நபிவழிக்கு முரணான தப்லீக் ஜமாஅத்
நபிவழிக்கு முரணான தப்லீக் ஜமாஅத்
தப்லீக் ஜமாத் என்ற பெயரில் உலகெங்கும் வியாபித்திருக்கின்ற இயக்கம் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை உண்மை முஸ்லிம்களாக வாழச்செய்யும் உயர் நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமாக சொல்லப்படுகிறது.
என்றாலும் பெயரளவில் மாத்திரம் முஸ்லிம்களாக இருந்து கொண்டு அல்லாஹ்வை மறந்து வாழ்ந்த மக்களையும், சமாதி வழிபாடுகளிலும் தனிநபர் வழிபாட்டிலும் மூழ்கிக்கிடந்த மக்களையும், இஸ்லாமியக்கடமைகள் இன்னதென்று அறியாமல் அவற்றை அலட்சியப்படுத்தி வாழ்ந்த மக்களையும் கண்டு பெரியார் இல்யாஸ் (ரஹ்) அவர்கள் கவலைப்பட்டு துவக்கிய இயக்கமே தப்லீக் இயக்கமாகும்.
இந்த இயக்கம் புத்துயிர் பெற்ற பிறகு சமாதிகளில் மண்டியிட்டவர்கள் அல்லாஹ்வின் சன்னதியில் சிரம் பணியலானார்கள். பூட்டிக்கிடந்த இறையில்லங்கள் தொழுகையாளிகளால் நிரப்பப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் பற்றிய மதிப்பு மக்களின் உள்ளங்களில் அதிகமாகியது.
இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மக்கள் தங்களின் பொருளையும், உழைப்பையும் தியாகம் செய்கின்ற நிலை ஏற்பட்டது. மவ்லவிகள் மட்டுமே மார்க்கத்தைச் சொல்லத்தக்கவர்கள் என்ற நிலை இந்த ஜமாத்தின் எழுச்சியினால் ஓரளவாவது மாறியது. இதெல்லாம் இந்த இயக்கத்தினால் சமுதாயத்திற்கு கிடைத்த நற்பயன்கள். அதில் ஈடுபாடு கொண்ட மக்களின் நோக்கத்தில் இன்றளவும் குறைகாணமுடியாது.
ஆனாலும் பெரியார் இல்யாஸ் (ரஹ்) அவர்களின் புதல்வர் யூசுப் (ரஹ்) ஆகியோரின் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தின் மார்க்க அறிஞர்கள் தப்லீகின் உயர் நோக்கத்திலிருந்து அதைத் திசை திருப்பும் பணியில் ஈடுபடலானார்கள்.
மனிதர்களுக்கும், பெரியார்களுக்கும் அளவு கடந்த மரியாதை செய்யும் அளவுக்கு மக்களின் மூளைகளை சலவை செய்யலானார்கள். மீண்டும் சமாதிவழிபாட்டுக்கும் தனிமனித வழிபாட்டுக்கும் மக்களை இழுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபடலானார்கள்.
இந்தபணியைச் செய்தவர்களில் முதலிடத்திலிருப்பவர் உ.பி மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த ஸகரிய்யா சாஹிப் என்பவராவார். காலம் சென்ற இவர் தனக்கும் அப்போதைய ஹஜ்ரத்ஜீக்கும் மத்தியில் நிலவிய மாமன் மருமகன் என்ற உறவைப் பயன்படுத்தி தான் எழுதிய நூல்களை தப்லீகின் தஃலீம்களில் படிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார். குர்ஆனையும், நபிவழியையும் கற்பிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கத்தில் இவர் எழுதிய கற்பனைகளும்,கதைகளும் படிக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.
குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கப்படுகின்ற இவரது தஃலீம் தொகுப்பு, தப்லீக் ஜமாத்தினருக்குக் கிடைத்த புதியவேதமாக ஆகிவிட்டது. தப்லீக் ஜமாத்தில் நல்ல சிந்தனையாளர்களும் உண்மையை அறிய விரும்புபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்று நாம் நம்புவதால் தஃலீம் தொகுப்பில் காணப்படுகின்ற அபத்தங்களையும் பொய்களையும் கற்பனைக் கதைகளையும் அடையாளம் காட்ட விரும்புகின்றோம்.
தொழுகையின் சிறப்பு, ஸதகாவின் சிறப்பு, ரமலானின் சிறப்பு என்றெல்லாம் பலவேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட இவரது நூலில் மிகவும் தந்திரமாக எவருக்கும் சந்தேகம் வாரத வகையில் நச்சுக்கருத்துகள் பல புகுத்தப்பட்டுள்ளன.
ஸகரியா சாகிப் முதலில் சில குர்ஆன் வசனங்களை எழுதுவார். அடுத்து சில ஹதீஸ்களை எழுதுவார். இவர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் இதை எழுதியுள்ளார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவார். அதன் பிறகு சிறப்புகள் என்ற பெயரில் தனது சொந்தச் சரக்குகளை விற்க ஆரம்பித்து விடுவார்.
ஆரம்பத்தில் உள்ள சில பக்கங்களில் இவர் மக்கள் உள்ளங்களில் நல்ல இடத்தைப் பெற்று விடுவதால் அடுத்தடுத்து இவர் அளக்கும் கப்ஸாக்களை பாமர உள்ளங்கள் கண்டு கொள்வதில்லை எனவே தான் தஃலீம் தொகுப்புகளில் மலிந்துள்ள அபத்தங்களை நாம் இனம் காட்ட வேண்டியுள்ளது. அதிலுள்ள அபத்தங்கள் அனைத்தையும் எழுதுவதென்றால் பல ஆயிரம் பக்கங்களில் எழுத வேண்டும். ஆகவே சிந்தனையாளர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் ஒரு சில அபத்தங்களை மட்டும் நாம் இனம் காட்டுகிறோம்.
தொழுகையின் சிறப்புக்களைக் கூறும் சாக்கில் பெரியார்கள் மீது மலைப்பை ஏற்படுத்தும் கதையைக் கேளுங்கள்!
மண்ணறை நெருப்பைக் கண்ட பெரியார்
அல்லாமா இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் ஜவாஹிர் என்ற நூலில் எழுதியுள்ளதாவது:
ஒரு பெண் இறந்து விட்டாள். அடக்கம் செய்யும் போது அப்பெண்ணின் சகோதரரும் உடனிருந்தார். அப்பொழுது அவருடைய பணப்பை அக்கப்ரில் விழுந்து விட்டது. அது அவருக்குத் தெரியவில்லை. பிறகு அது அவருக்கு நினைவு வந்த பொழுது மிகவும் கவலையடைந்தார். யாருக்கும் தெரியாமல் கப்ரை தோண்டி அதனை எடுத்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குச் சென்று கப்ரை தோண்டியபோது அந்தக் கப்ரு நெருப்புக் கங்குகளால் நிரம்பி இருக்கக் கண்டு பயந்து போய் அழுதவராக தன் தாயாரிடத்தில் வந்து விபரத்தைக் கூறி விளக்கம் கேட்டார். அதற்கு அவருடைய தாயார், “அவள் தொழுகையில் சோம்பல் செய்பவளாக அதனைக் களா செய்பவளாக இருந்தாள்” என்று கூறினார்.
இந்த கதை தப்லீகின் தஃலீம் தொகுப்பில் பக்கம் 76ல் இடம்பெற்றுள்ளது.
தொழுகையை விடுவது மிகப்பெரும் பாவம் என்பதும் கப்ருடைய வேதனை உண்டு என்பதும் முழு உண்மைதான். இந்த இரண்டையும் வலியுறுத்த எண்ணற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இந்தக்கதை உண்மையா என்பதே இங்கு ஆராயப்பட வேண்டிய உண்மை.
கப்ரில் நடக்கும் வேதனைகளை உலகில் வாழும் மனிதர்கள் அறிய முடியுமா? என்பதை முதலில் ஆராய்வோம்.
அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
மனிதர்கள் மரணித்துவிட்டால் அவர்கள் முன்னே திரை போடப்படுகின்றது என்று இவ்வசனம் கூறுவதால் உயிருடனிருப்பவர்கள் கப்ரில் நடப்பதையும், கப்ரில் இருப்பவர்கள் இவ்வுலகில் நடப்பதையும் அறிய முடியாது என்பதை அறிகிறோம். அறிய முடியும் என்றால் திரை போடப்படுகின்றது என்ற இறைவனின் வார்த்தைக்கு அர்த்தமில்லாது போய்விடும்.
இந்த சமுதாயம் கப்ரில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் ஒருவரை ஒருவர் அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நான் செவியுறுகின்ற கப்ரின் வேதனையை நீங்கள் செவியுறுமாறு அல்லாஹ்விடம் துஆ செய்திருப்பேன் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : ஸைத் இப்னு ஸாபித் (ரலி)
நூல் : முஸ்லிம்
கப்ரில் நடந்ததை நீங்கள் அறிந்து கொண்டால் ஒருவரை ஒருவர் அடக்கம் செய்ய முன்வரமாட்டீர்கள் என்ற தகுந்த காரணத்தைக் கூறி, அதனால் கப்ரில் நடப்பதை நீங்கள் அறிய முடியாது எனவும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
கப்ரில் நடக்கும் வேதனையை மனித – ஜின் இனத்தைத் தவிர கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட அனைத்தும் செவியுறும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : பரா (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவூத்
இந்த ஹதீஸும் கப்ரில் நடப்பதை எந்த மனிதனும் அறிய முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது. இந்த நபிமொழிகளுக்கும், மேற்கண்ட குர்ஆன் வசனத்துக்கும் முரணாக இந்தக் கதை அமைந்துள்ளது.
தொழுகையை விட்ட எத்தனையோ நபர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் திரும்பவும் தோண்டி எடுக்கப்படுகின்றன. எத்தனையோ காபிர்களின் சடலங்களும் தோண்டி எடுக்கப்படுகின்றன. இவ்வாறு தோண்டி எடுக்கப்படும்போது தீக்கங்குகளால் கப்ரு நிரம்பியிருந்ததை எவருமே கண்டதில்லை.
ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சில நாட்களுக்குப் பின் மற்றொருவர் அடக்கம் செய்யப்படுகிறார். இப்படி ஒரு இடத்தில் பல நூறு நபர்கள் அடக்கம் செய்யப்படுகின்றனர். மற்றொருவரை அடக்கம் செய்வதற்காக ஒரு அடக்கத்தலம் தோண்டப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் எவரும் கப்ரில் தீக்கங்குகள் நிரம்பி இருந்ததை காணவில்லை.
இந்த நடைமுறையும் அந்தக் கதை பொய் என்பதற்கு போதுமான ஆதாரமாக உள்ளது. இந்தக் கதை பொய்யானது என்பதற்கு இந்தக் கதையே சான்று கூறுவதையும் சிந்திக்கும் போது உணரலாம்.
அந்தக் கதையில் உலகில் எவருமே காணாத ஒரு காட்சியை ஒருவர் காண்கிறார். இக்கதை உண்மை என்று வைத்துக் கொண்டால் இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சியைக் கண்டவர் யார் என்பது பிரசித்தமாக இருக்க வேண்டும்.
இதைக் கண்டவரின் பெயரோ அவரின் தந்தையின் பெயரோ, அவர் நம்பகமானவர் என்பதற்கான சரித்திரக் குறிப்புகளோ எதுவுமே இக்கதையில் இல்லை. இவ்வளவு அதிசயமான நிகழ்ச்சி நடந்த காலம் என்ன? எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த நாடு, எந்த ஊர் என்ற விபரமும் இல்லை. இக்கதையில் வரும் சகோதரிக்கும் முகவரி இல்லை. தாயாருக்கும் முகவரி இல்லை. இது உண்மை என்றிருக்குமானால் இவ்வளவு விபரங்களும் தெரிந்திருக்கும். அவை பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்தக் கதை ஏற்படுத்தும் தீய விளைவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஒருவன் தான் மதிக்கின்ற பெரியாரின் புகழை மேலோங்கச் செய்ய எண்ணி அப்பெரியாரின் கப்ரு ஒளிமயமாக இருந்தது என்று கதை விடலாம். மறுமையில் இறைவன் வழங்கக் கூடிய தீர்ப்பை இங்கேயே வழங்க சிலர் முற்படலாம். தனக்கு பிடிக்காதவர்களின் கப்ரில் தீக்கங்குகளை கண்டதாக கதை விடலாம். இது தான் இந்தக் கதையினால் ஏற்படும் விளைவாகும். இந்த விளைவை ஏற்படுத்துவதே இந்தக் கதையை எழுதியவர்களின் நோக்கமாக இருக்குமோ என்று நமக்குத் தோன்றுகிறது.
சில பெரியார்களின் கப்ரு வாழ்க்கைப் பற்றி கட்டிவிடப்பட்டுள்ள கதைகள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது.
கப்ரில் தொழுத பெரியார்
ஸாபித் பன்னானி (ரஹ்) அவர்கள் இறந்தபின் அன்னாரை அடக்கம் செய்யும்போது நானும் உடனிருந்தேன். அடக்கம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு செங்கல் கீழே விழுந்து உள்ளே துவாரம் ஏற்பட்டது. அதன் வழியாக நான் பார்த்த போது அவர் கப்ருக்குள் நின்று தொழுது கொண்டிருக்கக் கண்டேன். அருகிலிருந்தவரிடம் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் பேசாமலிரு என்று என்னிடம் கூறிவிட்டார்.
தப்லீகின் தஃலீம் தொகுப்பு பக்கம் 129 ல் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.
கப்ரில் நடப்பதை எவரும் அறியமுடியாது என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அந்த ஆதாரங்களுடன் இந்தக் கதையும் நேரடியாக மோதுகிறது.
ஸாபித் பன்னானி அவர்கள் உண்மையில் நல்லடியாராக இருந்தார் என்றே வைத்துக் கொள்வோம். நல்லடியாராக இருந்தால் கப்ரில் எத்தகைய நிலையில் இருப்பார் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்ததற்கு மாற்றமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.
நல்லடியார்கள் மண்ணறையில் வைக்கப்பட்டதும் முன்கர் நகீர் எனும் இரு வானவர்கள் அவரிடம் கேள்வி கேட்பர். அவர் கேள்விக்கு சரியான விடையளிப்பார். அந்த நிகழ்ச்சியை நபி (ஸல்) விளக்கும் போது,
“கேள்வி கேட்கப்பட்ட பின் 70 / 70 என்ற அளவில் அவரது அடக்கத் தலம் விரிவாக்கப்படும். பின்னர் அதில் ஒளி ஏற்படுத்தப்படும். பின்னர் அவரிடம் ‘உறங்குவீராக’ எனக் கூறப்படும். “நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இச்செய்தியைக் கூறிவிட்டு வருகிறேன்” என்று அவர் கூறுவார். அப்போது இரு மலக்குகளும் “புது மணமகனைப் போல் உறங்குவீராக!” எனக் கூறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (திர்மிதி)
நல்லடியார்கள் கியாமத் நாள் வரை மண்ணறையில் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்று இந்த நபிமொழி கூறுகிறது. இந்த நபிமொழிக்கு மாற்றமாக ஸாபித் என்ற பெரியார் தொழுது கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி கப்ரிலிருந்து செங்கல் ஒன்று விழுந்துவிட்டது. அதன் மூலம் ஓட்டை ஏற்பட்டது என்று கூறப்படுவதும் நம்பும்படி இல்லை. கப்ரில் செங்கல்லுக்கு வேலை இல்லை. அதுவும் ஸாபித் பன்னானி அடக்கம் செய்யப்படும் போதே இது நிகழ்ந்துள்ளது. செங்கல்லால் கட்டடம் கட்டத் தடை இருந்தும் தொழும் காட்சியைக் கண்டு அறிவித்த இந்த மகான் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். எனவே இந்தக் கதையும் உண்மை கலக்காத பச்சைப் பொய் என்பதில் சந்தேகமில்லை.
இரவில் உறங்காத பெரியார்கள்
அபூ இதாப் ஸல்மீ (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் வரை இரவு முழுவதும் தொழுது கொண்டே இருந்தார்கள் பகல் முழுவதும் நோன்பு வைத்திருந்தார்கள். (பக்கம் 132)
இமாம் அஹ்மதுப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் தினமும் முன்னூறு ரக்அத்கள் நபில் தொழுபவர்களாக இருந்தார்கள். (பக்கம் 132)
இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுகையில் அறுபது தடவை குர்ஆனை ஓதி முடிப்பார்கள். (பக்கம் 132)
ஹஜ்ரத் ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்) ஐம்பது ஆண்டுகள் இஷாவையும், சுபுஹையும் ஒரே உளூவைக் கொண்டு தொழுது வந்தார்கள். (பக்கம் 131)
அபுல் முஃதமர் (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் வரை இவ்விதம் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது. (பக்கம் 131)
இமாமுல் அஃளம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் முப்பது ஆண்டுகள் அல்லது நாற்பது ஆண்டுகள் அல்லது ஐம்பது ஆண்டுகள் இஷாவுடைய உளூவைக் கொண்டு சுபுஹைத் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது. (பக்கம் 132)
இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களுக்கிருந்த கல்வி சம்மந்தமான வேலைகள் பளுவைப் பற்றி அனைவருக்கும் தெரியும், அத்துடன் அவர்கள் அந்நாட்டின் பிரதம நீதிபதியாகவும் இருந்து வந்ததால் அது சம்மந்தமான வேலைகளும் ஏராளமாக இருந்தன. அவ்வாறிருந்தும் ஒவ்வொரு நாளும் இருநூறு ரக்அத்கள் நபில் தொழுது வந்தார்கள். (பக்கம் 130)
இப்படிப்பட்ட கதைகள் நூல் நெடுகிலும் மலிந்து காணப்படுகின்றன. மத்ஹபையும், தரீக்காவையும் நியாயப்படுத்துவதற்காக இப்பெரியார்களின் வணக்க வழிபாடுகள் பற்றி மலைப்பூட்டப்படுகின்றன.
உண்ணுதல், உழைத்தல், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் இவைகளை எல்லாம் முடித்து விட்டு 200 அல்லது முன்னூறு ரக்அத்கள் தொழ முடியுமா?
நாற்பது, ஐம்பது ஆண்டுகள் உறங்காமல், மனைவியுடன் கூடாமல், மலஜலம் கழிக்காமல் இஷாவுக்குச் செய்த உளூவைக் கொண்டு சுபுஹ் தொழ முடியுமா?
ஒரு இரவுத் தொழுகையில் இரண்டு தடவை குர்ஆனை ஓதி முடிக்க முடியுமா?
இதைச் சிந்தித்தாலே இந்தக் கதைகளின் தரத்தை விளங்கிக் கொள்ளலாம். இதை எல்லாம் தூக்கி சாப்பிடுகிறது மற்றொரு கதை!
ஹஜ்ரத் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரக்அத்கள் நபில் தொழுது வந்தார்கள். (பக்கம் 160)
ஒரு ரக்அத்துக்கு ஒரு நிமிடம் என்று வைத்துக் கொண்டால் கூட ஒரு இரவுக்கு 1000 ரக்அத் நபில்கள் தொழ முடியுமா? இஷாவிலிருந்து சுபுஹ் வரை 500 நிமிடங்கள் கூட இராது.
இந்தச் சாதாரண கணக்கைக் கூட சமுதாயம் கவனிக்கத் தவறுவதால் ஸகரிய்யா சாஹிப் வாயில் வந்தவாறெல்லாம் கதையளக்கிறார்.
ரக்அத்களின் எண்ணிக்கை பற்றிக் கூறும் போது 1000 ரக்அத்கள், 200 ரக்அத்கள் என்றெல்லாம் பெரியார்கள் தொழுது வந்ததாக பிரமிப்பூட்டும் ஸகரிய்யா சாஹிப் அவர்கள் எப்படித் தொழுதார்கள் என்பதைக் கூறும்போது மலைப்பின் உச்சிக்கே நாம் சென்று விடுகிறோம்.
ஹஜ்ரத் உவைஸுன் கரனீ (ரஹ்) அவர்கள் பிரபலமான பெரியார். தாபியீன்களின் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் இரவு நேரங்களில் தொழும்போது சில சமயங்களில் ருகூவுச் செய்வார்கள். இரவு முழுவதும் அப்படியே ருகூவிலேயே சென்று விடும். சில சமயங்களில் ஸஜ்தாச் செய்வார்கள். இரவு முழுவதும் ஒரு ஸஜ்தாவிலேயே கழிந்துவிடும். (பக்கம் 161)
இப்படியெல்லாம் தொழவேண்டுமென்பதற்காக இந்த சம்பவத்தையும் ஸகரிய்யா சாஹிப் எழுதுகிறார். தொழுகை இப்படித்தான் அமைந்திருக்க வேண்டுமென்றால் 1000 ரக்அத்து சமாச்சாரமெல்லாம் பொய்யென்று ஆகின்றது.
தொழுகையின் சிறப்பு என்ற பெயரில் ஸகரிய்யா சாஹிபுடைய புருடாக்கள் சிலவற்றைக் கண்டோம். பலவீனமான ஹதீஸ்கள் பல இடம் பெற்றிருந்தாலும் அவற்றை நாம் விமர்சனம் செய்யவில்லை. கதைகளை மட்டுமே விமர்சித்துள்ளோம்.
எவ்வகையிலும் நியாயப்படுத்திட இயலாத இந்தப் பொய்கள் தான் தொழுகையின் சிறப்பு பகுதி முழுவதும் மலிந்துள்ளன. மாதிரிக்காக ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் இங்கே நாம் இனம் காட்டியுள்ளோம். சிந்தனையுடைய மக்களுக்கு இதுவே போதுமானதாகும்.
குர்ஆனும், நபிவழிக்கும் முரணான – தப்லீகின் ஸ்தாபகர் காலத்திற்குப் பின்னர் உள்ளவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த நூலை தப்லீக் ஜமாஅத்தினரும் பொது மக்களும் புறக்கணிப்பார்கள் என்று நம்புவோமாக!