நபியவர்கள் ஆடையின்றி இருந்தார்கள்
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கட்டியணைக்கும் வழக்கமும் மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இந்தச் செயல் நபிவழி என்று சொல்லும் அளவுக்கு ஏற்கத் தக்க ஆதாரம் ஏதும் இல்லை. இது பற்றி சில ஹதீஸ்கள் இருந்தாலும் அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன.
‘ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) என் வீட்டில் இருந்தனர். வீட்டுக்கு ஸைத் பின் ஹாரிஸா (ரலி) வந்து கதவைத் தட்டினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆடை இழுபட நிர்வாணமாக அவரை நோக்கிச் சென்றார்கள். அதற்கு முன்போ பின்போ அவர்களை நான் நிர்வாணமாகப் பார்த்ததில்லை. உடனே அவரைக் கட்டிய முத்தமிட்டார்கள்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : திர்மிதி 2656
ஆயிஷா (ரலி) கூறியதாக உர்வா அவர் அறிவிக்கிறார்.
உர்வா கூறியதாக ஸஹ்ரி அறிவிக்கிறார்.
ஸஹ்ரி கூறியதாக முஹம்மத் பின் இஸ்ஹாக் அறிவிக்கிறார்.
முஹம்மத் பின் இஸ்ஹாக் கூறியதாக யஹ்யா பின் முஹம்மத் அறிவிக்கிறார்.
யஹ்யா பின் முஹம்மத் கூறியதாக அவரது மகன் இப்றாஹீம் அறிவிக்கிறார்.
இப்றாஹீம் கூறியதாக புகாரி இமாம் அறிவிக்கிறார்.
புகாரி இமாம் கூறியதாக திர்மிதி இமாம் பதிவு செய்கிறார்.
இந்த அறிவிப்பாளர்களில் யஹ்யா பின் முஹம்மத் என்பவரும் பலவீனமானவர். அவர் வழியாக அறிவிக்கும் அவரது மகன் இப்றாஹீமும் பலவீனமானவர்.
பலவீனமான இருவர் வழியாக இச்செய்தி அறிவிக்கப்படுவதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்வாணமாக கதவைத் திறக்கச் சென்றார்கள் என்பது இச்செய்தியின் பலவீனத்தை மேலும் அதிகரிக்கிறது.
நபியின் மனைவியாக இருந்தும் ஆயிஷா (ரலி) ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அதற்கு முன்பும் பின்பும் நிர்வாணமாகப் பார்த்ததில்லை’ எனக் கூறியதாக அறிவிப்பதும் இச்செய்தியின் பலவீனத்தை இன்னும் அதிகரிக்கிறது.