நபிமொழிகளில் தடைசெய்யப்பட்டவை -2

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

பலன் உறுதிப்படுவதற்கு முன்னர் பழங்களை விற்கக்கூடாது

نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا ، وَكَانَ إِذَا سُئِلَ عَنْ صَلاَحِهَا قَالَ حَتَّى تَذْهَبَ عَاهَتُهُ.

நபி (ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் பழங்களை விற்பதைத் தடுத்துள்ளார்கள். அவர்களிடத்தில் “பலன் உறுதிப்படுவது என்றால் என்ன என்று கேட்கப்பட்டது.’ (அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதே!” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : (புகாரி: 1486) , 2184, 2194,(முஸ்லிம்: 3078)

தொடர் நோன்பிற்கு தடை

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَاصَلَ فَوَاصَلَ النَّاسُ فَشَقَّ عَلَيْهِمْ فَنَهَاهُمْ قَالُوا إِنَّكَ تُوَاصِلُ قَالَ لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي أَظَلُّ أُطْعَمُ وَأُسْقَى.

நபி (ஸல்) அவர்கள் (நோன்பு துறக்காமல்) தொடர்நோன்பு நோற்றார்கள்; மக்களும் அவ்வாறு தொடர் நோன்பு நோற்றார்கள். இது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் தொடர் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள்.

நபித்தோழர்கள், “நீங்கள் (மட்டும்) தொடர் நோன்பு நோற்கிறீர்களே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களைப் போன்றவன் அல்லன்; (இறைவன் தரப்பிலிருந்து) உண்ணவும் பருகவும் எனக்கு வழங்கப்படுகிறது!” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல்கள் : (புகாரி: 1922) , 1962,(முஸ்லிம்: 2010)

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது

 لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلاَّ يَوْمًا قَبْلَهُ  أَوْ بَعْدَه.

உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்க வேண்டாம்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள் : (புகாரி: 1985) ,(முஸ்லிம்: 2102)

மர்ம உறுப்பு வெளியில் தெரியுமாறு ஆடை அணியக்கூடாது

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ ، وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ.

ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்தவாறு விட்டுவிடுவதையும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு (குத்துக்காலிட்டு) அமர்வதையும் (இஹ்திபா) நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி,
நூல்கள் : (புகாரி: 5822) , 367, 368,(முஸ்லிம்: 4261)

இருபெருநாட்களில் நோன்பு நோற்க தடை

فَقَالَ هَذَانِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ صِيَامِهِمَا يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ وَالْيَوْمُ الآخَرُ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ.

இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்க நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தனர். அவை: நோன்பை முடித்துப் பெருநாள் கொண்டாடும் (ஈதுல் ஃபித்ர்) தினமும், குர்பானி இறைச்சியை நீங்கள் சாப்பிடும் (ஈதுல் அள்ஹா) தினமும் ஆகும்.

அறிவிப்பவர் : உமர் (ரலி),
நூல் : (புகாரி: 1990) 

வட்டி தடை

نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ثَمَنِ الْكَلْبِ وَثَمَنِ الدَّمِ وَنَهَى ، عَنِ الْوَاشِمَةِ وَالْمَوْشُومَةِ وَآكِلِ الرِّبَا وَمُوكِلِهِ وَلَعَنَ الْمُصَوِّرَ.

வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!

அறிவிப்பவர் : அபூஜுஹைஃபா (ரலி),
நூல் : (புகாரி: 2086) 

உணவுப் பொருட்கள் கையில் கிடைக்கும் முன் விற்பனை செய்யக்கூடாது

مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِيعُهُ حَتَّى يَسْتَوْفِيَهُ.

ஒருவர் உணவுப் பொருளை வாங்கினால் அது (முழுமையாக அவரது கைக்கு வந்து சேராமல் அதை அவர் விற்கக் கூடாது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல் : (புகாரி: 2126)