்ர்கள் பொருள் கொள்வதைப் போன்று நாம் விளங்கி காஃபிர்களாகி விடக்கூடாது. மாறாக இதன் சரியான கருத்து இறைத்தூதர் கூறுவது அவரது சுயக் கருத்தல்ல. இறைக்கட்டளைகள். அவருடைய கருத்தை நாம் புறக்கணித்தால் இறைத்தூதரின் சுயக்கருத்தை நாம் புறக்கணிக்க வில்லை. மாறாக இறைவனின் கருத்தையே புறக்கணிக்கின்றோம். இதன் காரணமாகத்தான் அவர்களை காஃபிர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் கட்டுப்படுவதே முஃமின்களின் பண்பு

அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்‘’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 24:51), 52.)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

(அல்குர்ஆன்: 9:36).)

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 4:65).)

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய திருக்குர்ஆன் எனும் வேதத்தையும், ஹதீஸ் எனும் இறைச்செய்திகளையும் மட்டுமே பின்பற்றி இம்மை மறுமையில் வெற்றி பெறுவோம்.